விளையாட்டுப் போட்டியில் அபிமான அணி கோப்பையை வெல்லும்போதோ, வீரர் ஒருவர் தடைகளைக் கடந்து சாதனை படைக்கும்போதோ சமூக ஊடகம் மகிழ்ச்சியில் துள்ளிக் குதிக்கிறது; குறிப்பிட்ட நிகழ்வுகளில் ஆவேசம் கொண்டு பொங்கி எழுகிறது; நெகிழ்ச்சியில் உருகுகிறது; மாற்றத்துக்கான மேடையாகவும் விளங்குகிறது.
எகிப்தில் மையம் கொண்டு, வளைகுடா நாடுகளில் வலுப்பெற்ற ஜனநாயகத்துக்கான அரபு வசந்தப் புரட்சிக்குச் சமூக ஊடகம் வித்திட்டது. உலகச் செல்வத்தின் பெரும் பகுதி மிகச் சிலரிடம் குவிந்திருப்பதை எதிர்த்து, அமெரிக்காவில் நடத்தப்பட்ட வால்ஸ்ட்ரீட் முற்றுகை, சமூக இயக்கமாக மாறிய ‘மீ டூ’ மற்றும் ‘பிளாக் லிவ்ஸ் மேட்டர்’ போராட்டங்களை மறந்துவிட முடியாது.
நவீன வாழ்க்கையில் சமூக ஊடகம் தொடர்ந்து ஏற்படுத்திக்கொண்டிருக்கும் தாக்கத்துக்கு இன்னொரு பக்கமும் இருக்கிறது. துவேஷம் கொள்வதும், பழிவாங்கத் துடிப்பதும்கூட அதன் முக்கியமான செயல்பாடுகளாக உள்ளன. சமூக ஊடகத்தால் அடையாளம் காட்டப்பட்டுப் புகழ்பெற்றவர்களும், புதிய பாதை பெற்றவர்களும் இருக்கின்றனர். அதேநேரத்தில், ஓடஓட விரட்டப்படுபவர்களும் மன உளைச்சலுக்கு இலக்கானவர்களும் இருக்கின்றனர். எதிர்மறையான இப்பழக்கங்கள் தொடர்பாக ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர்.
ரத்துக் கலாச்சாரமும் விஷமிகள் படையும்: சமூக ஊடகம் உண்டாக்கிய போக்குகளில் ஒன்றான ‘கேன்சல் கல்சர்’ எனப்படும் ரத்துக் கலாச்சாரம் இதற்கு உதாரணம். பொதுவெளியில் உள்ள ஒருவரின் கருத்து அல்லது செயல் பிடிக்கவில்லை எனில், அவரைக் கூட்டாகப் புறக்கணித்துப் பழி வாங்குவதாக இது அமைகிறது. ‘டிரால் மாபியா’ எனப்படும் விஷமிகள் படை இன்னொரு உதாரணம். அப்பாவித் தனிநபர்கள் முதல் நட்சத்திரங்கள், அரசியல் தலைவர்கள் என யாரும் இதன் தாக்குதலுக்கு விலக்கல்ல.
இன்னொரு பக்கம் பார்த்தால், ‘இன்புளுயன்சர்’ எனப்படும் செல்வாக்காளர்கள் ஆதிக்கம் செலுத்துகின்றனர். விளம்பர வலை விரிப்பதோடு நில்லாமல், பொய்த் தகவல்களையும், பிழையான கருத்துகளையும் அள்ளித் தெளித்துத் தவறாக வழிகாட்டுவது சற்றும் கூச்சமின்றி நிகழ்கிறது.
செல்வாக்காளர்களைப் பின்பற்றி உடல் நலத்தைக் கெடுத்துக்கொண்டவர் பலர் எனில், பங்கு வர்த்தக ஆலோசனைகள் மூலம் கோடீஸ்வரர் ஆகலாம் என்னும் கனவில் கடனாளிகளாகி நிற்பவர்கள் பலர். நிதி செல்வாக்காளர்களுக்குக் கடிவாளம் போட முடியாமல் கட்டுப்பாட்டு அமைப்புகளே திகைத்து நிற்கின்றன.
