சிறப்புக் கட்டுரைகள்

சுகாதாரத் தன்னார்வலர்களை அரசு நியமிக்க வேண்டும்! - மருத்துவர் வீ.புகழேந்தி

ஆர்.சி.ஜெயந்தன்

கல்பாக்கம் அணுமின் நிலையத்தின் அருகில் உள்ள கிராம மக்களின் பொதுச் சுகாதாரப் பிரச்சினைகளுக்காகத் தொடர்ந்து போராடிவருபவர் மருத்துவர் வீ.புகழேந்தி. மிகக் குறைந்த கட்டணத்தில் மருத்துவச் சேவை அளிக்கும் மருத்துவர் என்றும் இவர் போற்றப்படுகிறார். தடுப்பூசிகளின் போதாமையில் தொடங்கி, மருத்துவ உலகம் கார்ப்பரேட்மயமாகி வருவதற்கு எதிராகத் தொடர் செயலாற்றி வருகிறார். சுற்றுச்சூழலுக்கான மருத்துவர் குழுவில் உறுப்பினராக, ஒரு மருத்துவப் போராளியாக விளங்கும் புகழேந்தியுடன் உரையாடியதிலிருந்து ஒரு பகுதி...

பல்வேறு எதிர்ப்பு​களையும் தாண்டி, கிராமப்புற மக்களுக்குச் சேவை செய்ய உங்களைத் தொடர்ந்து இயக்குவது எது?

உழைப்பு, நேர்மை, அறம் என்று வாழ்ந்தவர் என் தந்தை வீ.வீ​ரா​சாமி. வறுமைப் பின்னணியி​லிருந்து வந்தபோதும் வாழ்க்கை குறித்த எந்தப் புகாரும் இல்லாதவர். அம்மா லட்சுமியும் அப்படித்​தான். நான் மதுரை மருத்​துவக் கல்லூரியில் படித்த காலத்​தில், எனக்குப் பயிற்று​வித்த சுப்ரமணியம், திருமலைக் கொழுந்து சுப்பிரமணியம், வீ.வெங்​கட்​ராமன், சத்யவான் போன்ற பல பேராசிரியர்கள், “மருத்​துவச் சேவையை வணிக நோக்கத்​துடன் செய்யக் கூடாது; மருத்​துவரை நோய் தீர்க்கும் கடவுளாக எண்ணி வரும் நோயாளிகளை ஏமாற்றக் கூடாது” என்பதைச் சொல்லிக்​கொடுத்​தார்கள். இவையெல்​லாம்தான் இதற்குக் காரணம்.

நீங்கள் ஆரம்ப சுகாதார சிகிச்​சையில் மட்டும் கவனம் செலுத்துவது ஏன்?

மருத்​துவச் சேவை என்பது தேவையை ஒட்டி இருக்க வேண்டும் என்பதில் அதிக நம்பிக்கை கொண்டிருக்​கிறேன். அதனாலேயே மருத்துவ வசதி இல்லாத கிராமத்தைத் தேர்ந்​தெடுத்​தேன். ‘ஆரம்ப சுகாதார சேவைதான் 70 சதவீதம் தேவைப்​படு​கிறது என்பதை இந்தியா உள்பட அனைத்து நாடுகளும் ஏற்றுக்​கொண்​டுஉள்ளன. ஆனால், அது நடைமுறையில் இல்லை என்பதுதான் வேதனை. கிராமப்புற, பின்தங்கிய பகுதி​களில் வாழும் சாமானிய, விளிம்பு நிலை மக்கள் அருகில் இருக்கும் மருத்​துவரையும் மருத்துவ மையத்தை​யும்தான் சார்ந்​திருக்​கிறார்கள். ஆனால், அங்கே உரிய மருத்துவ வசதியோ, மருத்​துவரோ, செவிலியரோ இல்லாமல் போகும்போது அவலம் நேர்கிறது. பிலிப்​பைன்ஸின் கிராமப்புறத் துணைச் சுகாதார மையங்கள் மருத்​துவர் இல்லாமல், மருந்​தாளும் பயிற்சி பெற்ற செவிலியர்​களாலேயே வெற்றிகரமாக நடத்தப்​பட்டதை, மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் பாராட்டிப் பேசியிருக்​கிறார்.

நம்முடைய துணைச் சுகாதார மையங்களை எப்படிப் பார்க்​கிறீர்கள்?

2013-2024 காலக்​கட்​டத்தில் எடுக்​கப்பட்ட கணக்கெடுப்​பில், பேறுகாலப் பெண்கள் இறப்பு என்பது, தமிழகக் கிராமப்பு​றங்​களில் 72%, நகர்ப்பு​றங்​களில் 28% எனப் பதிவாகி​யிருக்​கிறது. இந்தப் புள்ளி​விவரத்தைக் கடந்த ஆண்டு அரசிடம் கொடுத்​தேன். கிராமப்புறத் துணைச் சுகாதார மையங்​களில் முழுமையான மருத்​துவச் சேவை இருந்​தால், இந்த இறப்பு​களைத் தடுக்​கலாம். தமிழகத்தில் இன்று 75% இறப்புகள் தொற்றா நோய்களால் ஏற்படு​கின்றன என்பதைக் கண்டறிந்​திருக்​கிறார்கள். குறிப்பாக, சர்க்கரை நோய், உயர் ரத்தஅழுத்தம் ஆகிய வாழ்க்கை முறை நோய்களோடு வாழ்பவர்​களின் எண்ணிக்கை அதிகமாக இருந்​தா​லும், அவர்களில் 17% பேர் மட்டுமே அவற்றைக் கட்டுப்​பாட்டில் வைத்திருக்​கிறார்கள்.

