நாட்டின் பொருளாதார வளர்ச்சியின் குறியீடாகக் கருதப்படுகின்ற, மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) வளர்ச்சி விகிதம் செய்திகளில் ஒவ்வொரு வருடமும் முக்கிய இடத்தைப் பிடிக்கிறது. ஆளும் கட்சியும், அதன் அரசியல் தலைவர்களும் இதைத் தங்கள் சாதனை என்றும், இது சிறந்த பொருளாதார மேலாண்மைக்கான ஆதாரம் என்றும் கொண்டாடுகிறார்கள்.
இந்த ஆண்டு, தமிழ்நாடும் இந்தப் பட்டியலில் இணைந்து, 2024-25ஆம் நிதியாண்டுக்கான இரட்டை இலக்க வளர்ச்சி விகிதத்தைப் பெருமையுடன் கொண்டாடிவருகிறது. பொதுவாக, 6-7% வளர்ச்சி விகிதம் என்பது சாதாரண மக்களை ஈர்க்கக்கூடியதாகத் தோன்றலாம். ஆனால், தரவுகளையும், வளர்ச்சி சார்ந்த யதார்த்தங்களையும் நன்கு அலசிப்பார்த்தால், வளர்ச்சிப் புள்ளிவிவரங்கள் எப்போதும் முழுமையான உண்மையைக் கூறுவதில்லை என்பது புரியும். வளர்ச்சி விகிதம் பொருளாதார முன்னேற்றத்தின் ஒரு குறிகாட்டியாக மட்டுமே இருக்க முடியும். அவை மட்டுமே, அனைத்துப் பிரிவினரின் வருமானமும் உயர்ந்துள்ளது என்பதை உறுதிப்படுத்தாது. உண்மையான வளர்ச்சி குறித்த நேர்மையான விவாதத்தை நாம் நடத்த வேண்டுமானால், அந்த வளர்ச்சி விகிதத்துக்குப் பின்னால் ஒளிந்துள்ள உண்மைகளைப் புரிந்துகொள்வது அவசியம்.
கணக்கீட்டு முறைச் சிக்கல்கள்: வளர்ச்சி விகிதங்கள் கணக்கிடப்படுவதில் பெரும் சிக்கல்கள் உள்ளன. ஆளும் கட்சியினரும், ஆளும் அரசுக்கு ஆதரவான பொருளாதார ஆலோசகர்களும், பெரும்பாலும் ஆண்டுக்காண்டு (Year-on-Year) வளர்ச்சியை ஒப்பிட்டு வெற்றிக் கோஷங்களை எழுப்புகின்றனர். 2024–25ஆம் நிதியாண்டின் ஜிடிபி-யை2023–24ஆம் நிதியாண்டுடன் ஒப்பிட்டு, ஆண்டுக்காண்டு வளர்ச்சியைக் கணக்கிடுகிறார்கள். ஆனால், இந்த அணுகுமுறை மூலம் அளவிடப்படும் வளர்ச்சி விகிதம் புள்ளிவிவரரீதியாகச் சரியானதல்ல. பொருளாதாரத்தின் செயல்பாடு, பெருந்தொற்று, வறட்சி, வெள்ளம், உலகளாவிய பொருளாதார மந்தநிலை போன்ற தற்காலிக மாற்றங்களால், வளர்ச்சி விகிதம் ஆண்டுக்காண்டு வேகமாக மாறுபடலாம்.
ஒருவேளை, அளவிடுவதற்கு எடுக்கப்படும் அடிப்படை ஆண்டு (Base Year) மேற்கண்ட காரணங்களால் மோசமான ஆண்டாக இருந்து, அதன் ஜிடிபி மதிப்பு குறைவாக இருந்தால், அதைத் தொடர்ந்து வரும் ஆண்டில் மீட்பு இயல்பாகவே சதவீத அடிப்படையில் பிரம்மாண்டமாகத் தோன்றும். இதற்கு நேர்மாறாக, அடிப்படை ஆண்டின் ஜிடிபி மதிப்பு மிக அதிகமாக இருந்தால், அதற்கு அடுத்த ஆண்டில், மதிப்பளவில் பொருளாதாரம் கணிசமாக விரிவடைந்திருந்தாலும், வளர்ச்சி விகிதம் குறைவானதாகவே இருக்கும்.
