சிறப்புக் கட்டுரைகள்

நெருப்பில் பிறந்தவள் | நாவல் வாசிகள் 26

எஸ்.ராமகிருஷ்ணன்

பாஞ்சாலி, கிருஷ்ணை, யக்ஞசேனி எனப் பல்வேறு பெயர்களில் அழைக்கப்படும் திரௌபதியின் வாழ்க்கையை ஒரியா எழுத்தாளர் பிரதிபாராய் ஒரு நாவலாக எழுதியிருக்கிறார். கிருஷ்ணனுக்கு எழுதப்படும் கடிதம் போன்ற வடிவம் கொண்ட ‘யக்ஞசேனி’ நாவல், சாகித்ய அகாதமி பரிசு பெற்றுள்ளது. இதனை இரா.பாலச்சந்திரன் ‘திரௌபதியின் கதை’ எனத் தமிழாக்கம் செய்திருக்கிறார்.

மகாபாரதத்தில் திரௌபதியாக நெருப்பில் தோன்றுகிறாள். அவளது பிறப்பிற்கே ஒரு காரணம் சொல்லப்படுகிறது. மகளாக, மனைவியாக, அன்னையாக, சேடியாக, ராணியாக அவள் கொண்ட மாற்றங்களும், அதில் ஏற்பட்ட அனுபவங்களையும் இந்த நாவலில் பிரதிபாராய் விவரிக்கிறார். நாவலில் திரௌபதி தன்னை முழுமையாகப் புரிந்து கொண்டவராகக் கிருஷ்ணரை மட்டுமே நினைக்கிறாள். ஆகவேதான் அவருக்குக் கடிதம் எழுதுகிறாள். எனது இரத்தத்தால் எழுதப்பட்ட இந்தக் கடிதம், மரணத்தை நோக்கிய எனது கடைசி யாத்திரையின் ஒரே துணை எனத் திரௌபதி குறிப்பிடுகிறாள். மகாபாரதத்தில் இல்லாத சில கற்பனை சம்பவங்கள் மற்றும் துணை கதாபாத்திரங்கள் மையக் கதையில் இணைக்கப்பட்டுள்ளன.

ஒரு பெண் முதுமையில் தனது கடந்தகால வாழ்வினைத் திரும்பி பார்ப்பார் எனில், அவர் குறைவான சந்தோஷத்தை மட்டுமே வாழ்வில் அனுபவித்திருப்பதையும், அதிகமும் வருத்தங்களை, கசப்பான அனுபவங்களை, துயரைக் கடந்து வந்திருப்பதையே உணர்வார். திரௌபதியும் அப்படியே உணர்கிறாள்.

நெருப்பில் பிறந்த திரௌபதியின் வாழ்க்கை, பனியில் முடிவடைகிறது. சொர்க்கத்தை நோக்கிய பாண்டவர்களின் கடைசிப் பயணத்தில் திரௌபதி பனிமலையிலிருந்து கால்கள் வழுக்கி விழுகிறாள். பாண்டவர்களில் ஒருவர் கூட அவளைப் பார்க்கத் திரும்பவில்லை. தர்மபுத்திரரான யுதிஷ்டிரன் பின்னால் திரும்பி பார்க்காதே எனப் பீமனிடம் சொல்கிறார். அந்த வார்த்தையைத் திரௌபதி தனது காதில் கேட்டதாகப் பிரதிபாராய் எழுதுகிறார்.