இவற்றுக்கு மத்தியில் பெரும்பாலான பயனாளிகள், சமூக ஊடகத்தில் ஒரு கண் வைத்திருக்காவிட்டால் எதையேனும் தவற விட்டுவிடுவோமோ (FOMO) என்னும் பதற்றத்தில் தவிக்கின்றனர். இணையச் சமுதாயம், மெய்நிகர்க் கூட்டு வெளி என்றெல்லாம் போற்றப்பட்ட சமூக ஊடகம் திசை மாறிச் சென்றுகொண்டிருக்கிறதோ என்னும் அச்சம் உண்டாவதைத் தவிர்க்க முடியவில்லை.
ஆதாரக் குணங்களை மறக்க வேண்டாம்! - சமூக ஊடகத்தின் தற்போதைய நிலை மற்றும் எதிர்காலத் திசை தொடர்பான ஆய்வு அவசியம் என்றாலும், சமூக ஊடக எதிர் மனநிலை கொள்ள வேண்டியதில்லை. சமூக ஊடகம் கொண்டாடப்பட வேண்டிய ஒன்றுதான்.
கருத்துகளை, ஆர்வத்தை, ஆக்கங்களைப் பகிர்ந்துகொள்வதற்கான வாய்ப்பைச் சாமானியர்களின் கைகளில் அளித்த சமூக ஊடகத்தின் பங்களிப்பை யாரும் மறுக்க முடியாது. உண்மை மூடி மறைக்கப்படுவதற்கு எதிராகக் குரல் கொடுப்பதற்கும், எதிர்க் கருத்தைப் பதிவுசெய்து உண்மைக்கு வலுச்சேர்ப்பதற்கும் இது வழிவகுத்து உள்ளது.
அதேபோல, ஆர்வமும் திறமையும் இருந்தால் போதும், உலகம் உங்களுக்கான மேடை என்பதையும் சமூக ஊடகம் உணர்த்தியுள்ளது. சமூக ஊடகம் என்பதே, பயனாளிகள் தங்களுக்குள் தகவல் தொடர்புகொள்வதற்கான இணையச் சேவைகளின் தொகுப்பாகக் கருதப்படும் நிலையில், பயனாளிகளே இதில் எல்லாமுமாக அமைகின்றனர். கருத்துப் பரிமாற்றமும் உரையாடலும்தான் சமூக ஊடகத்தின் ஆதாரக் குணங்கள். இவற்றின் அடிப்படையில் ஒத்த கருத்துள்ள பயனாளிகள் இணைய வெளியில் தங்களுக்கான சமுதாயக் குழுக்களை உருவாக்கிக்கொள்ளச் சமூக ஊடகம் வழிசெய்கிறது.
வர்த்தக அணுகுமுறையின் ஆதிக்கம்: பயனர் வெளி எனப் போற்றப்பட்ட சமூக ஊடகம், அதன் பரிமாண வளர்ச்சியில் இப்போது வர்த்தகமயமாக்கப்பட்ட வெளியாக மாறி நிற்கிறது. இணையத்தில் பயனர்கள் சமூக ஊடகச் சேவையில் குவிந்திருப்பதைப் பார்த்த வர்த்தக நிறுவனங்களும், விளம்பர உத்தியாளர்களும், அவர்களைப் பின்தொடர்ந்து வந்து விளம்பர வலைவீசத் தொடங்கியது இதற்கு ஒரு காரணம் என்றால், இன்னொரு பக்கம், சமூக ஊடகப் பரப்பின் போட்டியில் முந்தைய முன்னணிச் சேவைகள், வருவாய் வேட்கையில் ‘அல்கோரிதம்’களை முன்னிறுத்தி எண்ணிக்கைகளை அடிப்படையாகக் கொண்ட வர்த்தக அணுகுமுறையைப் பின்பற்றியது இன்னொரு முக்கியமான காரணம்.
நண்பர்கள், பின்தொடர்பாளர்கள் எண்ணிக்கை என்பது நட்பு வட்டம் மற்றும் கருத்து வட்டத்தின் தன்மையை உணர்த்தியதற்கு மாறாக, செல்வாக்கின் வீச்சை உணர்த்தும் அம்சங்களாக வளர்த்தெடுக்கப்பட்டன. விருப்பங்களும், கைத்தட்டல்களும்கூட, செல்வாக்கை அளவிடவும், அறுவடை செய்யவுமே பயன்படும் நிலை. விளைவு, பயனாளிகளில் பலரும் வருவாய்க்கும் செல்வாக்குக்கும் ஆசைப்பட்டு, அல்காரிதம் காட்டும் வழியில் கண்களை மூடிக்கொண்டு செல்கின்றனர்.
