சிறப்புக் கட்டுரைகள்

பவானி ஆற்றைப் பாதுகாப்போம்!

எஸ்.ஜீவா

லட்சக்கணக்கான மக்களின் வாழ்வாதாரமாக விளங்கும் ஆறு பவானி. இந்த ஆற்றின் மீது இரண்டு வகைக் கொடுந்தாக்குதல்கள் நிகழ்த்தப்படுகின்றன. ஒன்று, கொடிய நச்சுக்கழிவுகளைச் சுத்திகரிக்காமல் ஆற்றில் கலப்பதன் மூலம் ஊரெங்கும் புற்றுநோய்க்கான சூழலை உருவாக்குகின்றன ஆலை நிர்வாகங்கள்.

இரண்டு, நடைபெறாத வேலைகளுக்கு ‘அணைகள் புனரமைப்பு - மேம்படுத்துதல் திட்டம்’ (Dam Rehabilitation and Improvement Project - DRIP) என்று பெயர் சூட்டி, உலக வங்கி மூலம் கடன்களை வழங்கி ஆற்று நீரை வசப்படுத்த முனைகின்றன பெரு நிறுவனங்கள்.

பவானி ஆறு 18க்கும் மேற்பட்ட திட்டங்கள் மூலம் கோவை, திருப்​பூர், ஈரோடு, கரூர் மாவட்​டங்​களில் உள்ள லட்சக்​கணக்கான மக்களின் குடிநீர் ஆதாரமாக விளங்கு​கிறது. இப்பகு​தியில் உள்ள பல்லா​யிரக்​கணக்கான ஏக்கர் நிலங்​களுக்கும் பவானிதான் ஒரே நீராதாரம்.

ஆக, பவானி ஆறு சார்ந்த பொருளா​தாரச் சுழற்சி ஒட்டுமொத்தத் தமிழகப் பொருளா​தா​ரத்​துக்கும் துணை செய்யக்​கூடிய​தாகும். இப்படி மக்களுக்கு வாழ்வளிக்கும் ஆற்றின் கரையோர ஊர்களெல்லாம் மரண பயத்தில் உறைந்து கிடப்​பதுதான் பேரவலம். காரணம் புற்று​நோய்.

கண்டு​கொள்ளாத அரசுகள்: கோவை மாவட்டம் மேட்டுப்​பாளையம் முதல் ஈரோடு மாவட்டம் சத்தி​யமங்கலம் வரைக்கும் ஆற்றின் ஓரத்திலேயே அமைந்​திருக்கிற சிறிதும் பெரிதுமான ஆலைகள் வெளியேற்றுகிற கழிவு​களால்தான் புற்றுநோய் பாதிப்பு பரவலாக இருக்​கிறது என்பதற்குச் சான்றுகள் ஏராளமாக உள்ளன. ஆலைக் கழிவு​களில் அளவுக்கு அதிகமான ஈயம், ஆர்சனிக், காட்மியம், குரோமியம் போன்ற நச்சுக் கனிமக் கழிவுகள் கலந்திருக்​கின்றன.

இதனால் புற்றுநோய் மட்டுமல்ல, நரம்பு மண்டலப் பாதிப்பு, சிறுநீரகக் கோளாறு, இதயக் கோளாறுகள், தோல் நோய்கள் போன்ற​வற்றுடன், குழந்தை​களின் குறைவளர்ச்சி, திறன் குறைபாடு எனப் பேரழி​வுகள் நிகழ்ந்து​கொண்​டிருக்​கின்றன.

பவானி​சாகர் அணையை ஒட்டி​யுள்ள கொத்தமங்கலம் என்னும் பஞ்சா​யத்​துக்குள் அடங்கிய 36 கிராமங்​களில் நுழைந்து பார்த்​தால், வீதிக்கு ஒரு புற்றுநோயாளி இருப்பதையும், வீட்டுக்கு ஒருவர் இந்நோயால் இறந்து​போயிருப்பதையும் தெரிந்துகொள்ளலாம். இதை ‘ஜீவந​தியின் தீராவலி’ ஆவணப்படம் மூலமாகப் பதிவு செய்திருக்​கிறோம்.

அழியும் கொடை: ஆலைகளின் நச்சுக் கனிமக் கழிவு​களுக்கு மனிதர்கள் மட்டும் பலியாக​வில்லை, விளைநிலங்​களும் விளைச்​சலும் நஞ்சாகின்றன. கால்நடைகளும் சேர்ந்தே பலியாகின்றன. பவானி ஆற்றை ஒட்டிய காட்டுப் பகுதி உயிர்ப்​பன்மை மிக்க பொக்கிஷம். ஏராளமான தாவரங்​களும் விலங்கு​களும் நிறைந்த இயற்கையின் கொடை. ஆற்றில் கொட்டப்​படும் நச்சுக்​கழி​வு​களால் இவையும் அழிந்து​கொண்​டிருக்​கின்றன.

