நாங்கள் மொழி அருங்காட்சியகத்திலிருந்து திரும்பிக் கொண்டிருந்தோம். ஆனால், இயந்திரக் கற்றல் குறித்து, வரும் வழியில் உரையாடல் தொடர்ந்தது. ஓட்டுநர் தேவைப்படாத ஒரு வண்டியில் உட்கார்ந்துகொண்டு அரட்டையடிப்பதைத் தவிர வேறென்ன வேலை? “ஆனால் கவின், நாம் பேசிய இந்தக் கற்றல் முறைகள் எல்லாம் பல பத்தாண்டுகளாகப் பெரும்பாலும் ஆராய்ச்சிக்கூடங்களில் மட்டுமே இருந்தன. அது பொது நடைமுறைக்கு வருவதற்குக் காலம் பிடித்தது.
அதற்கான பொற்காலம் வருவதற்காகக் காத்திருக்க வேண்டியதாயிற்று. 2000களிலும் 2010களிலும் ஒரு மாயாஜாலம் நடந்தது. அதன் பிறகு எல்லாம் மாறியது. மூன்று முக்கிய சக்திகள் ஒரே நேரத்தில் ஒன்றுகூடின. அது செயற்கை நுண்ணறிவுத் துறையில் ஒரு புரட்சியைக் கொண்டுவந்தது.”
“விரிவாகச் சொல்லுங்க வாத்தியாரே!” “முதலாவது – தரவுகள். தரவுகள், பெரும் தரவுகள். தரவுகளின் வெள்ளம் – இது இணையம் பரவலான பிறகு சாத்தியமானது. லட்சக்கணக்கான ஒளிப்படங்கள், வீடியோக்கள், உரைகள் இணையதளத்தில் கிடைக்கத் தொடங்கின. நாம் பூனை-நாய் உதாரணத்தில் சொன்னால், இப்போது 10,000 படங்கள் அல்ல, கோடிக்கணக்கான பூனை, நாய் படங்களும் ‘மியாவ்’, ‘லொள் லொள்’ ஒலிகளும் கிடைக்கத் தொடங்கின!” புன்னகைத்தேன்.
“இரண்டாவது - கணிப்பொறி சக்தி (Computing Power). வீடியோ கேம்ஸுக்காக உருவாக்கப்பட்ட கிராபிக்ஸ் கார்டுகள் (GPUs), திடீரென செயற்கை நுண்ணறிவுக் கணக்கீடுகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது கண்டறியப்பட்டது. ஜிபியூக்களால் ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கான கணக்கீடுகளைச் செய்ய முடிந்தது. தரவுகளிலிருந்து முடிவெடுக்க இந்த ஜிபியூக்கள் பெரிதும் உதவின.”
“மூன்றாவது என்ன?” “மூன்றாவது - அல்காரிதங்களின் திருப்புமுனை. ஆழ்கற்றல் (Deep Learning) என்கிற புதிய முறை உருவானது. அதன் மூலமாகப் பல அடுக்குகளைக் கொண்ட நியூரல் நெட்வொர்க்குகளைப் பயன்படுத்தி, மிகவும் சிக்கலான வடிவங்களை இயந்திரங்கள் – கணிப்பொறிகள் - கற்றுக்கொள்ள முடிந்தது.”
“ம்ம்ம்... மூவர் கூட்டணி உருவானது!” “வசந்த காலம் வரத் தொடங்கும்போது சில பூக்கள் முதலில் பூக்கும். 1997இல் முதல் பெரிய ஆச்சரியம். ஐபிஎம் நிறுவனத்தின் Deep Blue என்கிற கணினி, ஒரு செஸ் போட்டியில், உலக சதுரங்க சாம்பியன் கேரி காஸ்பரோவை அது வென்றது. ஆனால், டீப் புளூ ஆழ்கற்றல் முறைகளைக்கூட அப்போது பயன்படுத்தவில்லை. வழக்கமான விதிமுறைகள் அடிப்படையிலான புரொகிராமிங்தான் அதில் இருந்தது.
ஆனால், மிகப்பெரிய அளவுக்குக் கணிப்புத் திறனைக் கொண்ட கணினியாக அது இருந்த காரணத்தால், எதிரியின் நகர்வுகளுக்கு மாற்று நகர்வுகளை முன்னறிய, மின்னல் வேகத்தில் கோடிக்கணக்கான கணிப்புகளைச் செய்து முடிவெடுத்து, சரிபார்த்துத் தீர்மானிக்கும் திறனை அது கொண்டிருந்தது. தரவுகள், கணினிகளின் செயல்திறன் ஆகியவை செயற்கை நுண்ணறிவு யுகத்துக்கான அடிப்படைகளாக ஆனதை வெளிப்படுத்தும் ஓர் அறிவிப்பாகவே அந்தப் போட்டி இருந்தது.
அங்கே தோல்வி அடைந்தது, கேரி காஸ்பரோவ் அல்ல. மாறாக, வெற்றி அடைந்தது செய்யறிவு விஞ்ஞானிகள். அந்த டீப் புளூவைப் பார்த்து, இது என்ன, ஒரு பெரிய சைஸ் அலாரம் கடிகாரம்தானே என்று ஆரம்பத்தில் கேரி கிண்டலடித்தாராம்.” “அப்படியென்றால், அது பெரிய செய்தியாகப் பேசப்பட்டிருக்குமே?” “ஆமாம்! அப்படித்தான் நடந்தது.
