கிழக்கு மற்றும் மேற்கத்திய கலாச்சார மரபுகளின் குறுக்குவெட்டுகளை ஆராயும் ராஜாராவின் ‘பாம்பும் கயிறும்’ நாவல், 1960இல் வெளியானது. டி. சி. ராமசாமி இதனைத் தமிழாக்கம் செய்திருக்கிறார்.
கர்நாடகாவைச் சேர்ந்த ராஜாராவ் பிரான்ஸின் சோர்போன் பல்கலைக்கழகத்தில் கல்வி பயின்றவர். காமில் மௌலி என்ற பிரெஞ்சு பெண்ணைத் திருமணம் செய்து கொண்டிருக்கிறார். அமெரிக்காவின் டெக்சாஸ் பல்கலைக்கழகத்தில் தத்துவப் பேராசிரியராகப் பணியாற்றியிருக்கிறார். இவரது படைப்புகள் பெரிதும் தத்துவச் சார்பு கொண்டவை.
நாவல் என்பது நீண்ட கதையை மட்டும் விவரிக்கக் கூடிய வடிவமில்லை. கதை வழியாக வரலாற்றை, வாழ்க்கை குறித்த பார்வைகளை, தேடல்களை விவரிக்கவும் வளர்த்தெடுக்கவும் கூடிய இலக்கிய வடிவமாகும். அந்த வகையில் இந்த நாவலின் வழியே இருவேறு தத்துவ மரபுகளை ராஜாராவ் ஆராய்கிறார்.
நாவலின் மையக் கதாபாத்திரமான ராமா எனும் ராமசாமி பிரான்ஸில் வசிக்கிறார். இவர் ராஜாராவின் இன்னொரு வடிவமே. இருபது வயதுகளில் ராமசாமி கல்வி பயிலுவதற்காக இந்தியாவை விட்டு ஐரோப்பாவிற்குச் செல்கிறார். அங்கே அவரது சிந்தனை மாறுகிறது. ஐரோப்பிய வாழ்க்கை முறை மற்றும் தத்துவங்களால் ஈர்க்கப்படுகிறார். பிரெஞ்சு பெண்ணைக் காதலித்துத் திருமணம் செய்து கொள்கிறார். அவர்களுக்குப் பியர் என்ற குழந்தை பிறந்து ஏழு மாதங்களில் இறந்து விடுகிறது. அந்த வேதனை அவரது மனதில் ஆழமான வடுவாகப் பதிந்து விடுகிறது.
தனது கடைசி நாட்களை எண்ணிக் கொண்டிருக்கும் தந்தையைக் காண்பதற்காக ராமசாமி இந்தியா திரும்புகிறார். ராமசாமிக்கு ஏழு வயதாக இருக்கும்போது அவரது அன்னை இறந்து விடுகிறார். அவரது தந்தை விசாலாட்சி என்ற பெண்ணை மறுமணம் செய்து கொள்கிறார். அவள் வழியாக ஸ்ரீதர் என்ற பையன் பிறக்கிறான்.
தந்தையின் இறப்பிற்குப் பின்பு ராமசாமி தனது வளர்ப்புத் தாயையும் இளைய சகோதரனையும் அழைத்துக் கொண்டு வாரணாசி செல்கிறார். ‘பனாரஸில் மரணம் என்பது காலையில் தோன்றும் மூடுபனியைப் போல வெறும் மாயை என்று தெரிந்தது’ எனக் குறிப்பிடுகிறார் ராஜாராவ். வாரணாசியில் தந்தைக்கான நீத்தார் சடங்குகளை மேற்கொள்ள ராமசாமி முனைகிறார். அவர் பிரெஞ்சு பெண்ணைத் திருமணம் செய்து கொண்ட காரணத்தால் சடங்குகளில் அவர் கலந்து கொள்ள முடியாது எனப் பண்டிதர்கள் மறுக்கிறார்கள். பணம் கொடுத்து அவர்களின் எதிர்ப்பை அடக்குகிறார். பிரெஞ்சு பெண்ணான மேடலீனை அவர் திருமணம் செய்து கொள்ள விரும்பிய போது அவளும், ‘உனது கடவுள்கள் என்னை ஏற்றுக் கொள்வார்களா? நீ கடவுளின் கோபத்திற்கு ஆளாகப் போகிறாயா?’ என்றே கேட்கிறாள்.
தந்தையின் மரணத்தைத் தொடர்ந்த அவரது பயணம் அதில் நடக்கும் சில நிகழ்வுகள் அவருக்குள் சில ஆழமான கேள்விகளை எழுப்புகின்றன. அவை சுய விழிப்புணர்வின் அடையாளங்கள். நாவலின் தலைப்பு சொல்வது போலத் தோற்றமும் நிஜமும் மனதால் உருவகிக்கப்படுகிறது. தான் ஐரோப்பிய சிந்தனை கொண்டவனா அல்லது இந்திய மரபின் தொடர்ச்சிதானா என ராமசாமி குழப்பம் கொள்கிறார்.
ராமசாமியின் எண்ணவோட்டங்களின் வழியாக இந்த நாவல் அவரது கடந்தகாலத்தையும் நிகழ்காலத்தையும் விவரிக்கிறது. மேற்கை கல்வி அறிவின் அடையாளமாகவும் கிழக்கை ஆன்மீகத்தின் தோற்றமாகவும் ராஜாராவ் சித்தரிக்கிறார். இந்தியாவில் அதன் கடந்த காலமும் நிகழ்காலமும் பிரிக்க முடியாதபடி பிணைந்துள்ளது. அதிலும் வாரணாசி ஒரே நேரத்தில் வேறுவேறு நூற்றாண்டுகளைக் கொண்டிருக்கிறது. நாம் எங்கே நிற்கிறோம், என்ன செய்கிறோம் என்பதில்தான், எந்தக் காலத்தில் இருக்கிறோம் என உணர முடியும் என்கிறார் ராஜாராவ்.
