சிறப்புக் கட்டுரைகள்

எம்எஸ்பி அறிவிப்பு ஏன் குழப்ப வேண்டும் விவசாயிகளை?

அ.நாராயணமூர்த்தி

விவசாயிகள் ஆவலுடன் எதிர்பார்த்ததுபோலவே, 2025-26ஆம் ஆண்டு காரீஃப் பருவத்துக்கான 14 பயிர்களுக்குக் குறைந்தபட்ச ஆதார விலைகளை (Minimum Support Prices) மத்திய அரசு மே 28 அன்று அறிவித்திருக்கிறது. தென்மேற்குப் பருவமழை முன்னதாகவே தொடங்கிவிட்டதால், இந்த அறிவிப்பு சரியான நேரத்தில் வெளியிடப்பட்டுள்ளது என்று சொல்ல வேண்டும்.

கடந்த ஆண்டைவிட, இந்தத் தடவை சராசரியாகப் பயிர்களுக்கு 7% விலை உயர்த்தப்பட்டுள்ளது. எனினும் உற்றுநோக்கினால், இந்த அறிவிப்பானது பயிர்களின் சாகுபடிச் செலவையோ, அவற்றின் உள்நாட்டுத் தேவையையோ கருத்தில் கொள்ளாமல் விவசாயிகளின் பயிர்த் தெரிவுத் திட்டத்தைக் குழப்புகிறது என்றே சொல்ல வேண்டும்!

நெல்​லுக்கு உயர்வில்லை: இந்தியாவின் முதன்மைப் பயிராக ஏறக்குறைய 470 லட்சம் ஹெக்டேரில் பயிரிடப்​படும் பயிரான நெல்லைப் பற்றி முதலில் பார்ப்​போம். மொத்த சாகுபடிப் பரப்பளவில் மட்டுமல்​லாமல், அரசு மூலம் மேற்கொள்​ளப்​படும் கொள்முதல்​களிலும் நெல் முதன்மைப் பயிராக உள்ளது.

ஆனால், நெல்லுக்கான எம்எஸ்பி கடந்த ஆண்டைவிட வெறும் 3% மட்டுமே உயர்த்​தப்​பட்​டுள்ளது! சாகுபடிச் செலவு பிளஸ் 50% [(Cost A2+FL)+50%] என்ற எம்எஸ்பி விலைக் கொள்கையை 2018 முதல் மத்திய அரசு பின்பற்று​வ​தாகக் கூறப்​படு​கிறது. அப்படி​யா​னால், நெல்லுக்கான சாகுபடிச் செலவு கடந்த ஆண்டைவிட வெறும் 2%தான் உயர்ந்​திருக்​கிறதா என்னும் கேள்வி எழுகிறது.

டீசல், உரம், பயிர்ச் சாகுபடிக்குப் பயன்படுத்​தப்​படும் கூலி ஆள்களின் செலவுகள் உயர்ந்​திருப்பது குறித்து அரசு ஏன் பரிசீலிக்க​வில்லை என்னும் கேள்வியும் எழுகிறது. இவற்றோடு, பயிர்ச் சாகுபடிக்காக நிலத்​தடி நீரைச் சமீபகாலமாக அதிகம் பயன்படுத்து​வ​தால், நீர்ப்​பாசனச் செலவு​களும் அதிகரித்​து உள்ளன.

உண்மை நிலவரம் இப்படி​யிருக்க, வெறும் 3% உயர்வு என்பது எப்படி நெல் விவசா​யிகளுக்கு லாபத்தைக் கொடுக்​கும்? உண்மையான பயிர்ச் செலவு மதிப்​பீடு​களைக் கணக்கில் கொள்ளாமலோ, 2018 முதல் பயன்படுத்​தப்​படும் விலை சூத்திரத்தைப் பயன்படுத்​தாமலோ நெல்லுக்கு விலை நிர்ண​யிக்​கப்​பட்​டதுபோல் தெரிகிறது.

