இவரை அறிந்தவர்கள் மிகக் குறைவு. ஆனால், அவர்கள் அனைவருடைய மதிப்பீடும் ஒன்றுபோல் இருக்கிறது. ‘இப்னு கல்தூனுக்கு (Ibn Khaldun) இணையான ஒரு வரலாற்றாளர் இதுவரை இஸ்லாமிய உலகிலிருந்து தோன்றியதில்லை. செறிவாகவும் சுவையாகவும் வரலாறு எழுத இவரைப் போல் யாருமில்லை. வரலாற்றில் இவருடைய பங்களிப்பை அற்புதம் என்று மட்டுமே அழைக்க முடியும். இருந்தும், இவர் ஏன் பரவலாக அறியப்படவில்லை? விடை நம்மிடம்தான் இருக்கிறது. காலம்காலமாக இஸ்லாமிய வரலாற்றில் இஸ்லாமியர் அல்லாதோர் ஆர்வம் செலுத்துவதில்லை என்பதால், அந்த வட்டத்துக்குள் இவர் அடக்கப்பட்டுவிட்டார்.
வரலாற்றின் தந்தைகளுள் ஒருவராகக் கருதப்பட வேண்டிய இப்னு கல்தூன் (1332-1406) துனீஷியாவின் தலைநகரான துனீஸில் செல்வாக்குமிக்க குடும்பத்தில் பிறந்தவர். இலக்கியம், சட்டம், அறிவியல் என்று பல துறைகளில் கற்றுத் தேர்ந்தவர். அரசியல் ஆலோசகர் தொடங்கி நீதிபதி வரை பல்வேறு பதவிகளை வகித்தவர். இவருடைய ஆய்வின் மையம் இவர் பிறந்து, வளர்ந்த வட ஆப்ரிக்க நிலப்பரப்பு. 7ஆம் நூற்றாண்டில் அறிவியல், இலக்கியம், பண்பாடு, கட்டுமானம் என்று பல துறைகளில் அரபு நாகரிகம் குறிப்பிடத்தக்க பாய்ச்சல்களை நிகழ்த்தியது. ஸ்பெயின் முதல் மத்திய ஆசியா வரை இஸ்லாத்தின் தாக்கம் படர்ந்திருந்தது.
இந்த முன்னேற்றங்களின் ஒளியில் வட ஆப்ரிக்காவும் செல்வாக்குமிக்க ஒரு பகுதியாக நீண்ட காலம் திகழ்ந்தது. மத்திய காலத்தில் நிலைமை தலைகீழானது. தன் கண்முன்னால் துனீஷியாவும் பிற பகுதிகளும் வீழ்ச்சி அடைவதை கல்தூன் கண்டார். அதற்கான காரணங்களைத் தெரிந்துகொள்ள விரும்பினார். அவருடைய தேடல் சமகாலத்திலிருந்து கடந்த காலத்துக்கு அவரை இட்டுச் சென்றது.
கல்தூனின் தனித்துவம் அவருடைய பரந்து விரிந்த கண்ணோட்டத்தில் அடங்கியிருந்தது. ஒரு பெரிய நிலப்பரப்பின் வீழ்ச்சி என்பது குறிப்பிட்ட ஒரு காரணத்தால் நிகழ்ந்திருக்க வாய்ப்பில்லை. சிறியதும் பெரியதுமான பல்வேறு காரணங்களின் கூட்டு விளைவினால்தான் அது நடந்திருக்க வேண்டும் என்பதை அவர் உணர்ந்துகொண்டார். சமூகம், பொருளாதாரம், அரசியல், பண்பாடு என்று பல்வேறு தளங்களில் தன் திறனுக்கு ஏற்ற வகையில் தேடலை விரிவாக்கினார். மேலோட்டமாக அன்றி, அடியாழம்வரை ஊடுருவிச் சென்று வீழ்ச்சியின் தோற்றுவாய்களைக் கண்டடைந்தார்.
ஒரு சமூகம் ஏன் பின்தங்குகிறது. மூன்றாம் உலக நாடுகளை ஆராயும் எவர் ஒருவரும் இன்று எதிர்கொண்டே தீர வேண்டிய அடிப்படையான கேள்வி இது. இக்கேள்வியை நூற்றாண்டுகளுக்கு முன்பே எழுப்பி, ஆராயத் தொடங்கியதன் மூலம் பின்தங்கிய சமூகம் குறித்த ஆய்வுகளுக்கான அடித்தளத்தை உருவாக்கிக்கொடுத்தார் இப்னு கல்தூன். ஆளுமைகளை முன்னிறுத்துவதே வரலாறு என்னும் வழக்கத்துக்கு மாறாகப் பல்வேறு தளங்களில் ஏற்படும் மாற்றங்களைக் கூர்ந்து நோக்கி, அவற்றை மையப்படுத்தி வரலாற்றைக் கட்டமைத்தார்.
வட ஆப்ரிக்கா மட்டுமின்றி, இந்தியா உள்படப் பல நாடுகள் வண்ணமயமான வரலாற்றைப் பெற்றிருந்தபோதிலும் ஒரு கட்டத்தில் வீழ்ச்சியைச் சந்திக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுவிடுகிறது. தவிர்க்க இயலாதபடி இந்நாடுகள் காலனியாதிக்கத்தின்கீழ் சிக்குண்டு கிடந்ததையும் நாம் கண்டோம். கல்தூனின் எழுத்துகளை ஊன்றி வாசிக்கும் ஒருவரால் இப்போக்கின் இயல்பை நன்கு உள்வாங்கிக்கொள்ள முடியும்.
