சிறப்புக் கட்டுரைகள்

மோகன்லால் நடிப்பே நாடித் துடிப்பு

சுகுமாரன்

திரைப்படத் துறையில் சாதனைக்குரிய பங்களிப்புச் செய்தவர்களுக்கு வழங்கப்படும் தாதா சாகேப் பால்கே விருதை மோகன்லால் பெற்றிருக்கிறார். மலையாளத் திரைப்படக் கலைஞர் ஒருவர் இந்த விருதைப் பெறுவது இது இரண்டாவது முறை. 2004இல் இயக்குநர் அடூர் கோபாலகிருஷ்ணனுக்கு விருது வழங்கப்பட்டது.

இரண்டு முறையும் விருதுகள் ஏகோபித்த ஆமோதிப்புக்கு உரியனவாக இருந்தன. மோகன்லாலுக்கு வழங்கப்பட்டிருக்கும் விருது மலையாளத் திரையுலகின் பெரும் கொண்டாட்டத்துக்கும் காரணமாகி இருக்கிறது. எளிய ரசிகர்கள் முதல் கறாரான விமர்சகர்கள்வரை அனைத்துத் தரப்பினராலும் மகிழ்வுடன் வரவேற்கப்படுகிறது.

நடிப்பின் அற்புதம்: மோகன்லால் ஏறத்தாழ அரை நூற்றாண்டாக மலையாளத் திரையுலகில் செயல்​பட்டு​வரு​கிறார். 400 படங்களுக்கு மேல் நடித்​திருக்​கிறார். அவற்றில் பெரும்​பாலானவை மலையாளப் படங்கள். பிற தென்னிந்திய மொழிகளிலும் இந்தியிலும் சில படங்களில் நடித்​திருக்​கிறார். நடிப்பைத் தவிர்த்து சினிமாவின் பிற துறைகளிலும் பங்களித்திருக்​கிறார்.

எனினும் நடிப்பே அவரது முதன்​மையான ஈடுபாடு. 1978இல் 18 வயதில் நண்பர்​களின் ஒத்துழைப்புடன் தயாரிக்​கப்பட்ட ‘திரைநோட்டம்’ படம் மூலம் சினிமா உலகுக்கு அறிமுகமான மோகன்​லால், தனது நடிப்புக் காலம் முழுவதும் அயராது உழைத்​திருக்​கிறார்.

பார்வை​யாள​ருக்கு நடிப்பில் ஏமாற்றம் அளிக்காத கலைஞர் என்கிற பெயரையும் நிலைநிறுத்​தி​யிருக்​கிறார். இந்த அர்ப்​பணிப்பும் நம்பகத்​தன்​மையுமே அவரை மலையாள சினிமாவின் தவிர்க்க​வியலாத நடிகர் ஆக்கி​யிருக்​கின்றன; ‘நடன விஸ்மயம்’ (நடிப்பின் அற்புதம்) என்று பாராட்ட வைத்திருக்​கின்றன.

ஒரு குறிப்​பிட்ட காலக்​கட்​டத்தின் கலை நிகழ்வு மோகன்​லால். மலையாளத் திரைப்​படங்கள் இந்திய அளவிலும் உலக அளவிலும் கவனத்​துக்கு உரியவையாக மாறிவந்த கடந்த நூற்றாண்டின் 70களில் அவரது திரை நுழைவு நிகழ்ந்தது. அந்தத் திசைதிருப்பக் கட்டத்​தில், மலையாளத்தில் யதார்த்த வாழ்க்கையைச் சித்தரிக்கும் சீரிய கலைப் படங்கள் உருவாகி, சர்வதேசப் புகழ்​பெற்றன. ஆட்டம், பாட்டு, அடிதடி, உருக்கம், நகைச்சுவை என்ற வெகுமக்கள் சினிமா சூத்திரங்​களுக்கு ஏற்பத் தயாரிக்​கப்பட்ட படங்களும் எடுக்​கப்​பட்டன. அதேவேளை​யில், இரண்டு போக்கு​களும் இணைந்த இன்னொரு வகைப் படங்களும் உருவாயின.

