கடந்த காலத்துடன் ஒப்பிடுகையில், இந்தியப் பள்ளிக்கூடங்களில் படித்துவரும் பெண் குழந்தைகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது. இன்றைய தேதியில் இந்தியப் பள்ளிக்கூடங்களில் கல்வி பெற்றுவரும் மாணாக்கர்களில் 48% மாணவிகள். அதிலும் உயர்கல்வியைப் பொறுத்தமட்டில் மாணவிகளின் மொத்தச் சேர்க்கை விகிதம் மாணவர்களைக் காட்டிலும் சற்றே கூடியிருக்கிறது.
இருப்பினும், பெண் கல்வி என்னும் கோணத்தில் அணுகும்போது இன்றளவும் பாலின இடைவெளி மறைமுகமாக இந்தியக் குடும்பங்களால் கட்டிக்காக்கப்படுகிறது. மகள்களின் கல்விக்குச் செலவழிப்பதைக் காட்டிலும் மகன்களுக்கே அதிகம் நிதி ஒதுக்கும் வழக்கம் நம் சமூகத்தில் வாழையடி வாழையாகப் பின்பற்றப்பட்டுவருவதைத் தேசிய மாதிரிக் கணக்கெடுப்பு சுட்டிக்காட்டுகிறது.
கல்வியில் பாகுபாடு: 80ஆவது தேசிய மாதிரி ஆய்வின் ஒரு பகுதியாகக் கடந்த ஏப்ரல் தொடங்கி ஜூன் வரை சேகரிக்கப்பட்ட புள்ளிவிவரங்களின் அடிப்படையில், விரிவான கூறுநிலை சார்ந்த கல்வி ஆய்வறிக்கை (Comprehensive Modular Survey on education) அண்மையில் வெளிவந்தது.
இதில் பள்ளிக் கல்வியின் அனைத்துக் கட்டங்களிலும் ஆண் குழந்தைகளுக்கு இந்தியக் குடும்பங்களால் ஒதுக்கப்படும் செலவினத்தைக் காட்டிலும் பெண் குழந்தைகளுக்குக் குறைவாக இருப்பது உறுதிசெய்யப்பட்டிருக்கிறது. தொடக்கப் பள்ளிக் காலத்தில் தொடங்கி உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிக் கல்விவரை இந்தப் போக்கு தொடர்வதைக் காண முடிகிறது.
அதிலும் நகரங்களைக் காட்டிலும் கிராமங்களில் இத்தகைய பாகுபாடு கூடுதலாகவே நீடித்துவருகிறது. நாட்டின் 2,384 கிராமங்கள், 1,982 நகர்ப்புறத் தொகுதிகளைச் சேர்ந்த 52,085 குடும்பங்களிடம் நடத்தப்பட்ட இந்தக் கணக்கெடுப்பில் 57,742 மாணவ, மாணவிகளிடம் தகவல்கள் சேகரிக்கப்பட்டன.
இதில் கிராமப்புறப் பகுதிகளைச் சேர்ந்த குடும்பங்கள் பள்ளிக்கூடக் கட்டணம், பாடப்புத்தகம், எழுதுபொருள்கள், சீருடை, போக்குவரத்து வசதி என வரும்போது, பெண் குழந்தைகளுக்குச் செலவிடுவதைக் காட்டிலும் 18% (ரூ.1,373) கூடுதலாக ஆண் குழந்தைகளுக்குச் செலவிடுவது தெரியவந்துள்ளது. நகர்ப்புறங்களைப் பொறுத்தமட்டில் ஆண் குழந்தைகளுக்கு 30% வரை கூடுதலாகக் கல்வி நிதி ஒதுக்கப்படுகிறது.
அதாவது, நகர்ப்புறப் பெண் குழந்தைகளுக்கு ரூ.2,791வரை ஆண் பிள்ளைகளைக் காட்டிலும் குறைவாகவே செலவிடப்படுகிறது. பள்ளி தொடர்பான இதர செலவுகளைத் தவிர்த்துவிட்டு, கல்விக் கட்டணத்தை மட்டுமே எடுத்துக்கொண்டால், தேசிய அளவில் மாணவிகளைக் காட்டிலும் மாணவர்களுக்கு 21.5% கூடுதல் நிதி அந்தந்தக் குடும்பங்களால் செலவிடப்படுகிறது.
தங்கள் குழந்தைகள் எந்தப் பள்ளிக்கூடத்தில் படிக்க வேண்டும் என்பதைத் தெரிவு செய்வதிலேயே இத்தகைய பாரபட்சம் தொடங்கிவிடுகிறது. அதீதக் கட்டணம் வசூலிக்கும் செலவுமிகுந்த தனியார் பள்ளிக்கூடங்களில் 29.5% பெண் குழந்தைகளே சேர்க்கப்படும் நிலையில், 34% ஆண் குழந்தைகள் இத்தகைய பள்ளிகளில் சேர்க்கப்படுகின்றனர்.
