சிறப்புக் கட்டுரைகள்

பண்பாட்டுப் பெருநிலமாய்த் தமிழ்நிலம்… தமிழ்ப்பண்பாடு அனைத்துலக மாநாட்டின் சில அனுபவங்கள்

மீனாசுந்தர்

இலங்கையின் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், நுவரேலியாவின் மாவட்டச் செயலகப் பொது அரங்கம் மற்றும் கொழும்புச் சைவப் பேரவையென மூன்று இடங்களில் சூன் 30 தொடங்கி சூலை 06 வரை தமிழ்ப் பண்பாடு அனைத்துலக மாநாடு நடந்து முடிந்துள்ளது. தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழக மேனாள் துணைவேந்தர் பேராசிரியர் பாஸ்கரன் ஒருங்கிணைப்பில், அனைத்துலகப் பண்பாட்டுப் பேரவை, தமிழ்நாடு திருநெறிய சைவ சமயப் பாதுகாப்புப் பேரவை, பிரான்ஸ் நாட்டின் இந்திய வம்சாவளி மக்களுக்கான உலகளாவிய அமைப்பு, இலண்டன் தமிழ்க் கல்வியகம் மற்றும் உலகச் செம்மொழித் தமிழ்ச்சங்கம் உள்ளிட்ட அமைப்புகள் ஒன்றிணைந்து நடத்திய இம்மாநாட்டில் உலகின் பல்வேறு திசைகளிலிருந்தும் தமிழர்கள் வருகை புரிந்திருந்தனர். குறிப்பாக, இந்தியா, கனடா, ஆஸ்திரேலியா, இலண்டன், சுவிட்சர்லாந்து, மலேசியா, சிங்கப்பூர், தென்னாப்பிரிக்கா, மொரீசியஸ், ரீயுனியன், இலங்கை உள்ளிட்ட இருபத்தைந்திற்கும் மேற்பட்ட நாடுகளின் பிரதிநிதிகள் இம்மாநாட்டில் பங்கேற்றுத் தமிழ்ப் பண்பாடு குறித்த தங்களின் ஆழமான ஆய்வுக் கருத்துகளை முன்வைத்தனர். போரும் பூசலும் மிகுந்து உலக மக்கள் அச்சத்தில் அலைக்கழிந்து கிடக்கும் இவ்வேளையில் தமிழர்கள், தங்களின் பண்பாட்டைக் காப்பது குறித்தும், முன்னெடுத்துச் செல்ல வேண்டிய தேவை குறித்தும் விவாதித்திருப்பது மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது.

“பண்பெனப்படுவது பாடறிந்து ஒழுகுதல், அன்பு எனப்படுவது தன்கிளை செறாஅமை” என்கிறது கலித்தொகை. நல்லந்துவனார் வழியாக இவ்வுயரிய விழுமியங்களை உலகிற்கு வழங்கியவர்கள் தமிழர்கள். ஒருவரின் மனமறிந்து நடந்து கொள்வதும், உறவுகளைப் போற்றிப் பாதுகாப்பதுமான உயரிய பண்பை இயல்பிலேயே தமிழர்கள் பெற்றிருந்தனர். பண்பாடு குறித்துத் தனிப்பட்ட முறையில் பல்வேறு கருத்திருக்கலாம். ஆனால் பொதுவில், பன்னெடுங்காலமாக தொடர்ந்து பேணப்படும் தனித்துவமான வாழ்வியல்முறை, மேலும் மேலும் பண்பட்டு, பண்பாடாக உருப்பெறுகிறது என்பது பொருத்தமாக அமையக்கூடும். பண்படுவதால் அது பண்பாடென பெயர் பெற்றது. இங்கு, பண்படுதல் என்பதை முழுமை பெறுதல், செழுமையடைதல், சீரடைதல் என்ற பொருளில் அணுக வேண்டும். அவ்வகையில் தமிழர்களின் பண்பாடு மற்றைய மாந்த இனங்களின் பண்பாட்டு ஒழுகலாறிலிருந்து மாறுபட்டும், வேறுபட்டும் இருப்பதோடன்றி, இன்றுவரை கொண்டாடத்தக்க கூறுகளைக் கொண்டதாக விளங்குகிறதென்பது கண்கூடு.

