1986இல் சென்னை திருவல்லிக்கேணியில் பாதையோரப் பழையப் புத்தகக் கடை ஒன்றிலிருந்து சில புத்தகங்களை வாங்கினேன். அவற்றில் ஒன்று ‘ஜெய சோம்நாத்’ என்ற குஜராத்தி நாவல். இது, இந்தி வழியாக தமிழில் மொழிபெயர்க்கப்பட்டிருந்தது.
கே.எம்.முன்ஷி என்னும் பெயரை அட்டையில் பார்த்துவிட்டுத்தான் அப்புத்தகத்தை வாங்கினேன். ஜெய சோம்நாத் நாவலை ஆர்வமுடன் ஒரே நாளில் படித்து முடித்தேன். ஒருபுறம் கஜினி முகம்மதுவின் படையெடுப்பினால் சோமநாத் நகரம் அழிவுக்குள்ளாகிறது. இன்னொருபுறம் கோயிலில் நடனமாடுவதற்காக வந்த செளலா என்னும் நடனக்காரிக்கும் அந்த ஊரைச் சேர்ந்த பீம்தேவ் என்னும் வீரனுக்கும் இடையில் அரும்பிய காதலும் அழிந்துபோகிறது. இருவித அழிவுகளை அருகருகில் நிறுத்தி இணைத்த நாவலின் கட்டமைப்பு என்னை மிகவும் கவர்ந்தது. ஒரு தமிழ் நாவலைப் படிப்பதுபோலவே நான் அந்த மொழிபெயர்ப்பு நாவலை அன்று படித்து முடித்தேன். அந்த மொழிபெயர்ப்பாளரின் பெயர் என் மனதிலேயே நின்றுவிட்டது. அவர் சரஸ்வதி ராம்நாத்.
இரண்டு ஆண்டுகள் கழித்து நான் முற்றிலும் எதிர்பாராத விதமாக அவரிடமிருந்து எனக்கொரு மடல் வந்தபோது மெய்சிலிர்த்து விட்டேன். என்னுடைய ‘முள்’ என்னும் சிறுகதையை இந்தியில் மொழிபெயர்ப்பதற்காக அனுமதி வேண்டி அவர் அக்கடிதத்தை எழுதியிருந்தார். நான் அன்றே என் அனுமதியைத் தெரிவித்து அவருக்கு எழுதிய கடிதத்தில், ஜெய சோமநாத் வாசித்த அனுபவத்தைப் பற்றியும் குறிப்பிட்டிருந்தேன். சரஸ்வதி ராம்நாத்துடன் எனக்கு இப்படித்தான் தொடர்பு தொடங்கியது.
சரஸ்வதி ராம்நாத்தின் சொந்த ஊர் தாராபுரம். காந்தியவாதியான அவருடைய தந்தை அளித்த ஊக்கத்தால் இந்தி மொழியைக் கற்றார். திருமணத்துக்குப் பிறகு சென்னை வாழ்க்கைத் தொடங்கியது. தொடக்கத்தில் அவர் சிறுகதையாசிரியராக விரும்பி, பல சிறுகதைகளை எழுதினார்.
ஒருமுறை ‘தினமணி கதிர்’ ஆசிரியராக இருந்த துமிலன், அவரிடம் மொழிபெயர்க்கும் ஆவலைத் தூண்டினார். அவரே சில மொழிபெயர்ப்புக் கதைகளை வெளியிடவும் உதவி செய்தார். இந்தி மொழியில் வந்த படைப்புகளை மட்டுமின்றி, குஜராத்தி, மராத்தி, அசாமி, வங்கம் என பிற மொழிகளிலிருந்து இந்தியை வந்தடைந்த படைப்புகளையும் தமிழுக்கு அறிமுகப்படுத்தத் தொடங்கினார். அந்த வேகம் அவரை மொழிபெயர்ப்பின் திசையில் வெகுதொலைவு இழுத்துச் சென்றுவிட்டது.
சரஸ்வதி ராம்நாத்தின் மகன் பெங்களூர் நிமான்ஸ் மருத்துவமனையில் மனநல மருத்துவராகப் பணிபுரிந்தார். அதனால் இருபதாண்டுகளுக்கும் மேலாக வாழ்ந்த சென்னையிலிருந்து பெங்களூருவுக்கு இடம்பெயர்ந்தார். பெங்களூருவில் குடியேறியபோதும், என்றென்றும் மொழிபெயர்ப்பிலேயே மூழ்கியிருந்தார்.
