‘இந்தியப் புள்ளியியலின் தந்தை’ என்று அழைக்கப்படுபவர் பேராசிரியர் பிரசாந்த சந்திர மஹலானபிஸ் (Prasanta Chandra Mahalanobis). சுதந்திர இந்தியாவுக்கான பொருளாதாரத்தைக் கட்டமைத்து அதைச் சிறப்பாக வழிநடத்தியதிலும், புள்ளிவிவரங்களை நாடு தழுவிய அளவில் சேகரித்ததிலும் மஹலானபிஸின் பங்கு மகத்தானது. புள்ளியியலில் அவரது மகத்தான பங்களிப்பைப் போற்றும் வகையில், ஜூன் 29ஆம் தேதி, தேசியப் புள்ளியியல் நாளாகக் கொண்டாடப்படுகிறது.
இந்த ஆண்டுக்கான புள்ளியியல் நாள் கருப்பொருள் ‘75 ஆண்டு கால தேசிய மாதிரிக் கணக்கெடுப்பு’ (75 Years of National Sample Survey). மாதிரிக் கணக்கெடுப்பு என்பது தனிமனிதர், குடும்பம், தொழில் நிறுவனம் போன்ற முதன்மை அலகுகளில் இருந்து தரவுகளைத் திரட்டுவதிலும், திரட்டப் பட்ட தரவுகளைக் கொண்டு வறுமை ஒழிப்பு, வருவாய் ஏற்றத்தாழ்வு, முறைசாராத் தொழிலாளர் நலன், குடும்ப நலன் போன்றவை தொடர்பான கொள்கைகளை வடிவமைப்பதிலும் சிறப்பான பங்கை ஆற்றிவருகிறது.
வரைமுறைகளின் முக்கியத்துவம்: புள்ளியியல் துறையில் இந்தியா பெருமளவு முன்னேற்றம் கண்டபோதிலும், தற்போது பெறப்படும் முதன்மைத் தரவுகளின் துல்லியத்தையும் உண்மைத்தன்மையையும் உறுதிசெய்வதில் பிரச்சினைகள் நிலவுகின்றன.
இதனால் மக்களின் வறுமை, வாழ்வாதாரம், வேலைவாய்ப்பு, தொழில் போன்றவற்றைச் சரியான முறையில் அளவிட்டு, அதற்கான கொள்கைகளைத் திறம்பட வடிவமைப்பதில் தொய்வு ஏற்படுகிறது. இதுபோன்ற பிரச்சினைகளைக் களைய முதன்மை மாதிரிக் கணக்கெடுப்பில் சில வரைமுறைகளைக் கடைப்பிடிப்பது அவசியம்.
முதலாவதாக, தற்போதைய நடைமுறையில் வறுமைக்கோட்டைத் தீர்மானிப்பதற்கு மக்கள் ஈட்டும் வருவாய் அல்லது செலவு மட்டுமே முதன்மையாக எடுத்துக்கொள்ளப்படுகிறது. இந்த அளவீடுகள், மாதிரிக் குடும்பங்களைத் (Sample Households) தேர்வுசெய்து, அவர்களிடமிருந்து முதன்மைக் கணக்கெடுப்பின்மூலம் (Primary Survey) பெறப்படும் தரவுகளைக் கொண்டே தீர்மானிக்கப்படுகிறது.
உதாரணமாக, தற்போது மிகவும் பரவலாகப் பயன்படுத்தப்படும் தரவுகள் ‘குடும்ப நுகர்வுச் செலவுக் கணக்கீடு’ (Household Consumer Expenditure Survey) மூலம் பெறப்படுபவையே. முதன்மைக் கணக்கெடுப்பின்மூலம் பெறப்படும் தரவுகள் 18 விதமான பிழைகளால் பாதிக்கப்படக்கூடிய சாத்தியம் இருப்பதாகக் கண்டறியப்படுகிறது. சில பிழைகளையும் பாரபட்சமான பதில்களையும் இனம்கண்டறிவது கடினமான செயல்.
