சிறப்புக் கட்டுரைகள்

நாய் தெருவுக்கு வந்த கதை | எதிர்வினை

ரா.செல்வராஜ்

நாடு முழுவதும் இன்றைக்குத் தெரு நாய்க்கடிப் பிரச்சினை பேசப்படுகிறது. தெரு நாய்களுக்கு எதிர்ப்பு ஒரு புறம், ஆதரவு ஒருபுறம். வழக்கு உச்ச நீதிமன்றம்வரை போய்விட்டது. இந்தச் சூழலில், நாய்களின் வளர்ப்பு முறை தவறா, நாம் வாழும் முறை தவறா என்கிற கேள்வி எழுகிறது.

நாய்களுக்கும் எல்லைகள் உண்டு: ஏறக்​குறைய 30 ஆண்டு​களுக்கு முன், கிராமப்பு​றங்​களில் இரவில் வீட்டுக் காவலுக்கும் தோட்டம், வயல்வெளி​களில் பயிர்களை மற்ற விலங்கு​களிட​மிருந்து காப்பாற்​ற​வும், காடுகளில் வேட்டைக்குப் பயன்படுத்​தவும் அதிக எண்ணிக்கையில் நாய்கள் பயன்படுத்​தப்​பட்டு வந்தன. அவை அனைத்தும் நாட்டு நாய்கள். ஒவ்வொரு வீட்டிலும் நாட்டு நாய்கள் வளர்க்​கப்​பட்டன. ஆனால், எந்தக் காரணம் கொண்டும் வீட்டுக்குள் நாய்களை வர விடமாட்​டார்கள்.

எவ்வளவு பாசமாக வளர்த்​தாலும் வீட்டுக்கு வெளியே ஏதோ ஒரு மரத்தடி நிழல்தான் நாய்க்கான இடமாக இருக்​கும். எப்போ​தாவது வீட்டுக்குள் வந்தாலும் அடி வாங்கி, கத்திக்​கொண்டே வெளியே ஓடிப்​போகும். நாய் மூலமாக எந்த ஒரு நோய்க் கிருமியும் வீட்டுக்குள் வந்து​விடக் கூடாது என்பதால்​தான், இந்த முன்னெச்​சரிக்கை நடவடிக்கை. இப்படித்தான் கிராம மக்கள் நாட்டு நாய்களை வளர்த்​தார்கள்.

என்னதான் வீட்டுக்குள் விடாமல் நாய்களை அடித்து விரட்​டி​னாலும் ஞாயிற்றுக்​கிழமை விடுமுறை நாளில் ‘விசில்’ சத்தம் கேட்டால்​போதும், அவற்றுக்குத் தெரிந்து​விடும். வீட்டுக்​காரர்கள் வேட்டைக்குத் தயாராகி​விட்​டார்கள் என. ஊரில் உள்ள நாய்கள் மொத்த​மும், முயல் உள்ளிட்ட சிறு விலங்குகளை வேட்டை​யாடக் கூடிவிடும். வேட்டை​யாடும் நாய்களுக்குள் எந்தச் சண்டை சச்சரவும் வந்ததில்லை.

வெறிநாயும் கடிநாயும்: ஏதேனும் ஒரு நாய் வாயில் கோழை நீரை வடித்​துக்​கொண்டு ஆடுகளையும் கோழிகளையும் கடித்துக் குதற ஆரம்பித்து​விட்​டால், நாய்க்கு வெறி பிடித்​திருக்​கிறது என மற்ற நாய்கள் அறிந்து​கொண்டு​விடும். அந்த நாயிடம் கடி வாங்காமல் இருக்க அவை விலகியே இருக்​கும். வெறிநாய் மனிதர்​களைக் கடித்து யாரேனும் இறப்ப​தற்கு முன்பே, அதை ஊர் மக்கள் சேர்ந்து அழித்து​விடு​வார்கள். ஆட்களைக் கடித்துப் பழக்க​மாகி​விட்ட நாய்களைக் கொல்லத் தயங்க மாட்டார்கள். நாய்களை மக்கள் பிரியப்​பட்டு வளர்த்​தா​லும், மனித உயிர் முக்கியம் என அப்போது மக்கள் நினைத்​தனர்.

ஏன் தெருநாய் ஆனது? - காலமாற்​றத்தில் நாட்டு நாய்களைக் கவனிக்​காமல் விட்டு​விட்​டோம். இப்போது வீடுகளில் எத்தனை நாட்டு நாய்கள் வளர்க்​கப்​படு​கின்றன? நீங்கள் வளர்க்கும் நாயின் உண்மையான இனம் எது? அல்லது அது எந்த நாட்டு இனம்? லட்ச ரூபாய்​வரைகூட விலை கொடுத்து வாங்கி, மாதந்​தோறும் பல ஆயிரம் செலவு செய்து இன்றைக்கு இவை பராமரிக்​கப்​படு​கின்றன; பாதுகாக்​கப்​படு​கின்றன. நாட்டு நாய்களோ, உள்ளூர் நாய்களோ கவனிப்பார் அற்ற தெருநாய்கள் ஆகிவிட்டன.

