சிறப்புக் கட்டுரைகள்

நேற்றைய வாழ்க்கை | நாவல் வாசிகள் 15

எஸ்.ராமகிருஷ்ணன்

சத்யஜித் ரேயின் பதேர் பாஞ்சாலி திரைப்படத்தில் மறக்கமுடியாத மழைக்காட்சியொன்று இடம்பெற்றுள்ளது. அதில் மழை எப்படித் துவங்குகிறது என்று மிக அழகாகக் காட்டியிருப்பார்கள். திடீரென வானம் இருண்டு கொள்கிறது. காற்றின் வேகத்தில் குளத்திலுள்ள தாமரை இலைகள் படபடக்கின்றன. கொடியில் காய்ந்து கொண்டிருந்த துணிகளை அவசரமாக எடுக்கிறாள் அப்புவின் அம்மா. குளக்கரையில் இருந்த ஒரு மனிதனின் சொட்டைத்தலையில் விழுகிறது மழையின் முதல்துளி. அவன் உடனே தனது குடையை விரித்துக் கொள்கிறான்.

குளத்தில் மழைத்துளிகள் நடனமிடுகின்றன. காற்றோடு சேர்ந்து மழை வேகமெடுக்கிறது. நாயும் கூடப் பாதுகாப்பான இடம் தேடி ஒடுகிறது. சிறுவனான அப்பு மரத்தடி ஒதுங்கி நடுங்கியபடி நிற்கிறான். அவனது அக்கா துர்கா மழையில் நனைகிறாள். ஆனந்தமாக மழைத்துளிகளை முகத்தில் ஏந்துகிறாள். நாக்கைத் துருத்திக் காட்டி மழையினுள் விளையாடுகிறாள். ஓடுகிறாள். அவள் முகத்தில் சிரிப்பு. மழையின் வேகம் அதிகமாகிறது. காற்றின் ஓலம் கூடுகிறது. மரத்தடியில் நடுங்கியபடியே அக்காவை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறான் அப்பு. அவனை நோக்கி ஓடி வந்து மரத்தடியில் அமர்ந்தபடி ஈரச்சேலையை அவனுக்குப் போர்த்திவிட்டபடி மழையை நிற்கச் சொல்லி துர்கா முணுமுணுக்கிறாள். மறக்க முடியாத காட்சியது.

மழை எல்லோருக்கும் இனிய அனுபவமில்லை. மழை பிடிக்காதவர்களும் இருக்கிறார்கள். அவர்களுக்கு மழை என்பது தங்கள் பிழைப்பைக் கெடுக்கும் விஷயம். அப்படியான கஷ்டஜீவனத்தைக் கொண்ட மண்பாண்டங்கள் செய்யும் குயவர்களின் வாழ்வினை மிகவும் சிறப்பாகச் சித்தரித்துள்ளது சூளை நாவல். சாகித்ய அகாதமி பரிசு பெற்றுள்ள கொங்கணி எழுத்தாளரான மகாபலேஸ்வர் சைல் எழுதியுள்ள இந்த நாவலை கி.ஜெயந்தி, தமிழில் மொழியாக்கம் செய்துள்ளார்.

இந்த நாவலின் துவக்கத்திலும் திடீரென மழை பெய்ய ஆரம்பிக்கிறது. இரண்டு நாட்களுக்கு முன்பு செய்து வெயிலில் காய வைத்திருந்த பானைகளை எடுப்பதற்காகப் பெண்கள் அவசரமாக ஒடுகிறார்கள். ஒரு பெண் கையில் எடுத்த மண்பானை தவறி விழுந்து உடைந்துவிடுகிறது. அவளது கணவன் கோவித்துக் கொள்கிறான். அந்தப் பெண்ணும் பதிலுக்குச் சண்டையிடுகிறாள். அப்போது அவளது கணவன் ஆத்திரத்துடன் சொல்கிறான். ``மழை பெய்யுற மூணுமாசம் நம்ம பிழைப்பு போயிடும். நம்ம குடலைப் பிடுங்கி தின்னு தான் உயிர் வாழணும்’’.

அது உண்மை. மழை அதிகமானால் ஏரியில் தண்ணீர் நிறைந்துவிடும். அதனால் காய்ந்த களிமண் கிடைக்காது. பானை செய்ய முடியாது. இருப்பில் உள்ள களிமண்ணில் பானை செய்தாலும் வெயில் இல்லாமல் பானை காயாது. ஆகவே மூன்று மாத காலம் பசியும் பட்டினியுமாக வாழ வேண்டியது வரும். அந்த ஏரியில் கிடைக்கும் மண் அபூர்வமானது. அவர்களின் முன்னோர்கள் அந்த மண்ணின் குணம் அறிந்தே அந்தக் கிராமத்தில் வசிப்பதென முடிவு செய்தார்கள். வெண்ணெய் போன்ற அந்தக் களிமண் சுற்றுவட்டாரத்தில் எங்கும் கிடையாது.

ஒரு நாள் அந்த ஏரியினை மூவர் பார்வையிட்டு ஏதோவொரு கருவியை வைத்து அளந்து கொண்டிருக்கிறார்கள்.

``என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்’’ எனச் சிவராமன் கேட்கிறார்.

``இங்கே அணைகட்டப்போறோம். அரசாங்கத்தோட உத்தரவு. இந்த அணையைக் கட்டிட்டா வருஷம் முழுவதும் ஏரியில தண்ணீர் இருக்கும். விவசாயம் செய்யலாம்’’ என்கிறார்கள்.

``அப்போ எங்க பிழைப்பு. ஏரி வற்றிப் போனா தான் எங்களுக்குக் காய்ந்த களிமண் கிடைக்கும். இந்த மண்ணு கிடைக்கலைன்னா நாங்க எங்க போறது’’ என்று கோபமாகக் கேட்கிறான் சிவராமன்.

