இந்தியாவில் 2024இல் ஆயுள் காப்பீட்டு நிறுவனத்திடம் இருந்து உரிமை கோரப்படாத பணம் ரூ.809 கோடி என்று சொன்னால் நம்புவீர்களா? அதுதான் உண்மை. அது மட்டுமல்ல, 2024 நிலவரப்படி வங்கிகளில் கோரப்படாமல் இருக்கும் தொகை ரூ.78,213 கோடி என்று இந்திய ரிசர்வ் வங்கி கூறியிருக்கிறது. செயலற்ற - செயல்படாத வங்கிக் கணக்குகளில் (Dormant and Inoperative Accounts) முடங்கிக் கிடக்கிறது என்றும் ரிசர்வ் வங்கி குறிப்பிட்டிருக்கிறது.
ஒட்டுமொத்தமாக வங்கிக் கணக்குகள், அஞ்சல் நிலையச் சேமிப்பு, காப்பீட்டுக் கொள்கைகள், ஊழியர் வருங்கால வைப்பு நிதி, பரஸ்பர நிதிகள், பங்குச் சந்தை முதலீடுகள் ஆகியவற்றில் எஞ்சியிருக்கும் பணம் என்று ஏறக்குறைய 2 லட்சம் கோடி ரூபாய் இந்திய நிதியமைப்பில் கோரப்படாமல் இருக்கிறது என்பது இன்றைய தேதியில் கசப்பான உண்மை.
பெரும் பணக்காரர்களின் பணம் அல்ல இது. இதெல்லாம் மிகச் சரியாக உரியவர்களால் கோரப்பட்டு, அவர் தம் கணக்குகளுக்கு மாற்றப்பட்டுவிடும். மேலே குறிப்பிட்டவை மொத்தமும் மேல்நடுத்தர, கீழ்நடுத்தர, அன்றாட ஏழை உழைப்பாளிகள், மாதச் சம்பளம் வாங்குவோரின் தொகைகள்.
ஏன் கோரப்படவில்லை? - ‘பாடுபட்டுத் தேடிப் பணத்தைப் புதைத்து வைக்கும் கேடுகெட்ட மானிடரே கேளுங்கள்.. கூடு விட்டிங்கு ஆவிதான் போனபின்பு ஆரே சுமந்திருப்பார் பாவிகாள் அந்தப் பணம்’ என்று ஔவை எச்சரித்து ஆயிரம் ஆண்டுகள் ஆன பிறகும் நம் மனநிலையில் முதிர்ச்சியோ எச்சரிக்கை உணர்வோ வரவில்லை என்பதையே இது காட்டுகிறது.
‘உங்கள் எஞ்சிய பணம் மொத்தத்தையும் பசித்த வயிறுகளில் சேமித்து வையுங்கள்’ (அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன் பெற்றான் பொருள்வைப் புழி) என்று வள்ளுவர் சொன்னதுபோல், செய்யும் அளவுக்குத் தன்னலமற்ற தியாக உணர்வு இல்லாவிட்டாலும்கூடக் குறைந்தபட்சம் நம்முடைய மனைவி மக்களின் வயிறுகள் பசியில் காயாத வண்ணமாவது செய்ய வேண்டியது அவசியமல்லவா? சிறிய அளவிலோ பெரிய அளவிலோ சம்பாதிக்கும் யாராக இருந்தாலும், ‘எனக்குத் திடீரென்று ஏதாவது ஆகிவிட்டால், என் மனைவியும் பிள்ளைகளும் நடுத்தெருவில் நிற்கும் நிலை நேராத அளவுக்கு ஏதாவது ஏற்பாடு செய்துவிட்டுப் போக வேண்டும்’ என்றுதான் நினைப்பார்கள்.
அந்த எண்ணம்தான் ஆயுள் காப்பீட்டில் தொடங்கி, வீட்டுக்குள் சிறுவாடு சேமிப்பு, சீட்டுப் பணம் சேர்ப்பு, அஞ்சல் நிலைய சேமிப்புக் கணக்கு, வங்கிக் கணக்கு, வங்கி வைப்புக் கணக்கு, தொடர் வைப்புக் கணக்கு, பரஸ்பர நிதிக் கணக்கு, பங்குச் சந்தை முதலீடு, வெள்ளி, தங்கம் வாங்குவது என்று அவரவர் சக்திக்கு ஏற்ப சம்பாத்தியத்தைப் பிரித்துப் போட வைக்கிறது.
