சிறப்புக் கட்டுரைகள்

அவ்வளவுதானா அமெரிக்கக் கனவு?

மு.இராமனாதன்

செப்டம்பர் 19ஆம் நாள் வெள்ளை மாளிகை வெளியிட்ட அறிவிப்பு தொடர்பான செய்திக்கு ஊடகங்கள் பலவாறாகத் தலைப்பிட்டன. அவற்றுள் சில, ‘இந்தியர்கள் மீது இறங்கிய இடி’, ‘அடைக்கப்படுகிறது அமெரிக்கக் கதவு’, ‘டிரம்ப் வீசிய அணுகுண்டு’ என்கிற ரீதியில் இருந்தன.

குழப்​பமும் தெளிவும் ‘ஹெச்1பி’ விசா கட்டணத்தை 2,000 டாலரிலிருந்து ஒரு லட்சம் டாலராக (ரூ.88 லட்சம்) உயர்த்தினார் டிரம்ப். விண்ணப்​பிக்​கும்போது மட்டும் செலுத்த வேண்டுமா அல்லது ஆண்டு​தோறும் செலுத்த வேண்டுமா என்பது அறிவிப்பில் தெளிவாக இல்லை.

புதிய கட்டணம் இரண்டு நாள்களில் அமலாகும் என்று அறிவிக்​கப்​பட்​டிருந்தது. அமெரிக்க வாழ் ‘ஹெச்1பி இந்தி​யர்​’களைப் பரபரப்பு சூழ்ந்தது. விடுமுறைக்காக இந்தியா வந்திருந்த பலர், கிடைத்த விமானத்தைப் பிடித்து அவசரமாக அமெரிக்கா திரும்பினார்கள்.

அடுத்த இரண்டு நாள்களில், புதிதாக ‘ஹெச்1பி’ விசாவுக்கு விண்ணப்​பிப்போர் மட்டும் ஒரு லட்சம் டாலர் கட்டணத்தைச் செலுத்​தினால் போதுமானது என்றது வெள்ளை மாளிகை. ஏற்கெனவே, ‘ஹெச்1பி’ விசாவில் பணியாற்றுவோரை இது பாதிக்​காது. பலருக்கு நிம்மதி. ஆனாலும் இது இந்தியா​வுக்குப் பாரதூரமான பாதிப்புகளை உண்டாக்​கக்​கூடியது.

அமெரிக்கக் கனவின் வழித்தடம்: ‘ஹெச்1பி’ விசா என்னும் ஏற்பாடு 1990இல் தொடங்​கியது. அறிவியல், தொழில்​நுட்பம், பொறியியல், கணிதம் (Science, Technology, Engineering, Mathematical - STEM) ஆகிய துறைகளில் திறன்​மிக்க அயல் நாட்டவரை, அமெரிக்க நிறுவனங்கள் பணி அமர்த்திக்​கொள்ள - உள்நாட்டில் நிலவிய திறன் பற்றாக்​குறையை ஈடுசெய்ய - இது உருவாக்​கப்​பட்டது. ஆண்டு​தோறும் 85,000 பேருக்கு இந்த விசாக்கள் வழங்கப்​படு​கின்றன. ‘ஹெச்1பி’ விசா, மூன்று ஆண்டு​களுக்குத் தற்காலிக வசிப்புரிமை (temporary residency) வழங்கும். மேலும், மூன்று ஆண்டு​களுக்கு விசாவை நீட்டிக்கக் கோரலாம்.

அடுத்த கட்டம், பச்சை அட்டை (green card). இது நிரந்தர வசிப்பு​ரிமையை வழங்கும். இதற்கு ஊழியர்​களின் சார்பாக அவர்கள் பணியாற்றும் நிறுவனங்கள் விண்ணப்​பிக்க வேண்டும். குறிப்​பிட்ட ‘ஹெச்1பி’ ஊழியருக்கு இணையான உள்நாட்டுப் பணியாளர் சந்தையில் கிடைக்க​வில்லை என்று நிறுவ வேண்டும். பச்சை அட்டை பெற்றவர்கள் தாங்கள் பணியாற்றும் நிறுவனங்களை மாற்றிக்​கொள்ள முடியும்; தொழிலும் தொடங்​கலாம்.