“அந்த வார்த்தைகள் என் இதயத்தை உடைத்தன. கணவன் மனைவிக்கு இடையேயான பிணைப்பு, பாசம் என்பது நிஜமானது இல்லையோ எனத் தோன்றியது. இவ்வளவு தானா எனது வாழ்க்கை என வருத்தம் கொள்ள வைத்தது’’ என்று குறிப்பிடுகிறார். உலகில் எழுதப்பட்ட கதைகளை விட, எழுதப்பட வேண்டிய மற்றும் எழுதப்படாத கதைகளின் எண்ணிக்கை அதிகம். அந்தக் கதைகள் மனிதர்களின் மனதில் நினைவுகளாகக் காத்திருக்கின்றன. இதயத்தின் சுமையைக் குறைப்பதற்குக் கதைகள் தேவைப்படுகின்றன. கதை சொல்வது அல்லது எழுதுவதன் மூலம் நினைவுகள் புதுவடிவம் கொள்கின்றன. சொந்த அனுபவத்தின் வரம்புகளைக் கடந்து பொது அனுபவமாக, தனித்துவமிக்கக் கலை வெளிப்பாடாக மாறுகின்றன. இதிகாசம் என்பதும் இது போன்ற ஆயிரமாயிரம் நினைவுகளின் தொகுப்புதான்.

மகாபாரதம் சார்ந்த புனைவுகள் இந்தியாவில் நிறைய எழுதப்பட்டிருக்கின்றன. அதற்குக் காரணம் ஒவ்வொரு கதாபாத்திரத்தின் பார்வையிலும் அந்தக் கதை வேறாக உருமாறி விடுகிறது. திரௌபதியின் பார்வையில் மகாபாரத நிகழ்வுகள் நாவலில் விவரிக்கப்படும் போது நாம் அறிந்துள்ள மகாபாரதக் கதை வேறாக மாற்றம் கொள்வதைக் காண முடிகிறது.

குருகுலத்தில் பயிலும் நாட்களில் துரோணரும் துருபதனும் சிறந்த நண்பர்களாக இருக்கிறார்கள். குருகுல வாசம் முடிந்து இருவரும் பிரிகிறார்கள். துருபதன் அரசனாகிறார். துரோணர் பழைய நட்பை நினைவில் கொண்டு துருபதனை தேடிச் சென்று உதவி கேட்கிறார். சம அந்தஸ்து கொண்ட இருவர் மட்டுமே நண்பர்களாக இருக்க முடியும் என்று துருபதன் அவரை அவமானப்படுத்துகிறார். வெளியேறிய துரோணர் பாண்டவர்களின் குலகுருவாகிறார். தனது சீடன் அர்ச்சுனனைக் கொண்டு துருபதனை வெல்கிறார். போரில் வென்ற துருபதனை துரோணரின் காலடியில் அர்ச்சுனன் விழச் செய்கிறான்.

அப்போது துரோணர், தான் அடைந்த அவமானத்திற்குப் பதில் அளிக்கும் விதமாக ``இப்போது உன்னிடம் ராஜ்ஜியமில்லை. நான் உனக்குப் பாதி ராஜ்ஜியம் தருகிறேன். பாஞ்சாலத்தின் வடக்குப் பகுதி என்னுடையது. கங்கை நதியின் தெற்குப் பகுதியின் ஆட்சியாளராக நீ இருக்கலாம். இப்போது நாம் சமமானவர்கள். இனி நமது நட்புக்கு ஏதாவது தடை இருக்கிறதா?’’ எனக் கேட்கிறார்.

தனது ராஜ்யத்தில் பாதியை இழந்த துருபதன், பொய்யான நட்பில் இணைகிறான். ஆனால் துரோணரைக் கொல்லாமல் தனது அவமானம் தீராது என மனதிற்குள் கொதிக்கிறான். இதற்காகவே யாகம் செய்கிறான். யாக நெருப்பில் திருஷ்டத்யும்னன் பிறக்கிறான். அவனுடன் கூடவே யக்ஞசேனியும் பிறக்கிறாள். தந்தையை அவமானத்திலிருந்து மீட்பதற்காகவே அவர்கள் தோன்றுகிறார்கள். அவளுக்குக் கிருஷ்ணை எனப் பெயரிடுகிறார்கள்.
அரசவைக் கவிஞர்கள் அவளது அழகை புகழ்ந்து பாடுகிறார்கள். வாழ்நாள் முழுவதும் கவிதைகளை இயற்றிய பிறகும், இந்த ஒப்பற்ற அழகுக்குப் பொருத்தமான ஒரு உவமையைக் கண்டுபிடிக்க முடியாது என்கிறார்கள். பேரழகியாக வளரும் திரௌபதி ஆசைக் கனவுகளைக் காண்கிறாள்.