நாய்களின் உணவுமுறை: தெருவில் அல்லது இயல்பாக வாழும் நாய் உள்ளிட்ட எத்தனை உயிரினங்கள் நம்மிடம் வந்து உணவு கேட்டன? நம்மில் எத்தனை பேருக்கு நாய்களின் உணவு முறை தெரியும்? நம் நாட்டில் நாய்களுக்கான உணவு, வீட்டில் எஞ்சிய உணவுதான். விருந்துச் சாப்பாடு, எச்சில் சோறு என்கிற பேதம் எல்லாம் நாய்க்கு இல்லை. என்றைக்கு நாய்கள் வீடுகளி​லிருந்து வெளியே துரத்​தப்​பட்​டனவோ, அன்றைக்கே அவற்றுக்கு நாகரிக வளர்ச்சி பெற்ற நகரங்​களில் தெருக்களே வசிப்​பிடம் ஆயின.

சுகாதாரம் இல்லாமல் கொட்டப்​படும் கோழிக்​கறிக் கழிவுகள், நகர்ப் பகுதி குப்பைகளும் தரம் பிரிக்க முடியாமல் மலைபோல் கொட்டி வைக்கப்​பட்​டிருக்கும் குப்பைமேட்டில் உணவு தேட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அவை முழு நேரமும் தெருக்​களில் சுற்றித் திரிந்து இன்று ‘தெரு நாய்கள்’ ஆகிவிட்டன. இப்படி நாட்டு நாய்கள், உள்ளூர் நாய்கள் புறக்​கணிக்​கப்​பட்டு தெரு நாய் என நாளிதழில் வாசிக்கையில் மனம் கொஞ்சம் வலிக்​கத்தான் செய்கிறது.

இதற்கு யார் காரணம்? நன்றி​யுள்ள நாட்டு நாய்களா? நாட்டு மக்களாகிய நாமா? புறாக்​களுக்கு மூட்டை மூட்டை​யாகத் தானியங்​களைச் சாலையில் மக்கள் கூடும் பகுதி​களில் கொட்டு​கிறோம். மலைப் பிரதேச சுற்றுலாத் தலங்களில் குரங்கு​களைப் பிச்சை எடுக்க வைக்கிறோம். பழங்களைத் தூக்கி எறிந்து நம் பிள்ளை​களுக்கும் தவறாகச் சொல்லிக் கொடுக்​கிறோம். குஜராத் மாநிலத்தில் மாடுகளைக் கட்டி​வைத்து பத்து ரூபாய்க்குத் தீனி வாங்கி அதிகாலையில் கொடுக்​கிறார்கள். கருணையை வலிந்து திணித்து, குறிப்​பிட்ட உயிரினத்தை அசாதா​ரண​மாகப் பெருக வைக்கிறோம். அதன் இயல்பையும் வலிந்து மாற்றுகிறோம்.

கருத்தடை முறை: கிராமப்பு​றங்​களில் நாய்களின் எண்ணிக்கையைக் கட்டுக்குள் வைத்த வரலாற்றைச் சற்றுப் புரட்​டிப்​பார்ப்​போம். சாதாரண​மாகவே நம் நாட்டு நாய்கள் குறைந்த​பட்சம் ஆறு குட்டிகளை​யாவது ஈனும். அவற்றில் திடகாத்​திரமான ஆண் குட்டிகள் எத்தனை என சோதித்துப் பார்ப்​பார்கள். ஆறு குட்டிகளில் நான்கு ஆண் என்றால், தங்களுக்கு ஒன்றை எடுத்து வைத்துக்​கொள்​வார்கள்; நண்பர்​களுக்குத் தேவைப்​பட்டால் கொடுப்​பார்கள். தேவைப்​பட்டால் மட்டுமே பெட்டைக் குட்டியில் ஒன்றை விட்டு​வைப்​பார்கள்.

மீதமுள்ள குட்டிகள் அனைத்​தையும், கண்விழிக்கும் முன் ஏதோ ஒரு பாழடைந்த கிணற்றில் தண்ணீரில் போட்டு​விடு​வார்கள். இது கருணை அற்ற பழக்க​மாகத் தோன்றலாம். ஆனால், இப்படித்தான் நாய்களின் பெருக்கம் முறையாகக் கட்டுப்​படுத்தி வைக்கப்​பட்​டிருந்தது. அன்று ஒரு பெட்டை நாய் பின்னால் இருபது ஆண் நாய்கள் இனப்பெருக்கக் காலத்தில் சுற்றித் திரியும்.

இன்றைக்குச் சம அளவு பெட்டை நாய்களும் ஆண் நாய்களும் சுற்றித் திரிகின்றன. நாய்களின் எண்ணிக்கையைக் குறைக்கத் திட்ட​வட்டமான நடவடிக்கை தேவை. மனிதச் சமூகத்தில் அவர்களின் பாதுகாப்​புக்கு எதிராக நாய் உள்பட எந்த உயிரும் தொடர்ந்து அச்சுறுத்தலாக நீடிப்பது சரியல்ல.

SCROLL FOR NEXT