உலக மொழிகளில் ஒவ்வொரு நாளும் கணக்கிட முடியாத அளவு எண்ணிமத் தகவல்கள் (Digital Data) உருவாக்கப்படுகின்றன. கல்விப்புலம், மருத்துவம், வணிகம், ஊடகச் செய்திகள் எனப் பல்வேறு வகைகளில் இத்தகவல்கள் உள்ளன. இவை வெவ்வேறு முறைகளில் பயன்கொள்ளப்படுகின்றன. தமிழ்நாட்டு இளையோர் சமூக ஊடகங்களில் எழுதும் முறையால் அது தமிழின் வளர்ச்சிக்குப் பயன்படாது என்பது மட்டுமல்ல; ‘தமிழ்’ எனும் அடையாள இழப்பிற்கும் வழி வகுத்துவிடுமோ என்று அச்சப்படும் சூழல் உள்ளது.
எழுத்துருவும் அடையாளமும்: ஒலி வடிவில் உள்ள பேச்சுதான் எந்த மொழிக்கும் அடிப்படை. பேச்சு மொழியைப் பதிவு செய்வதற்கு இரண்டாம் கட்டமாக உருவாக்கப்பட்ட குறியீடுகள்தான் எழுத்துருக்கள். பெரும்பான்மையான மொழிகளுக்கு எழுத்துவடிவமே ஓர் அடையாளமாக மாறிவிடுகிறது.
2700 ஆண்டுகளுக்கு முன்பே தமிழ்-பிராமி அல்லது தமிழி என்னும் எழுத்துரு பயன்படுத்தப்பட்டிருக்கிறது என்பதை அண்மைத் தொல்லியல் ஆய்வுகள் வெளிப்படுத்தியுள்ளன. அத்தமிழி எழுத்துகளின் வளர்ச்சியடைந்த நிலைபேறாக்க வடிவமே இன்றைய தமிழ் எழுத்துகள். இந்நெடிய வரலாற்றில் அவ்வப்போது முன்வைக்கப்பட்ட/மேற்கொள்ளப்பட்ட தமிழ் எழுத்துச் சீர்திருத்த முயற்சிகளுக்கு எதிர்ப்புகள் எழுந்துள்ளன.
1961 ஆகஸ்ட் 10-12 ஆகிய நாட்களில் அன்றைய இந்தியப் பிரதமர் ஜவாஹர்லால் நேரு தலைமையில் டெல்லியில் கூடிய முதலமைச்சர்கள் மாநாட்டில் ‘‘இந்தியா முழுமைக்கும் ஒரு பொது எழுத்துமுறை பயன்படுத்தப்பட்டால் அது இந்திய ஒற்றுமைக்குப் பேருதவி செய்யும். தேவநாகரி எழுத்தே அவ்வகையான ஒரு பொது எழுத்தாக இருப்பதற்குத் தகுதியானது. இருப்பினும் உடனடியாக ஒரு பொது எழுத்துருவை அனைத்து மொழிகளுக்கும் பயன்படுத்திவிட முடியாதாகையால், எதிர்காலத்தில் தேவநாகரி எழுத்தை அனைத்து இந்திய மொழிகளுக்கும் பயன்படுத்தும் இலக்கைக் கருத்தில்கொண்டு செயலாற்ற வேண்டும்” எனும் முடிவு எடுக்கப்பட்டது. இதற்குத் தமிழ்நாட்டில் பெரும் எதிர்ப்புக் கிளம்பிற்று.
பேரறிஞர் அண்ணா 1961 ஆகஸ்ட் 27-இல் வெளிவந்த ‘திராவிட நாடு’ இதழில், ‘‘ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகத் தமிழ் மொழிக்கென தனி ஒரு எழுத்து வடிவமும், அந்த எழுத்துகளால் ஆக்கம் பெற்ற அரிய பெரிய நூல்களும் இருந்து வருகின்றன. எடுத்துக்காட்டாகத் தமிழ் மொழியில் உள்ள திருக்குறளையோ தொல்காப்பியத்தையோ தேவநாகரி எழுத்தில் எழுதிப் படிக்கச் சொன்னால், திருக்குறள் என்ற நூல், தமிழ் மொழியில் கிடையாது என்று கூறக்கூடிய அளவுக்கு அதன் பொருட்செறிவும் அமைப்பும் அற்று இல்லாதொழியும்” என்று மிகக் கடுமையாக எதிர்த்தார்.தட்டச்சு செய்ய ஏதுவாக 1960-களில் ரோமன் (ஆங்கில) எழுத்துகளையே பயன்படுத்தலாம் என்று மேலெழுந்து வந்த முன்மொழிவுகளுக்கும் வரவேற்பு ஏதுமில்லை. எழுத்தின் வழி மொழியையும் மொழியின் வழி தமிழர் அடையாளத்தையும் காண்பதே இவ்வெதிர்ப்புகளுக்கான காரணம்.
