சிறப்புக் கட்டுரைகள்

போரின் விலை | நாவல் வாசிகள் 14

எஸ்.ராமகிருஷ்ணன்

சாமானியர்கள் கடன் கேட்பதற்காகத் தயக்கமும் கவலையுமாக நிற்பதைக் கண்டிருக்கிறோம். அதே போல ஒரு நாட்டின் மன்னரும் கடன் கேட்பதற்காக நின்றிருப்பார் என்பது நாம் கற்பனை செய்யாதது. அப்படி ஒரு காட்சி கிரண் நகர்க்கர் எழுதிய ‘கனவில் தொலைந்தவன்’ நாவலில் இடம்பெறுகிறது. 16 ஆம் நூற்றாண்டில், ராஜஸ்தானத்து அரச குடும்பத்திற்குள் நடந்த வாரிசு சண்டையை நாவல் விவரிக்கிறது. சாகித்ய அகாதமி விருது பெற்றுள்ள இந்த நாவலை அக்களூர் ரவி சிறப்பாக மொழியாக்கம் செய்திருக்கிறார்.

மேவாரின் மன்னர் ராணா தொடர்ந்து யுத்தம் செய்து கொண்டேயிருக்கிறார். இதனால் தேசத்தின் கஜானா வற்றிவிடுகிறது. நாட்டின் நிர்வாகத்தைக் கவனித்துக் கொண்டிருக்கும் இளவரசன் மகாராஜ் குமார் படைவீரர்களுக்கு ஊதியம் அளிக்கவும், நிர்வாகச் செலவிற்கும் நிதி தேவை என்று உணருகிறார். அதற்காக வட்டிக்குக் கடன் வாங்க வேண்டும் என முடிவு செய்கிறார்.

மன்னர்களுக்குக் கடன் கொடுப்பதும் அப்படிக் கொடுத்த கடனுக்கு வட்டியை பெறுவதும் எளிதான விஷயமில்லை. ஆனால் லேவாதேவி நடத்தும் ஆதிநாத் குடும்பத்தினர் அதனை சாதுர்யமாகச் செய்து வந்தார்கள்.மேவார் மன்னருக்கும் கடன் கொடுக்கிறார்கள். அவர் எதிரியாக நினைத்து சண்டையிட்டுக் கொண்டிருக்கும் குஜராத் மன்னருக்கும் கடன் கொடுக்கிறார்கள். இவ்வளவு ஏன், டெல்லி சுல்தான் இப்ராஹிம் லோடிக்கும் கடன் தருகிறார்கள்.

பெரும்படைகளைத் திரட்ட நிதியுதவி என்ற பெயரில் அதிக அளவில் கடன் கொடுக்கிறார்கள். கொடுக்கும் கடன் போர் முடிவதற்குள் பூதாகரமான வட்டியுடன் வளர்ந்துவிடுகிறது. எங்கே யுத்தம் நடத்தாலும் லேவாதேவி செய்பவருக்கு வருவாய் கொட்டுகிறது. போரில் யார் வென்றாலும் தோற்றாலும் வட்டியை கறாராக வசூல் செய்துவிடுகிறார்கள். போர் என்பது பெரும் கடன்சுமை என்பதைக் கிரண் நகர்க்கர் சிறப்பாக வெளிப்படுத்துகிறார். இளவரசர் போஜ் ராஜின் சாயலில் உருவாக்கபட்டதே மகாராஜ் குமார் கதாபாத்திரம். இவரது மனைவி மீரா, கிருஷ்ணபக்தியில் திளைப்பவர்.

மகாராஜ் குமார் நாட்டின் நிர்வாகத்தினைத் திறம்படச் செய்துவருகிறார். குறிப்பாக நகரை நோக்கி வரும் மக்களின் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டே வருவதைக் கணக்கில் கொண்டு அவர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளைச் செய்து தர வேண்டும் என்று விரும்புகிறார். ஆனால் கஜானாவில் நிதியில்லை. தந்தை நடத்தும் போருக்கான செலவீனம் அதிகமாகிக் கொண்டே போகிறது. கடன் கேட்பதற்காக வட்டித்தொழில் நடத்தும் ஆதிநாத்தைச் சந்திக்க விரும்புகிறார். இளவரசனின் மனதை அறிந்து கொண்ட ஆதிநாத், அவரைத் தனது வீட்டிற்கு விருந்திற்கு அழைக்கிறார்.

விருந்திற்கு நடுவே தேவையான பணத்தைக் கடன் கேட்டுப் பெறுவது எளிது. மன்னரும் தனது கௌரவத்தை விட்டுக் கொடுக்காமல் கடன் கேட்க முடியும். அந்த அழைப்பை ஏற்று ஆதிநாத் வீட்டிற்கு மகாராஜ் குமார் வருகை தருகிறார். இருவரும் சதுரங்கம் ஆடுகிறார்கள். அப்போது ஆதிநாத்தின் பேத்தி லீலாவதி அங்கே வருகிறாள். இளவரசரின் மடியில் அமர்ந்து கொண்டு ``தாத்தாவிடம் கடன் வாங்க வந்திருக்கிறீர்களா?’’ எனக் கேலியாகக் கேட்கிறாள். அவள் வழியாகத் தனது மனதின் விருப்பம் வெளியாகிவிட்டதை உணர்ந்து இளவரசர் சிரிக்கிறார்.

