அமைதியாக வாழவே ஒவ்வொரு குடும்பமும் ஆசைப்படுகின்றது. அமைதி என்பதன் வரையறை என்ன? புறச்சூழலின் அமைதியா அல்லது அகத்தின் அமைதியா? எதிலும் பட்டுக்கொள்ளாமல் ஒதுங்கி வாழ்வதுதான் அமைதியா? குடும்பச் சண்டையும் வாக்குவாதங்களும் உணவில் உப்பைப் போலத் தேவையானதே. உப்பின் அளவு அதிகமாகி விடக் கூடாது என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
குறைவான வீடுகள் உள்ள இயற்கைச் சூழலுக்குச் செல்லும் போது அமைதியை நன்றாக உணர முடிகிறது. வீடுகள் அதிகமாவது தான் அமைதியின்மையின் ஊற்றுகண் போலும். அமைதி எல்லா நேரத்திலும் விரும்பக்கூடியதில்லை. சிலவகை அமைதியை நம்மால் தாங்க முடியாது. அமானுஷ்ய அமைதி கலைந்துவிட வேண்டும் என்று ஆசைப்படுகிறோம். அமைதி நம்மை விழுங்கிவிட முயலும்போது குரல்கள் தரும் சந்தோஷத்திற்கு ஏங்குகிறோம். கோடை விடுமுறையில் பாட்டி வீட்டிற்குச் செல்லும் போது விளையாட்டு மைதானம் போல வீட்டில் எப்போதும் உற்சாகம் கொப்பளித்தபடியே இருக்கும். இரவில் படுக்கையில் படுத்தபடியே கூட யாராவது பேசிக் கொண்டிருப்பார்கள்; சிரிப்பார்கள்.
பேரன், பேத்திகள் ஊருக்குப் போன பின்பு, தாத்தாவும் பாட்டியும் வீட்டின் அமைதியைத் தாங்கிக் கொள்ள முடியாமல் கண்ணீர் விடுவார்கள். நினைவுகளில் சரண் அடைந்துவிடுவார்கள். குடும்பத்தின் அமைதி என்பது நீர்ப்பரப்பு போல ஒரு நிலை. அது கலைவதும் கூடுவதுமாகவே தொடர்கிறது. இதனைப் பற்றிய நாவலே ‘மலை மேல் நெருப்பு’. ஆங்கில நாவலாசிரியர் அனிதா தேசாய் எழுதி 1977ல் வெளியான இந்த நாவல் சாகித்ய அகாதமி பரிசு பெற்றுள்ளது.
‘புக்கர் பரிசு’ பெற்ற ஆங்கில எழுத்தாளரான கிரண் தேசாய் இவரது மகள். கிரணை விடவும் எனக்கு அனிதா தேசாயின் எழுத்துகளை அதிகம் பிடிக்கும். ‘மலை மேல் நெருப்பு’ நாவலை அசோகமித்திரன் தமிழில் சிறப்பாக மொழியாக்கம் செய்திருக்கிறார். ‘மலை மேல் நெருப்பு’ மூன்று பகுதிகளாக எழுதப்பட்டுள்ளது, ஒவ்வொரு பகுதியும் ஒரு பெண் கதாபாத்திரத்தை மையப்படுத்துகிறது. நாவலின் முக்கியக் கதாபாத்திரங்களான மூன்று பெண்களுடன் இயற்கையும் நான்காவது கதாபாத்திரமாக மாறுகிறது. மலைப் பிரதேசமான முசோரியின் கரிக்னானோவில் குடியிருக்கிறாள் நந்தா கவுல். மேல்தட்டு வர்க்கத்தைச் சேர்ந்தவள். துணைவேந்தரின் மனைவி, வயதானவள். கணவர் இறந்த பின்பு தனிமையில் வாழுகிறாள். தேவதாரு மரங்கள் அடர்ந்த பகுதியில் அவளது வீடு உள்ளது. சமையல் செய்து கொடுப்பதற்காக ராம்லால் என்ற பணியாளர் உடனிருக்கிறார்.
மலை நகரங்களின் பகல், நத்தையைப் போல மெதுவாக ஊர்ந்து செல்லக்கூடியது. நந்தா கவுல் அந்த நிதானத்தை விரும்புகிறாள். துணைவேந்தரின் மனைவியாக இருந்த நாட்களில் வீட்டு நிர்வாகம், தினந்தினம் விருந்து, விருந்தினர்கள், பிள்ளைகளை வளர்ப்பது என ஓடியோடி வேலை செய்து அவளுக்குச் சலித்துவிட்டது.
ஆகவே முதுமையில் மலை நகரிலுள்ள தனது வீட்டில் முழுமையான ஓய்வில் இருக்கிறாள். தொலைதூரத்தில் கேட்கும் பறவைகளின் குரல். கடந்து செல்லும் மேகங்கள். பூத்துக் குலுங்கும் செடிகள். தேவதாரு மரங்களின் நடனம் இவை தான் அவளது உலகம். நந்தா கவுல் வீட்டில் மிகக் குறைவான பொருட்கள் இருக்கின்றன. அவளது வீட்டில் தொலைபேசி இருக்கிறது. ஆனால் தொலைபேசி அழைப்பு அவளுக்குப் பிடிக்காது. எளிய உணவே அவளுக்குப் போதுமானதாகயிருக்கிறது. அவளைத் தேடி விருந்தினர் எவரும் வருவதில்லை. முதல் அத்தியாயத்தில் தபால்காரர் அவளுக்கு ஒரு கடிதம் கொண்டு வருவதைக் காண்கிறாள். அப்போது வெளியுலகம் தன்னைத் தொந்தரவு செய்வதாகவே நினைக்கிறாள்.