ஓரளவு கலைத்​தன்​மையும் நடைமுறைச் சித்தரிப்பும் கொண்ட அதேநேரம், ரசனைக்​கேற்ற கேளிக்கை அம்சங்​களும் சேர்ந்த ‘இடைநிலைத் திரைப்​படங்கள்’ (middle cinemas) வெளியாயின. பரதன், பத்மராஜன், வேணு நாகவள்ளி, மோகன், சத்தியன் அந்திக்காடு போன்ற இயக்குநர்கள் இடைநிலைப் படங்களை நோக்கிக் கணிசமான பார்வை​யாளர்களை ஈர்த்​தார்கள். மோகன்லாலை ஒரு நடிகராக அறியவைத்தவை பெரும்​பாலும் இந்த வகையிலான படங்களே. சினிமா ஒரு கலைவடிவம் என்பதோடு, பொழுது​போக்கு ஊடகம் என்பதைத் துல்லிய​மாகப் புரிந்து​கொண்ட நடிகராக மோகன்லால் தன்னை உருவாக்​கிக்​கொண்​டார்.

முழுமையான நடிகர்: எல்லாருக்கும் அறிமுகமான நடிகராக மோகன்லால் கவனம் பெற்ற படம் ‘மஞ்ஞில் விரிஞ்ஞ பூக்கள்’. அதில் அவருக்கு எதிர்​நாயகப் பாத்திரம். தொடர்ந்தும் அதே மாதிரியான பாத்திரங்களே அவருக்கு அளிக்​கப்​பட்டன. அந்த வாய்ப்பு​களைத் திறம்படப் பயன்படுத்தித் தன்னை முக்கியமான நடிகராக நிறுவி​னார்.

அதேநேரத்​தில், இடைநிலைப் படங்களிலும் நடித்துத் தனித்து​வத்தை உருவாக்​கிக்​கொண்​டார். வெகுமக்கள் ரசனைக்கான படங்களில் நடித்துத் தன்னை நட்சத்திர அந்தஸ்​துக்கு உயர்த்திக்​கொண்ட அதேவேளை, எந்தக் கதாபாத்​திரத்தையும் அநாயாசமாக ஏற்றுக்​கொள்​பவ​ராகவும் இருந்​தார். முழுமையான நடிகர் (The Complete Actor) என்று அவர் மதிக்​கப்​படுவதன் பின்னணி இதுதான்.

ஒரு நடிகரின் உடலே கேளிக்கை ஊடகம்​தான். அதன் வழியாக வெளிப்​படுத்​தப்​படும் கதாபாத்​திரங்​கள்தாம் ரசிகர்களை ஈர்க்​கின்றன. அதுவே வணிக வெற்றிக்கும் கலைப் பெறும​திக்கும் கருவி​யாகின்றன. இதைத் துல்லியமாக உணர்ந்தவர் மோகன்லால்.

அதனால்தான் அவரால் ‘நரசிம்​மம்’, ‘புலி முருகன்’, ‘லூசிஃபர்’ போன்ற மசாலாப் படங்களில் அதிசாகச நாயகனாக​வும், ‘தன்மாத்ர’, ‘பிரணயம்’ போன்ற இடைநிலைப் படங்களில் சாதாரண மனிதராக​வும், ‘வானப்​ரஸ்​தம்’, ‘வாஸ்​துஹாரா’ முதலான கலைப்​படங்​களில் சீரிய நிகழ்த்​துந​ராகவும் பங்களிக்க முடிந்தது. இவை எதிலும் அவரது நடிப்பு சோடை போனதில்லை.

அந்தந்தப் படங்களின் தேவைக்​கேற்ற பரிமாணத்​தில், தனது நடிப்பை வடிவமைத்​திருக்​கிறார். எல்லா வகையான இயக்குநர்​களின் விருப்பத் தேர்வாகவும் இருந்து​வரு​கிறார். மலையாள சினிமாவின் முதல் நட்சத்திர நடிகராகக் கருதப்​படும் திக்குரிசி சுகுமாரன் நாயர் முதல் மோகன்லால் வரையிலான நடிகர்கள் ஒரு பொது இலக்கணத்தைப் பின்பற்றுகிறார்கள் என்று சொல்லலாம். தாங்கள் முதன்​மையாக நடிகர்கள்; நட்சத்​திரங்கள் அல்லர் என்கிற இயல்புணர்வைக் கொண்டிருக்​கிறார்கள்.

ஒரு கதைச் சூழலில் ஒரு மனிதன் என்னென்ன செய்கைகளை மேற்கொள்​வானோ, அதை வெளிப்​படுத்துவதே நடிப்பு என்கிற போதத்தைக் கொண்டிருக்​கிறார்கள். அதை மீறிய​வகையில் நடிப்பை வெளிப்​படுத்​த​வும், அதன் மூலம் நட்சத்​திரத் தகுதியை அடையவும் செய்திருக்​கிறார்கள். இருப்​பினும் முன் சொன்ன இலக்கணத்தை அநேகமாகக் கைவிட்​ட​தில்லை.

