சிறப்புக் கட்டுரைகள்

ஒரு ரசவாத சந்திப்பு

ஆதி வள்ளியப்பன்

பழைமை வாய்ந்த சென்னை எழும்பூர் அருங்காட்சியக அரங்கு. அதற்குள் நுழைந்தால் பியானோ இசைக்கலைஞர் அனில் சீனிவாசனும், கர்நாடக வாய்ப்பாட்டுக் கலைஞர் சிக்கில் குருசரணும் இருந்தார்கள். பொதுவாக நம் ஊரில் ஃபியூஷன் இசை நிகழ்ச்சிகள் குறைவு. அதுவும் மேற்கத்திய செவ்வியல் இசையின் முதன்மைக் கருவியான பியானோவும் கர்நாடக வாய்ப்பாட்டும் முற்றிலும் புதிய கலவை. இத்துடன் தாளக் கருவியான மிருதங்கமும் (சுமேஷ் நாராயண்) இணைந்தது. லைவ் ஃபார் யு, ஸ்கிஆர்ட்ஸ்ரஸ் ஏற்பாடு செய்த ‘ஜோதிர்கமய இசை விழா’வில்தான் இந்த நிகழ்ச்சி அரங்கேறியது.

திங்கள்கிழமை மாலையில் போக்குவரத்து நெரிசலில் நீந்தி எழும்பூர் வந்து சேர்ந்தவர்களின் மனதை சாந்தப்படுத்தி, நிகழ்ச்சிக்குத் தயார்ப்படுத்தும் விதமாக தாலாட்டுப் பாடலுடன் தொடங்கியது. இதை அனில் சீனிவாசனே மேடையில் அறிவித்தார். பிற்காலத்தில் இசைக்கலைஞராக மாறிய மகாராஜா சுவாதித் திருநாள் குழந்தையாக இருந்தபோது, இரயிமன் தம்பி இயற்றிய ‘ஓமணத்திங்கள் கிடாவோ’ என்கிற தாலாட்டுப் பாடல் அது. இந்த கர்நாடகப் பாடலுடன் போலந்து பியானோ கலைஞர் ஷாபினின் (Chopin) மேற்கத்திய தாலாட்டு இசைக்கோப்பு இணக்கமாக இழைந்தது.

அடுத்ததாக ‘பூங்குயில் கூவும் பூஞ்சோலையில் ஒருநாள்’ என்கிற முருகனைப் பற்றிய காபி ராகப் பாடல் மேடையேறியது. டி.கே.பட்டம்மாளுக்காக கல்கி கிருஷ்ணமூர்த்தி எழுதிய பாடல் இது. ஜெயதேவர் எழுதிய கீத கோவிந்தம் எனப்படும் அஷ்டபதியில் இருந்து கண்ணனின் லீலைகள் குறித்த வசந்த் பஹார் ராகப் பாடல் அடுத்து வந்தது. இருவரும் செவ்வியல் இசையிலேயே சஞ்சரித்தாலும், தங்கள் காதுகளில் அடிக்கடி விழும் திரையிசையால் எப்படி உத்வேகம் பெறுகிறோம் என்பதை ராகம் தானம் பல்லவியில் சிறப்பாக வெளிப்படுத்தினார் அனில்.

நம் உள்ளொளியை வெளிப்படுத்தும் வகையில், ‘கருணை வடிவில் இறை எனும் மனம் தனிலே உறையும் ஒளியைக் கண்டேனே’ என்கிற ராமலிங்க வள்ளலாருக்கு சமர்ப்பணமாக அமைந்த பாடலில் ‘சாதி சமயச் சழக்கை விட்டேன், அருட்சோதியைக் கண்டேன்’ எனப் பாடியது உச்சம். தாகூர் இயற்றிய ரவீந்திர சங்கீத் பாடல்களில் ஒன்றான ‘மமோ சித்தே நிதி நிருத்யே... த த தோய் தோய்’ மகிழ்ச்சிப் பிரவாகத்தை ஊற்றெடுக்க வைத்தது. கடைசியாக லால்குடி ஜெயராமன் உருவாக்கிய தில்லானாவுடன் ஆப்ரோ அமெரிக்கர்களின் போராட்ட இசை வடிவமான ஜாஸ் பாணியில் அமைந்த மெட்டை இணைத்தது முத்தாய்ப்பாக அமைந்தது. ஜாஸ் இசைக்கு உதாரணமாக ‘மேரி ஜான் மேரி ஜான் முர்கி அண்டே’ விளம்பர பாடல் துணுக்கு உள்ளிட்டவற்றை இசைத்து ரசிகர்களை அனில் தயார்படுத்தியிருந்தார்.

20 ஆண்டுகளுக்கும் மேலாக அனில் சீனிவாசனும் குருசரணும் இந்த நிகழ்ச்சிகளை வழங்கி வந்திருக்கிறார்கள். ஆனாலும் இப்போதுதான் கேட்க வாய்த்தது. இசை இலக்கணம் அறியாதவர்களும் ரசிக்கும் வகையில் நிகழ்ச்சி அமைந்திருந்தது. ஒன்றரை மணி நேரத்தில் உலகின் பல்வேறு இசை வடிவங்களுக்குள் கூடுவிட்டுக் கூடு பாய்ந்து வந்ததுடன், வரலாற்றின் பல பண்பாடுகளுக்கும் பயணம் செய்துவந்த ஒரு பிரமிப்பு தோன்றியது. மனதை சாந்தப்படுத்தி மனித இயல்பை, இருப்பை உணரவைப்பது மட்டுமல்லாமல் இசை மூலம் பல ரசவாதங்களை நிகழ்த்த முடியும் என்பதை இந்த நிகழ்ச்சி எடுத்துக்காட்டியது.

SCROLL FOR NEXT