ஆனால், எங்கெங்கே எவ்வளவு பணம் இருக்கிறது என்கிற விவரத்தைத் தன் குடும்பத்தினரிடம் தெளிவாகச் சொல்லிவைக்கும் வழக்கம் பலரிடம் இல்லை என்பதையே இந்த ரூ. 2 லட்சம் கோடி உரிமை கோரப்படாத தொகை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.
நேரும் விபரீதங்கள்: என்னுடைய 35 வருட பணிக் காலத்தில் என்னுடன் பணியில் இருந்து திடீரென்று இறந்தோர் உண்டு. ஒவ்வொருவர் இறப்பின்போதும் அலுவலக நண்பர்கள் உதவியின்றி இறந்தவருடைய நெருங்கிய உறவினர்களுக்கு அடுத்து என்ன செய்ய வேண்டும் என்றுகூடத் தெரிந்ததில்லை. பணியில் இருக்கும்போது இறந்தால், என்னென்ன சலுகைகள் இறந்தவருடைய நெருங்கிய உறவினர்களுக்கு (குறிப்பாக, இறந்தவர் கணவர் என்றால் மனைவிக்கு) உண்டு என்கிற விவரங்கள் கிட்டத்தட்ட யாருக்கும் தெரிவதில்லை.
அலுவலகத்தில் அந்தப் பிரிவில் இருப்போரின் இளகிய மனம் மட்டுமே அவர்களுடைய உதவிகளுக்கான இறைச் சலுகை. பெண்ணுக்குத் தன் உரிமையைக் கோருவதில் இருக்கும் தயக்கம் (‘புருஷன் செத்திருக்கான்; பணம் பணம்னு அலையறாளே’ என்று பேசிவிடுவார்களோ என்கிற தயக்கம்) பலவற்றை இழக்க வைத்துவிடும்.
குறிப்பாக, தனியார் நிறுவனங்களிலும் அமைப்புசாரா சேவைத் தொழில்களிலும். சில இறப்புகளில் கண்ட பரிதாபமான விஷயம்: இறந்தவருடைய மனைவி அதிகம் படித்தவராக இல்லாது இருப்பது. பள்ளிப் படிப்புக்கூட முடியாத பிள்ளைகளுடன் அரசு மருத்துவமனை சவக்கிடங்கு அருகில் கணவரின் சடலத்துக்காகக் காத்திருக்கும் பெண்களைப் பார்க்கும் போது, மிகவும் வேதனையாக இருக்கும்.
“எனக்கு எதுவுமே தெரியாதே... ஏடிஎம்ல பணம் எடுக்கறது எப்படின்னுகூடத் தெரியாம என்னை வச்சிட்டு இப்படிப் பொசுக்குன்னு போய்ச் சேர்ந்திட்டாரே...” என்று துணைப் பொதுமேலாளர் நிலையில் இருந்து, இறந்துபோன ஒருவருடைய மனைவி கதறியது என் காதுகளில் ஒலித்த வண்ணம் உள்ளது.
எவ்வளவு பொறுப்பற்ற செயல் அது. ‘என் மனைவியை ராணி மாதிரி வைத்திருப்பேன்; நானே அவளுக்குத் தேவையான எல்லாம் செய்து தருவேன்’ என்கிற அசட்டுத்தனத்தின் அகோரப் பக்கமே மேற்சொன்னது. எந்தப் பெண்ணுக்கும் அந்த நிலைமை வரக் கூடாது.
இன்னொரு பக்கமும் உள்ளது. திருமணம் ஆகும் முன் வேலையில் சேர்ந்தவர்கள், திருமணம் ஆன பிறகு அதனை நிர்வாகத்துக்கு முறைப்படி தெரிவிக்க வேண்டும் என்று விதி இருக்கிறது. அவருடைய பணிக்கொடை உள்ளிட்ட பணம் சார்ந்த தொகைகளுக்கு யாரெல்லாம் முன்மொழியப்பட்டார்கள் (Nominee) என்கிற விவரங்களை உரிய படிவங்கள் மூலம் சமர்ப்பிக்க வேண்டும். இவற்றைக்கூடச் செய்யாத பொறுப்பற்ற மனிதர்களை என் பணிக் காலத்தில் சந்தித்திருக்கிறேன்.
இளம் வயதில் இறந்த ஓரிரண்டு இளைஞர்களின் பணிக்கொடை முதலான தொகையினை தம் திருமணத்தை அலுவல்பூர்வமாக அவர்கள் தெரிவித்திராத காரணத்தால், அவர்களின் மனைவியருக்குக் கொடுக்க இயலாத சிக்கல்களும் ஏற்பட்டன. கோரப்படாத இனத்தில் தூங்கும் பணத்தில் இதுவும் ஒரு பகுதி.