``பணம் கிடைப்பது இப்போதெல்லாம் சிரமமாக இருக்கிறது என்று சொல்லி தாத்தா வட்டியை உயர்த்திவிடுவார்’’ என லீலாவதி தனது தாத்தாவையும் கேலி செய்கிறாள். தனது வேலையைப் பேத்தி குறைத்துவிட்டாள் எனத் தாத்தாவும் மனதிற்குள் மகிழ்ச்சி அடைகிறார். அவர்கள் வட்டிவிகிதம் எவ்வளவு எனப் பேசி முடித்துக் கொள்கிறார்கள்.

இப்படிப் பெறும் கடனை ஒரு போதும் அடைக்க முடியாது. வட்டியை மட்டும் தொடர்ந்து கொடுத்துக் கொண்டேயிருக்க வேண்டும். அதற்குள் அடுத்த யுத்தம் வந்துவிடும். மீண்டும் கடன் கேட்க வேண்டியது வரும். இது ஒரு சிலந்திவலை. இதன் நடுவே ஈக்கள் போல மாட்டிக் கொண்டிருக்கிறோம் என மகாராஜ் குமார் நினைக்கிறார். கவலைப்படுகிறார்.

மன்னரும் கடன் வாங்குவார். அதனைக் கட்ட முடியாமல் கஷ்டப்படுவார். வட்டி வளர்ந்து கொண்டே போய் அவரது கழுத்தைப் பிடிக்கும் என்பது நாம் அறியாத நிஜம். மன்னரிடம் வட்டி வசூலிப்பது மிகவும் கடினமானது. அதற்கு எப்படி எல்லாம் நடிக்கவும் பொய் சொல்லவும் வேண்டும் என்பதை நாவலில் கிரண் விரிவாக எழுதியிருக்கிறார். இந்தக் காட்சிகள் வேறு எந்த வரலாற்று நாவலிலும் நாம் காணாதது.

அரியணைப் போட்டியும் அதற்காகச் சிற்றன்னை கர்மாவதி செய்யும் சூழ்ச்சிகளையும் விவரிக்கும் இந்த நாவல், வீரம் என்ற பெயரில் தொடர்ந்து போரிட்டுக் கொண்டேயிருப்பது முட்டாள்தனம் என நினைக்கும் இளவரசரின் பார்வையை முன்வைக்கிறது. அரண்மனையிலும் மாமியார்- மருமகள் சண்டை நடக்கிறது. மருமகளின் மீது புகார் சொல்லிக் கொண்டேயிருக்கிறாள் கர்மாவதி. அரச குடும்பத்தில் திருமணம் என்பது ஒரு அணிசேர்க்கை. தேசத்தின் பாதுகாப்பிற்காகப் பக்கத்து நாட்டு இளவரசிகளைத் திருமணம் செய்து கொள்வது வழக்கம். ஆகவே வேறு இளவரசியைத் திருமணம் செய்து கொள் என மகாராஜ் குமாரை வலியுறுத்துகிறாள்.

பதினாறாம் நூற்றாண்டின் இளவசரனாக இருந்த போதும் இன்றைய நவீன மனிதனைப் போலவே மகாராஜ் குமார் சிந்திக்கிறான். நடந்து கொள்கிறான். ராணாவின் மூத்த மகனாக இருந்தும் அரியணையைப் பெற முடியவில்லை. போரில் வென்றாலும் அந்தப் புகழ் அவருக்கு கிடைப்பதில்லை. ராஜபுத்திரர்கள் பெருமையாகப் பேசும் வீரத்தை அவர் கேள்விகேட்கிறார். வாழ்க்கைவிலைமதிப்பற்றது, அதைப் பாதுகாக்க எல்லா விதிகளையும் மீற தயாராக இருக்கிறார். இதனாலயே அவர் தனித்துவமிக்க கதாபாத்திரமாக மாறுகிறார்.

அரண்மனை வாழ்க்கை என்பது ஆடம்பரங்களால் நிரம்பியது என்றாலும் அது ஒரு படுகுழி. அங்கே நடப்பது சதியின் நாடகம். அதிகாரத்தைக் கைப்பற்ற யார் சதி செய்வார்கள். யார் யாரைக் கொல்வார்கள் என்று தெரியாது. பட்டுத்திரைகளுக்குப் பின்னே வெறுப்பின் நிழல்கள் உலவுகின்றன. ஆயிரம் விளக்குகளால் பிரகாசமாக ஒளிரும் அரண்மனையினுள் இருண்ட அறைகளும் குரூர எண்ணம் கொண்ட மனிதர்களும் இருக்கிறார்கள். குருதிக்கறை படியாத அரியணை இல்லை. குற்றமே அதற்கான படிக்கட்டுகள்.

துதிபாடிகள் தான் அரசனின் விருப்பத்திற்குரியவர்கள். அவர்கள் உண்மையை அரசன் அறிந்து கொள்ளாமல் தடுக்கிறார்கள். அவர்கள் எதைப் பார்க்கவும் கேட்கவும் வேண்டுமென விரும்புகிறார்களோ, அதை மட்டுமே மன்னரிடம் தெரியப்படுத்துகிறார்கள். மன்னரின் முடிவுகள் பெரும்பாலும் அவசரமானவை என நாவலில் கிரண் நகர்க்கர் குறிப்பிடுகிறார். ராஜஸ்தானின் பிரம்மாண்டமான கோட்டைகளுக்குள், மணல் மேடுகளுக்குள் புதையுண்டிருந்த வரலாறு நாவலில் அசலாக உயிர்பெறுகிறது. மேவார் வரலாற்றின் வீரக்கதைகளுக்குப் பின்னே இப்படியொரு நவீன சிந்தனை கொண்ட மன்னரும் இருந்திருப்பார் என்று அடையாளம் காட்டியிருப்பதே நாவலின் தனித்துவம்.

SCROLL FOR NEXT