ஒரு விமானப்பயணத்தின் போது அருகில் இருந்த சீக்கியர் அழகாகத் தமிழில் பேசினார். அதோடு தான் பிறந்து வளர்ந்த ஊர் சென்னை என்று பெருமையாகச் சொன்னார். கேட்கவே மகிழ்ச்சியாக இருந்தது.
1960-களில் அவர்களின் குடும்பம் வணிகத்திற்காக மதராஸிற்குக் குடியேறியிருக்கிறது. அவர் சென்னையில் பிறந்திருக்கிறார். இங்கேயே கல்லூரி வரை படித்திருக்கிறார். வேலைக்காக டெல்லி சென்றவர் அங்கிருந்து அமெரிக்கா சென்றுவிட்டார். இப்போதும் அவரது சகோதரிகள் சென்னையில் வசிக்கிறார்கள் என்றார்.
சென்னையின் சிறப்பு பல்வேறு மாநிலங்களை, மதங்களை, மொழிகளைச் சேர்ந்த மக்கள் இணைந்து வாழும் நகரம் என்பதே. சென்னையில் வாழும் பஞ்சாபிகள் பற்றி யாரேனும் நாவல் எழுதியிருக்கிறார்களா எனத் தெரியவில்லை. ஆனால் பஞ்சாபி எழுத்தாளரான குல்ஜார் சிங் சந்து தமிழ்நாட்டினைப் பற்றி ஒரு நாவல் எழுதியிருக்கிறார். ‘துருவ நட்சத்திரங்கள்’ என்ற அந்தப் பஞ்சாபி நாவலை எழுத்தாளர் வாஸந்தி மொழியாக்கம் செய்திருக்கிறார். பஞ்சாபி மொழியில் தமிழ் வாழ்க்கை அற்புதமான நாவலாக எழுதப்பட்டிருப்பது ஆச்சரியமளிக்கிறது.
இந்த நாவலின் கதைக்களம் காந்திகிராமம். அது ருத்திரபேட்டையாக மாற்றப்பட்டிருக்கிறது நாவலின் நாயகி கிருஷ்ணா தமிழ்பெண். நாயகன் விக்டர் அமெரிக்கன். சென்னை, மதுரை, திண்டுக்கல், கோவை தேக்கடி, ஊட்டி போன்ற இடங்களில் கதை நடக்கிறது. தனது ரயில் பயணம் ஒன்றில் சந்தித்த வெள்ளைக்காரத் தம்பதிகள் சொன்ன நிகழ்வுகளை மையமாகக் கொண்டு இந்த நாவலை எழுதியதாகக் குல்ஜார் சிங் சந்து குறிப்பிடுகிறார். கதையின் நாயகி காந்திகிராமத்தைச் சேர்ந்தவள் என்றும் முன்னுரையில் குறிப்பிடுகிறார். சரஸ்வதி அம்மாவால் ஆரம்பிக்கபட்ட ருத்திரபேட்டை ஆசிரமம் ஆதரவற்ற குழந்தைகளுக்கான காப்பகத்தைக் கொண்டிருக்கிறது. பெற்றோரை இழந்த கிருஷ்ணா, பிரபா, ராஜூ என்ற மூவரும் அங்கே வளர்கிறார்கள். கிருஷ்ணாவின் பெற்றோர் வெள்ளத்தில் அடித்துப் போகப்பட்டவர்கள். பிரபா, கிராமத்தின் பாலம் அருகே கண்டெடுக்கபடுகிறாள். ராஜூவின் பெற்றோர் மூன்று மாதக் குழந்தையை ஆசிரம வாசலில் விட்டுப் போய்விடுகிறார்கள். ஆசிரமம் அவர்களை வளர்க்கிறது. கல்வி தருகிறது.