உலகின் மூத்த குடியெனப் போற்றப்பெறும் சிறப்பு வாய்ந்த தமிழ்க்குடியின் காலமும், ஆழமும் எண்ணியெண்ணி வியக்கத்தக்க தரவுகளுடன் விரிந்து செல்கிறது. கீழடி அகழாய்வு, அதற்குக் கட்டியங்கூறும் அண்மைச் சான்றாகும். கீழடியின் தரவுகள் தமிழர்களின் வரலாற்றுக் காலத்தை மேலும் பல நூற்றாண்டுகளுக்கு முன் இழுத்துச் சென்றிருக்கிறது என்பதில் ஐயமில்லை என்பது குறித்து விவாதித்தது ஒரு கட்டுரை. தமிழர்களின் பண்பாடு பல்வேறு நிலைப்பட்டதாகக் கிளைத்து விரிந்து நிற்கிறது. உலகின் முதல் மாந்தனின் ஆதிமொழி தமிழே என்பது மொழியியல் மற்றும் வரலாற்று ஆய்வாளர்களின் துணிபு. மொழியின் வழியே செழிக்கத் தொடங்கிய பண்பாட்டுத் திறம் மரபு, விழுமியங்கள், கலை, கலாச்சாரம், சமூகம், பொருளாதாரம், அரசியல், நம்பிக்கைகள், வரலாறு எனப் பரந்து தமிழ் மண்ணைப் பண்பாட்டுப் பெருநிலமாக எழச் செய்திருக்கிறதெனில் மிகையன்று என்பது குறித்து ஆராய்ந்தது மற்றொரு கட்டுரை. ‘தமிழர்கள் உலகிலிருந்து எடுத்துக் கொண்டதும்; உலகிற்குக் கொடுத்துச் சென்றதும்’ என்ற தலைப்பில் கருத்துகளை முன்வைத்த கட்டுரை கவனத்தை ஈர்த்தது. ஒரு கட்டுரை தமிழர்களின் படையல் பண்பாட்டை விரித்து எடுத்துரைத்தது. இவ்வாறு பலதரப்பட்ட தமிழியல் பொருண்மைகள் கட்டுரைகளாக மிளிர்ந்தன.

பல்வேறு நிலப்பகுதிகளைச் சார்ந்த தமிழ் ஆளுமைகள் ஒருவார காலம் ஒரே இடத்தில் தங்கியிருந்து, அவரவர்களின் இன்றைய வாழ்வுநிலை குறித்து விவாதித்ததும், நிலப்பகுதிகளுக்கு இடையிலான சாதக, பாதகங்களைப் பகிர்ந்து கொண்டதும் பண்பாட்டுநிலை ஒப்பீடாக அமைந்தது. எவையெவை நம்மிலிருந்து வீழ்ந்து போயினவெனவும், எவையெவை உயிர்த்தும் தழைத்தும் வாழ்கின்றன எனவும் அடையாளம் காணும் வாய்ப்பை இம்மாநாடு வழங்கிற்று என்பதில் ஐயமில்லை. இந்தியாவைத் தவிர பிற நாடுகளிலிருந்து கலந்து கொண்ட தமிழர்கள், ஒப்பீட்டளவில் பொருளாதாரத் தன்னிறைவு வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருந்தாலும் அவர்களின் அடிமனத்தில் தாய்நிலத்தைப் பிரிந்து வாழும் ஏக்கத்தையும் தாக்கத்தையும் உணர முடிந்தது.
மலையகத் தமிழர்களின் வாழ்வுநிலைச் சீரழிவு குறித்து பெருமளவு அறிந்து கொண்டதை இம்மாநாட்டின் விளை பயன்களில் பிரதானமாகக் குறிப்பிடலாம்.

