தமிழகத்தில் சிறுநீரக தானம் என்கிற பெயரில் சட்ட விரோதச் சிறுநீரகத் திருட்டு நடைபெறுவதாக எழுந்திருக்கும் புகார்கள் அதிர்ச்சியளிக்கின்றன. மக்களின் உயிரைக் காப்பதற்காகக் கண்டறியப்பட்ட மருத்துவச் சிகிச்சை முறைகளைச் சிலர் தனிப்பட்ட லாபத்துக்காகச் சட்ட விரோதமாகப் பயன்படுத்துவதைத் தடுக்க வேண்டிய தருணம் இது.
தமிழகத்தில் பல ஆண்டுகளாகச் சட்ட விரோதச் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைகள் நடைபெற்றுவந்தாலும் அண்மையில் நாமக்கல் பகுதியில் விசைத்தறி - சாயப் பணியாளர்கள் மத்தியில் இடைத்தரகர்கள் மூலம் சிறுநீரகத் திருட்டு நடைபெறுவதாக எழுந்திருக்கும் புகார்கள், மீண்டும் இதைப் பேசுபொருள் ஆக்கியிருக்கின்றன. பணத்தின் அடிப்படையில் நிகழும் சட்ட விரோத உறுப்பு மாற்றுச் சிகிச்சைகளைத் தடைசெய்யும் பொருட்டு, ‘மனித உறுப்புகள் - தசைகள் மாற்று அறுவைசிகிச்சைச் சட்டம்’ 1994இல் நடைமுறைக்கு வந்தது.
இதன்படி, உறுப்பு மாற்றுச் சிகிச்சை மேற்கொள்பவரின் நெருங்கிய உறவினர் (தாய்/தந்தை, சகோதரி/சகோதரன், மகள்/மகன், மனைவி) மட்டுமே உறுப்பு தானம் அளிக்கலாம். பிறகு, குழந்தைகளுக்கும் உறுப்பு மாற்றுச் சிகிச்சை அளிக்கும் வகையில் தானம் பெறுபவரின் பேத்தி/பேரன் ஆகியோரும் தானம் அளிக்கலாம் என்று திருத்தம் மேற்கொள்ளப்பட்டது.
சட்ட விரோத உறுப்பு தானத்தில் ஈடுபடுவோரால் இந்தச் சட்டத்தின்படி எதையும் செய்ய முடியாது. ஆனால், உறுப்பு தானம் பெறுபவரின் நன்மைக்காக ‘அன்பின் பெயரால்’ ஒருவர் உறுப்பு தானம் செய்யலாம் என்கிற சட்டப் பிரிவு இவர்களுக்குச் சாதகமாகிவிடுகிறது. இந்தப் பிரிவின்படி உறுப்பு தானம் செய்வதற்கும் பெறுவதற்கும் ‘அங்கீகாரக் குழு’வின் ஒப்புதல் தேவை.
கெடுவாய்ப்பாகத் தரமற்ற – அடிப்படைக் கட்டமைப்புகள்கூட இல்லாத மருத்துவமனைகளுக்கும் அங்கீகாரம் வழங்கப்பட்டிருக்கிறது. சில மருத்துவமனைகளில் போலி ஆவணங்களைக் கொடுத்துச் சட்ட விரோதமாக உறுப்பு மாற்றுச் சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது.
இந்தச் சிகிச்சைகளுக்கு அரசே பொறுப்பு என்பதால், இதில் சமரசமற்ற வகையில் பணியாற்றியிருக்க வேண்டும். ஆனால், தற்போது வெளிச்சத்துக்கு வந்திருக்கும் புகார்கள், அரசுத் தரப்பில் போதுமான கண்காணிப்பும் தொடர் சோதனைகளும் நடத்தப்படவில்லை என்பதையே காட்டுகின்றன.
மூளைச்சாவு அடைந்தவர்களிடம் இருந்து பெறப்படும் உறுப்பு தானத்தில் தமிழகம் முன்னிலை வகிக்கிறது. அதேநேரம், உயிருடன் இருப்பவரிடம் இருந்து பெறப்படும் உறுப்பு தானத்தில் தெளிவற்ற நிலையும் முறைகேடுகளும் நிலவுகின்றன. சிறுநீரக மாற்றுச் சிகிச்சையில் ‘நெஃப்ரக்டமி’ என்கிற சொல் பயன்படுத்தப்படுகிறது.
சிறுநீரகப் புற்றுநோய் சிகிச்சைக்கும் இந்தச் சொல்லே பயன்படுத்தப்படுவதால் சட்ட விரோத உறுப்பு மாற்றுச் சிகிச்சையில் ஈடுபடுபவர்கள் மிக எளிதாகச் சட்டத்தின் பார்வையில் இருந்து தப்பிவிடுகின்றனர்.
பெரும்பாலும் ஏழை, எளிய மக்கள்தான் இந்தக் குற்றத்துக்குத் துணைபோகும் இடைத்தரகர்களின் தேர்வாக இருக்கிறார்கள். சிறுநீரக மாற்றுச் சிகிச்சை என்பது தானம் பெறுவோர் - வழங்குவோர் ஆகிய இருவருக்கும் பல்வேறு கட்டப் பரிசோதனைகளை உள்ளடக்கிய மேம்பட்ட சிகிச்சை. யாருக்கும் தெரியாமல் இதை எளிதாகச் செய்துவிட முடியாது.
அதனால், தானம் பெறுவோர் தொடங்கி மருத்துவமனை நிர்வாகம் வரை சட்ட விரோதச் சிறுநீரக மாற்றுச் சிகிச்சையில் தொடர்புடைய அனைவருமே குற்றவாளிகள். சட்ட விரோதச் சிறுநீரக தானத்தால் கிடைக்கிற சொற்பப் பணம், சம்பந்தப்பட்டவர்களின் வறுமை நிலையை மாற்றிவிடவில்லை என 2001இல் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.
தற்போதைய புகார்களின் தொடர்ச்சியாக இரண்டு தனியார் மருத்துவமனைகளின் உரிமத்தை அரசு ரத்துசெய்துள்ளது. ஆனால், இது மட்டுமே தீர்வல்ல. மருத்துவச் சேவையில் சிறந்து விளங்கும் தமிழ்நாட்டில், சட்ட விரோத உறுப்பு மாற்றுச் சிகிச்சைகள் நடைபெறுவதை முற்றாகத் தடுப்பதும் உரிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதும் அவசியம். அப்போதுதான் மருத்துவத் துறை மீதான நம்பிக்கை மக்களிடையே அதிகரிக்கும்.