இந்தியாவின் வருமான ஏற்றத்தாழ்வு குறித்து உலக வங்கி அண்மையில் வெளியிட்டுள்ள அறிக்கை, கொள்கை முடிவு எடுக்கும் வட்டாரங்களில் மட்டுமல்லாமல், ஆராய்ச்சியாளர்கள், ஊடகங்கள், அரசியல் விமர்சகர்கள் மத்தியிலும் பெரிய புயலைக் கிளப்பியுள்ளது.
இந்திய அரசின் பத்திரிகைத் தகவல் அலுவலகம் (Press Information Bureau-PIB) உலக வங்கியின் கண்டறிதல்களை எடுத்துரைக்கும் ஒரு விரிவான குறிப்பை வெளியிட்டுத் தவறான புரிதல்களைத் தெளிவுபடுத்த முயன்றது. இருப்பினும், இந்த மதிப்பீடுகளின் நம்பகத்தன்மை குறித்து ஆய்வாளர்கள் பெரும் சந்தேகம் எழுப்பி, உலக வங்கியின் தரவுகள் மிகைப்படுத்தப்பட்டவை என்று குறிப்பிட்டுள்ளனர்.
மறுபுறம், இத்தரவுகள் அண்மையில் இந்தியாவின் நிதி ஆயோக் (NITI Aayog) வெளியிட்டுள்ள வறுமை அளவின் மதிப்பீடுகளுடன் ஒத்துப்போவதாகச் சில விமர்சகர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். ஏன் தரவுகள் மீது மாறுபட்ட கருத்துக்கள் எழுகின்றன? வருமான ஏற்றத்தாழ்வு பற்றிய விவாதம் உண்மையான தரவுகளின் அடிப்படையில் இருக்க வேண்டுமா அல்லது சித்தாந்த நிலைப்பாட்டின் அடிப்படையில் இருக்க வேண்டுமா?
உலக வங்கி என்ன சொல்கிறது? - உலக வங்கியின் ‘2025 வசந்தகால வறுமை - சமவாய்ப்பு சுருக்க அறிக்கை’ (Spring 2025 Poverty and Equity Brief), ஏற்றத்தாழ்வுகளை அளவிடுவதற்காகப் பயன்படுத்தப்படும் கினி குறியீடு (Gini Index) அளவின்படி, இந்தியாவின் வருமான ஏற்றத்தாழ்வு மிதமாக உள்ளது என்றும், சமீப ஆண்டுகளில் இவற்றில் எந்த அபாயகரமான அதிகரிப்பும் இல்லை என்றும் கூறியுள்ளது.
மேலும், தீவிர வறுமையால் (Extreme Poverty) பாதிக்கப்பட்டுள்ள இந்திய மக்களின் எண்ணிக்கை 2022-23இல் 2.3%ஆகக் குறைந்துள்ளது என்றும், 2011 மற்றும் 2023க்கும் இடையில் 17.1 கோடி இந்தியர்கள் தீவிர வறுமையில் இருந்து மீண்டு வந்துள்ளனர் என்றும் இந்த அறிக்கை கூறுகிறது.
உலக வங்கியின் மதிப்பீட்டின்படி, இந்தியாவின் கினி குறியீடு 2011-12இல் 28.8இலிருந்து 2022-23இல் 25.5ஆகக் குறைந்துள்ளது மட்டுமல்லாமல், ஸ்லோவாக் குடியரசு, ஸ்லோவேனியா, பெலாரஸ் நாடுகளுக்குப் பிறகு உலகின் நான்காவது சமவாய்ப்பு வாய்ந்த நாடாக உள்ளது எனவும் கூறியுள்ளது. மக்களின் எதிர்பார்ப்புக்கு மாறாக, இந்தியாவின் வருமான ஏற்றத்தாழ்வு நிலைகள் பல பெரிய வளர்ந்த நாடுகளுடன் ஒப்பிடத்தக்கவை அல்லது அதற்கும் குறைவாக இருப்பதாகவும் இவ்வறிக்கை தெரிவிக்கிறது.
உலக வங்கி கூறியுள்ள இந்தக் கண்டறிதல்கள் ஒருவகையில் நிதி ஆயோக்கின் (NITI Aayog) பலபரிமாண வறுமைக் குறியீடு (Multidimensional Poverty Index-MPI) மதிப்பீடுகளுடன் ஒத்துப்போகின்றன. அதாவது, 2015-16 மற்றும் 2019-21க்கும் இடையில் ஏறக்குறைய 13.5 கோடி இந்தியர்கள் வறுமையில் இருந்து மீட்கப்பட்டுள்ளதாக நிதி ஆயோக் மதிப்பிட்டு உள்ளது.