பள்ளிக்கூடங்களைத் தாண்டித் தனி வகுப்புகளுக்குக் கட்டணம் செலுத்தித் தங்கள் குழந்தைகளை அங்கு படிக்க அனுப்புவதிலும் இதேரீதியிலான பாலின ஏற்றத்தாழ்வு நீடிக்கிறது. தனி வகுப்புகளுக்குப் பெற்றோரால் 27.8% ஆண் குழந்தைகள் அனுப்பப்படும் அதேவேளையில், 26% பெண் குழந்தைகள் மட்டுமே அனுப்பப்படுகின்றனர்.
அதிலும் மேல்நிலை வகுப்புகளில் பயிலும் குழந்தைகளுக்கு அதிகக் கட்டணம் செலுத்தித் தனிவகுப்புகளுக்கு அனுப்புதல் என வரும்போது, பெண் குழந்தைகளைக் காட்டிலும் ஆண் குழந்தைகளுக்கு 22% கூடுதலாகச் செலவிடப்படுகிறது.
மாநில வாரியான நிலவரம்: பாலின இடைவெளி தேசிய அளவிலான சிக்கலாக இருந்தபோதிலும் மாநில வாரியாக அதில் மாறுபாடுகள் காணப்படுகின்றன. உதாரணமாக, மகன், மகளைச் சேர்ப்பது அரசுப் பள்ளியிலா அல்லது தனியார் பள்ளியிலா எனும்போது டெல்லியில் 54% மாணவர்கள், 65% மாணவிகள் அரசுப் பள்ளிகளுக்கு அனுப்பப்படுகின்றனர்; அதுவே கட்டண வசூலில் ஈடுபடும் தனியார் பள்ளிகளில் 38.8% மாணவர்கள், 26.6% மாணவிகள் சேர்க்கப்பட்டிருக்கின்றனர்.
மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், பஞ்சாப் ஆகிய மாநிலங்களிலும் இந்த விவகாரத்தில் 10%க்கும் கூடுதலாகப் பாகுபாடு நிலவுகிறது. குறிப்பாக, குஜராத் மாநிலத்தின் நகர்ப்புறங்களில் உச்சபட்ச பாரபட்சம் கடைப்பிடிக்கப்படுவது தெரியவந்துள்ளது.
தமிழ்நாடு, கேரளம் ஆகிய இரு மாநிலங்களிலும் சம எண்ணிக்கையில் ஆண், பெண் குழந்தைகள் அரசுப் பள்ளிகளிலும் தனியார் பள்ளிகளிலும் படித்துவருகின்றனர். வடகிழக்கு மாநிலங்களில் உள்ள தனியார் பள்ளிகளில் மாணவர்களைவிடவும் மாணவிகளின் சேர்க்கை விகிதம் கூடுதலாக இருப்பது கவனிக்கத்தக்க விஷயம்.
உயர்ந்து நிற்கும் தமிழ்நாடு: உயர்நிலை வகுப்புகளைப் பொறுத்தமட்டில் தமிழ்நாட்டில் ஆண் குழந்தைகளுக்கு ரூ.22,593 வரையிலும், பெண் குழந்தைகளுக்கு ரூ.23,796 வரையிலும் செலவிடப்படுகிறது. அந்த வகையில், தமிழகக் குடும்பங்கள் உயர்நிலை வகுப்புகளில் பயிலும் ஒவ்வொரு பெண் குழந்தைக்கும் ஆண் குழந்தைகளைக் காட்டிலும் சராசரியாக ரூ.1,203 கூடுதலாகச் செலவிடுகின்றன.
ஆனால், பிளஸ் 1, பிளஸ் 2 ஆகிய மேல்நிலை வகுப்புகளில் ஆண் குழந்தைகளுக்கு ரூ.35,973 வரை செலவழிக்கும் தமிழகக் குடும்பங்கள் பெண் குழந்தைகளுக்கு ரூ.19,412 மட்டுமே செலவிடுகின்றன. இதற்கு இரு வேறு காரணங்கள் இருப்பதாகத் தெரியவந்துள்ளது.
ஒன்று, இன்றளவும் பெண் குழந்தைகள் மத்தியில் இடைநிற்றல் சிக்கல் தமிழ்நாட்டின் புறநகர்ப் பகுதிகளில் ஆங்காங்கே காணப்படுகிறது. மற்றொன்று, உயர்கல்வியில் மாணவிகளின் சேர்க்கை விகிதத்தை உயர்த்தும் நோக்கில் தமிழ்நாடு அரசு முன்னெடுத்து வரக்கூடிய ‘புதுமைப் பெண்’ உள்ளிட்ட உதவித்தொகையுடன் கூடிய திட்டங்கள் குடும்பங்களின் தோள்களில் இருந்து கல்விக் கட்டண பாரத்தைப் பெருமளவில் குறைத்திருப்பது தெரியவந்துள்ளது. இதுதவிர ஆந்திரப் பிரதேசம், இமாச்சலப் பிரதேசம், கேரளம் ஆகிய மாநிலங்களிலும் பெண் குழந்தைகளின் மேல்நிலைக் கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.