இவை பெரும்பாலும் கணக்கெடுப்பாளர்களாலும், நேர்காணலுக்குப் பதிலளிக்கும் குடும்ப உறுப்பினர்களாலுமே விளைவிக்கப்படுகின்றன. கணக்கெடுப்பாளர்களைப் பொறுத்தவரை கிராமங்களில் அல்லது வீடுகளில் நாய்களின் தொல்லை அதிகம் இருப்பதால், நேர்காணலுக்குச் செல்லாமலேயே தரவுகளைக் குத்துமதிப்பாகப் பதிவுசெய்ய நேரிடுவது துயரம்.
கடினமான வேலைப்பளு, மேலதிகாரிகளின் அழுத்தம், மாதிரிக் குடும்பங்கள் பதில் சொல்லாமல் இழுத்தடிப்பது போன்ற பிரச்சினைகளால், ஒருசில கணக்கெடுப்பாளர்கள் தங்களையே மாதிரிக் குடும்பங்களின் பிரதிநிதிகளாகப் பாவித்துத் தரவுகளைத் தாங்களே பதிவுசெய்ய நேரிடுகிறது.
நடைமுறைச் சிக்கல்கள்: தூரத்து இடங்களுக்குப் போக்குவரத்து வசதி குறைவு, பெண் கணக்கெடுப்பாளர்களுக்குப் பாதுகாப்பின்மை, சில இக்கட்டான (ஆனால் ஆய்வுக்கு அவசியமான) பதில்களை பதிலளிப்பவரே தவிர்க்க நேரிடுவது போன்றவற்றால், தரவுகளைப் பதிவிடுவதில் பிரச்சினை ஏற்படுகிறது. சமீபகாலத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட ‘இலக்கமுறை’ (digital) கணக்கீட்டில் கணக்கெடுப்பாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளாலும் பாதிப்பு ஏற்படுகிறது.
தேர்ந்தெடுக்கப்பட்ட மாதிரிக் குடும்பங்களிடம் கணக்கெடுப்பாளர்கள் நேர்காணலுக்காகச் செல்லும்பட்சத்தில், பதிலளிக்கும் குடும்ப உறுப்பினர்களிடையே பொதுவாக இரண்டு விதமான சந்தேகங்கள் எழுகின்றன: ஒன்று, இந்தக் கேள்விகள் எதற்காகத் தம்மிடம் கேட்கப்படுகின்றன என்ற ஒருவித அச்ச உணர்வு. இரண்டாவதாக, இந்த நேர்காணல் மூலம் தானோ, தன் குடும்பமோ அடையப்போகும் பயன் என்ன என்பது.
மேற்கண்ட கேள்விகளுக்கான பதில், அவர்களின் ஊகங்களின் தன்மைகளைப் பொறுத்தே அமையும். உதாரணமாக, தங்களின் பொருளாதார நிலைமையை வைத்து அரசாங்கம் சில நலத்திட்டங்களை அறிவிக்கப்போகிறது என்றாலோ, வரி விதிப்பு, வரி உயர்வு போன்ற முடிவுகளை எடுக்கப்போகிறது என்று ஊகித்தாலோ உண்மையான பதில்கள் கிடைக்காது.
அரசாங்கம் நடைமுறைப்படுத்தும் பல்வேறு சமூக நலத் திட்டங்கள் வருவாய் குறைந்த மக்களுக்காகச் செயல்படுத்தப்படுவதால், பலர் தங்களுடைய உண்மையான வருவாயைக் குறைத்தே சொல்கின்றனர். இதேபோல், பலர் தங்களுடைய சேமிப்பு, அசையும், அசையா சொத்துக்களின் மதிப்பு சார்ந்த கேள்விகளுக்குப் பதில் அளிக்க மறுப்பதையோ, மதிப்பைக் குறைத்துச் சொல்வதையோ காண முடிகிறது.