நாவலின் ஓர் இடத்தில் ராமசாமியின் சிற்றன்னை யமுனை ஆற்றின் கரைக்கு வருகிறாள். மகாத்மாவின் உடல் தகனம் செய்யப்பட்ட இடத்தில் நிற்கிறாள். அவள் கண்ணீர் விடவில்லை, பிரார்த்தனை செய்யவில்லை, மாறாக யமுனை ஆற்றின் தண்ணீரை அள்ளி அவள் தனது முகத்தைக் கழுவிக் கொள்கிறாள். இந்தியர்கள் மரணத்தை நினைவு கொள்ளும் விதம் ஐரோப்பியர்களால் புரிந்து கொள்ள முடியாதது என ராமசாமி உணருகிறார்..
சூரஜ்பூரைச் சேர்ந்த ராஜா ரகுபீர் சிங்கின் மகள் சாவித்திரி, கேம்பிரிட்ஜில் ஆங்கிலம் படித்து வருகிறாள். அவளுக்கு அரச குடும்பத்தைச் சேர்ந்த பிரதாப் சிங்குடன் கட்டாயமாக நிச்சயதார்த்தம் நடைபெறுகிறது. அந்த விழாவில் பிரதாப், சாவித்திரியை ராமாவிற்கு அறிமுகப்படுத்துகிறார். அவள் ராமாவின் ஆய்வு குறித்து அறிந்து கொண்டு அவரைப் பாராட்டுகிறாள். அவள் மீது ராமசாமிக்கு ஈர்ப்பு உருவாகிறது. அவர்கள் சந்தித்து உரையாடுகிறார்கள். பிரதாப் ஆங்கிலேயர்களுக்குச் சேவகம் செய்வதைச் சாவித்திரி விரும்பவில்லை. ஆகவே அந்தத் திருமணத்தை முறித்துக் கொள்கிறாள். ராமா பொய்மானைத் துரத்திப் போவது போலச் சாவித்திரியை பின்தொடர்கிறார். ஆனால் அவரது விருப்பம் நிறைவேறவில்லை.
ராமசாமி ஐரோப்பிய கல்வி பெற்ற இந்திய மனது கொண்டவராக நடந்து கொள்கிறார். அவரது நம்பிக்கைகள், அவர் செய்யும் சடங்குகள் ஐரோப்பியர்களின் பார்வையில் கேலிக்குரியன. ஆனால் அதை விரும்பியே மேற்கொள்கிறார். கல்வி மற்றும் வேலைக்காக வெளிநாடுகளுக்குச் சென்று அங்கேயே திருமணம் செய்துகொண்டு அந்த நாட்டுப் பிரஜையாக மாறிய பின்பும் தனது பழைய நினைவுகள் மற்றும் வேர்களைத் தேடும், சொந்த நாடு திரும்ப வேண்டும் என்ற தீராத ஏக்கம் கொண்டிருக்கும் மனிதர்களில் ஒருவராகவே ராமசாமி சித்தரிக்கப்படுகிறார்.
உயர்கல்வி கற்று ஆராய்ச்சியினை மேற்கொள்ளும் அறிவாளியான ஒருவர், உறவெனும் வட்டத்திற்குள் எப்படி மாறிப்போய்விடுகிறார் என்பதை நாவலில் தெளிவாக அறிய முடிகிறது. நாவலின் ஒரு பகுதியில் தஸ்தாயெவ்ஸ்கியை மேற்கோள் காட்டிப் பேசுகிறார் ராஜாராவ். நாவலின் ஊடாக ஐரோப்பிய வரலாறு, இந்திய வரலாற்றில் நடந்த நிகழ்வுகள். சமகால அரசியல் நிகழ்வுகளும் பேசப்படுகின்றன. இந்தியாவிலிருந்து பிரான்ஸ் திரும்பும் ராமசாமி மேடலீனுக்காகத் தனது சகோதரி கொடுத்து அனுப்பிய புடவையைக் கூட அவளிடம் நேரடியாகத் தரவில்லை. பெட்டியிலிருந்து எடுத்துக் கொள்ளவே சொல்கிறார். அது அவளை மனவருத்தம் கொள்ள வைக்கிறது.
ராமசாமியை உருவாக்கியது அவர் பிறந்து வளர்ந்த பண்பாடு. அதன் நம்பிக்கைகளை, பழக்கவழக்கங்களைத் தனதாக வரித்துக் கொண்டிருக்கிறார். அந்தப் பண்பாட்டிலிருந்து விடுபட்டு இன்னொரு பண்பாட்டிற்குள் வாழ முற்படும்போது மனது ஏற்க மறுக்கிறது. உடலளவில் அவர் பிரான்ஸில் வசித்தாலும் மனதளவில் இந்தியாவில் தானிருக்கிறார். இந்த இரட்டை நிலையை நாவல் விசாரணை செய்கிறது. பற்று மற்றும் பற்றின்மை என இருநிலைகளை அடையாளம் காட்டி, அதன் ஊடாக வாழ்வின் உண்மைகளை ஆராய்கிறது. அதன் காரணமாகவே சர்வதேச அளவில் இன்றும் இந்த நாவல் சிறந்த படைப்பாகக் கருதப்படுகிறது.