நெற்ப​யிருக்கான உயர்வுபோல் அல்லாமல் சோளம், கம்பு, கேழ்வரகு, மக்காச்​சோளம் போன்ற ஊட்டச்​சத்து தானியங்​களுக்குச் சராசரியாக 9.36% விலை உயர்த்​தப்​பட்​டுஉள்ளது. இதில் கேழ்வரகுக்கு மட்டும் 13.89% விலை உயர்வு கொடுக்​கப்​பட்​டுள்ளது. இதற்குச் சரியான காரணமும் சொல்லப்​பட​வில்லை.

தவறான சமிக்ஞை: பருப்புப் பயிர்​களுக்கு அறிவிக்​கப்​பட்​டுள்ள விலை உயர்வு விவசா​யிகளுக்குத் தவறான சமிக்​ஞையைக் கொடுக்​கிறது. இந்தியாவில் பருப்புப் பயிர்​களுக்கான தேவை பல காரணங்​களால் ஆண்டு​தோறும் தொடர்ந்து அதிகரித்து​வரு​கிறது. அதேவேளை, நம்முடைய உள்நாட்டு உற்பத்​திக்​கும், தேவைக்கும் இடையிலான இடைவெளி விரிந்து​கொண்டே செல்கிறது.

இதன் விளைவாக, பருப்பு இறக்கும​தி​யும், அதற்காகச் செய்யப்​படும் செலவும் உயர்ந்து வருகின்றன. நம் நாட்டில் பருப்புப் பயிர்​களின் தேவை அதிகரித்து வருவதால், உள்நாட்டு உற்பத்​தி​யாளர்​களுக்கு நல்ல விலை கிடைக்க வேண்டும் அல்லவா? ஆனால், காரீஃப் பருவத்தில் பயிரிடப்​படும் மூன்று முக்கியப் பருப்புப் பயிர்களான துவரை, உளுந்து, பச்சைப் பயறு ஆகியவற்றுக்கான எம்எஸ்பி சராசரியாக வெறும் 4.12% மட்டுமே உயர்த்​தப்​பட்​டுள்ளது.

பச்சைப் பயறுக்கு வெறும் 1% உயர்வு மட்டுமே! பச்சைப் பயறு சாகுபடிச் செலவு 0.5% மட்டுமே உயர்ந்துள்ளது என்று எந்தப் புள்ளி​விவரம் சொல்கிறது? நாம் அதிகளவு பருப்பு வகைகளை இறக்குமதி செய்யும் இந்நேரத்​தில், பச்சைப் பயறுக்கு முக்கி​யத்துவம் கொடுக்​காமல் இருப்பது, எப்படி அரசின் நல்ல கொள்கை முடிவாக இருக்க முடியும்?

எண்ணெய்​வித்துப் பயிர்​களின் நிலையும் சற்று விசித்திரமாக இருக்​கிறது. இந்தியாவில் சுமார் 13 மில்லியன் ஹெக்டேரில் பயிரிடப்​படும் மிகப்​பெரிய எண்ணெய்​வித்துப் பயிரான சோயாபீன்​ஸுக்கு ஒப்பீட்​டளவில் பார்த்​தால், அதிக எம்எஸ்பி உயர்வு (8.91%) கிடைத்​துள்ளது.

ஆனால், பாரம்பரிய எண்ணெய்​வித்துப் பயிர்களான நிலக்கடலை (7.08%), எள் (6.25%) போன்ற பயிர்​களுக்கு மிதமான உயர்வு மட்டுமே கிடைத்​துள்ளது. 2023-24இல் மட்டும் இந்தியாவின் சமையல் எண்ணெய் இறக்குமதிச் செலவு ரூ.1.4 லட்சம் கோடியைத் தாண்டி​விட்​ட​தாகத் தரவுகள் கூறுகின்றன.