``இதை எல்லாம் இப்போ சொல்லி ஒண்ணும் ஆகாது’’ என்று அரசாங்க ஊழியர்கள் தங்கள் பணியைத் துவக்குகிறார்கள். இதனைக் கேள்விபட்ட குயவர்கள் ஒன்று கூடி கவலைப்படுகிறார்கள். அரசாங்கத்தின் முடிவிற்கு எதிராக என்ன செய்வது எனத் தெரியாமல் தடுமாறி நிற்கிறார்கள்.

மண்பாண்டங்கள் செய்யும் எட்டுக்குடும்பங்கள் ஒரே இடத்தில் வசிக்கிறார்கள். அங்கே ஒரு பெரிய மாமரம் இருக்கிறது அந்த மரத்தில் ஏறி யாரும் பழம் பறிக்கக் கூடாது. ஆனால் உதிர்ந்து விழும் பழங்கள் எல்லோருக்கும் சொந்தம். ஆகவே அதைப் பகிர்ந்து எடுத்துக் கொள்கிறார்கள். அந்த மாம்பழம் நார் அதிகம் கொண்டது. ஆகவே அதைச் சப்பிச் சாப்பிட வேண்டும். இந்த மாம்பழத்திற்கெனத் தனி ருசியிருந்தது. ஒரு நாள் இரண்டு படகோட்டிகள் தாங்கள் படகு செய்வதற்கான மரம் தேடி அங்கே வருகிறார்கள். மிகவும் உறுதியாகவுள்ள மரத்தை கைவைத்து தட்டிப் பார்த்து விலை கேட்கிறார்கள். மரத்தை விற்க முடியாது. அது எங்கள் எல்லோருக்கும் பொதுச் சொத்து. இந்த மாம்பழத்துக்காகச் சிறுவர்கள் ஆசையோடு காத்திருப்பார்கள். இந்த மாம்பழம் சாப்பிடுவதற்காகவே வெளியூரில் கட்டிக் கொடுத்துள்ள எங்கள் வீட்டுப் பெண்கள் தாய்வீடு வருகிறார்கள்.

ஆகவே விற்க முடியாது என மறுத்து விடுகிறார்கள். படகோட்டிகள் அதிகப் பணம் தருவதாகச் சொல்கிறார்கள். இதைக் கேட்ட ஒருவர் ஆத்திரத்தில் ``இது வெறும் மரமில்லை. கடவுளே எங்க தலைமேல குடை பிடிச்சிகிட்டு நிக்குறார். நிழலை விற்றுத் திங்கலாமா’’ என்று கேட்கிறார். படகோட்டிகள் ஏமாற்றத்துடன் திரும்பிப் போய்விடுகிறார்கள். இதே நாவலின் பிற்பகுதியில் கஷ்டகாலம் வந்த போது அதே மரத்தை விற்பதற்கு அவர்கள் முன்வருகிறார்கள். மாமரத்தை வெட்டக்கூடாது என்று ஒரேயொருவர் மட்டுமே எதிர்ப்புக்குரல் கொடுக்கிறார், மற்றவர்கள் ஏதாவது பணம் கிடைத்தால் பட்டினியில்லாமல் வாழ முடியுமே என அந்த மரத்திற்கு அதிக விலை பேசுகிறார்கள். படகோட்டிகள் பெரிய தொகை கொடுத்து மரத்தை விலைக்கு வாங்கி வெட்டுவதற்கு ஆள் அனுப்புகிறார்கள். கண்முன்னே மரம் வெட்டப்படுகிறது.

நீங்கள் எதைக் காக்க நினைக்கிறீர்களோ அதை நீங்களே விற்கும் காலம் வரும் என்பதையும், அப்போது அதற்கு நீங்களே ஒரு காரணத்தை உண்டாக்கிக் கொள்வீர்கள் என்ற வாழ்வின் கசப்பான உண்மையை நாவல் சுட்டிக்காட்டுகிறது. மண்ணில் அழகான பாண்டங்களை செய்ய தெரிந்த அவர்களுக்கு தங்கள் வாழ்க்கையின் சக்கரங்களை யார் சுழற்றுகிறார்கள் என்று தெரியவில்லை. நாவலில் இரண்டு பெண்கள் தலைச்சுமையாகப் பானை விற்கச் செல்கிறார்கள். வெயிலோடு அலைந்து திரிந்தும் பாதிப்பானைகளைக் கூட விற்க முடியவில்லை. வீடு திரும்புவதற்குள் இரவாகிவிடுகிறது. பாதுகாப்பற்ற இடமொன்றில் இரவை கழிக்கிறார்கள். காலையில் வீடு திரும்பும் போது ஒரு பெண்ணின் மாமியார் விற்காத பானைகளைப் பார்த்து மருமகளைக் கண்டபடி திட்டுகிறாள். அதைக் கேட்டு ஆத்திரமான மருமகள் சொல்கிறார்: ``பானைவிக்க இனிமே சுடுகாட்டுக்கு தான் போகணும். கொள்ளி வைக்கிறவங்க வாங்கினால் தான் உண்டு’’.

அந்தக்குரல் சாட்டையடியைப் போல வாசிப்பவர் முதுகிலும் விழுகிறது. கைவினைஞர்களின் வாழ்க்கையை மிகவும் உண்மையாகச் சொன்ன விதத்தில் இந்த நாவல் கொங்கணி மொழியின்ஆகச்சிறந்த இலக்கியப் படைப்பாகக் கொண்டாடப்படுகிறது.

SCROLL FOR NEXT