சிறப்புக் கட்டுரைகள்

எதிரொலிக்கும் சொற்கள் | நாவல் வாசிகள் 23

எஸ்.ராமகிருஷ்ணன்

மதுரையில் காமன் பண்டிகையின் போது நடக்கும் லாவணியைப் பார்த்திருக்கிறேன். எரிந்த கட்சி, எரியாத கட்சி என்ற பெயரில் இரண்டு பிரிவாக கலைஞர்கள் அமர்ந்துகொண்டு இசையோடு பாடுவார்கள். தங்கள் தரப்பை நியாயப்படுத்த கதைகளும் இலக்கியச் சான்றுகளும் கொடுப்பார்கள்.

அதுபோன்று வங்காள கிராமங்களில் ‘மேளா’ என்ற போட்டிப்பாடல் நிகழ்ச்சி நடப்பதுண்டு. இரண்டுக் குழுக்கள் எதிரெதிராகப் பாடுவார்கள். அப்படி சுயமாகப் பாட்டுக்கட்டிப் பாடும் ஒருவனின் கதையை தாராசங்கர் பந்தோபாத்யாயா, ‘கவி’ என்ற நாவலாக எழுதியிருக்கிறார். இதனை த.நா.குமாரசாமி தமிழில் மொழியாக்கம் செய்துள்ளார்.

வங்காளத்தின் புகழ்பெற்ற எழுத்தாளரான தாராசங்கர், சாகித்ய அகாதமி விருது, ஞானபீட விருது உள்ளிட்ட முக்கிய விருதுகளைப் பெற்றவர். இவர் ஆரோக்கிய நிகேதனம், அபிஜன் உள்ளிட்ட 65 நாவல்களையும் நாற்பது சிறுகதைத் தொகுப்புகளையும் எழுதியுள்ளார். ‘டோம்’ என்ற இனத்தைச் சேர்ந்தவன் நிதாயி. அவனது தந்தை ஒரு திருடன். ஒரு நாள் இருட்டில் ஆள் அடையாளம் தெரியாமல் தனது மருமகனை அடித்துக் கொன்றுவிடுகிறார். அந்தக் கொலை நடந்த இடம் ‘மாப்பிள்ளை கொலை செய்தான் மைதானம்’ என்று அழைக்கப்படுகிறது. நிதாயியின் தாத்தா ஒரு வழிப்பறிக் கொள்ளைக்காரன். இப்படி தலைமுறையாக களவில் ஈடுபடுகிறார்கள். நிதாயியும் நல்ல உயரம்; உறுதியான உடற்கட்டுக் கொண்டிருக்கிறான். அவனது உறவினர்கள் திருட்டில் ஈடுபடுகிறார்கள். ஆனால் நிதாயிக்கு இசையில் தான் ஆர்வம். பாடுவதில் தனது திறமையைக் காட்ட வேண்டும் என ஆசைப்படுகிறான். தான் ஒரு கவிஞன், ஆகவே ஒருபோதும் திருட மாட்டேன் என்கிறான்.

அட்டகாசம் என்ற ஊரில் சண்டி கோயில் திருவிழாவை ஒட்டி ஒரு மேளா நடக்கிறது. நோட்டன் தாஸ், மஹாதேவ பால் என்று இரண்டு புகழ்பெற்ற கவிவாணர்கள் அங்கே வருகை தருகிறார்கள். அவர்களுக்குள் இசைப் போட்டி. இதனைப் பார்க்க நூற்றுக்கணக்கில் மக்கள் திரள்கிறார்கள். பெட்ரோமாக்ஸ் வெளிச்சத்தில் கச்சேரி தொடங்க இருக்கிறது.

இந்த நிலையில் நோட்டன் தாஸைக் காணவில்லை. சென்ற முறை கச்சேரி செய்ததற்குப் பணம் பாக்கியிருந்த காரணத்தால் நோட்டன் தாஸ் சொல்லாமல் ஓடிவிட்டார். விழா குழுவினர்களுக்கு இப்போது என்ன செய்வது எனத் தெரியவில்லை. பக்கத்து ஊரில் நடக்கும் இன்னொரு கச்சேரியில் அதிக பணம் தருவதாகச் சொன்னதால் நோட்டன் தாஸ் அங்கே போய்விடுகிறார். இதனை அறிந்த மஹாதேவ பால் தன்னிடம் தோற்று நோட்டன் ஓடிவிட்டதாக நினைக்கிறார். அதேநேரம் மனதிற்குள்ளாக இதைவிட பெரிய வருமானம் கிடைக்கும் என்றால் தன்னையும் அழைத்துப் போயிருக்கலாமே என்று கவலை கொள்கிறார்.

கிராமியக் கலைஞர்கள் தொழில்போட்டி கொண்டிருந்தாலும் ஒருவர் மீது மற்றவர் மரியாதை கொண்டிருப்பார்கள். தேவையான தருணத்தில் உதவி செய்து கொள்வார்கள். ஆகவே மஹாதேவிற்கு நோட்டன் ஓடிவிட்டதன் காரணம் எளிதாக புரிந்துவிடுகிறது.

மேளா காண்பதற்காக வந்து காத்திருந்த கிராமவாசிகள் உண்மையை அறிந்து கூச்சலிடுகிறார்கள். நோட்டனை தேடிப் போய் அடித்து இழுத்து வர வேண்டும் எனக் கத்துகிறார்கள். இந்த நிலையில் கோவில் நிர்வாகி, பாட்டுக் கட்டத் தெரிந்த நிதாயியை பாட வைக்கலாம் என முடிவு செய்கிறார். ஆகவே அவனை பின்பாட்டுக்காரனாக அறிவிக்கிறார். அந்த நிகழ்ச்சியில் நிதாயி பாடும் பாடல் பெரிய வரவேற்பைப் பெறுகிறது. பெண்கள் கைதட்டி ரசிக்கிறார்கள். உஸ்தாத் நிதாயி என ஒருவன் பெருமையாகப் பாராட்டுகிறான்.