இப்படியாக சாம்பியன்களுக்குச் சவால்விடும் அத்தியாயம் தொடங்கியது. 2011இல் ஐபிஎம் வாட்சன் என்கிற ‘சூப்பர் கம்ப்யூட்டர்’, ‘Jeopardy’ என்கிற அமெரிக்கத் தொலைக்காட்சி விநாடி வினா நிகழ்ச்சியில் பங்கேற்றது. மனிதர்களின் இயல்பான மொழியில் எப்படி வளைத்து வளைத்துக் கேள்வி கேட்டாலும் பதில் சொல்லக்கூடியதாக அது இருந்தது.
குவிஸ் உலகில் கொடிகட்டிப் பறந்த பிராட் பட்டர், கென் ஜென்னிங்க்ஸ் என்கிற இரண்டு சாம்பியன்களைத் தோற்கடித்து, ஒரு மில்லியன் டாலர் பரிசையும் அள்ளிச்சென்றது. ஒன்றும் புரியாமல் எல்லாரும் திகைத்து நின்றார்கள். 2012இல் jgbAlexNet என்கிற ஒரு புரட்சி நடந்தது. இது ஆழ்கற்றலைப் பயன்படுத்திப் படங்களை அடையாளம் காண்பதில் மனிதர்களையே விஞ்சியது.
இதுதான் நிஜமான ஆழ்கற்றல் புரட்சியின் தொடக்கம்!” “அடி மேல் அடி!” “2016இல் அதைவிட மிகப்பெரிய அதிர்ச்சி காத்திருந்தது கவின்! உங்களுக்கு கோ (Go) விளையாட்டு தெரியுமா? “சீனாவில் பிரபலம் என்று கேள்விப்பட்டிருக்கிறேன்.” “செஸ்ஸைவிடக் கோடி மடங்கு சிக்கலான விளையாட்டு. Google DeepMind நிறுவனத்தின் ஆல்பாகோ (AlphaGo) என்கிற மென்பொருளுக்கு, ‘கோ’ விளையாட ஆழ்கற்றல் பயிற்சி அளிக்கப்பட்டது.
பிறகு அது களமிறங்கி, உலக சாம்பியன் லீட் செடோலை வென்றது!” “இதில் என்ன விசேஷம், செய்மெய்?” “ஒவ்வொரு வெற்றியும் செயற்கை நுண்ணறிவை மேம்படுத்திக்கொண்டே சென்றது. தொடக்கத்தில் எளிய, நிரலாக்கம் செய்யப்பட்ட முறைகளே இருந்தன. பிறகு, புதிய ஆழ்கற்றல் மூலமாக, சிக்கலான வடிவங்களையும் உத்திகளையும் கற்றுக்கொள்ளும் திறன்களைக் கணினிகள் கற்றுக்கொண்டன.
ஆல்பாகோ விஷயத்தில், அந்த மென்பொருள் தன்னுடன் தானே விளையாடி விளையாடி, கோ விளையாட்டின் நுட்பங்களைக் கற்றுக்கொண்டது!” “அடடா, அது எப்படிச் சாத்தியம்?” “அதுதான் இந்த மூன்று சக்திகளின் கூட்டு வலிமை. ஏராளமான தரவுகள், அபரிமிதமான கணிப்பொறி சக்தி, ஆழ்கற்றல் அல்காரிதங்கள். இவை மூன்றும் சேர்ந்து செயற்கை நுண்ணறிவுக்கு ஒரு புதிய உலகைத் திறந்தன.”
“செஸ், குவிஸ், கோ – எதுவுமே விளையாட்டுச் சமாச்சாரங்களாகத் தெரியவில்லையே, செய்மெய்!” “ஆனால், இப்படிச் செயற்கை நுண்ணறிவு அதிநுட்பமும் மதிநுட்பமும் இணைந்து விளையாட்டுகளில் மானுடப் பிறவிகளை – அவர்கள் எவ்வளவு பெரிய சாம்பியன்களாக இருந்தாலும் சரி - தோற்கடிக்கின்றன என்பது பரபரப்பான செய்தியாக மாறியதால், ஏஐ பற்றி எல்லோரும் பேசத் தொடங்கினார்கள். அதேவேளை, அதைக் கண்டு அச்சமும் அடைந்தார்கள்.
இது கேரி காஸ்பரோவையே தோற்கடிக்கிறது என்றால்..” “ஆக, ஒரு புதிய சாம்பியன் உருவாகிறார்!” “ஆமாம்! இந்த வெற்றிகள் எல்லாம் அதேவேளை, பின்னால் வரக்கூடிய ஒரு பெரிய புரட்சிக்கான ஒத்திகைகள் போலத்தான், கவின். அப்போது அடித்தளத்தில் உண்மையில் நடந்துகொண்டிருந்த மிகப்பெரிய மாற்றம் என்பது இயந்திரக் கற்றல் முறையின் முக்கியப் புது வளர்ச்சியான ஆழ்கற்றல் தொடர்பானதுதான்.” “அப்படியென்றால், அதைப் பற்றிச் சற்று ஆழமாகக் கற்றுக்கொள்வது முக்கியம்தான், செய்மெய்!”
- தொடர்புக்கு: senthil.nathan@ailaysa.com