இதில் கொடுமை என்னவென்​றால், இவையெல்லாம் மத்திய– மாநில அரசுகளுக்கு நன்றாகவே தெரியும். சொல்லப்​போ​னால், தமிழ்​நாட்டில் புற்றுநோய் அதிகமாக இருக்கும் மாவட்டம் ஈரோடு என்பதை அரசே ஒப்புக்​கொண்​டுள்ளது. ஆனால், அதற்கான காரணத்தைத்தான் கண்டு​கொள்ள​வில்லை. தமிழ்நாடு வேளாண் பல்கலைக்​கழகம் முதல் உலக நாடுகளின் நிதி ஆதாரத்தில் இயங்கும் இயற்கைக்கான உலகளாவிய நிதியம் (WWF) போன்ற தொண்டு நிறுவனங்கள் வரை தொடர்ச்சியாக பவானி ஆற்றை ஆராய்ச்சி செய்து அறிக்கைகளை வெளியிடு​கின்றன. அரசுகள் இவற்றைப் பொருட்​படுத்து​வ​தாகத் தெரிய​வில்லை.

ஆபத்தான திட்டம்: இந்தச் சூழலில், பவானி ஆற்றின் மீது உலக வங்கி செய்யும் முதலீடு அச்சுறுத்து​கிறது. ‘அணைகள் புனரமைப்பு - மேம்படுத்​துதல் திட்டம்’ என்கிற பெயரில் நாடு முழுவதும் முக்கிய அணைகளின் மீது உலக வங்கி முதலீடு செய்கிறது. முதல் கட்டம் என்று சொல்லப்​படுகிற 2012 – 2021 காலத்தில் 2,567 கோடி ரூபாய் முதலீடு செய்யப்​பட்​டுள்ளது. இரண்டாவது கட்டமாக, 2021 – 2027 எனக் கால வரையறை செய்யப்​பட்​டுள்ளது.

இரண்டாவது கட்டத்தில் தமிழ்​நாட்டில் உள்ள வைகை (மதுரை மாவட்​டம்), ஆனைக்​குட்டம் (விருதுநகர் மாவட்​டம்), மிருகந்தா (திரு​வண்ணாமலை மாவட்​டம்), அமராவதி (திருப்பூர் மாவட்டம்) ஆகியவற்றோடு பவானி​சாகர் என ஐந்து பெரிய அணைகளில் உலக வங்கி முதலீடு செய்திருக்​கிறது. பவானி​சாகர் அணையில் மட்டும் 19 கோடியே 89 லட்சம் ரூபாய் முதலீடு செய்யப்​பட்​டிருக்​கிறது.

திட்டத்தின் நோக்கமாக நீர்த்​தேக்கப் பகுதியில் வண்டல் - கழிவு தேங்காவண்ணம் சுத்தம்​செய்வது, நீர்ப்​பிடிப்புப் பகுதியைச் சுற்றி​யுள்ள சுற்றுச்​சூழல் / உயிர்ப்​பன்​மையைப் பாதுகாப்பது முதலியவை கூறப்​படு​கின்றன. ஆனால், இதுவரைக்கும் திட்ட​வட்டமாக வேலைகள் எதுவும் நடந்ததுபோல் தெரிய​வில்லை. நீர்த்​தேக்கப் பகுதியில் வண்டல் - கழிவு அகற்றும் பணிகள் தொடங்​கப்​பட்​டிருந்​தால், உறைந்து கிடக்கும் நச்சுக்​களும் அவற்றுடன் அகற்றப்​பட்​டிருக்​கும். இன்னமும் போராடிக்​கொண்​டிருக்கும் மக்களுக்கு ஆறுதலாவது கிடைத்​திருக்​கும்.

அப்படி​யா​னால், முறையாக நடக்காத பணிகளுக்கு உலக வங்கி கடன் அளிப்பது ஏன்? உலக வங்கி கடன் அளிப்பது ஒரு நாட்டைக் கடன் வலைக்குள் சிக்க​வைத்து, அதன் வளங்களைப் பெரு நிறுவனங்​களுக்குத் தாரைவார்ப்​பதுதான் நோக்கம் என்று முன்வைக்​கப்​படும் விமர்சனம் குறித்து யோசிக்க வேண்டி​யிருக்​கிறது.