எண்ணிமத் தகவல்களும் ஆங்கிலோ தமிழி எழுத்து முறையும்: ‘தங்கிலீஷ்’ எனும் வரம்பற்ற ஆங்கிலக் கலப்புத் தமிழ் இன்று மிகப் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. அமைச்சர்கள், அதிகாரிகள் உள்ளிட்டோரின் ஊடகச் சந்திப்புகள், தொலைக்காட்சி விவாதங்கள், சட்டமன்ற நிகழ்வுகள் என அனைத்து இடங்களிலும் தங்கிலீஷ் நடைமுறையாகிவிட்டது. இது தமிழ் மொழிக்கு மட்டுமே உரிய சிக்கல் அல்ல; அனைத்து இந்திய மொழிகளுக்குமானது. இச்சிக்கலுக்கான மூலகாரணம் ஆங்கில மோகமும் நமது மனப்பான்மையும்தான் என்பது தெரிந்த செய்தி. தனித்தமிழில் பேசுகிறேன் என ‘செந்தமிழில்’ பேசினால் பழமைவாதி எனும் நையாண்டிக்கு உள்ளாகும் நிலை. அவ்வகை இறுக்க மொழிப்பயன்பாடு நடைமுறைக்கு ஏற்றதும் அல்ல. இயன்றவரை ஆங்கிலச் சொற்கள் கலக்காத இயல்பான பேச்சுத் தமிழே இன்றைய தேவை.
தமிழ் மொழியில் இன்றைக்குப் பலதரப்பட்ட மக்களும் அவரவர் விரும்பியதைத் தமிழ் மொழியில் எழுதவும் கருத்துப் பரிமாற்றம் செய்யவும் அவற்றைப் பொதுவெளியில் பகிர்ந்து கொள்ளவும் சாத்தியம் ஏற்பட்டுள்ளது. முகநூல், புலனம், எக்ஸ் (ட்விட்டர்), டெலிகிராம், இன்ஸ்டகிராம், யூடியூப் முதலான சமூக ஊடகங்களில் தங்கள் கருத்துகளை, உணர்வுகளை பரிமாறிக் கொள்கிறார்கள்.
இப்படி, தமிழ் மொழியில் ஆக்கங்கள் பெருகி வந்தாலும் அவை அனைத்தும் தமிழ் எண்ணிம வளத்திற்கு (Digital Resource) வலுச்சேர்ப்பதாக அமையவில்லை என்பதுதான் உண்மை. ஏனெனில், பெரும்பான்மையான இளையோர் தங்களுக்குள் பரிமாறிக் கொள்ளும் சமூக ஊடகப் பதிவுகளில் அவர்கள் தங்கிலீஷை ரோமன் (ஆங்கில) எழுத்துகளில் எழுதுகிறார்கள். இந்த ஆங்கிலோ தமிழியை மொழி அடிப்படையில் ஆங்கிலமாகவும் எடுத்துக்கொள்ளமுடியாது; தமிழாகவும் கருத இயலாது. ஏனெனில் தமிழ் எழுத்துருவில் எழுதப்படுகின்ற பதிவுகளையே மெட்டா உள்ளிட்ட செயற்கை நுண்ணறிவுச் செயலிகள் தரவுகளாக சேகரித்துக்கொள்ளும். தமிழை ஆங்கில எழுத்துகளால் எழுதுவதால் இது கருத்துப் பரிமாற்றத்துக்கு உதவுமே அல்லாது தமிழ் எண்ணிமத்திற்கு எந்த வகையிலும் பயனளிக்கப் போவதில்லை.
ஆங்கிலோ தமிழியைப் படிப்பது அதைப் பயன்படுத்தும் இளைய சமூகத்தினருக்கும் கடினமே. இதற்குக் காரணம் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக எழுதுகிறார்கள். இவ்வாறு எழுதுவதற்கான காரணங்களாக அவர்களிடமிருந்து பொதுவாகக் கிடைக்கக்கூடிய பதில்களைக் கீழ்க்கண்டவாறு தொகுக்கலாம்:
ஆங்கில எழுத்துகளைப் பயன்படுத்தி ஆங்கிலோ தமிழியில் எழுதுவதால், இணையத்தில் செயற்கை நுண்ணறிவு சார்ந்த பல செயல்பாடுகளுக்குப் பயனளிக்கக்கூடிய மின்தரவக வளங்கள் வேண்டிய அளவு கிடைக்காமல், குறைபாடுடைய மொழியாகத் தமிழ் சுருங்கிப் போகிறது. தற்கால இளையோரின் ‘தமிழ் எழுத்துத் தவிர்த்தல்’ செயலால் நெடுங்காலமாகத் தமிழர்களின் ஒருமித்த அடையாளத்தின் ஒரு குறியீடாக இருந்துவரும் தமிழ் எழுத்து அதன் இடத்தை இழந்து விடுமோ எனும் அச்சமும் எழுகிறது. தமிழ்நாடு மாநிலக் கல்விக்கொள்கை-2025ஐ நடைமுறைப்படுத்தும்போது கைப்பேசியிலும், கணினியிலும் தமிழில் தட்டச்சு செய்வதைப் பாடத்திட்டத்திலேயே உட்படுத்த வேண்டும். வகுப்புக்கு வெளியிலும் மாணவர்களின் அனைத்துச் செயல்பாடுகளிலும் தமிழ் எழுத்துகளைப் பயன்படுத்துவதை ஊக்குவிக்க வேண்டும்.
கோ.பாலசுப்ரமணியன்
மேனாள் துணைவேந்தர்,
தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர்.
தொடர்புக்கு: gbalu123@gmail.com