வருவாய், சொத்து சார்ந்த கேள்விகளால் ஏற்படும் பிரச்சினைகளைத் தவிர்க்க, வருவாய்க்குப் பதிலாகக் குடும்பங்களின் ‘செலவு’ சார்ந்த தரவுகளைப் பெறும்பட்சத்தில், அது நம்பகத்தன்மை கொண்டதாக இருக்கும் என்று வாதிடப்படுகிறது. எனினும், பெருவாரியான குடும்பங்களில் செலவைத் தெரிந்தோ தெரியாமலோ மிகைப்படுத்தியே கூறுகின்றனர்.
அவர்களின் வருவாய்க்கு மேல் செலவு இருப்பதைச் சுட்டிக்காட்டும்போது, கடன் வாங்கிச் சரிசெய்வதாகவும் கூறுகின்றனர். வருவாய், செலவு, சொத்து, கடனைப் பொறுத்தவரை குறைத்துச் சொல்லுதலும் மிகைப்படுத்துதலும் இருப்பின், அது மக்களின் உண்மையான வாழ்க்கைத் தரத்தைப் பிரதிபலிக்காது. இதனால்தான், நாட்டில் எவ்வளவு மக்கள் வறுமைக்கோட்டுக்குக் கீழ் உள்ளனர் என்பதைத் தீர்மானிப்பதில் சிக்கல் நீடிக்கிறது.
தீர்வு என்ன? - எனவே தனிமனிதர், குடும்பங்களிலிருந்து உண்மையான, நம்பகத்தன்மையுள்ள தரவுகளைப் பெறுவதற்குப் பலவகைப்பட்ட உத்திகளைக் கையாள வேண்டியுள்ளது. ஒரு பகுதியில் மாதிரிக் கணக்கெடுப்பு தொடங்குவதற்கு முன், அப்பகுதியின் சமூக அமைப்பு, தொழில்கள், பொருளாதார நடவடிக்கைகள் குறித்து முன்னறிதல் பெரிதும் பயனளிக்கக்கூடியது. இந்தத் தகவல்களை இரண்டாம் நிலைத்தரவுகள், அனுபவமிக்க நபர்கள் அல்லது உள்ளூர்க் குழுக்களின் மூலம் பெறலாம்.
மேலும், கணக்கெடுப்பாளர்கள் களப்பணிக்குச் செல்லும்போது அவர்களுக்குப் போதிய வசதிகளையும், பாதுகாப்பையும் வழங்க வேண்டும்; முடிந்த அளவு பெண்கள் சம்பந்தமான கேள்விகளுக்குப் பெண் கணக்கெடுப்பாளர்களையே பயன்படுத்த வேண்டும்.
புள்ளியியல் அறிவியலில் ஏற்படும் மாற்றங்கள், கொள்கை முடிவுகளில் ஆராய்ச்சிகளின் முக்கியத்துவம், ஆராய்ச்சி பற்றிய அடிப்படைப் புரிதல், தரவுகளைச் சேகரிப்பதில் புதிய அணுகுமுறைகள், சமூக அக்கறை போன்ற முக்கியத் தலைப்புகளில் தொடர்ந்து பயிலரங்குகளையும் கருத்தரங்குகளையும் நடத்திக் கணக்கெடுப்பாளர்களுக்கு ஊக்கம் அளிக்க வேண்டும்.
களப்பணியில் ஈடுபட்டிருக்கும் பணியாளர்களிடம் நேரடித் தொடர்பில் இருக்க வேண்டும்; கணக்கெடுப்பு நடக்கும் இடங்களுக்கு நேரடியாகச் சென்று, அவ்வப்போது அவர்களுடன் கலந்தாலோசனை நடத்த வேண்டும்; திரட்டப்படும் தரவுகளை உடனுக்குடன் தணிக்கை செய்து, தவறுகள் இருப்பின் அவற்றை உடனடியாகக் களைய வேண்டும். பதில் அளிப்பவர்களின் சம்மதத்துடன் அவர்களின் கைபேசி எண்களைப் பெற்றுத் தரவுகளை அவ்வப்போது சரிபார்ப்பதும் அவசியம்.