சில ஆண்டுகளுக்குப் பிறகு எனக்கும் பெங்களூருவில் குடியிருக்க வாய்ப்பு அமைந்தபோது, அவரைத் தேடிச் சென்று சந்தித்து அவருடைய நட்பைப் பெற்றேன். அப்போது அவருடைய புத்தகச் சேமிப்பிலிருந்து பல புத்தகங்களை எடுத்துச்சென்று படிப்பதற்கு எனக்கு வாய்ப்பு கிடைத்தது. அவர் மொழிபெயர்த்து வெளிவந்து வெளிச்சந்தையில் கிடைக்காமல் இருந்த ராஜநர்த்தகி, தேவதாசி, புயலும் ஒளியும், சப்தபதி, தர்பாரி ராகம் ஆகிய நாவல்களையும் அவரிடமிருந்தே வாங்கிச் சென்று படித்தேன். ராதையுமில்லை, ருக்மணியுமில்லை, நமக்கு நாமே அந்நியர்கள், கோதான் நாவல்களை அவர் மொழிபெயர்த்த காலத்தில் அருகிருந்து, கையெழுத்துப் பிரதியிலேயே படிக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது.
இந்தி மொழியின் படைப்புகளைத் தமிழுக்கு வழங்குபவராக மட்டும் இல்லாமல், இந்தியை ஓர் ஊடகமாகக் கொண்டு இந்தியாவின் பிற மொழி படைப்புகளையும் அவர் தமிழுக்கு அறிமுகப்படுத்தினார். இலக்கியப் படைப்புகள் வழியாக இந்திய மனம் இயங்கும் தன்மையை அறிந்துகொள்வதில் அவருக்கு வற்றாத ஆர்வம் இருந்தது.
இந்தியாவின் ஒவ்வொரு மொழியிலும் தனித்தன்மையுடன் இயங்கும் பெண் படைப்பாளர்களைத் தமிழுக்கு அறிமுகப்படுத்தினார். பிரதிபா ராய், மிருதுளா கர்க், ஆஷாபூரண தேவி, இந்திரா கோஸ்வாமி என அவர் தமிழுக்கு அறிமுகம் செய்த படைப்பாளிகள் ஏராளாமானவர்கள்.சிறுகதைகளையும் நாவல்களையும் மொழிபெயர்ப்பதில் சரஸ்வதி ராம்நாத் ஆர்வம் காட்டியதைப் போலவே நாடகங்களையும் ஆர்வத்தோடு மொழிபெயர்த்தார். தொண்ணூறுகளின் நடுப்பகுதியில் தமிழில் நாடகப் பிரதிகளை வெளியிடுவதற்காக பிரசுரமான ‘வெளி’ என்னும் சிற்றிதழ் அவருடைய முயற்சிகளுக்குத் தளம் அமைத்துக் கொடுத்தது. இந்தி மொழியின் மாபெரும் படைப்பாளியான பிரேம்சந்த், சரஸ்வதி ராம்நாத்தின் மனம் கவர்ந்த படைப்பாளி.
முதலில் அவருடைய தேர்ந்தெடுத்த சிறுகதைகளை மொழிபெயர்த்து வெளியிட்டார். பிறகு அவருடைய வாழ்க்கை வரலாற்றையும் எழுதினார். ஆயினும் தன் மனம் கவர்ந்த எழுத்தாளரின் மாபெரும் படைப்பான ‘கோதான்’ நாவலைத் தமிழில் கொண்டு வர விரும்பினார். 1998ஆம் ஆண்டின் முதல் மாதம், முதல் நாளில் முதல் அத்தியாயத்தை மொழிபெயர்க்கத் தொடங்கி, அந்த ஆண்டின் இறுதியில் நிறைவு செய்தார்.
அடுத்த ஆண்டு தொடக்கத்தில் எதிர்பாராத விதமாக அவருடைய உடல்நிலை மெல்லச் சீர்குலையத் தொடங்கியது. 02-08-1999 அன்று இயற்கையெய்தினார். அவர் மறைவுக்குப் பின் அவருடைய பெட்டியில் பாதுகாப்பாக இருந்த சில கதைகளின் மொழிபெயர்ப்பை எடுத்துவந்து ‘இனி வீடு திரும்பவேண்டும்’ என்னும் தலைப்பில் தொகுத்தேன். அன்னம் பதிப்பகம் அதை 2002இல் வெளியிட்டது. அதே அன்னம் பதிப்பகம் வழியாக 2003இல் அவருடைய கனவுப் படைப்பான ‘கோதான்’ வெளிவந்தது. ஏதோ ஒருவிதத்தில் மொழிபெயர்ப்பு என்னும் சரஸ்வதி ராம்நாத்துடைய கனவை என்னுடைய கனவாக வரித்துக்கொண்ட என் மனம், அந்த நாளில் நிறைந்து தளும்பியதை ஒருபோதும் மறக்கமுடியாது.
நாம் அனைவரும் மறக்கக்கூடாத ஒரு முக்கியமான ஆளுமை சரஸ்வதி ராம்நாத். அவருடைய நூற்றாண்டு நிறைவடையும் தருணம் இது. அவர் தேடியளித்த மொழிபெயர்ப்புச் செல்வமும் அவருடைய பெயரும் இம்மண்ணுலகில் இன்னும் பல நூற்றாண்டுகள் நீடித்திருக்க வேண்டும்.
07-09-1925 சரஸ்வதி ராம்நாத் பிறந்த நாள்