நாவலில் தமிழ்நாட்டிற்குக் காந்தி வருகை தருகிறார். அவரைக் காணுவதற்காக இளம்பெண்ணான சரஸ்வதி, மதராஸிற்கு வருகிறாள். காந்தியை நேரில் கண்டு பரவசமடைகிறாள். காந்தியின் பேச்சு அவளது இதயத்தைத் தொடுகிறது. தானும் சமூகசேவை செய்ய வேண்டும் என்ற எண்ணத்தை உருவாக்குகிறது. ஆசிரமம் ஒன்றைத் துவங்கி சமூகப்பிரச்சனைகளைப் புரிந்து கொள்வதிலும் அதற்கான தீர்வு காண்பதிலும் சரஸ்வதியின் வாழ்க்கை நீள்கிறது. அமெரிக்காவிலிருந்து விக்டர் என்ற என்ஜினீயர் இந்த ஆசிரமத்திற்கு வருகை தருகிறான். மனைவியை விவாகரத்து செய்துவிட்டு தனித்து வாழும் அவன், இந்தியப் பெண்ணை மறுமணம் செய்து கொள்ள ஆசைப்பட்டு வந்திருக்கிறான்.
ஆசிரமத்தில் இளம்பெண் கிருஷ்ணாவைச் சந்திக்கிறான். அவளது அழகில் மயங்கித் திருமணம் செய்து கொள்ள ஆசைப்படுகிறான். அவன் யாரெனத் தெரியாமல் எப்படித் திருமணம் செய்து வைப்பது, ஏன் அவன் இந்தியப் பெண்ணைத் திருமணம் செய்து கொள்ள ஆசைப்படுகிறான்? என்று கேள்வி கேட்கிறாள் ஆசிரம நிர்வாகி எலிசபெத்.
தன்னைப் புரிந்து கொண்ட நல்ல துணைவி தேவை. இந்தியப் பெண் அப்படியிருப்பாள் என நம்புகிறேன் என்கிறான் விக்டர். அவனது முன்னாள் மனைவியுடன் ஏற்பட்ட கசப்பான அனுபவங்களே அப்படிப் பேச வைக்கிறது. கிருஷ்ணா இந்தத் திருமணப் பேச்சால் குழம்பிப் போய்விடுகிறாள். தனது தோழிகளிடம் ஆலோசனை கேட்கிறாள். ஆசிரம நிர்வாகியிடம் உரையாடுகிறாள். நேரடியாக விக்டரிமே பேசுகிறாள். முடிவில் திருமணத்திற்குச் சம்மதம் தெரிவிக்கிறாள்.
அவர்களின் திருமணம் கோவையில் நடைபெறுகிறது. சரஸ்வதி அம்மாவின் ஆசி பெற அவரது வீடுதேடிப் போகிறார்கள். இந்தியப் பழக்க வழக்கங்களையும் வாழ்க்கை முறையினையும் மாற்றிக் கொள்ளாவிட்டால் கிருஷ்ணா அமெரிக்க வாழ்க்கைக்குப் பொருந்தமாட்டாள் என விக்டர் நினைக்கிறான். அதன் முதல்முயற்சியாக அவளைப் புடவை கட்டக்கூடாது. கவுன் அணிந்து கொள்ள வேண்டும் என்று கட்டுப்பாடு விதிக்கிறான். அது கிருஷ்ணாவிற்குப் பிடிக்கவில்லை.
“பரஸ்பர விருப்பு வெறுப்புகளை அனுசரித்துச் செல்வதோடு மதிக்கவும் கற்றுக் கொள்ள வேணடும். அதுவே திருமண வாழ்வின் வெற்றிக்கு அடித்தளம்” என்கிறார் சரஸ்வதி அம்மா. அந்த அறிவுரையை விக்டர் விரும்பவில்லை. அவர்கள் தேனிலவிற்காக ஊட்டிக்குப் போகிறார்கள். அங்கும் அவர்களுக்குள் வாக்குவாதம் நடக்கிறது. முடிவில் அவர்கள் அமெரிக்கா புறப்படுகிறார்கள். புதிய தேசம், புதிய வாழ்க்கை கிருஷ்ணாவிற்கு அச்சமளிக்கிறது. நியூயார்க் நகரமும் அதன் பிரம்மாண்டமான கட்டிடங்களும் வாகன நெருக்கடியும் கண்ணைப் பறிக்கும் நியான் விளக்குகளும் இங்கே எப்படி வாழப்போகிறோம் என்ற பயத்தை ஏற்படுத்துகிறது. விக்டர் வேலைக்குப் போய்விடுகிறான். அவள் மட்டும் வீட்டில் தனித்திருக்கிறாள். அப்படியான நாட்களில் தனது தனிமையைத் தாங்க முடியாமல் கிருஷ்ணா வாய்விட்டு அழுகிறாள்.