இந்த வெளிநாட்டுச் சார்பைக் குறைக்க வேண்டு​மென்​றால், எண்ணெய்​வித்துப் பயிர்​களுக்கான விரிவான உற்பத்திக் கொள்கை தேவை. உள்நாட்டு உற்பத்தியை ஊக்கு​விக்கும் ஒரு முக்கியக் கருவியாக எம்எஸ்​பியைக் கருத வேண்டு​மென்​றால், நிலக்​கடலை, எள் பயிரிடும் விவசா​யிகளுக்​கும், சோயாபீன்ஸ் விவசா​யிகளுக்குக் கொடுக்​கப்​பட்​டுள்​ளதுபோல் விலை உயர்வு கொடுப்பது அவசியம்.

எம்எஸ்பி நிர்ண​யத்தில் குழப்பம்: காரீஃப் பருவத்​துக்கான 14 பயிர்​களுக்கு அறிவிக்​கப்​பட்​டுள்ள விலை உயர்வு, எம்எஸ்பியை நிர்ண​யிப்​பதில் குழப்பம் உள்ளது தெளிவாகிறது. இதைச் சரியாகப் புரிந்து​கொள்​வதற்கு, எம்எஸ்பி எவ்வாறு தீர்மானிக்கப்படுகிறது என்பதைத் தெரிந்து​கொள்வது அவசியம். பயிர்​களின் உற்பத்திச் செலவு, உள்நாட்டுத் தேவை, உலகச் சந்தையின் விலை போன்ற காரணி​களைக் கருத்​தில்​கொண்டு, ஒவ்வொரு பயிருக்கும் எம்எஸ்பி விலை பல காலமாக நம் நாட்டில் நிர்ண​யிக்​கப்​பட்டது.

ஆனால், இந்திய வேளாண் விலைக் கொள்கையில் முக்கியத் திருப்​பமாக, 2018 முதல் பயிர்​களுக்கான எம்எஸ்பி விலைக் கணக்கீட்டு முறையில் பெரிய மாற்றம் கொண்டு​வரப்​பட்​டுள்ளது. அதாவது, வேளாண் செலவுகள் - விலைகள் ஆணையத்தால் (CACP -Commission for Agricultural Costs and Prices) பயன்படுத்​தப்​படும் A2+FL செலவுக் காரணியான, “விவசா​யிகளால் பயிர்ச் சாகுபடிக்குச் செலுத்​தப்​படும் உற்பத்திச் செலவு​களுக்கு (குடும்ப உறுப்​பினர்​களின் உழைப்​புக்கான கூலிச் செலவையும் சேர்த்து)” மேலாக 50% கூட்டப்​பட்டு [(A2+FL)+50%] எம்எஸ்பி விலை நிர்ணயம் செய்யப்​படு​கிறது.

இதன்படி பார்த்​தால், தற்போதைய எம்எஸ்பி விலை நிர்ண​யத்தில் குழப்பம் இருப்பது தெரிய​வரும். மொத்தச் சாகுபடிச் செலவுகள் பயிர்​களுக்கு இடையில் அதன் தன்மையைப் பொறுத்து மாறுபடும். ஆனால் கூலி, டீசல், உரம் போன்ற முக்கிய இடுபொருள்​களின் விலை அதிகரிப்பு, எல்லாப் பயிர்​களுக்கும் ஏறக்குறைய ஒரே மாதிரி​யாகத்தான் இருக்க முடியும். இப்படிப்பட்ட சூழலில், ஒவ்வொரு பயிருக்கும் எம்எஸ்பி சதவீத உயர்வு இவ்வளவு வேறுபடுவது ஏன் என்ற கேள்வி எழுகிறது.