19 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஆங்கிலேய ஆட்சியில் தமிழகத்திலிருந்து அடிமைகளாகக் கொண்டுச் செல்லப்பட்டு இலங்கையின் மலைப் பிரதேசங்களில் குடியமர்த்தப்பட்ட தமிழர்களே மலையகத்தமிழர்கள் ஆவர். ஏழெட்டு வாரிசு நிலையைக் கடந்த பின்னும் அவர்களின் போராட்ட வாழ்க்கையின் இன்னல்கள் குறைந்தபாடில்லை என்பதை அறிய முடிந்தது. தமிழகத்திலிருந்த தங்களின் தொப்புள்கொடி உறவுகளை இழந்த ஏக்கத்தில் அவர்களின் மரபுவழி உறவுகள் இன்றும் வாழ்ந்து வருவது துயர அனுபவம். அவர்களுடன் உரையாடிய கணங்கள் மனத்துள் பெரும் பாரத்தைச் சுமக்கச் செய்தது. அவர்கள் இந்தியத்தமிழர்கள் என்றும், தோட்டக்காட்டான் என்றும் இன்றும் அழைக்கப்படுகின்றனர். மலையகத் தமிழர்களின் பள்ளிக் குழந்தைகள் துயரங்களை வெளிப்படுத்தி நிகழ்த்திய நாடகம் கண்டவர் கண்களில் நீரை வரவழைத்தது. ஈழத்தமிழர் நிலை குறித்து ஆதங்கப்படும் தமிழ்நாட்டுத் தலைவர்களும் உறவுகளும் எங்களைக் கண்கொண்டு கூடப் பார்க்கவில்லையே என்பதை பெருங்குறையாகச் சுட்டி நின்றனர்.

தமிழீழத்தில் போர்ச்சூழல் முடிவுற்று பதினைந்து ஆண்டுகள் கடந்த நிலையில், வந்திருந்த பிரதிநிதிகளில் பெரும்பான்மையோருக்கு ஈழத்தமிழர் மனஉணர்வுளை அறிந்து கொள்ளும் ஆவல் கொப்பளித்ததை உணர முடிந்தது. போரில் இறந்தவர்கள், பிற நாட்டிற்குச் சென்றவர்களென ஒரு பகுதியைக் கழித்தாலும் எஞ்சிய தமிழர்களின் வாழ்வுநிலை குறித்தக் கவலையையும், கரிசனத்தையும் பேராளர்களிடம் உணர முடிந்தது. போரில் சிதைவுற்ற பழைய வீடுகளும் கட்டடங்களும், தோப்பும்துரவும் அரச இயந்திரத்தால் கருங்கல் நடப்பட்டு கம்பி வேலியிடப்பட்டிருப்பதைக் காண நேர்ந்தபோது இறுதி யுத்தக் காலத்தில் முள்ளிவாய்க்காலில் கம்பி வேலியிடப்பட்டு அடைக்கப்பட்டிருந்த தமிழ் மக்களின் பரிதவித்த முகங்களும் கண்ணீரும் தோன்றுவதைத் தவிர்க்க முடியவில்லை. மக்களடர்த்தி வெகுவாகக் குறைந்து வாழ்விடங்கள் தரைமட்டமாக்கப்பட்டு வெற்றிடங்களாகக் காட்சி தருவதை அவ்வளவு எளிதாகக் கடக்க முடியவில்லை. மலைமலையாய் மனித எலும்புக் கூடுகளைத் தோண்டியெடுப்பதைக் கண்டு உலகமே உறைந்து நிற்கும் செம்மணி என்ற இடத்தைக் காண அனுமதிக்கப்படவில்லை. இருபத்துநான்கு மணிநேரக் காவல் இடப்பட்டுக் கண்காணிக்கப்படுகிறது. அவ்விடத்தைத் தொலைவிலிருந்து பார்த்தவாறு கடந்த போதே இதயப் படபடப்பு அதிவேகமடைந்திருந்தது.