வளர்ச்சி விகிதத்தைக் கண்டறியப் பயன்படுத்தப்படும் முறைகளிலும் (Methodology) பல கேள்விகள் உள்ளன. வளர்ச்சி விகிதத்தைப் பல வழிகளில் கணக்கிடலாம், ஒவ்வொன்றும் வெவ்வேறு வளர்ச்சி எண்ணை உருவாக்கும். ஒரே அளவிலான தரவுத் தொடருக்கு, அதிகமாகப் பயன்படுத்தப்படும் லாக்-லீனியர் (Log-Linear) முறையைப் பயன்படுத்திப் பெறப்படும் வளர்ச்சி விகிதம், கூட்டு வருடாந்திர வளர்ச்சி விகிதத்தைப் (CAGR) பயன்படுத்தி கணக்கிடப்படுவதிலிருந்து மிகவும் வேறுபடும். இதேபோல், நடப்பு விலை அடிப்படையில் அளவிடப்படும் ஜிடிபி வளர்ச்சி விகிதம், பணவீக்கத்தைக் கணக்கில்கொண்டு, நிலையான விலையின் (Constant Prices) அடிப்படையில் அளவிடப்படுவதிலிருந்து வேறுபடும். உதாரணமாக, 2024-25ஆம் ஆண்டில் இந்தியாவின் நடப்பு விலை (Current Prices) மதிப்பில் ஜிடிபி வளர்ச்சி 9.9%. ஆனால், நிலையான விலையில் கிடைக்கப்பெற்ற வளர்ச்சி விகிதம் 6.5% மட்டுமே.
துறைகளின் பங்கை மறைப்பதா? - எந்தத் துறையின் பங்களிப்பால் ஜிடிபி வளர்ச்சி அடைகிறது என்பது பொது விவாதங்களில் பெரும்பாலும் புறக்கணிக்கப்படுகிறது. ஜிடிபி என்பது மூன்று முக்கியத் துறைகளின் (விவசாயம், தொழில், சேவைகள்) பங்களிப்பால் உருவாக்கப்படும் ஒரு கூட்டு மதிப்பு. வளர்ச்சி விகிதக் கணக்கீடுகளில் விவசாயத் துறையை நீக்கிவிட்டால், மொத்த வளர்ச்சி விகிதம் எப்போதும் அதிகமாகவே இருக்கும். ஏனெனில், விவசாயத் துறை பல காலமாக மெதுவாக வளர்ந்து வருவது மட்டுமல்லாமல், சில வருடங்களில் குறைவான வளர்ச்சியைப் பெற்றுள்ளது. தமிழ்நாடு போல் அல்லாமல், மொத்த ஜிடிபியில் விவசாயத் துறையின் பங்களிப்பு பெருமளவில் இருக்கும் மாநிலங்களில், இத்துறையின் குறைவான வளர்ச்சி ஒட்டுமொத்த வளர்ச்சி விகிதத்தைக் குறைத்துவிடும்.
வளர்ச்சி எந்தத் துறையிலிருந்து வருகிறது என்பது மிகவும் முக்கியம். ஏனெனில், அந்த வளர்ச்சியின் பலன்கள் எவ்வளவு பரவலாகப் பகிரப்படுகின்றன என்பதை அதுவே தீர்மானிக்கிறது. ஆய்வுகள் கூறுவது என்னவென்றால், உற்பத்தி - சேவைத் துறைகளுடன் ஒப்பிடும்போது, விவசாயத்தில் ஏற்படும் வளர்ச்சிக்குத்தான் ‘அதிக பரவல் விளைவு’ (Percolation Effect) உள்ளது. விவசாய வளர்ச்சியின் பலன்கள், ஏழ்மையான குடும்பங்களுக்கு அதிகமாகச் சென்றடைகின்றன. ஒரு நல்ல விவசாய ஆண்டு, கோடிக்கணக்கான சிறு, குறு விவசாயிகளின் வருமானத்தை உயர்த்துகிறது, வேலைவாய்ப்பை அதிகரிக்கிறது, நுகர்வைக் கூட்டுகிறது, வறுமையைக் குறைக்கிறது. விவசாயத் துறைக்கு அடுத்தபடியாக, உற்பத்தித் துறையின் வளர்ச்சியும் கணிசமான பலன் பகிர்வு விளைவைக் கொண்டுள்ளது. தற்போது, மொத்த உள்நாட்டு உற்பத்தியில் மிகப்பெரிய பங்களிப்பாளராக இருக்கும் சேவைத் துறையின் வளர்ச்சி, குறைந்த வருமானம் கொண்ட மக்களுக்கு எந்தப் பரவல் விளைவையும் ஏற்படுத்துவதில்லை.