எதைப் பகிர்வது, என்ன உரையாடுவது என்னும் ஆர்வத்துக்குப் பதிலாக, எதை, எப்படிப் பகிர்ந்தால் வீச்சும் பேச்சும் அதிகரிக்கும் என்பதிலேயே பலரும் கவனமாக இருக்கின்றனர். இதுதான் வளரும் பிள்ளைகளின் தனியுரிமை பற்றிக் கவலைப்படாமல், அவர்களின் படங்களைப் பெற்றோர் பகிர்ந்து, ‘ஒரு லைக் செய்யலாமே நண்பர்களே’ எனக் கெஞ்ச வைக்கிறது; இன்னும் கூடுதல் பார்வையை இலக்காகக் கொண்டு, ஆபத்தான முறையில் ரீல்களைப் படம்பிடிக்கவும், எல்லை மீறிச் செயல்படவும் தூண்டுகோல் ஆகிறது.
எதையும் எதிர்பாராமல் தங்களை வெளிப்படுத்திக்கொண்டவர்களின் மேற்பூச்சு இல்லாத தூய திறமையே தொடக்கக் காலத்தில் சமூக ஊடகத்தில் பலரைப் புகழ்பெற வைத்தது. ஆனால், திட்டமிட்ட உத்திகள் மூலம் கவனத்தை ஈர்க்கலாம் என்னும் சந்தைப்படுத்துதலும், விளம்பர நோக்கமும் கலந்த அணுகுமுறையும் இதைத் திசை மாற்றியிருக்கின்றன. எதிர்மறையாகச் சொன்னாலும் தவறில்லை, கவனத்தை ஈர்த்துவிட்டால் போதும் என்னும் மனநிலையே ஆதிக்கம் செலுத்துகிறது.
அடிப்படைக்குத் திரும்புதல்: இதற்கான மாற்று மருந்தும் நம்மிடம்தான் இருக்கிறது. கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டுகளில் ‘அடிப்படைக்குத் திரும்புதல்’ என்று சொல்லப்படுவதுபோல, சமூக ஊடக வெளி அதன் வேர்களுக்குத் திரும்ப வேண்டும். சமூக ஊடகத்தின் ஆதார அம்சங்களை உணர்வது மட்டும் அல்ல, அதன் பரந்து விரிந்த தன்மையையும் புரிந்துகொள்ள வேண்டும். சமூக வலைப்பின்னல் தளங்கள் (ஃபேஸ்புக், இன்ஸ்டகிராம், எக்ஸ், யுடியூப் போன்றவை) மட்டுமே சமூக ஊடகம் அல்ல, வலைப்பதிவுகளும் (ப்ளாக்), விக்கி சார்ந்த சேவைகளும், விவாதக் குழுக்களும் இதே பிரிவின் கீழ்தான் வருகின்றன என்பதை உணர வேண்டும்.
அதோடு, சமூக வலைப்பின்னல் சேவைகளிலேயே அவரவர் ஆர்வத்துக்கும், விருப்பத்துக்கும் ஏற்ப நூற்றுக்கணக்கான சேவைகள் இருப்பதையும் உணர வேண்டும். ‘அல்காரிதம்’களால் பயனாளிகளை இயக்கும், மையமாக்கப்பட்ட சேவைகளுக்கு மாறாக, பெடிவர்ஸ் (Fediverse) எனப்படும் மையம் இல்லாப் புது யுக சமூக ஊடகச் சேவைகளும் உருவாகிக் கொண்டிருப்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். இந்தச் சமூக ஊடக நாளில், பயனாளிகளாக நம்மை மீட்டெடுத்துச் சமூக ஊடகத்தின் பகிர்ந்துகொள்ளும் தன்மையை வளர்த்தெடுக்க உறுதிகொள்வோம்.
- தொடர்புக்கு: enarasimhan@gmail.com
ஜூன் 30 – சமூக ஊடக நாள்