நெருக்கடி தரும் ஒப்பந்தம்: நமது நாடு கையெழுத்​திட்​டுள்ள காட்ஸ் (GATS) ஒப்பந்​தத்​தின்படி, நிலத்தடி நீர், ஆறுகள், குளங்கள், ஏரிகள் முதலான நீராதா​ரங்கள் அனைத்தையும் படிப்​படி​யாகப் பெருநிறு​வனங்​களிடம் ஒப்படைக்க வேண்டும்; அதன் மூலம் குடிநீர், பாசனப் பயன்பாட்டுக்கான நீரை விற்பனைப் பொருளாக்க வேண்டும் என்பதும் நிபந்​தனை​யாகும். மத்திய அரசும் மாநில அரசும் போட்டி போட்டுக்​கொண்டு உலக வங்கி​யிடம் கடன் வாங்கு​கின்றன.

அதனால், உலக வங்கியின் நிர்ப்​பந்​தத்தை நிறைவேற்றியே தீர வேண்டிய கட்டா​யத்தில் இருக்​கின்றன. அதனால்தான் நாடெங்கும் குடிநீர் என்பது விற்பனைப் பொருளாக மாற்றப்​பட்டு​விட்டது. வீடுகளுக்கான குடிநீர் விநியோகமும் தனியார் வசம் ஒப்படைக்​கப்​பட்டு​ வரு​கிறது.

கோவையில்கூட பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த சூயஸ் நிறுவனத்​திடம் குடிநீர் விநியோகம் ஒப்படைக்​கப்​பட்​டிருக்​கிறது. இனி, இது நாடெங்கும் விரிவுபடுத்​தப்​படலாம். இப்படிக் குடிநீரையும் விரைவில் விவசா​யத்​துக்கான நீரையும் ஆக்கிரமித்​துக்​கொண்டு விற்பனை செய்வதற்கு அடிப்படை என்ன? அதற்குத்தான் ஆற்றுநீர் விஷமாக்​கப்​படுவது அனுமதிக்​கப்​படு​கிறதோ என்கிற சந்தேகம் எழுகிறது. அதுபோலவே ஆற்றையும் அணையையும் பாதுகாப்பதன் பேரில் கடன் அளிப்​பதும் தொடர்​கிறது.

ஒரு கட்டத்தில் நமது அரசுகளிட​மிருந்து, “கடுமையான நிதிச்​சுமையால் ஆற்றைப் பராமரிக்க முடிய​வில்லை; கூடவே, நஞ்சாகி​விட்ட ஆற்றைச் சுத்தப்​படுத்தக் கூடுதல் நிதி தேவைப்​படு​கிறது; மக்களுக்குச் சுத்தமான குடிநீர் வேண்டும், விவசா​யத்தைப் பாதிக்​காமல் ஆற்றுநீர் பராமரிக்​கப்​படவும் வேண்டும்; எனவே, வேறு வழியின்றி ஆற்றைத் தனியாரிடம் ஒப்படைக்​கிறோம்” என்றொரு அறிவிப்பு வரலாம்.

அதன் பிறகு குடிநீரோடு, விவசா​யத்​துக்கான பாசன நீருக்கும் நாம் கட்டணம் செலுத்துவது கட்டாயமாக மாறலாம். பஹல்காம் தாக்குதலை​யொட்டி, நமது நாடு பாகிஸ்தான் மீது தாக்குதலை நடத்தியது. இந்தத் தாக்குதலுக்குப் பிறகு உலக வங்கியின் இன்னொரு பிரிவான பன்னாட்டு நாணய நிதியம் பாகிஸ்​தானுக்கு மீண்டும் கடனுதவி அளித்தது. அதை எதிர்த்த இந்தியா, கடனோடு சேர்ந்து விதிக்​கப்பட்ட 11 நிபந்​தனை​களைப் பாராட்​டியது.

உலக வங்கியும் பன்னாட்டு நாணய நிதியமும் சேர்ந்து மொத்தம் 50 நிபந்​தனைகளை விதித்​துள்ளன. அவற்றில் விவசாயம், குடிநீர், மின்சாரம் மொத்தத்தையும் தனியாரிடம் ஒப்படைக்க வேண்டும் என்பதும் அடங்கும். ஆம்! உலக வங்கிக்கு இந்தியா – பாகிஸ்தான் என்கிற பாகுபாடு எதுவும் கிடையாது.

- தொடர்புக்கு: drsjeeva15@gmail.com

SCROLL FOR NEXT