நிதி ஆயோக் கூறியுள்ளதுபோலவே, உலக வங்கியின் பகுப்பாய்வும் கடந்த 10 ஆண்டுகளில் எடுக்கப்பட்ட நலவாழ்வு நடவடிக்கைகள் (Welfare Measures), நிதி உள்ளடக்க நடவடிக்கைகள் (Financial Inclusion), நேரடிப் பணப் பரிமாற்றங்களின் கணிசமான விரிவாக்கம் போன்றவை இந்தியாவின் பொருளாதாரம் வேகமாக வளர்ந்த நிலையில், ஏற்றத்தாழ்வைச் சமன் செய்ய உதவியிருக்கலாம் என்று தெரிவிக்கிறது.
பல ஆண்டுகளாக இந்தியாவில் ஏற்றத்தாழ்வு கட்டுக்கடங்காமல் அதிகரித்துவருகிறது என்ற மேற்கத்தியக் கல்வி - ஊடக வட்டாரங்கள் பேசிவருகின்றன. அதை ஒப்பிடும்போது, உலக வங்கியின் கண்டுபிடிப்புகள் மாறுபட்டுள்ளதால், இதைப் பற்றிய விவாதங்கள் தற்போது சூடுபிடித்துள்ளன.
தாமஸ் பிக்கெட்டி புதிர்: உலக வங்கியின் கண்டறிதல்கள் இந்தியாவில் தற்போது கடுமையான கேள்விக்கு உள்ளாக்கப்படும் அதே வேளையில், புகழ்பெற்ற பொருளாதார நிபுணர் தாமஸ் பிக்கெட்டியும், அவரது சகாக்களும் 2017இல் உருவாக்கிய வருமான ஏற்றத்தாழ்வு மதிப்பீடுகளிலும், அவற்றை உருவாக்கப் பயன்படுத்தப்பட்ட முறையியலில் நம்பகத்தன்மை இல்லாமல் இருந்தபோதிலும் அதைப் பற்றி யாரும் கேள்வி எழுப்பவில்லை.
தாமஸ் பிக்கெட்டியின் வருமான ஏற்றத்தாழ்வு குறித்த மதிப்பீடானது, பெரும்பாலும் வருமான வரித் தரவுகளிலிருந்து பெறப்பட்டு, அதிக வருமானம் பெறும் மக்களின் தரவுகளை மட்டும் பயன்படுத்தி, இந்தியா வருமான ஏற்றத்தாழ்வு கொண்ட நாடு என்று முத்திரை குத்தியுள்ளது.
ஒரு பெரிய முறைசாராத் துறை (Unorganised Sector) உள்ள ஒரு நாட்டில், வருமான வரிப் பதிவுகளை மட்டுமே நம்பியிருப்பதால் உருவாகும் குறுகிய பார்வை, வருமான வளர்ச்சிப் போக்குகளைத் திட்டமிடுவதில் உள்ள அனுமானங்கள், குறைந்த - நடுத்தர வருமானப் பிரிவு மக்களின் யதார்த்தங்களைச் சிறப்பாகப் பிரதிபலிக்கும் நுகர்வுகள் பற்றிய வீட்டுக் கணக்கெடுப்பு ஆகிய தரவுகளைப் புறக்கணித்துவிட்டு, வருமான ஏற்றத்தாழ்வுகளை எப்படிக் கணக்கிட முடியும் என தாமஸ் பிக்கெட்டியை யாருமே கேட்கவில்லை.
குடும்பங்களின் நுகர்வுச் செலவு உள்ளிட்ட பல காரணிகளைக் கொண்டு, உலக வங்கியால் விரிவான பகுப்பாய்வுகள் மூலம் செய்யப்பட்டுள்ள கண்டறிதல்களை விமர்சிப்பவர்கள், தாமஸ் பிக்கெட்டியால் வெறும் 2.1% மக்களின் (2023-24 தரவுகளின்படி) வருமான வரித் தரவுகளைக் கொண்டு உருவாக்கப்பட்ட கினி குறியீட்டை எப்படி ஏற்றுக்கொண்டார்கள் என்பது தெரியவில்லை.
இரட்டைத் தரநிலைகள்: பல நேரங்களில் தரவுகளைப் புறந்தள்ளிவிட்டு, கல்விசார் குழுச் சிந்தனை, சித்தாந்த சார்புகள், புவிசார் அரசியல் கருத்துக்களின் அடிப்படையில் ஏற்றத்தாழ்வுகள் பற்றிய முடிவுகள் எடுக்கப்படுகின்றன. இந்தியாவின் எதிர்மறையான பிம்பத்தைச் சித்தரிக்கும் எந்தவொரு உலகளாவிய நிறுவனம் அல்லது அறிஞர் கூறும் தரவுகள், கண்டுபிடிப்புகள் சிலருக்கு நம்பகமான ஆதாரமாகிவிடுகின்றன.
