சிறப்புக் கட்டுரைகள்

சமணத்தின் வளர்ச்சியும், வீழ்ச்சியும்

Guest Author

திருக்குறள், சிலப்பதிகாரம், சீவக சிந்தாமணி, குண்டலகேசி, நீலகேசி, மணிமேகலை போன்ற தமிழ் இலக்கியங்களை சமணச் சமய தமிழர்களே இயற்றியுள்ளனர். இவ்வாறு மிகவும் செல்வாக்குடன் திகழ்ந்த சமணம், பாண்டிய நாட்டுக்கு / தமிழ்நாட்டுக்கு எங்கிருந்து வந்தது, எவ்வாறு வேர் ஊன்றியது, எப்படித் தழைத்துப் பரவியது, கி.பி. 13/14-ம் நூற்றாண்டுக்குப் பிறகு எப்படி மறைந்து போனது என்பது பற்றியெல்லாம் அணு, அணுவாக ஆராய்ந்து ‘பாண்டிய நாட்டில் சமண சமயம்’ என்ற இந்நூலில் எழுதப்பட்டுள்ளது.

தமிழ்நாடு மட்டுமின்றி, மதுரா, பாட்னா, இராஜகிருகம், உஜ்ஜயனி, பாவாபுரி, குண்டப்பூர், அயோத்தி, லக்னௌ, ஒடிசா மாநிலத்தில் உள்ள உதயகிரி, கண்டகிரி, மௌரியர், குப்தர், குஷானர் காலத்து சமணம் சார்ந்த இடங்கள் மற்றும் வட இந்திய அருங்காட்சியங்களுக்கு எல்லாம் சென்று அங்கெல்லாம் எவ்வாறு சமணம் தழைத்தது என்பது பற்றி ஆராய்ந்து ஆய்வாளர் வேதாசலம் இந்நூலை எழுதியுள்ளார்.

தமிழ்நாட்டில் மதுரையைச் சுற்றியுள்ள மலைக் குகைத் தளங்களில் சமணத்தை சார்ந்து, கி.மு.300 முதல் கி.பி.300 வரை உள்ள தமிழ் பிராமிக் கல்வெட்டுகள், சமணப் படுக்கைகள், அந்த இடங்களில் பிற்காலத்தில் செதுக்கப்பட்ட புடைப்பு உருவங்கள், மாங்குளம் (மீனாட்சிபுரம்), சமணர் மலை, கொங்கர் புளியங்குளம், திருப்பரங்குன்றம், முத்துப்பட்டி பெருமாள் மலை, குறண்டி திருக்காட்டாம் பள்ளி, கழுகுமலை போன்ற இடங்களில் இருந்த சமணப் பள்ளிகளைப் பற்றி இந்நூலில் விரிவாக எழுதப்பட்டுள்ளது.

சமணம், பார்சுவநாதர், மகாவீரர் காலங்களில் நிறுவனப்படுத்தப்பட்ட சமயமாக மாறியிருக்க வேண்டும் என்று நூலாசிரியர் கூறுகிறார். சோழ, பாண்டியர், சேர நாடுகளில் – பாண்டிய நாட்டில் மட்டும் சமணம் தழைத்து, ஓங்கியதற்கான காரணங்கள் இந்நூலில் விளக்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் இயங்கிய சமண மலைப் பள்ளிகள், சமண ஊர்ப் பள்ளிகள் பற்றியும், அங்கெல்லாம் கல்விக்கூடங்கள், மருத்துவமனைகள் இருந்தது பற்றியும், அங்கு ஆண், பெண் துறவிகள் தங்கி சமணக் கல்வியை போதித்தது பற்றியும் விவரிக்கப்பட்டுள்ளன.

மலைப் பள்ளிகளில் குகைத் தளங்களில் தமிழ் பிராமி எழுத்துக்கள் பொறிக்கப்பட்டு, சமண படுக்கைகள் இருந்தன. மீனாட்சிபுரம் (மாங்குளம்), அழகர் மலை, திருவாதவூர், கொங்கர் புளியங்குளம். கீழவளவு, யானை மலை, அரிட்டாபட்டி, மறுகால்தலை என மலைப் பள்ளிகள் இருந்த இடங்கள் பற்றிய பட்டியல் இந்நூலில் உள்ளது.