இந்த இடத்தில் ‘மக்களைத் தேடி மருத்​துவம்’ இருக்​கிறதே என்று கேட்கலாம். ஆனால், அந்தத் திட்டத்தில் மாதம் ஒரு முறைதானே நோயாளியைத் தேடிப் போவார்கள். அதற்கிடையில் அவருக்கு அவசரச் சிகிச்சை தேவை என்றால் எங்கே போவார்? இந்த இடத்தில் துணைச் சுகாதார மையம் அவசிய​மாகிறது. ஒரு நாள் என்பதை விடுத்து 30 நாளும் துணைச் சுகாதார மையத்தின் சேவை அதில் கிடைக்​கும். தமிழ்நாடு என்றில்லை; இந்தியாவில் எந்த மாநிலத்தின் கிராமப்பு​றங்களை எடுத்​துக்​கொண்​டாலும், அங்கே ஆரம்பச் சுகாதார சேவை அதிகமாகத் தேவைப்​படு​கிறது. ஆனால், துணைச் சுகாதார மையங்கள் மிகக் குறைவு என்பது மட்டுமல்ல; அங்கே உரிய அடிப்படை மருத்துவ வசதிகளோ மருத்​துவரோ இல்லை. இதனால்தான் கிராமப்புற மக்கள் நகர்ப்புற மருத்​துவ​மனை​களில் அதிகச் செலவு செய்ய வேண்டிய நிலைக்குத் தள்ளப்​படு​கிறார்கள். மருத்​துவக் கல்லூரி​களையும் மருத்​துவ​மனை​களையும் 50 கிராமங்​களுக்கு மத்தியில் உள்ள சிறுநகரங்​களில் அமைக்​கலாமே? மாவட்டத் தலைநகரங்​களுக்கே அவற்றை ஏன் கொண்டு​செல்ல வேண்டும்?

கிராமப்புற மக்களிடமும் இன்று வாழ்க்கை முறை நோய்கள் பெருகிநிற்க என்ன காரணம்?

கிராம மக்களும் துரித உணவு உண்பதில் ஈடுபாடு காட்டத் தொடங்கி​விட்​டனர். பூச்சிக்​கொல்​லிகள் இன்னொரு காரணம். அதேபோல், ஆலைக்​கழி​வுகள் உருவாக்கும் நோய்களுக்கும் நோய்த் தொற்றுகளுக்கும் குறைவில்லை. மூன்றாவதாக மது, புகையிலை / புகைப் பழக்கம். இவை நோய்களைத் தீவிரப்​படுத்து​கின்றன. ஒப்பீட்​டளவில் உடலுழைப்பு குறைந்து​விட்டது. மக்கள் பங்களிப்பு இல்லாமல் எந்தத் திட்டமும் வெற்றி​பெறாது. அதனால்தான் அரசே தன்னார்​வலர்​களைக் கொண்ட சுகாதாரப் படையை (Health Brigade) நியமிக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறேன்.

திடீர் சுகாதாரச் சீர்கேடுகள், அதனால் பரவும் நோய்கள், கரோனா மாதிரியான பெருந்​தொற்றுகள் ஆகியவற்றைக் கண்டறியவும் அந்தத் தகவல்களை அரசு சுகாதார அமைப்பு​களுக்கு உடனுக்​குடன் பகிரவும் ஒவ்வொரு தெருவிலும் தன்னார்​வலர்களை நியமிக்க வேண்டும். சிகிச்சைக்கான தேவையிருப்​பவர்களை அடையாளம் கண்டு உடனே ஆற்றுப்​படுத்த முடியும். அந்தந்தப் பகுதிக்கான விழிப்பு​ணர்வு, ஆரோக்​கியக் கல்வியையும் இவர்கள் வழியாகவே கொடுத்துவிட முடியும்.

2023இல் இளம் மருத்​துவர்கள் 4 பேர் அடுத்​தடுத்து இறந்த​போது, ‘14 மணி நேரப் பணிச்சுமை காரணமா அல்லது கரோனோ தடுப்பூசி ஏற்படுத்தும் இதய அழற்சி காரணமா என்பதைக் கண்டறிய வேண்டும்’ என அறிக்கை வெளியிட்​டீர்கள். அதன் பிறகு அரசு என்ன செய்தது?