இதே உலக வங்கி, வேலை இழப்பு, வறுமை அதிகரிப்பு அல்லது பொருளாதார மந்தநிலையை முன்னிலைப்படுத்தும் ஓர் அறிக்கையை வெளியிட்டால், அது அரசுக்கு ஓர் ‘எச்சரிக்கை மணி’ என விவாதங்கள் பெரியளவில் நடத்தப்படுகின்றன.
ஆனால், அதே நிறுவனம் இந்தியாவின் மிதமான ஏற்றத்தாழ்வு அல்லது குறிப்பிடத்தக்க வறுமைக் குறைப்புக்கான ஆதாரங்களை முன்வைக்கும் போது, திடீரென்று அது சந்தேகத்துக்கு உரியதாக ஆகிவிடுகிறது அல்லது அரசாங்கத்தின் நிலைப்பாட்டுக்கு ஆதரவாகச் செயல்
படுவதாகக் குற்றம்சாட்டப்படுகிறது.
அறிவுநேர்மையற்றது: இத்தகைய போக்கு புதியதல்ல. ஆனால், இந்தியாவின் அதிக சார்புகள் கொண்ட அரசியல் சூழலின் (Hyper-polarised Political Climate காரணமாக இது தற்போது தீவிரமடைந்துள்ளது. உலக வங்கி, பன்னாட்டு நாணய நிதியம் (IMF) அல்லது இந்தியாவின் உள்நாட்டுப் புள்ளிவிவர முகமைகள் போன்ற நிறுவனங்கள் பெரும்பாலும் போட்டி அரசியலின் புயலில் சிக்கிக்கொள்கின்றன. இது பொது விவாதத்துக்கு மட்டுமல்ல, ஆராய்ச்சி, கொள்கை சார்ந்த விவாதத்தின் நம்பகத்தன்மைக்கும் மிகவும் ஆபத்தானது.
தரவுகளை அரசியல் வசதிக்காக மட்டும் பயன்படுத்தாமல், அவற்றின் முறையியல் சார்ந்த அடிப்படை அம்சங்களைக் கேள்விக்கு உள்படுத்த வேண்டும். ஒருபுறம் தமக்கு உள்ள நம்பிக்கைகளை உறுதிப்படுத்தும் அறிக்கைகளை மட்டும் ஏற்றுக்கொண்டு, மறுபுறம் அந்த நம்பிக்கைகளைக் கேள்விக்குள்ளாக்கும் அறிக்கைகளை நிராகரிப்பது அறிவுநேர்மையற்றது; பொருளாதாரக் கொள்கை குறித்த அர்த்தமுள்ள உரையாடலைக் குறைமதிப்புக்கு உள்படுத்துகிறது.
இந்தியா போன்ற ஒரு பரந்த / பன்முகத்தன்மை கொண்ட நாட்டில் வருமானப் பகிர்வின் சிக்கலான தன்மைகளை எந்த ஒரு தரவுத்தொகுப்பாலும் முழுமையாகப் படம்பிடிக்க முடியாது என்பதைப் புரிந்துகொள்வது மிக முக்கியம்.
நமக்குப் பிடிக்காத கண்டறிதல்களை நிராகரிப்பது அல்லது முன்தீர்மானிக்கப்பட்ட கருத்துக்களுக்கு ஒத்துப்போவதை ஏற்றுக்கொள்வதற்குப் பதிலாக, கொள்கை வகுப்பாளர்களும், விமர்சகர்களும் ஆதாரங்களுடன் வெளிப்படையான, விமர்சனரீதியாக ஈடுபடும் கலாச்சாரத்தை வளர்த்துக்கொள்ள வேண்டும்.
எப்போதும் பதற்றமான அரசியல் சூழல் உள்ள நம் நாட்டில், குறுகிய கால விவாதங்களுக்குப் புள்ளிவிவரங்களை ஆயுதமாக்குவது கவர்ச்சிகரமானதாக இருக்கலாம். ஆனால், இந்தப் பழக்கம் பொது விவாதத்துக்கும் கொள்கை உருவாக்கத்துக்கும் பெரிய தீங்கு விளைவிக்கக்கூடும்.
நேர்மையான மதிப்பீட்டின் மூலம் மட்டுமே மேலோட்டமான விவாதங்களுக்கு அப்பால் உயர்ந்து, ஏற்றத்தாழ்வைச் சமாளிப்பது, வறுமையைக் குறைப்பது, அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியை மேம்படுத்துவது போன்ற உண்மையான கொள்கைச் சவால்களை இந்தியா எதிர்கொள்ள முடியும்.
- தொடர்புக்கு: narayana64@gmail.com