எம்எஸ்பி விலைக் கொள்கையில் தெளிவற்ற நிலை இருந்​தால், விவசா​யிகள் எந்தப் பயிரை எவ்வளவு விதைப்பது, எவ்வளவு வளங்களை ஒதுக்குவது, எவ்வளவு வருமானம் கிடைக்கும் என்பது போன்ற முக்கியமான முடிவுகளை எடுப்​பதில் சிக்கல்கள் ஏற்படும். பெரும்​பாலான விவசா​யிகளுக்கு, எம்எஸ்பி என்பது வெறும் ஆதார விலை மட்டுமல்ல; அது ஒரு எதிர்​காலப் பயிர்த் திட்டத்​துக்கான வழிகாட்டும் கலங்கரை விளக்கம்.

அந்தக் கலங்கரை விளக்கம் தெளிவற்றோ சீரற்​ற​தாகவோ இருந்​தால், அது குழப்​பத்தை உருவாக்கி, அரசாங்​கத்தின் விலைக் கொள்கை மீதுள்ள நம்பிக்கையைக் குலைத்து​விடும். கள யதார்த்​தங்​களுடன் தொடர்​பில்லாத அல்லது தன்னிச்​சை​யாகக் கொடுக்​கப்​படும் விலை உயர்வுக்கு விவசா​யிகள் தங்கள் பயிர்த் திட்டங்களை மாற்றி அமைப்​பார்கள் என்று அரசாங்கம் நினைத்தால் அது தவறு.

கொள்கை வகுப்​பாளர்​களின் கவனத்​துக்​கு... பயிர்​களுக்கான எம்எஸ்பி விலை அறிவிப்பு விவசாயக் கொள்கையின் ஓர் அங்கமாக​வும், அரசியல்​ரீ​தியாக மிகவும் முக்கி​யத்துவம் வாய்ந்த ஒரு கருவி​யாகவும் பார்க்​கப்​படு​கிறது. எனவே, இது வெறும் வருடாந்திர அறிவிப்பாக மட்டும் இல்லாமல், உண்மையான செலவுப் போக்கு​களை​யும், கொள்கை முன்னுரிமை​களையும் பிரதிபலிக்க வேண்டும். எல்லா​வற்றுக்கும் மேலாக, அது வெளிப்​படை​யான​தாக​வும், நம்பகத்​தன்மை கொண்ட​தாகவும் இருக்க வேண்டும்.

முடிவாக, ஒவ்வொரு பயிரின் விலை உயர்வுக்கும் பின்னால் ஏன் இந்த உயர்வு செய்யப்​படு​கிறது என்பதில் தெளிவு இல்லை​ என்​றால், விவசா​யிகளுக்கு எம்எஸ்பி ஒரு குழப்​பத்தை ஏற்படுத்தி, கொள்கை வகுப்​பாளர்​களுக்குச் சங்கடத்தை ஏற்படுத்​தி​விடும். பசுமைப்பு​ரட்சி தொடங்கிய காலத்​திலிருந்து நெல்லுக்கும் கோதுமைக்கும் சாதகமாகச் செயல்​படுத்​தப்பட்ட தவறான விலைக் கொள்கை​யால், பருப்பு - எண்ணெய்​வித்துப் பயிர்​களுக்கு நாம் இன்றுவரை வெளிநாட்டு இறக்கும​தியைச் சார்ந்​திருக்​கின்ற சூழ்நிலை ஏற்படுத்​தப்​பட்டு​விட்டது.

விவசா​யிகள் வேளாண் பொருள்​களின் கடந்தகால விலை மாற்றங்​களைக் கூர்ந்து கவனித்து, அதற்கேற்பத் தங்கள் பயிர்த்திட்​டங்​களைத் தெரிவுசெய்​கிறார்கள் என்கிற வேளாண் பொருளாதார மேதை மார்க் நெர்லோவின் முக்கியமான கோட்பாட்டைத் தற்போதுள்ள கொள்கை வகுப்​பாளர்கள் மறந்து​விடக் கூடாது.

- தொடர்புக்கு: narayana64@gmail.com

SCROLL FOR NEXT