சிறப்புக் கட்டுரைகள்

அரங்கநாதர் அடிகளாரான கதை

Guest Author

‘பொய்யில் புலவன் பொருளுரை தேராய்’ என்றார் சீத்தலைச்சாத்தனார். ‘திருவள்ளுவரின் கருத்தை வாழ்க்கையில் பின்பற்றி இருந்தால் இந்தத் துன்பத்தை நீ அடைந்திருக்க மாட்டாய்’ என்று அமைகிறது அவர் கருத்து. இதன் அடிப்படையில் திருக்குறள் பணி செய்வதைத் தம் வாழ்வியல் கடமையாக வருவித்துக் கொண்டார் குன்றக்குடி அடிகளார். அடிகளாரின் இந்த வேட்கை அவர் அரங்கநாதராகத் திகழ்ந்த பிள்ளைப் பருவத்திலேயே அவருள் தளிர்க்கத் தொடங்கியது.

மாட மாளிகைகளற்ற ‘நடுவட்டு’ எனும் சிற்றூரில் அரங்கநாதர் பிறக்கிறார். பள்ளிப் பருவத்திலேயே வாசிப்பில் நாட்டம் செலுத்துகிறார். அவருக்கு நாளும் தஞ்சம் அளித்த ஜோதிகிளப் நூலகம் திடீரென ஒருநாள் அனுமதிக்க மறுக்கிறது. காரணம், வருணாசிரமம் என்று அறிந்தபோது அரங்கநாதர் மனம் தீயினாற் சுட்ட புண்ணாகிறது. இதனால், நண்பர்களோடு இணைந்து புது நூலகத்தை உருவாக்குகிறார். ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகை இதழுக்குச் சந்தா கட்டுகின்றனர். இருபது இதழ்கள் வாங்கப்படுகின்றன. வாசிப்புப் பழக்கம் வேகம் பெறுகிறது.

தமிழறிஞர் ரா.பி.சேதுப்பிள்ளையின் தொடர்பால் திருக்குறள் மீது மனம் நாட்டம் கொள்கிறது. அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திற்கு அருகிலுள்ள சிற்றூர் திருவேட்களம். நான்காம் வகுப்புப் படிக்கும் பருவத்தில் நாளும் வாடிக்கையாளர் வீடுகளுக்குச் சென்று பால் ஊற்றுவது அரங்கநாதரின் கடமை. இதனால், தமிழறிஞர் ரா.பி.சேதுப்பிள்ளையைச் சந்திக்கும் சூழல் கிடைக்கிறது. சேதுப்பிள்ளை, குறள் ஒன்றை மனப்பாடம் செய்து சொன்னால் காலணா அளிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார். அரங்கநாதரும் குறள் மனனம் செய்து சொல்கிறார்,காலணா பெறுகிறார். திருக்குறள் வாழ்க்கையை மேம்படுத்தும் என்ற புரிதல் அரங்கநாதருக்குள் உருவாகிறது. அது, அவருக்குள் இருந்த போராட்ட மனப்பான்மையை வலிமைப்படுத்துகிறது.

பிரச்சினைகள் நேர்ந்த போதெல்லாம் அன்பெனும் ஆயுதத்தை அரங்கநாதர் நீட்டுகிறார். அது, ஆன்மீக அன்பாக மலர்கிறது. காலவெள்ளமோ அரங்கநாதரைத் தருமபுர ஆதீனத்தில் கந்தசாமித் தம்பிரானாக, குன்றக்குடி ஆதீனத்தில் ல தெய்வசிகாமணி அருணாச்சல தேசிக பரமாச்சாரியராக, தமிழ்ச் சமூகத்தில் குன்றக்குடி அடிகளாராக மாற்றுகிறது.