செய்ய வேண்டிய கடமைகள்: எப்போது சம்பாதிக்க ஆரம்பிக்கிறோமோ உடனடியாகக் கீழ்க்கண்ட விவரங்களைக் கையேடாகத் தயாரிப்பதை ஒவ்வொருவரும் கடமையாக உணர வேண்டும். திடீரென்று ஏதேனும் அசம்பாவிதம் நிகழ்ந்துவிட்டால், அலுவலகத்தில் இருந்து வர வேண்டிய தொகை; அது சம்பந்தமாகத் தொடர்புகொள்ள வேண்டிய அதிகாரி; உதவி செய்யக்கூடிய அலுவலக நண்பர்; ஆயுள் காப்பீடாகப் போடப்பட்டுள்ள காப்பீட்டு விவரங்கள்; அது தொடர்பாக அணுக வேண்டிய அதிகாரி / நண்பர் தொடர்பான விவரங்கள் வாழ்க்கைத் துணைக்கு அவசியம் தெரிந்திருக்க வேண்டும்.
எந்தெந்த வங்கிகளில் எவ்வளவு தொகை இருக்கிறது என்கிற விவரங்கள், ஏடிஎம் கார்டுகளின் ‘பின் எண்’கள், கிரெடிட் கார்டுகள் பற்றிய விவரங்கள், அவற்றைப் பயன்படுத்தும் வழிமுறைகள், வங்கிகள் / வேறு நிதி நிறுவனங்களில் இடப்பட்டுள்ள முதலீட்டு விவரங்கள், அஞ்சல் நிலையச் சேமிப்பு விவரங்கள், அசையாச் சொத்துக்கள் தொடர்பான பத்திரங்கள் வைக்கப்பட்டிருக்கும் விவரங்கள், வங்கி லாக்கர்கள், அவற்றில் இருப்பவை பற்றிய விவரங்கள், பங்குச் சந்தையில் முதலீடு செய்யப்பட்டுள்ள விவரங்கள் - உடனடியாக அவை அனைத்தையும் விற்றுப் பணமாக்கி வங்கி டெபாசிட்டுகளில் போட உதவும் நண்பரின் விவரங்கள், நண்பர்களுக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் கடன்கள், வாங்கப்பட்டுள்ள கடன்களின் விவரங்கள் என அனைத்தையும் வாழ்க்கைத் துணையிடம் தெரிவித்திருப்பது மிகவும் அவசியம்.
பல நிறுவனங்களில் ஒவ்வோர் ஆண்டின் இறுதியிலும் ஊழியர்களின் அசையும் சொத்து, அசையாச் சொத்து விவரங்களைச் சமர்ப்பிக்க வேண்டும் என்று விதிகள் இருக்கின்றன. அந்தப் படிவத்தில் அவரைச் சார்ந்திருக்கும் உறவுகள் (Dependants) கையெழுத்திட்டிருக்க வேண்டும் என்கிற கட்டாயம் இருந்தால்கூடக் குறைந்தபட்சம் அரசு, அரசு சார்ந்த நிறுவன ஊழியர்களின் குடும்பங்களில் இந்த இடைவெளியைப் பெருமளவில் குறைக்கலாம்.
கணவனைப் பறிகொடுத்துக் கலங்கியிருக்கும் பெண்ணைச் சுற்றி நிற்கும் சொந்தக்கார ஆண்கள் ஏதேதோ கேட்கும்போதெல்லாம், சொந்தத் துக்கத்துக்கு அழுவதா, பிள்ளைகளை நினைத்து அழுவதா என்கிற கவலையை எல்லாம் தாண்டி, எதிர்காலம் குறித்த விரக்தி அப்பெண்ணை விபரீத எல்லைக்கு அழைத்துச் சென்றுவிடாமல் தடுக்கத்தக்க ஒரே அங்குசம் பணம் ஒன்றுதான்.
‘அதற்கு வகை செய்துவிட்டுத்தான் போயிருக்கிறார்; அவரை மனதில் துணையாகக் கொண்டு தைரியமாக எதிர்காலத்தைப் பார்த்துக்கொள்ளலாம்’ என்கிற அடிமன நம்பிக்கை, அந்த நிலையில் ஒவ்வொரு பெண்ணுக்கும் அவசியம். அந்த நம்பிக்கை ஏற்படும் அளவுக்கு வெளிப்படையாக நடந்துகொள்ள வேண்டியது ஆண்களின் கடமை.
- தொடர்புக்கு: pnmaran23@gmail.com