யாருமே அதைக் கண்டு​கொள்ள​வில்லை. மக்கள் நலன் என்பதை மட்டும் முன்னெடுத்தால் தன்னார்​வலர்​களைத் தெருவுக்குத் தெரு கொண்டுவர அரசுகள் முன்வரும். கார்ப்​பரேட் நலனே முதன்மை என்றால், தடுப்​பூசிக்​குத்தான் முன்னுரிமை தரும். தடுப்பூசி செலுத்​தப்​பட்​டிருந்த நிலையிலும் கரோனா​வுக்குப் பின் மாரடைப்பில் இறந்த 40 வயதுக்கு உள்பட்ட மருத்​துவர்கள், இளைஞர்​களின் உடல்களை உடற்கூறாய்வு செய்து உண்மை கண்டறியப்​பட்​டிருக்க வேண்டும். ஆயிரக்​கணக்கான இளவயது மரணங்களை உலகம் முழுவதும் ஆய்வு​களின்வழி கண்டு​பிடித்​திருக்​கிறார்கள். அமெரிக்​காவைப் பொறுத்தவரை கரோனா தடுப்​பூசியால் பாதிப்பு ஏற்பட்டால் இழப்பீடு இருக்​கிறது. ஆனால், இந்தியாவில் அப்படி இருக்​கிறதா என்பதுதான் என் கேள்வி.

அணு உலைகளின் கதிர்​வீச்சினால் அங்கே பணிபுரியும் ஊழியர்கள், அவர்களின் குடும்பத்​தார், மக்கள் சந்தித்து வரும் உடல்நலக் குறைவுகள், நோய்கள் பற்றி விரிவாக ஆய்வுசெய்து ‘கல்பாக்கம் அணு உலைகளும் கடல் எரிமலை​யும்’ என்கிற சிறு நூலை நீங்களே வெளியிட்​டீர்கள்.

கதிர்​வீச்சுப் பிரச்சினை இன்றும் தொடர்​கிறதா?

கதிர்​வீச்சு நிச்சயமாக இருக்​கத்தான் செய்கிறது. அணுக் கதிர்​வீச்சு என்பதில் பாதுகாப்பான அளவு என்கிற ஒன்று கிடையவே கிடையாது. அணு உலையின் ஊழியர்கள், அங்கே வசிக்கும் அவர்களது குடும்பத்​தினர், அணு உலையைச் சுற்றி​யுள்ள கிராமங்​களில் வாழும் மக்கள் ஆகியோரில் குறிப்​பிடத்தக்க எண்ணிக்கையில் மல்டிபிள் மைலோமா (Multiple myeloma) புற்று​நோய்க்குப் பலியா​வதைக் கணக்கெடுத்துச் சொன்னோம். ஒன்றும் நடக்க​வில்லை. ஜப்பான், அமெரிக்கா போன்ற நாடுகளில் இழப்பீடு கொடுக்​கிறார்கள். பாதிப்பு இல்லை​யென்றால் அவர்கள் எப்படி இழப்பீடு தர முன்வரு​வார்கள்?

கடலை ஒட்டிய அணு உலைகளால் கரையோர மீன்களின் இனப்பெருக்கம் பாதிப்பு - மீன்கள் கதிர்​வீச்​சுக்கு ஆளாக வாய்ப்புள்ளதா?

இது குறித்துப் பல அறிவியல் ஆய்வுகளே இருக்​கின்றன. அணு உலையைக் குளிர்விக்கப் பயன்படும் வெப்பமான தண்ணீர் கடலில்தானே விடப்​படு​கிறது. இது அப்பகு​தியில் உள்ள பல வகை மீன்களின் இனப்பெருக்​கத்தைக் குறைத்​திருக்​கிறது. அந்த மீன்களை உண்பதால் ஏற்படும் சிக்கல்களை ஆய்வுசெய்து உலகம் முழுவதும் ஆய்வுகள் வெளியிடப்​பட்​டுள்ளன.

மாற்றத்​துக்கு வாய்ப்பே இல்லையா?

கல்பாக்​கத்தில் பணிபுரியும் சிலரே என் நூலில் சுட்டிக்​காட்​டப்பட்ட உண்மையை உணர்ந்​தார்கள். ஆனால், நிர்வாகத்​துக்கும் அரசுக்கும் பயந்தே அவர்கள் வாழ்கிறார்கள். அணுஉலை மின் உற்பத்தி என்பது தமிழ்​நாட்டில் 5% இந்திய அளவில் 3%. அவ்வவு​தான். இந்த அளவை, சூரிய ஒளி, காற்றாலை போன்ற இயற்கை வழிகளில் மிக எளிதாக எட்டி​விடலாம். பாதிக்​கப்​பட்​ட​வர்​களுக்கு உரிய இழப்பீடு, இப்போதுள்ள அணு உலைகளின் பாதுகாப்பு ஆகியவை உத்தரவாதப்படுத்தப்பட வேண்டும். இறுதியாக மின்சார உற்பத்​திக்கு அணு உலைகளைச் சார்ந்​திருப்​பதைக் கைவிட்டு, இயற்கை மின் உற்பத்​திக்குத் திரும்ப வேண்டும் என்பதுதான் எங்கள் கோரிக்​கை.

SCROLL FOR NEXT