வீட்டிற்கு வரும் விக்டரின் நண்பர்கள் பேசும் ஆங்கிலம் அவளுக்குப் புரிவதில்லை. உடல் நலமற்ற நாட்களில் துணைக்கு யாருமேயில்லையே என ஏக்கமாக இருக்கிறது. இந்நிலையில் அவள் கர்ப்பமாகிறாள். பெண் குழந்தை பிறக்கிறது. நான்கு ஆண்டுகள் கடந்து போகின்றன. வாழ்க்கையின் ஓட்டம் அவளையும் உள்ளிழுத்துக் கொள்கிறது. அவளோடு ஆசிரமத்தில் வளர்ந்த ராஜூ சினிமாவில் நடித்துப் பெரிய நடிகனாகிறான். அவன் அமெரிக்காவிற்கு வருகை தந்த போது கிருஷ்ணாவை சந்திக்கிறான். கிருஷ்ணா மாறியிருக்கிறாள். ஆனாலும் இந்தியப்பெண் போலப் புடவை கட்டியிருக்கிறாள். அவளது குடும்ப வாழ்க்கையைப் பற்றி ராஜூ விசாரிக்கிறான்.
“கொஞ்சம் உரிமை கிடைச்சது. கொஞ்சம் நானா எடுத்துகிட்டேன்” என்கிறாள். அத்தோடு, “நம்ம அடிப்படை உரிமை என்னனு முதல்ல நாம உணரணும். அது நியாயமானதுன்னு மத்தவங்களுக்குப் புரிய வெச்சோம்னா எந்தச் சிக்கலும் வராது” என்கிறாள். அவளது முதிர்ச்சியான பேச்சில் அனுபவம் வெளிப்படுகிறது. வாழ்க்கை நெருக்கடிகள் துரும்பை கூட உறுதியாக்கி விடும் என்று புரிகிறது.
விக்டரை சந்திக்கும் போது அவனது பேச்சிலும் நடத்தையிலும் ஏற்பட்டுள்ள மாற்றத்தைக் கண்டு ராஜூ வியந்து போகிறான். அது கிருஷ்ணாவால் ஏற்படுத்தப்பட்டது என்பது புரிகிறது. தனது குழந்தைகளுக்குத் தமிழ் கற்றுக் கொடுக்க வேண்டும் என்று கிருஷ்ணா ஆசைப்படுகிறாள். அமெரிக்காவில் வசித்தாலும் தனது தாய்நாட்டை, மொழியை, நண்பர்களை, ஆசிரமத்தை மறக்காமல் இருக்கிறாள். தேவையான உதவிகள் செய்கிறாள். சில வருஷங்களுக்குப் பின்பு ஆசிரமத்திற்கு வரும் ராஜூ அங்கே உரையாற்றும் போது “எல்லோரும் நம்முடைய வாழ்க்கை உயர வேண்டும் என நினைக்கிறோம். ஆனால் மற்றவர்கள் வாழ்க்கை உயர வேண்டும் என நினைப்பதற்குப் பெரிய மனது வேண்டும். அப்படியான ஒரு பெண்ணாகக் கிருஷ்ணா இருக்கிறாள்” என்று பெருமையாகச் சொல்கிறான். பஞ்சாபியில் எழுதப்பட்ட இந்த தமிழ்நாவலுக்காகக் குல்ஜார் சிங்கை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.