மோகன்​லாலுக்கும் இது பொருந்தும். சினிமாவுக்​குரிய சூத்திரத்​தின்படி வார்க்​கப்பட்ட கதாபாத்​திரத்தை ஏற்கும்​போதும், அதில் இயல்பான நடத்தை வெளிப்​படுமாறு நடிக்​கிறார். ‘சாகர் ஏலியாஸ் ஜாக்கி: ரீலோடட்’ படத்தில் அவருக்கு அதிசாகசமான பாத்திரம். ஆனால், அதிலும் எதார்த்தமான மனிதச் செய்கைகளுக்குத் தனது நடிப்பில் முன்னுரிமை அளிக்​கிறார்.

தனக்குள்​ இருந்து கதாபாத்​திரத்தை உருவாக்குவது என்பதை​விட​வும், ஒரு கதாபாத்​திரத்தில் தன்னைப் புகுத்தி கதாபாத்​திரக் குணத்தை வெளிக்​கொணர்​வதையே மோகன்லால் தனது நடிப்புத் திறனாக வெளிப்​படுத்து​கிறார். இதுவே அவரது நடிப்பைத் தனித்துக் காட்டு​கிறது.

நேர்காணல் ஒன்றில் அவர் இப்படிக் குறிப்​பிட்​டிருக்​கிறார்: “எனக்கு நடனமாடத் தெரியாது. ஆனால் ‘கமலதளம்’ படத்தில் நாட்டியக் கலைஞராக நடித்​திருக்​கிறேன். நான் கதகளி பயின்றவன் அல்ல. ‘வானப்​ரஸ்​த’த்தில் கதகளிக் கலைஞராக நடித்​திருக்​கிறேன்.

யேசுதாசைப் போன்ற தேர்ந்த பாடகர் அல்ல நான். ஆனால், ‘பரதத்​’தில் சங்கீதக்​காரன்.” இந்தப் படங்களில் நாம் பார்ப்பது நடிகரை அல்ல. அந்தந்தக் கதாபாத்​திரங்​களையே. அந்த அளவுக்கு நடிப்பைத் துறந்த தன்வயப்பட்ட நடிப்பு அவருடையது. ‘திருஷ்யம்’ படத்தில் நாம் பார்ப்பது மோகன்லால் என்கிற நடிகரை அல்ல; ஜார்ஜ் குட்டி என்கிற கதாபாத்​திரத்தைத்​தான். சமீபத்திய ‘துடரும்’ படத்தில் நாம் பார்ப்பது டாக்சி ஓட்டுநர் சண்முகத்தைத்​தான். இந்தக் கூடுவிட்டுக் கூடும் பாயும் மாயமே இந்திய சினிமாவின் மகத்தான நடிகர்கள் வரிசையில் அவரைக் குறிப்பிட வைக்கிறது.

ஏறத்தாழ 400 படங்களில் மோகன்லால் நடித்​திருக்​கிறார். அவற்றில் கணிசமான படங்களில் அவர் நடிப்பு மெச்சத்​தகுந்தது என்று நிச்சய​மாகச் சொல்லலாம். அவருடைய நடிப்புப் பாணி இயற்கை​யானது. எந்த விதமான கதாபாத்​திரத்தையும் தன்னால் ஏற்று நடிக்க முடியும் என்று தன் நீண்ட நடிப்புக் காலத்தில் நிரூபித்​திருக்​கிறார்.

ஒரே பிறவியில் நூற்றுக்​கணக்கான வாழ்க்கையை வாழ்ந்து பார்க்கும் நல்வாய்ப்பு ஒரு நடிகருக்கு எளிதில் கிடைக்​கிறது. சில நடிகர்களே அதை அனைவரும் ஏற்றுக்​கொள்ளும் விதமாக வெளிப்​படுத்து​கிறார்கள். அதை அனுபவித்து உணர்ந்​திருக்கும் நடிகர் மோகன்​லால். “நடிப்பு என்பது என் ஆன்மாவின் துடிப்பு” என்று தாதா சாகேப் பால்கே விருது ஏற்புரையில் அவர் குறிப்​பிட்​டார். அது வெறும் மேடைச் சொல் அல்ல... அனுபவத்​திலிருந்து அந்தக் கலைஞர் அளிக்கும் வாக்குமூலம்​.

- தொடர்புக்கு: nsukumaran@gmail.com

SCROLL FOR NEXT