பாண்டிய நாட்டில் 18 இடங்களில் உள்ள சமணச் சமயத்தோடு மிக்கத் தொடர்புடைய தமிழ்ப் பிராமிக் குகைத்தள மலைப்பள்ளிகள், பல மாவட்டங்களில் உள்ள 70 சமண ஊர்ப் பள்ளிகளுக்கு நேரில் சென்று, விவரங்களைச் சேகரித்து, அங்குள்ள தீர்த்தங்கரர், இயக்கர், இயக்கிகர் போன்றவர்களின் சிற்பங்களை புகைப்படம் எடுத்து, மிக்க ஆராய்ச்சி செய்து, மிக நுணுக்கமாக எழுதியுள்ளார்.

கழுகுமலையில் உள்ள புடைப்பு சிற்பங்களை நாம் நேரில் பார்ப்பது போன்று வர்ணிக்கிறார். கழுகுமலை எவ்வாறு சிறந்த சமணக் கல்விச் சாலையாக இருந்தது என்பது பற்றி விவரிக்கிறார். ஏழாம் நூற்றாண்டில் நின்ற சீர் நெடுமாறன் (கி.பி.640 - 690) ஆண்டபொழுது, பாண்டிய நாட்டில் யானை மலை உள்ளிட்ட பல மலைகளில் சமணத் துறவிகள் வாழ்ந்தனர். சமணச் சமயம் தழைத்து இருந்தது. அப்போது, யானை மலையில் வாழ்ந்த 8,000 சமணத் துறவிகளை நின்ற சீர் நெடுமாறன் கழுவேற்றியதாகக் கூறப்படுகிறது. ஆனால் இந்தக் கூற்று சரியல்ல என்று இந்நூலின் ஆசிரியர் வாதிடுகிறார்.

திருஞான சம்பந்தரின் மதுரைப் பதிகப் பாடல்களை மேற்கோள் காட்டியுள்ள நூலாசிரியர், “அந்தப் பாடல்களில் சம்பந்தர் சமணர்களை கேலி செய்வதோடு, கடும் சொற்களால் அவர்களைத் தாக்குகின்றார். சம்பந்தரின் பதிகங்கள் தமிழ்நாட்டில் சைவ சமயத்தை வேரூன்றி வைப்பதற்குத் திட்டமிட்டு கட்டமைப் பட்டவையாகும்” என்று கூறுகிறார். சம்பந்தர் எவ்வாறு சமணத் துறவிகளோடு வாதம் செய்து தோற்கடித்தார் என்று கூறும் நூலாசிரியர், யானை மலையில் வாழ்ந்த சமணத் துறவிகளை நின்ற சீர் நெடுமாறன் கழுவேற்றவில்லை என்றும், இவையெல்லாம் சம்பந்தருக்கு பின்னால் வந்த நம்பியாண்டார் நம்பி (11ம் நூற்றாண்டு), சேக்கிழார் (12ம் நூற்றாண்டு) போன்றவர்களால் புனையப்பட்ட கதைகள் என்றும் வேதாசலம் கூறுகிறார்.

இன்று நாகர்கோவிலில் உள்ள நாகராசார் கோயில், முற்காலத்தில் ஒரு சமணப் பள்ளியாக இருந்தது என்றும், அது பார்சுவநாதர், அவரின் இயக்கர் தர்ணேந்திரன், இயக்கி பத்மாவதி போன்றவர்களின் கோயிலாக இருந்தது என்றும், பின்னாளில் நாகராசார் கோயிலாக மாற்றப்பட்டுள்ளது என்றும் ஆதாரங்களுடன் நூலாசிரியர் விளக்கி இருக்கிறார்.

தமிழ்நாட்டில் 13ம் நூற்றாண்டு வரை அரசர்கள், மக்களின் பேராதரவோடு தழைத்து வளர்ந்த சமணம், அதன் பின்னர் ஆதரவை இழந்து அழிவுற்றது பற்றி விளக்கமாக இந்த நூலில் கூறப்பட்டுள்ளது. ஆய்வாளர் வேதாசலத்தின் மிகவும் விரிவான இந்த ஆய்வு நூலை ஆராய்ச்சியாளர்கள் மட்டுமின்றி, மாணவர்கள் உள்ளிட்ட அனைவரும் அவசியம் வாசிக்க வேண்டும்.

- டி.எஸ்.சுப்பிரமணியன்
மூத்த பத்திரிகையாளர்
தொடர்புக்கு: cholamurals@gmail.com

---------------------------------------------------------------------------

பாண்டிய நாட்டில் சமண சமயம் (கி.மு.300 – கி.பி.1800)
முனைவர் வெ.வேதாசலம், தனலட்சுமி பதிப்பகம்,
விலை: ரூ.1500
தொடர்புக்கு: 9443544405

SCROLL FOR NEXT