‘கோயிலைத் தழுவிய குடிகளும் குடிகளைத் தழுவிய கோயிலும்’ எனத் தம் பணிக்கான மூலச் சூத்திரத்தை உருவாக்கிக் கொள்கிறார். அறிஞர் விபுலானந்த அடிகள் வெள்ளிக்கிழமை தோறும் இரவு நேரத்தில் ஆதிதிராவிடர் பகுதிக்குச் சென்று குழந்தைகளுக்குப் பாடம் சொல்லிக் கொடுத்த போது அரிக்கேன் விளக்குப் பிடித்த அனுபவம்,சாதியத்தின் மீது வெறுப்புணர்வை உருவாக்குகிறது. ஒருமுறை மகேஸ்வரபூஜை முடிகிறது. உணவுக்கான பந்தி தயாராகி விட்டது. அடிகளார் அமரப் போகிறார். அங்கு பூஜைக்குத் தம்முடன் வந்தவர்களைக் காணவில்லை. அருகிருந்தவரிடம் கேட்கிறார். ‘அவர்கள் சைவர் இல்லை, எனவே தனிப் பந்தியில் சாப்பிடுகிறார்கள்’ என்று விடை வருகிறது. அடிகளார் உண்பதைத் தவிர்த்துத் தம் எதிர்ப்புணர்வை வெளிப்படுத்துகிறார். ஆதிதிராவிடர் குழந்தைகளுக்கான விடுதிகளில் பிற சமூகத்தினரின் குழந்தைகளும் குறைந்த அளவிலாவது சேர்ந்து பயில வேண்டும். அதனால், சாதி உணர்வு நிலையில் மாற்றம் வரும்என்று கருதுகிறார். அரசாங்கத்திற்குப் பரிந்துரைக்கிறார். அரசும் நடைமுறைப்படுத்துகிறது. இத்தகு புரிதல்தான் ‘ஆண்டவன் உண்டு’ என்ற அடிகளாரை ‘ஆண்டவன் இல்லை’ என்ற பெரியாரோடு கொண்டு சேர்க்கிறது.

அடிகளார், பெரியாரைச் சந்திக்க விரும்புகிறார். ஈரோட்டில் ஒரு வீட்டின் மாடியில் தங்கி இருக்கிறார். தன்னைவிடப் பல வயது மூத்தவர் என்பதால் தானே சென்று நேரில் சந்திக்க விருப்பம் தெரிவிக்கிறார் அடிகளார். பெரியாரோ, மகாசந்நிதானம் அவர்களை நாம்தான் சென்று சந்திக்க வேண்டும் என்று சொல்லி அடிகளார் தங்கியுள்ள இல்லத்திற்கு வருகிறார். அடிகளார் உள்ள அறைக்குள் நுழைகிறார். அங்கு இருவர் அமரும் இருக்கையின் ஒரு ஓரத்தில் அடிகளார் அமர்ந்துள்ளார். எழுந்து நின்று அடிகளார் வரவேற்றதைப் பெரியார் தடுக்கிறார். அடிகளார் தாம் அமருகின்ற இருக்கையில் தம்முடன் அமருமாறு பெரியாரிடம் சொல்கிறார். ‘தங்கள் பக்கத்தில் நான் அமரக்கூடாது’ என்று சொல்லித் தனியே அமர்கிறார். இருவரும் பேசுகின்றனர். இருவரைச் சார்ந்த அன்பரிகளிடம் நிலவிய கசப்புணர்வு மறைகிறது. அமர்ந்துபேசினால் பிரச்சினைகளைத் தீர்க்க இயலும் என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கை உடையவர் அடிகளார்.

இந்தி எதிர்ப்பு ஊர்வலம் தமிழகம் எங்கும் நிகழ்கிறது. குன்றக்குடியில் விரும்பத்தகாத எதுவும் நிகழ்ந்துவிடக் கூடாது என்பதில் அடிகளார் கவனம் செலுத்துகிறார். பேராசிரியர் ந.வானமாமலையை அழைத்து மொழி தொடர்பான கலந்துரையாடலுக்கு ஏற்பாடு செய்கிறார். ஒருகட்டத்தில் குன்றக்குடியில் தாமே முன்னின்று ஊர்வலத்தை நடத்துகிறார். “தமிழ் வாழ்க” என்ற முழக்கம் எழுகிறது. “ஒழிக” என்ற முழக்கத்தைத் தவிர்க்கிறார். எனினும், தமிழக அரசு அடிகளார் மீது நடவடிக்கை எடுக்கிறது. இந்தச் சூழலையும் முதலமைச்சருடன் கலந்துபேசித் தீர்க்க விரும்புகிறார்.