ஐந்தாண்டுக் காலம் பச்சை அட்டை தாங்கிய​வர்கள், குடியுரிமைக்கு விண்ணப்​பிக்​கலாம். குடியுரிமை என்பது நவீன உள்கட்​டமைப்பும் சட்டத்தின் மாட்சிமையும் பேணப்​படுகிற ஒரு நாட்டில் வாழும் உரிமை. குடியுரிமை​யுடன் அமெரிக்கக் கடவுச் சீட்டும்வரும்.

அது 180 நாடுகளின் விசா இல்லாமல் கதவுகளைத் திறக்​கும். குடியுரிமை​யானது வாக்குரிமை, ஓய்வூ​தியம் தரும்; பிள்ளைகளுக்கும் குடியுரிமை, கல்வி தரும். இதற்கான வாயிற்​கதவுதான் ‘ஹெச்1பி’ விசா. 2024ஆம் ஆண்டுக் கணக்கின்படி, தற்சமயம் 7.3 லட்சம் இந்தி​யர்கள் ‘ஹெச்1பி’ விசா பெற்று அமெரிக்​காவில் பணியாற்றி வருகிறார்கள். இது மொத்த ‘ஹெச்1பி’ விசாவில் 71%.

அமெரிக்​காவில் அமைந்​திருக்கும் ‘டி.சி.எஸ்’, ‘காக்​னிசன்ட்’, ‘இன்போசிஸ்’ முதலான இந்திய நிறுவனங்​களில் கணிசமான ‘ஹெச்1பி’ இந்தி​யர்கள் பணியாற்றுகிறார்கள். அவர்களைவிட அமேசான், மைக்ரோ​சாப்ட், மெட்டா முதலான அமெரிக்க நிறுவனங்​களில் பணியாற்றும் இந்தி​யர்​களின் எண்ணிக்கை அதிகம். கடந்த 30 ஆண்டு​களில் இந்த ‘ஹெச்1பி’ வழித்தடம் லட்சக்​கணக்கான இந்திய இளைஞர்​களின் வாழ்வா​தா​ரத்தை உயர்த்தி​யிருக்​கிறது. இவர்களால் இந்தியா​வுக்கும் பலன்; அமெரிக்கா​வுக்கும் பலன்.

என்ன பிரச்சினை? - ‘அமெரிக்கக் குடிமக்​களின் வேலைவாய்ப்பை அயல்நாட்டவர் பறிக்​கிறார்கள். இதைத் தடுப்​ப​தற்​குத்தான் இந்தக் கட்டண உயர்வு’ என்கிறது டிரம்ப்பின் புதிய அறிவிப்பு. சில நிறுவனங்கள் அமெரிக்கப் பணியாளர்களை நீக்கி​விட்டு, குறைந்த ஊதியத்தில் அயல்நாட்​டினரை நியமித்​திருப்​ப​தாகவும் குற்றம்​சாட்​டப்​படு​கிறது.

‘ஹெச்1பி’ விசாவில் பணியாற்றிவரும் இந்தி​யர்​களில் 60%க்கும் மேற்பட்டோர் பெறும் ஆண்டு ஊதியம் ஒரு லட்சம் டாலரை​விடக் குறைவு. இவர்களைப் பணியமர்த்த ஓராண்டு ஊதியத்​துக்கும் மேலான தொகையைக் கட்டண​மாகச் செலுத்த எந்த நிறுவனமும் முன்வ​ராது.

இதில் அதிகமும் பாதிக்​கப்​படப்​போவது அமெரிக்​காவில் ஸ்டெம் துறைகளில் படித்து, ஹெச்1பி வரிசையில் இணையக் காத்திருக்கும் இளைஞர்​கள்​தான். இவர்கள் இந்தியாவில் பட்டப் படிப்பை முடித்து​விட்டு, மேற்படிப்​புக்கு அமெரிக்கா சென்ற​வர்கள். கடன் வாங்கியோ, பெற்றோரின் சேமிப்பைப் பெற்றோ, பெருந்​தொகையான கல்லூரிக் கட்டணத்தைச் செலுத்​தி​ய​வர்கள். மூன்றாண்​டு​கள்வரை களப்ப​யிற்சி (optional practical training-OPT) மேற்கொள்​பவர்கள். இந்த அதீதக் கட்டணம் அமலில் இருக்​கும்வரை இவர்களின் அமெரிக்கக் கனவு எளிதில் நனவாகாது.