மக்களின் பாராட்டு மஹாதேவைப் பொறாமை கொள்ள வைக்கிறது. அவர் நிதாயிற்கு சவால்விடும் முறையில் போட்டிப் பாடலை புனைகிறார். தாளத்தை மாற்றுகிறார். அவன் பிறந்த குலத்தை இழிவாகச் சொல்லி, ‘நீ குப்பையில் கிடக்கும் எச்சில் கல்,உனக்கு சொர்க்கம் போக வேண்டும் என்று ஆசையா?’ என்று பாடுகிறார். இதனால் நிதாயி அவமானப்பட்டுப் போகிறான். தனது தோல்வியை ஒப்புக்கொள்கிறான்.

கோயில் நிர்வாகியும் ஊர்வாசிகளும் அவனை பாராட்டுகிறார்கள். சாமந்தி மாலை அணிவித்து கௌரவம் செய்கிறார்கள். கவிஞனாக தான் கொண்டாடப்படுகிறோம் என்ற மகிழ்ச்சியோடு வீடு திரும்புகிறான். ஆனால் உறவினர்கள் அவனது வெற்றியை பரிகாசம் செய்கிறார்கள்.

நிதாயி இரவுப் பள்ளியில் படித்தவன். உறவினர்கள் அவனை திருட்டுக்கு அழைக்கிறார்கள். ஆனால் நிதாயி திருடப் போவதில்லை. குடிப்பழக்கம் கிடையாது. நண்பனான ரயில்வே கேங்மேன் ராஜா மட்டுமே அவனைப் புரிந்து கொள்கிறான். உதவிகள் செய்கிறான். தான் பிறந்த இனத்தின் காரணமாக தனது திறமையை உலகம் அங்கீகரிக்க மறுப்பது நிதாயிற்குக் கோபத்தை ஏற்படுத்துகிறது. எப்படியாவது பெருங்கவிஞனாக வேண்டும் என நினைக்கிறான். அதற்கான முயற்சிகளை மேற்கொள்கிறான்.

கவி பாடும் நிதாயியை பதினேழு வயதான மச்சி என்ற ராஜாவின் மைத்துனி காதலிக்கிறாள். அவள் திருமணமானவள் ஆனாலும், நிதாயின் பாடல்களால் மனதைப் பறி கொடுக்கிறாள்.இந்நிலையில் அவனைத் தனது குழுவில் இணைந்து பாட வரும்படி மஹாதேவ் அழைக்கிறார். ஆசையாகச் சென்று பாடுகிறான். அங்கேயும் அவன் விரும்பிய அங்கீகாரம் கிடைக்கவில்லை.

ஒரு நாள் ரயில் நிலையத்திற்கு ‘ஜூமூர்’ என்ற நாடோடி இசைக்குழுவினர்கள் வருகை தருகிறார்கள். நிதாயி அவர்களுடன் இணைந்து ஊர் ஊராகப் போய் பாட ஆரம்பிக்கிறான். அந்தக் குழுவில் இருந்த அழகியான வசந்தி மீது காதல் கொள்கிறான். அவளுக்காகப் பாடல் புனைகிறான். இருவரும் இணைந்து நிகழ்ச்சி நடத்துகிறார்கள். அவள் மீது கொண்ட காதல் அவனை புதைகுழி போல உள்ளிழுத்துக் கொள்கிறது. வசந்திக்கு நகைகள் மீது மோகம். அலங்காரம் செய்து கொள்வதில் அதிக ஆர்வம் கொண்டவள். உடையில் சிறிய அழுக்கு பட்டால் கூட பத்து முறை சுத்தம் செய்யக்கூடியவள்.

ஒரு முறை அவன் பாடும் பாடலைக் கேட்ட வசந்தி ``நீ பாடியது போலவே என்னுடைய வாழ்க்கை ஆகிவிடப்போகிறது`` என்று பயப்படுகிறாள். கவி வாக்கு பலிக்கக் கூடியது என்பதன் சாட்சியம் போல முடிவில் அப்படியே நடக்கிறது. வசந்தியோடு ஏற்பட்ட முடிச்சு அறுந்த பின்பு, நிதாயி காசிக்குச் செல்கிறான். அங்கே அவனுக்கு நடக்கும் நிகழ்வுகள் புதிய புரிதலை ஏற்படுத்துகின்றன. டாகுரூன் மறக்க முடியாத கதாபாத்திரம். அவளே அன்னை வடிவமாக வழிகாட்டுகிறாள். நிதாயி சொந்த ஊர் திரும்புகிறான். எந்தக் கோயில் விழாவில் பாடிப் புகழ்பெற்றானோ, அதே சண்டி கோயிலின் முன்பாக போய் நிற்கிறான். வாழ்க்கை இவ்வளவுதானா என்ற கேள்வி அவனது மனதில் எழுகிறது. இந்த உலகில் அழிந்து போகும் எல்லாவற்றையும் தனது பாடலின் வழியே அழியாத ஒன்றாக்கி விடமுடியும் என்ற உண்மை அவனுக்குப் புரிகிறது. அதுதான் கவிஞனாக அவன் அடைந்த வெற்றி.

SCROLL FOR NEXT