தமிழில் 60 ஆண்டுகளாகப் படைப்புலகில் இருப்போர், இரண்டு சாகித்திய விருதுகள் பெற்றோர், படைப்புகளுக்காக பத்மஸ்ரீ விருது பெற்றோர், சாகித்ய அகாதமி ஒருங்கிணைப்பாளரான தமிழாசிரியர், புதிய சிந்தனைகளைப் படைப்பில் தரும் தமிழாசிரியர், இதழ்களின் ஆசிரியர் குழுவில் உள்ள படைப்பாளிகள், தொண்ணூறு வயதிலும் தொடர்ந்து எழுதுவோர், மரபுக் கவிதையோடு, புதுக்கவிதையும் எழுதுவோர் என்ற வகைகளில் தனித்தனியாகப் பார்த்தால் ஒவ்வொரு வகையிலும் வெகுசிலரே இருப்பார்கள். ஆனால் இந்த வகைகள் அனைத்திலும் இடம்பெறக்கூடிய பெருமைக்குரியவர் கவிஞர் சிற்பி ஒருவரே எனலாம்.
இலக்கிய அமைப்புகளோடு நட்பு பாராட்டி, அமைப்புக் கடந்த படைப்பாளிகளையும் ஊக்குவித்து வருவதே சிற்பியின் சிறப்பு. 1960கள் வரை பழந்தமிழைப் பற்றியே எழுதி வந்தது தமிழ்க் கவிதை உலகம். இந்நிலையில், பாரதி சொல்வது போல, ‘எளிய பதம், எளிய சொற்களில்’ உலகப் பார்வையோடு உள்ளூர் நடப்புகளையும் எழுதிய ‘வானம்பாடிகள்’ எனும் கவிஞர் குழு தமிழுக்குப் புதிய ரத்தம் பாய்ச்சியது. அதில் முதன்மையானவர் சிற்பி. ‘வானம்பாடி’ - சிற்றிதழ்களைப் படித்த இளைஞர்கள் புதிதாய்ப் பிறந்தனர்.
“கற்பனைக்குள்ளும் காமத்தினுள்ளும், பிற்போக்குத் தனத்தினுள்ளும் புதைந்து புழுக்களாக நெளிகின்ற நிலையில், வானம்பாடிகள் தமது சமூக நோக்கில் பாரதி, பாரதிதாசனின் தற்கால வாரிசுகள்” என்று ‘வானம்பாடிகள்’ குழுவின் தொகுப்பாக வந்த ‘வெளிச்சங்கள்’ (1973) நூலின் முன்னுரையில் கவிஞர் ஞானி சரியாக மதிப்பிட்டு எழுதினார். அன்னம் விடு தூது, வள்ளுவம், கவிக்கோ, கணையாழி, சக்தி, இதழ்களின் ஆசிரியர் குழுக்களில் இருந்து, புதிய படைப்பாளிகளை எழுத வைத்தார் சிற்பி. ஞானி, புவியரசு, தமிழ்நாடன், ஈரோடு தமிழன்பன், மீரா, தமிழவன், இன்குலாப், பாலா போன்றவர்களோடும், ‘வானம்பாடிகள்’ இயக்கக் கவிஞர்களோடும், புதியவர் பலரோடும் இணைந்து செயல்பட்டார்.
“நான் மரபின் பிள்ளை, புதுமையின் தோழன், என்களம் – என்மண், என் பாத்திரங்கள் - என் மனிதர்கள், என் பின்புலம் – தமிழ்இலக்கியம், மற்றவையும் மற்றவர்களும் எனக்கு விருந்தினர் மட்டுமே!” (1996 - இறகு) என்று பிரகடனமாகச் சொன்ன சிற்பி, இன்று வரை அந்தத் தடத்திலேயே பயணம் செய்கிறார். சிற்பி்யின் ‘சர்ப்பயாகம்’ நூலில் உள்ள ‘சிகரங்கள் பொடியாகும்’ கவிதை, சாதிக் கொடுமைக்கு எதிராகக் கிளர்ந்தெழும் ஒடுக்கப்பட்ட மக்களின் போர்முரசு. இது ஒடுக்கப்பட்ட மக்களுக்கான புதுக்கவிதையின் முதல் போர்க்குரலாய் ஒலித்த வானம்பாடிகளின் சிகரக் கவிதைகளில் ஒன்று.
என்னதான் பண்ணையார் குடும்பத்தில் பிறந்து, வசதியில் புரண்டு வளர்ந்திருந்தாலும், மேல்தட்டு வாழ்வியலில் திளைத்திருந்தாலும், “என்குரல் மனிதக் கட்டுகளை உடைத்து, குரலற்றவனின் குரலாய் ஒலிக்க வேண்டும் என்று நினைத்தேன்” என்கிறார் சிற்பி. தமிழ் இலக்கிய வரலாற்றில்சிற்பியின் ‘மெளன மயக்கங்கள்’ (1982) புதுக்கவிதை வடிவில் வெளிவந்த முதல் கதைக் கவிதை (Fiction Poetry) என்ற சிறப்பைப் பெறுகிறது. சிற்பியின்முதல் கவிதைத் தொகுப்பு, ‘நிலவுப்பூ’ 1963-இல் வெளிவந்தது. “ஏறத்தாழ ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக, ஒரு சிறிதும் இடைவெளி விடாமல் ‘கவிதை’என்கிற பிசாசோடு கூடிக் குலாவி வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்பதேமிகப்பெரிய சாதனைதான்” என்கிறார் இலக்கிய விமர்சகர் க.பஞ்சாங்கம்.
கவிதை, கவிதை நாடகம், சிறார் இலக்கியம், கட்டுரைகள், வாழ்க்கை வரலாற்று நூல்கள், மொழிபெயர்ப்புகள், நல்ல நூல்கள் பதிப்பு என இவர் இயங்கிய தளங்கள் தமிழுக்கு வளம் சேர்த்தன. 90 வயதுக்குள் இவர் தந்த படைப்புகள், ஏறத்தாழ 90 என்பது வியப்பானது மட்டுமல்ல, இளைய படைப்பாளிகளுக்கு எடுத்துக்காட்டும் ஆனது. கவிதைத் தொகுப்புகளை ஏராளமாக வெளியிட்டோர் தமிழில் பலருண்டு.
ஆனால், “யாருக்காக எழுதுகிறோம்? அதை எந்த வடிவில் எழுதுவது?” எனும் தீர்க்கமான பார்வையோடு சிற்பி எழுதுவதை, இளைய கவிஞர்கள்கவனித்துக் கற்றுக் கொள்ள வேண்டும்! “தமிழால் பாரதி தகுதி பெற்றதும், தமிழ் பாரதியால் தகுதி பெற்றதும்” என்ற பாரதி பற்றிய பாரதிதாசனின் வரிகள் அப்படியே சிற்பிக்கும் பொருந்தும்.
29-7-2025 கவிஞர் சிற்பியின் 90வது பிறந்த நாள்