அதாவது, மொத்த உள்நாட்டு வளர்ச்சி விகிதம் மிகவும் அதிகளவில் இருந்தாலும், அந்த வளர்ச்சி பெரும்பாலும் சேவைத் துறை அல்லது மூலதனச் செறிவுமிக்க தொழில்களால் இயக்கப்படும்போது, அதன் தாக்கம் வறுமைக் குறைப்பு, வருமான சமத்துவத்தில் குறைவாகவே தாக்கம் செலுத்தும். 2024-25ஆம் நிதியாண்டில், தமிழ்நாட்டின் மொத்த ஜிடிபியில் சேவைத் துறை மட்டும் 53.63% பங்களித்து உள்ளது. அதேவேளை, விவசாயத் துறையின் பங்களிப்பு வெறும் 13% மட்டுமே. இத்தகைய வளர்ச்சி அமைப்பு, பணக்காரர்களுக்கும் ஏழைகளுக்கும் இடையிலான வருமான ஏற்றத்தாழ்வுகளை அதிகரிக்கும். தமிழ்நாட்டின் மொத்த மக்கள்தொகையில், 55 சதவீதத்துக்கும் மேல் வேளாண் துறையை இன்றும் சார்ந்துள்ள மக்களுக்கு இதனால் பெரிய பலன்கள் எதுவும் கிடைக்காது. உதாரணமாக, தமிழ்நாடு மொத்த வளர்ச்சியில் பல ஆண்டுகளாக இந்தியாவின் முன்னோடி மாநிலமாக இருந்தபோதிலும், பயிர்ச்சாகுபடி மூலம் வேளாண் குடும்பங்களுக்குக் கிடைக்கும் மாத வருமானத்தில் 21ஆவது இடத்திலேயே இருக்கிறது.
புள்ளிவிவரங்களில் அரசியல்: வளர்ச்சிப் புள்ளிவிவரங்களை அரசியலுக்குப் பயன்படுத்துவது சமீப காலமாக அதிகரித்துவருகிறது. அதிக வளர்ச்சி என்பது ஆளும் அரசாங்கத்தின் கொள்கைகள் சிறப்பாகச் செயல்படுகின்றன என்பதற்கான ஆதாரம் எனக் கூறுபவர்கள், குறைந்த வளர்ச்சியை நிர்வாகத் திறனின்மைக்கான சான்றாக ஒப்புக்கொள்வதில்லை. ஆச்சரியமாக, இதுபோன்ற விவாதங்களில் உலக வர்த்தகத்தின் நிலை, பருவமழையின் பங்கு, மாநிலத்தின் அமைவிடம் போன்ற காரணிகளின் செல்வாக்கு பெரும்பாலும் விவாதிக்கப்படுவதில்லை. இக்காரணிகள், உள்நாட்டுக் கொள்கைகளைப் போலவே வளர்ச்சி முடிவுகளைத் தீர்மானிப்பதில் முக்கியப் பங்கு வகிக்கின்றன. மேலும், ஜிடிபி வளர்ச்சி மட்டுமே ஊட்டச்சத்து, சுகாதாரம், வறுமை, வேலைவாய்ப்பில் முன்னேற்றங்களுக்கு உத்தரவாதம் அளிப்பதில்லை.
உதாரணமாக, நிதி ஆயோக் வெளியிட்டுள்ள தேசியப் பல பரிமாண வறுமைக் குறியீட்டு அறிக்கைப்படி, 2015-16 மற்றும் 2019-21க்கும் இடையில், தமிழ்நாட்டில் சென்னை, திண்டுக்கல் மாவட்டங்களில் வறுமை அதிகரித்துள்ளது. முடிவாக, பொருளாதார வளர்ச்சி என்பது ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு மிகவும் முக்கியமானது என்றாலும், அது மட்டும் போதாது. ஒரு மாநிலம் நீடித்த உயர் வளர்ச்சியைப் பெற வேண்டுமானால், அந்த வளர்ச்சி அனைவரையும் உள்ளடக்கியதாகவும், வேலைவாய்ப்புகளை உருவாக்குவதாகவும், எல்லாப் பிரிவினரின் வருமானத்தை உயர்த்துவதாகவும் இருக்க வேண்டும். இவை இல்லாதபோது, வளர்ச்சி பற்றிய புள்ளிவிவரங்கள் யதார்த்தத்திலிருந்து துண்டிக்கப்பட்ட ஒரு புள்ளிவிவரமாகவே இருக்க முடியும். ஆளும் அரசியல் கட்சிகள், வளர்ச்சி விகிதம் பற்றிப் புகழ்பாடி ஆதாயம் பெறுவதற்கு முன்னால், அதற்குப் பின்னால் உள்ள ஆழமான உண்மைகளைப் புரிந்துகொள்ள வேண்டும். வளர்ச்சி குறித்த விவாதம், யாருடைய சதவிகிதப் புள்ளி அதிகமாக உள்ளது என்ற போட்டியாகச் சுருங்கினால், நம் மாநிலத்துக்குத் தேவையான வளர்ச்சி என்ன, அது யாருக்கானது என்கிற ஆழமான கேள்விகளை நாம் தவறவிட்டுவிடுவோம்.
கட்டுரையாளர்
மூத்த பேராசிரியர், இந்திய விவசாயச் செலவுகள்-விலைகள் ஆணையத்தின் முன்னாள் முழுநேர உறுப்பினர், புதுடெல்லி.
தொடர்புக்கு: narayana64@gmail.com