அர்ச்சுனனைத் தவிர வேறு யாரும் வெல்லக்கூடாது என்று துருபதன் விரும்பியே சுயவரத்தில் வில்வித்தை போட்டிகளை ஏற்பாடு செய்திருப்பதாகத் திரௌபதி நினைக்கிறாள். அர்ச்சுனனின் வீரத்தைப் பற்றிய கதைகளை அவள் கேட்டறிந்திருந்தாள். சுயவரத்திற்கு முன்பு திரௌபதி என்ன மனநிலையில் இருந்தாள் என்பதைப் பிரதிபாராய் விரிவாக எழுதியிருக்கிறார். ‘அமைதியான ஏரியைப் போல என் மனம் அமைதியாகவும் மகிழ்ச்சி நிறைந்ததாகவும் இருந்தது’ எனத் திரௌபதி குறிப்பிடுகிறாள்.

இந்திரபிரஸ்தத்தின் ராணியாக மாறிய திரௌபதி, தங்கள் புதிய மாளிகையைக் காண வரும் கர்ணனை உபசரிக்கக் கூடாது என எண்ணுகிறாள். ‘‘என் கைகளால் சமைத்த உணவை நான் ஏன் அவருக்குப் பரிமாற வேண்டும்? நிச்சயமாக, அனைத்து கௌரவர்களும் என் உறவினர்கள். ஆகவே அவர்களை வரவேற்பேன். ஆனால் கர்ணன் ஒரு வெளியாள். அவர் வந்தால், விருந்தினர் மாளிகையில் தங்கட்டும். பணிப்பெண்கள் அவரைக் கவனித்துக் கொள்ளட்டும். நான் கவனிக்கமாட்டேன்’’ என்று திரௌபதி நாவலில் சொல்கிறாள்.

திரௌபதியின் நினைவாற்றலை மகாபாரதம் வியந்து சொல்கிறது. பாண்டவர்கள் மூலம் பிரதிபித், சுதசோமன், சுருதகீர்த்தி, சதானீகன். சுருதசர்மா என ஐந்து பிள்ளைகள் திரௌபதிக்குப் பிறக்கிறார்கள். வனவாசத்தின் போதும், அஞ்ஞானவாசத்தின் போதும் அவள் நிறைய இடர்களைச் சந்திக்கிறாள்; வேதனைப்படுகிறாள். ஆனால் அவளது கோபம் தணிந்து போகவில்லை. அந்த நெருப்பு கடைசி வரை எரிந்து கொண்டேயிருக்கிறது, துரியோதனன் பல நேரங்களில் ராணி பானுமதியின் பேச்சைக் கேட்டிருந்தால், பாவம், அதர்மம், வெறுப்பு போன்றவை அவரை ஒருபோதும் தீண்டியிருக்காது எனத் திரௌபதி நினைப்பதாக நாவலில் வருகிறது.

அஞ்ஞானவாசத்தில் பிருஹன்னளையாக நடனம் கற்பித்த அர்ச்சுனனை அவளுக்குப் பிடிக்கவில்லை. அவனது நடனத் திறமையைக் கண்டு வியந்து, அரண்மனையில் அனைவரும் கைதட்டும் போது அவள் மட்டும் வேதனைப்படுகிறாள். தனது அடையாளத்தை மறைத்துக் கொண்டு வாழ்கிறவர்களின் துயரை உலகம் அறியாது. அவர்கள் நிம்மதியாக உறங்க முடியாதவர்கள். நாவலின் இறுதியில் திரௌபதி சொர்க்கத்தை விரும்பவில்லை. அவள் பூமியில் வாழவே விரும்புகிறாள். அதுவும் போர் இல்லாத வாழ்க்கையை விரும்புகிறாள். அதுவே இதனை நவீன நாவலாக்குகிறது.

SCROLL FOR NEXT