அதிவீரபாண்டியன் ஓர் அதிஅற்புத அரூபக் கலைஞன். அபூர்வமான படைப்பு மேதை. சர்வதேசக் கலை அரங்கில் கவனம் பெற்ற தமிழக ஓவியர்களில் ஒருவர். நெய்தல் நிலக் காட்சிகளின் மகத்தான ஓவியன். அவர் வாழ்க்கையின் ஆதாரமாக அமைந்த, கடலும் கடல் சார்ந்த நிலப் பகுதிகளும் உயிர் கொண்ட அழகிய வெளிப்பாடுகளே அவரின் அரூப ஓவியங்கள்.
ஆரம்பத்தில் வண்ணங்களின் மாய இசைக் கோவைகளாக அவருடைய ஓவியங்கள் உருக்கொண்டன. ஓவிய வெளியிலான அவருடைய பயணத் தொடக்கத்தில், வண்ணங்களில் மாயவித்தைகள் புரிபவராகத் திகழ்ந்தார். இளம் வயதிலேயே வண்ணங்களைக் கையாள்வதில் இவர் அடைந்த தேர்ச்சி அபாரமானது. வண்ணங்களை அழுத்தமாகவும் தீர்க்கமாகவும் மனோபாவங்களுக்கேற்ற தொனி அழகோடும் கையாண்டவர். வண்ணமும் வடிவமும் இசைமை கொண்டதில் அழகு பெற்றவை இவரின் ஆரம்ப கால ஓவியங்கள்.
எனில், இவரின் கடந்த சில வருடங்களின் படைப்புகளில் இசையின் லயம் கூடிய வண்ணங்களின்மீது கோடுகள் நடனமிட்டன. வண்ணங்களும் கோடுகளும் ஒன்றையொன்று மேவி, தமக்குள்ளாக இசைந்து இசைந்து ஓவிய வெளியில் ஓர் அற்புதத்தை நிகழ்த்தின. 1966ஆம் ஆண்டு ஜனவரி 15ஆம் தேதி சென்னை ராயபுரத்தில் பிறந்து வளர்ந்த இவரின் சிறுவயது, கடல் சார்ந்த மனித வாழ்வின் சலனங்களை ஏக்கத்தோடும் தனிமையோடும் பார்த்துக்கொண்டிருப்பதாக அமைந்தது. மீனவர் குடும்பச் சிறுவர்களோடு பழகவிடாமல் தாயார் பார்த்துக்கொண்டதால் ஏற்பட்ட விளைவு. அப்பா, துறைமுகத் தொழிலாளர் சங்கத்தின் செயலாளர். கம்யூனிசவாதி. வீடு சோவியத் இலக்கியங்களாலும் புத்தகங்களாலும் நிறைந்திருந்தது. சிறு வயதிலேயே வாசிப்பும் வரைதலும் இவரின் ஈடுபாடுகளாக அமைந்தன.
இவரின் இளம் பிராயத்தை வடிவமைத்தவர்கள் மூவர். ஒருவர் தந்தை. இரண்டாவது, அண்ணன் மணவாளன். வரைவதில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்த மணவாளன், படிப்பில் சிறப்பாகத் தேர்ச்சி பெற்றதால், அப்பாவின் விருப்பத்துக்கேற்ப கடல்சார் பொறியாளர் ஆனார். பள்ளியில் 12ஆம் வகுப்பில் அதி, தோல்வி அடைந்தார். இதுதான் அவர் வாழ்வின் திசையை வடிவமைத்தது. அதி, ஓவியக் கல்லூரியில் சேரவும், தன் கனவின் வடிவமாக அதி உருவாகவும், அண்ணன் மணவாளன் ஆர்வம் காட்டினார். கப்பல் பயணங்களின்போது, பல நாடுகளின் நகரங்களிலிருந்து உயர்தர வண்ணங்களை வாங்கி அனுப்பினார். மூன்றாமவர், இராயபுரம் புனித பீட்டர் பள்ளியில் அதி படித்தபோது, உற்சாகமும் உத்வேகமும் அளித்த பள்ளியின் ஓவிய ஆசிரியர் பிரான்சிஸ்.
அதிவீரபாண்டியன் 1984ஆம் ஆண்டு சென்னை ஓவியக் கல்லூரியில் மாணவனாகச் சேர்ந்தார். அறிதல் பயிற்சியில் கடுமையாக ஈடுபட்டார். இவருடைய ஆரம்பகால உருவ ஓவியங்கள் மிகவும் தத்ரூபமானவை. தாள்களிலிருந்தும் திரைச்சீலைகளிலிருந்தும் வெளியேறி வந்துவிடக் கூடுமென எண்ணுமளவுக்குத் தத்ரூபமானவை. இக்காலகட்டத்தில் மூத்த மாணவரான நடேஷ், கல்லூரி வளாகத்தில் வரைந்த அரூப மியூரல் அதியை வெகுவாக பாதித்தது. தோற்றங்களை விடவும் தோற்றங்களின் சாரங்களான அரூபங்களை அகப்படுத்த மனம் விழைந்தது.
அதனைத் தொடர்ந்து, தமிழக நவீனக் கலைவெளியில் புதியதோர் ஆற்றல்மிக்க சக்தியாக அதி மிளிர்ந்தார். முப்பது ஆண்டுகளுக்கும் மேலான அவருடைய கலைவெளிப் பயணம் தொடர் பரிசோதனைகள் கொண்டது. படைப்புகள் உள்ளார்ந்த தீவிரமும் எண்ணற்ற அடுக்குகளும் அதிர்வுகளும் கொண்டு அக ஒளியில் வெளிச்சம் பெற்றன. உணர்ச்சிகளும் ஆழ்ந்த மனநிலைகளும் அடுக்கடுக்காய் உள்ளுறைந்தன. இவருடைய நிலக்காட்சிகளில் மனிதர்கள் இடம் பெறாவிட்டாலும் கண்ணுக்குப் புலப்படாத வகையில் அவர்கள் இருந்துகொண்டிருக்கிறார்கள். அவர்கள் அவற்றை வியப்போடு தரிசித்துக் கொண்டிருக்கிறார்கள். அதியின் அரூப ஓவியங்கள் என்றென்றும் கலை வெளியில் ஒளிர்ந்து கொண்டிருக்கும் ஆற்றல் மிக்கவை.