கோட்பாடுகளைவிட நடைமுறை அனுபவங்கள் கல்தூனுக்கு முக்கியமானவை என்பதால், இறை நம்பிக்கைகளைத் தன் படைப்புக்குள் கொண்டுவருவதைத் தவிர்த்தார். அப்படியானால் ஒரு வரலாற்றாளர் மதத்தைப் பொருட்படுத்தக் கூடாதா என்று கேட்டால் கல்தூன் இப்படிச் சொல்வார், “ஒரு சமூகத்தை ஆராயும்போது எப்படி அரசியலையும் பொருளாதாரத்தையும் கணக்கில் கொள்வீர்களோ அதேபோல் மதம் என்னும் நிறுவனத்தையும் நீங்கள் கணக்கில் கொண்டுதான் தீர வேண்டும்.
அதுவும் ஒரு துறை என்பதுபோக, தனிக்கவனம் கொடுத்து மதத்தைப் புனிதப்படுத்த வேண்டிய அவசியம் இல்லை.” இதன் பொருள் அவர் இறை மறுப்பாளர் என்பதல்ல. இஸ்லாத்தின் மீது ஆழ்ந்த பற்றுள்ளவர்தான் என்றாலும், தான் எழுதும் வரலாறு மெய்மையைவிட்டு இயன்றவரை விலகாதவாறு பார்த்துக்கொண்டார்.
வரலாறு அவரைப் பொறுத்தவரை ஓர் அறிவியல் துறை. நிகழ்வதைப் பதிவுசெய்வது மட்டுமல்ல; விளைவுகளையும் வரலாறு கண்டறிய வேண்டும். ஆளுமைகளைக் கொண்டாடும் மனப்பான்மையை ஒரு வரலாற்றாளர் கைவிட வேண்டும். மரபுகளைக் கண்மூடித்தனமாகப் பின்பற்றக் கூடாது. குறுகலாக அல்லாமல், விரிந்து சென்று தேட வேண்டும். ஏற்கெனவே பதிவு செய்யப்பட்டுள்ளவற்றை விமர்சனக் கண்ணோட்டத்தோடு மட்டுமே அணுக வேண்டும்.
முதல்நிலைத் தரவுகளை நாடுவதும் அவற்றைக் கையாண்டு நம் வரலாற்றை அமைத்துக்கொள்வதும் முக்கியமானது. அவ்வாறு செய்யும்போதுதான் ஒரு வரலாற்றாளரின் உண்மையான ஆற்றல் வெளிப்படும். ஒரு நல்ல வரலாற்றாளர் சார்புகள் அற்றவராகவும் சுயசிந்தனையுடனும் தனித்துவமான பார்வையோடும் எதையும் அணுக வேண்டும்.
மனிதர்கள் ஒரு குழுவாகத் திரண்டு கட்டமைக்கும் பண்பாடு, மரபு, நாகரிகம் போன்ற அமைப்புகளில் (‘உம்ரான்’ என்று அதனை அழைத்தார்) கல்தூன் ஆர்வம் கொண்டிருந்தார். நம்மைப் புரிந்துகொள்ள வேண்டுமானால், நம் சிக்கல்களைப் புரிந்துகொள்ள வேண்டுமானால், நாம் உருவாக்கும் அமைப்புகளை முதலில் நுணுக்கமாகப் புரிந்துகொள்ள வேண்டும் என்பது கல்தூனின் வாதம்.
மனிதர்களை அவர்களுடைய வாழ்விடத்தோடு சேர்த்து ஆராயும் நவீனப் போக்கையும் இவரிடம் காண முடிகிறது. வெயிலும் குளிரும் வானிலை மட்டுமல்ல, வாழ்க்கைமுறையைத் தீர்மானிக்கும் அம்சமாகவும் சூழல் திகழ்கிறது என்றார். குடும்ப அமைப்பு, தலைமைத்துவம், மத நிறுவனத்தின் பங்கு ஆகியவை குறித்த இவருடைய கண்ணோட்டம் தனித்துவமானது. இக்காரணங்களால் சமூகவியலின் தந்தைகளுள் ஒருவராகவும் கல்தூன் கொண்டாடப்படுகிறார்.
வரலாற்றை நவீனப்படுத்திய சிந்தனையாளர்களுள் கல்தூன் முதன்மையானவர். மாக்ஸ் வெபர், எமிலி துர்கெய்ம், அர்னால்ட் டாயின்பீ போன்ற பலர் இவரது தாக்கத்துக்கு உள்ளானவர்கள். அரபு மொழியில் ‘முகாதிமா’ என்றால் அறிமுகம். இந்த எளிய சொல்லைத்தான் தன் படைப்பின் தலைப்பாக அவர் தேர்ந்தெடுத்தார். ஒரு வகையில் இது துல்லியமான தலைப்பும்தான். காரணம், வரலாற்றின் போக்கைத் திசைதிருப்பி ஒரு புதிய வடிவில் அதை நமக்கு அறிமுகம் செய்ததது இந்நூல்தான்.
- தொடர்புக்கு: marudhan@gmail.com