‘தமிழில் அர்ச்சனை’, ‘திருமுறைவழிஅர்ச்சனை’ என்பவற்றை நடைமுறைப்படுத்த மூலை முடுக்கெல்லாம் திருவிழாக் கூட்டங்களில் பிரச்சாரம் செய்கிறார். எதிர்ப்பு உருவாகிறது. முதலமைச்சர் வரை தந்திகள் பறக்கின்றன. இந்தச் சூழலையும் தக்க வகையில் பேசிச் சரி செய்கிறார். அன்றைய முதலமைச்சர் பக்தவச்சலமே மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் திருமுறைத் தமிழ் அர்ச்சனையைத் தொடங்கி வைக்கிறார். நாகர்கோவில் பகுதியில் மதக்கலவரம் உருவாகிறது. இரு தரப்பினரிடமும் பேசுகிறார். ஒரு கட்டத்தில் உண்ணாநோன்பு மேற்கொள்கிறார். தெருத்தெருவாகப் பல்வேறு சமயத்தவர் இணைந்து செல்லும் ஊர்வலங்களை ஏற்பாடு செய்கிறார். இடிபட்ட பிள்ளையார் கோவிலைக் கட்ட கிறித்தவர்களும், சேதமடைந்த தேவாலயத்தைச் சீர்செய்ய இந்துக்களும் உதவுகின்றனர். இது போன்று பிரச்சினைகளைப் பேசித் தீர்க்க வேண்டுமெனில் சமூகத்தில் கல்வி அறிவுபெற்றோர் விழுக்காடு கூடுதலாக வேண்டும் என்ற புரிதல் அடிகளாருக்குள் தொடக்க காலம் முதற்கொண்டே இருந்து வந்தது. முறையான தரமான கல்வி அனைவருக்கும் இலவசமாக வழங்கப்பட வேண்டும், பாடநூல்களுக்கு அப்பாற்பட்ட வாசிப்புப் பழக்கத்தை உருவாக்க நூலகங்கள் வளமாக வேண்டும் என்ற கருத்தை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.

பள்ளிகளைத் திறப்பதில், பள்ளிகளை மேம்படுத்துவதில் கூடுதல் கவனம் செலுத்துகிறார். அறிவியல் மனப்பான்மையை வளர்க்கும் கல்விக்குத் தனி முக்கியத்துவம் அளிக்கிறார். ‘அறிக அறிவியல்’ என இதழ் ஒன்றைத் தொடங்குகிறார். தமிழில் அறிவியல் ஆய்வுக் கட்டுரைகள் வாசிப்பதற்கு ஏற்ற ஆய்வு அரங்குகளை உருவாக்குகிறார். மண்ணின் வளமறிந்து பயிர் செய்வதற்காக மண் பரிசோதனை மேற்கொள்ளுதல், விஞ்ஞானிகளுடன் தொழிற்சாலை களைஇணைத்தல் எனப் பல்வேறு நிலைகளில் அறிவியல் மனப்பான்மையைப் பொதுமக்களிடம் வளர்க்கிறார்.

இதுபோன்றே, அருள் நெறித் திருக்கூட்டம், தெய்வீகப்பேரவை, திருப்பத்தூர்த் தமிழ்ச்சங்கம், திருக்குறள் பேரவை, திருவருட்பேரவை எனப் பல்வேறு அமைப்புகளை உருவாக்கித் தக்க சான்றோர்களை ஒருங்கிணைத்துத் தமிழகத்தில் ஒருபன்முகப்பட்ட விழிப்புணர்வை உருவாக்குகிறார். இராஜாஜி, காமராசர், அண்ணா, கலைஞர், எம்ஜிஆர்,நேரு, இந்திரா காந்தி, வினோபா பாவே, விஞ்ஞானிகள் பலர் எனச் சான்றோர் பெருமக்களின் நல்லாதரவைப் பெறுகிறார். பயணம் மேற்கொள்ளுதல் அறிவு வளர்ச்சிக்கு வழி வகுக்கும் என்ற புரிதல்கிடைக்கிறது. கடல் கடந்து பல அயல் நாடுகளுக்குப் பயணிக்கிறார். இத்தகு கூட்டுழைப்பின் விளைவால், இந்தியாவில் சிறந்த கிராமமாகக் குன்றக்குடியை அன்றைய அரசு அடையாளப்படுத்துகிறது. சில ஆயிரம்பேர் மட்டுமே வாழும் குன்றக்குடியை இந்தியாவே திரும்பிப் பார்க்கிறது.

இதற்கு, ஆன்மிகத்துடன் கல்வி வளர்ச்சியிலும், அதையொட்டி அறிவியல் மனப்பான்மையை உருவாக்குதலிலும் அடிகளார் காட்டிய திட்டமிட்ட செயலாக்கம்தான் அடிப்படை. அடிகளாரின் நூற்றாண்டைக் கடந்து செல்லும் இன்றைய தமிழ்ச் சமூகம் அவரிடமிருந்து கற்றுக்கொள்ள ஏராளமாக உள்ளன. அத்தகுக் கற்றலே அவருக்குச் சமூகம் செலுத்தும் புகழ் வணக்கமாக அமையும்.

இரா.அறவேந்தன்
பேராசிரியர், சிறப்பு நிலைத் தமிழ்த்துறைத் தலைவர், JNU
தொடர்புக்கு: aravendan68@gmail.com

SCROLL FOR NEXT