என்ன செய்ய​லாம்? - இது முறையாக நிறைவேற்​றப்பட்ட சட்டமல்ல; இதை அமெரிக்க நீதிமன்றம் ரத்து செய்து​விடும் என்று சிலர் நம்பு​கிறார்கள். இன்னும் சிலர், திறன் மிகுந்​தவர்​களுக்கு விதிவிலக்கு இருக்​கிறது; பெரிய நிறுவனங்கள் இதைப் பயன்படுத்​தும்; அப்படி​யாகச் சிலருக்கு விசா கிடைக்கும் என்கிறார்கள்.

“இந்தி​யர்கள் அமெரிக்​காவில் பணியாற்று​வதைத்தானே தடை செய்ய முடியும்? அமெரிக்கக் கணினி நிறுவனங்கள் தங்கள் பணிகளை இந்தியாவில் சகாயமாகச் செய்து​கொள்​ளலாமே?” என்று சிலர் சொல்கிறார்கள். ஏற்கெனவே, இது இந்தியாவில் பெரிய அளவில் நடந்து​வரு​கிறது. இது இன்னும் விரிவாக்​கப்​படலாம் என்பதுதான் ஆலோசனை.

ஆனால், இந்த வணிகத்​துக்கு எதிராகக் குடியரசுக் கட்சியின் செனட்டர் பெர்னி மொரேனோ என்பவர் HIRE (Halting International Relocation of Employment) என்னும் மசோதாவைத் தாக்கல்​செய்திருக்​கிறார். இதன்படி அமெரிக்​காவில் பதிவுசெய்​யப்​பட்டு, அயல்நாடு​களில் சேவைபெறும் நிறுவனங்கள், இதற்காக அயல்நாட்டு நிறுவனங்​களுக்குச் செலுத்தும் கட்டணத்தின் 25% தொகையை அமெரிக்க அரசுக்குச் சுங்க வரியாகச் செலுத்த வேண்டும். இதற்கும் சேர்த்து வருமான வரி கட்ட வேண்டும். இப்படிக் கருமேகங்கள் சூழ்ந்துதான் இருக்​கின்றன.

மேற்கு நாடுகளி​லும் ஜப்பான், தென் கொரியா முதலிய கீழை நாடுகளிலும் ஸ்டெம் விற்பன்னர்​களுக்குத் தேவை இருக்​கிறது. இது இடைக்கால நிவாரணம். நமது திறனாளர்கள் ஏன் அமெரிக்கா போக வேண்டும், அவர்கள் ஏன் இந்தியா​விலேயே பணியாற்றக் கூடாது - இப்படிச் சிலர் கேட்கிறார்கள். நிச்சய​மாகச் செய்ய​லாம்.

ஆனால், அதற்கேற்​றாற்போல் நமது கல்விப் புலத்தையும் ஆய்வுப் புலத்தையும் வளப்படுத்த வேண்டும். ஆழ்கற்றல் (deep learning) தொழில்​நுட்பம் நாலு கால் பாய்ச்​சலில் முன்னேறுகிறது. செயற்கை நுண்ணறிவு (AI), செமி கண்டக்டர் என்று அதன் வீச்சு பெரிது. இந்தியாவில் அதை இனியேனும் நிகழ்த்த வேண்டும். சீரிய திட்டங்கள் வகுக்​கப்​பட்டு, போதிய நிதியும் ஒதுக்​கப்​பட்​டால், இந்தத் துறைகளில் நமது இளைஞர்கள் சாதிப்​பார்கள். அவர்களின் கனவு இந்தி​யாவிலேயே மெய்ப்​படும்​.

- தொடர்புக்கு: Mu.Ramanathan@gmail.com

SCROLL FOR NEXT