நம்பகத்தன்மை அவசியம்: உண்மையான தகவல்களைத் தருவதில் ஊக்கமின்மையாலும், அவ்வாறு தராதபட்சத்தில் தனக்கு எந்தப் பாதிப்பும் இல்லை என்பதாலும், மற்றவர்கள் சரியான தகவல்களைத் தரும்போது, தான் தவறான தகவல்களைத் தருவதால் பெரும் தவறு நேர்ந்துவிடாது என்று நினைப்பதாலும் மக்கள் சரியான தகவல்களை அளிக்க விரும்புவதில்லை.
இவற்றை நிவர்த்திசெய்ய நேர்காணலைத் தொடங்குவதற்கு முன்னர் பதிலளிப்பவரிடம் சுய அறிமுகம், நேர்காணலின் நோக்கம், அதன் பயன்கள் போன்றவற்றைச் சரியான முறையில் எடுத்துக்கூறுவது அவசியம். அவர்களின் சந்தேகங்களைக் களைவதன் மூலம் ஒரு திடமான நம்பிக்கையை ஏற்படுத்திச் சரியான தரவுகளைப் பெற முடியும்.
பொதுவாக, உண்மையான தகவல்களை வழங்குவது ஒவ்வொருவரின் பொறுப்பாக இருக்க வேண்டும். பதிலளிப்பவர் சம்பந்தமில்லாத தகவல்களைப் பகிர வேண்டிய அவசியமில்லை என்பதையும் உறுதியாகத் தெரிவிக்க வேண்டும். தரவுகள் ரகசியமாகப் பாதுகாக்கப்படும் என்பதையும், அது மக்களின் நலனுக்காக மட்டுமே பயன்படுத்தப்படும் என்பதையும் அவர்களிடம் தெளிவாக விளக்க வேண்டும்.
இதனால், நேர்காணலுக்குப் பிந்தைய சந்தேகங்களும், பதிலளிக்க முற்படாத மனநிலையும் குறைய வாய்ப்புள்ளது. கேள்விகளைத் தொடங்குவதற்கு முன், பதில் அளிப்பவரிடமிருந்து வெளிப்படையான சம்மதத்தைப் பெறுவது அவசியம். குறிப்பாக, குடும்ப வருவாய், செலவுகள் தொடர்பான கேள்விகளுக்கும், அதன் துணைக் கேள்விகளுக்கும் இது முக்கியமானது. மேலும், குடும்பத்தின் ஒரே உறுப்பினரிடம் கேட்பது என்றில்லாமல், பிற உறுப்பினர்களின் கருத்துகளைக் கேட்பது தரவின் நம்பகத்தன்மையை அதிகரிக்கும்.
முதன்மைக் கணக்கீட்டின் மூலம் பெறப்படும் புள்ளிவிவரங்கள் ஆராய்ச்சிக்கும் அரசின் கொள்கை முடிவுகளுக்கும் பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன. வரும் ஆண்டு நடக்க இருக்கும் மக்கள்தொகைக் கணக்கெடுப்பும் முதன்மைக் கணக்கீட்டின் மூலமே பெறப்படவிருக்கிறது. ஆகவே, தகவல் சேகரிப்பில் சரியான நடைமுறைகளைக் கடைப்பிடிப்பதன் மூலமே உண்மையான, துல்லியமான தரவுகளைப் பெற முடியும். ஜனநாயகம் செழிக்க அது நிச்சயம் தேவை!
- தொடர்புக்கு: venkat@mids.ac.in