கொள்ளுப்பேத்தி ராக்கா அவளைத் தேடி வருவதாகக் கடிதம் தெரிவிக்கிறது. தனது தனிமைக்கு இடையூறாக ராக்கா இருக்கக் கூடும் என நந்தா கவலைப்படுகிறாள். தனது காலத்தைப் போல இப்போது பிள்ளைகளை வளர்க்க பெண்களுக்குத் தெரியவில்லை என்று எரிச்சல்படுகிறாள். பதின்வயதில் உள்ள ராக்கா தனது பாட்டியைத் தேடி கரிக்னானோ வருகிறாள். நந்தா கவுல் நினைத்தது போலன்றி ராக்கா மிகவும் அமைதியாக, வயதுக்கு மீறிய முதிர்ச்சி கொண்டவளாக நடந்து கொள்கிறாள். எதற்காகவும் அவள் பாட்டியைத் தொந்தரவு செய்வதில்லை. அவளும் தனிமை விரும்பியாக இருக்கிறாள்.
தனது அம்மாவை, அப்பா அடிப்பதையும், மோசமாக நடத்துவதையும் கண்டு ராக்கா அதிர்ச்சி அடைந்திருக்கிறாள். தனது உணர்ச்சிகளை மறைத்துக் கொள்ளவே அவள் அமைதியாக நடந்து கொள்கிறாள். நந்தாவின் வீட்டில் இருவருக்கும் இடையே பேச்சேயில்லை. அவர்கள் சாப்பாட்டு நேரத்தில் சந்திக்கிறார்கள், எப்போதாவது ஒன்றாக நடைப்பயிற்சி மேற்கொள்கிறார்கள், இருப்பினும் நந்தா தனது கடந்த கால நிகழ்வுகள் சிலவற்றை ராக்காவிடம் சொல்கிறாள். தான் ஏற்படுத்திக் கொண்ட தனிமையை நியாயப்படுத்துகிறாள்.
ஓடியாடி விளையாடி மகிழ்ச்சியாக இருக்க வேண்டிய வயதில் ராக்கா ஏன் இவ்வளவு அமைதியாக, நிழல் போலிருக்கிறாள் என நந்தா கவுல் கவலைப்படுகிறாள். ஆகவே ராக்காவை உற்சாகப்படுத்த முனைகிறாள். அது ராக்காவிற்குப் பிடிக்கவில்லை. அவள் தன் விருப்பத்தின் பாதையில் தனியே அலைந்து திரிகிறாள். அவர்கள் இருவருக்கும் இடையில் ஏற்படும் நெருக்கமும் அதற்குக் காரணமான நிகழ்வுகளுமே நாவலின் மையக்கதை.
நந்தா கவுலின் தோழி ஈலா தாஸ் மறக்கமுடியாத கதாபாத்திரம். அவள் ஒருத்தியால் மட்டுமே நந்தாவின் தனிமையைப் புரிந்து கொள்ள முடிகிறது. விளக்கின் திரியைத் தூண்டிவிடுவது போல அவ்வப்போது நேரில் வந்து நந்தாவை உற்சாகப்படுத்திப் போகிறாள். தனிமை தான் பிரம்மாண்டமான மலையாக உருக் கொண்டிருக்கிறது. உறவு தான் அதில் எரியும் நெருப்பு. குடும்பப் பொறுப்புகளின் கீழ் அடக்கப்பட்ட நெருப்பு மேல் எழுந்து வீசுகிறது.
சமையல்காரன் ராம்லால், நந்தா கவுலுக்கும் ராக்காவிற்கும் இடையில் பாலம் போலாகிறான். இருவரையும் அவனுக்குப் பிடிக்கிறது. அவனுடன் ராக்கா இணக்கமாகப் பழகுகிறாள்; பேசுகிறாள். அது நந்தாவை பொறாமை கொள்ள வைக்கிறது பெரிய பதவியில் உள்ள கணவனுக்கு உதவியாக இருந்து, பிள்ளைகளைப் பெற்று, வளர்த்து பெரியவர்களாக்கி, திருமணம் செய்து கொடுத்து, பேரன் பேத்திகளைப் பார்த்து, அவர்களை வளர்த்து என முழுமையாக வாழ்க்கையை நந்தா அனுபவித்துவிட்டாள். உலகின் பார்வையில் அவள் நிறைவான வாழ்க்கையை வாழ்ந்த பெண். ஆனால் அவளது மனதிற்குள் அது, நிர்ப்பந்தங்களால் உருவான வாழ்க்கை என்ற எண்ணமிருக்கிறது. நாவல் முழுவதும், நந்தா தனது பழைய வீட்டைப்பற்றிக் குறிப்பிடும்போதெல்லாம், அதைத் 'துணைவேந்தரின் வீடு' என்றே குறிப்பிடுகிறாள். தனது வீடாக அவள் உணர்வதேயில்லை. ராக்காவும் நந்தா கவுலும் ஒரே கயிற்றின் இரண்டு முனைகள்.
வயது என்பது எண்ணிக்கையில்லை. அது ஒருவகை இடைவெளி; தூரம்; ஒரு வழிப்பாதை என்பதை அனிதா தேசாயின் நாவலைப் படிக்கும் போது நன்றாக உணர முடிகிறது.