விருந்தோம்பல் பண்பாடு தமிழனின் மரபுவழிச் சொத்து என்பதை யாழ்பாணத் தமிழர்கள், மலையகத் தமிழர்கள் என்ற வேறுபாடில்லாமல் அத்தனை பேரும் நிரூபித்தனர். ஒரு கடையில் தேநீரை உறிஞ்சியவாறே கடைக்காரத் தம்பியிடம் உரையாடிக் கொண்டிருந்தோம். அவர் மலையகத் தமிழர் என்பதால் நீங்கள் தமிழகத்தில் எந்த ஊரென்று அறிந்திருக்கிறீர்களா? என்றோம். தஞ்சாவூர் என்று சொல்லிக் கொள்வார்கள் என்றதும் இன்பமாய் அதிர்ந்து போனோம். அவருடன் புகைப்படமெடுத்து விட்டு தொகையைத் தந்த போது அவர் வாங்க மறுத்து நீங்கள் நம் உறவுகளல்லவா என்ற போது கண்கள் கலங்கி விட்டன. எங்கிருந்தாலும் இந்த உணர்வுதான் தமிழன். இவர் சிங்களப் பெண்ணைத் திருமணம் செய்திருக்கிறார் என்பது கூடுதல் தகவல்.

யாழ்ப்பாண நூலகம் கண்டதும் உணர்ச்சி வயப்பட்ட நிலையைத் தந்தது. 1933இல் யாழ்ப்பாணம் புத்தூரைச் சேர்ந்த கனகசபை முதலியார் என்பவரின் தம்பி செல்லப்பா என்பவரால் தனது வீட்டில் தொடங்கப்பட்ட சிறு நூல்நிலையமே யாழ் நூலகமாகப் பரிணமித்தது என்ற தகவலை அறிந்து வியந்தோம். இந்நூலகம் 1981 இல் சிங்கள இனவெறியர்களால் எரியூட்டப்பட்ட போது கிடைத்தற்கரிய பல ஓலைச்சுவடிகள், பழந்தமிழ் நூல்களை இழந்தோம். பல்வேறு துயரங்களைக் கடந்தும் இன்றும் எழுச்சியோடு எழுந்து நிற்பது பேராறுதல். தமிழர்களின் அறிவுக் களஞ்சியமாய் மீண்டெழுந்து நிற்கிறது யாழ் நூலகம்.
மதநல்லிணக்கம் இலங்கை மக்களின் உயர்ந்த குணங்களில் ஒன்றாகக் காண முடிந்தது. கதிர்காமம் முருகன் கோவிலின் நுழைவாயிலில் இசுலாமிய வழிபாட்டுத் தலமொன்றும், பௌத்தக் கோவிலொன்றும் அமைந்திருப்பதை முருக பக்தர்கள் இயல்பாக வணங்கி தங்களின் கந்தக் கடவுளைக் காணச் செல்வது வியப்பிலும் வியப்பு. அரசியல்வாதிகள் சுயநலத்திற்காக மக்களைத் துண்டாட நினைப்பதும் மக்கள் இயல்பாக எல்லாவற்றையும் உள்வாங்கி வாழ்வதும் இந்நிகழ்வில் கண்டு கொள்ள முடிந்தது.

பண்பாட்டு மாநாட்டு ஏற்பாட்டாளர்கள் பண்பாட்டுச் சுற்றுலாவையும் இணைத்து நிகழ்த்தியது இலங்கை குறித்து இதுவரை இருந்த பிம்பங்களை உடைத்தெறிந்தது. இலங்கையின் நுவரோலிய அழகு கொள்ளை கொண்டது. யாழ்ப்பாணம் மற்றும் மலையகத் துயரத்திலிருந்து முற்றாக விடுபட்டு தமிழர்கள் சமஉரிமை பெற்றவர்களாக வாழ நேர்கின்ற காலத்திலும் ஒரு பண்பாட்டு மாநாடு நடத்தப்பட்டு மனநிறைவோடு பயணித்துத் திரும்பும் காலம் அமைய வேண்டும். அதற்கு இந்திய, தமிழகப் பார்வை அவ்விடம் நோக்கி நகர வேண்டுமென அவர்களைப் போல நாமும் எதிர்பார்க்கிறோம்.

கட்டுரையாளர்
எழுத்தாளர், பேராசிரியர்
தொடர்புக்கு: meenaasundhar@gmail.com

SCROLL FOR NEXT