சிறப்புக் கட்டுரைகள்

குழந்தையும் இயந்திரமும் குணத்தால் ஒன்று! | ஏஐ எதிர்காலம் இன்று 20

ஆழி செந்தில்நாதன்

“மூளையின் வேலைகளை நகலெடுப்பதைப் பார்க்கும் முன்பே நான் இதை உங்களுக்குச் சொல்லியிருக்க வேண்டும். ஆனால், வேண்டுமென்றேதான் தள்ளிப்போட்டேன். மெஷின் லேர்னிங் பற்றி நாம் தெரிந்துகொண்டாக வேண்டும். ஆனால், அதைத் தொழில்நுட்பரீதியாக விளக்குவதைவிட, வேறு ஒரு சுவாரசியமான வழி இருக்கிறது என்பதால் தள்ளிப்போட்டேன்” என்று சொல்லிக்கொண்டே, மொழி அருங்காட்சியகத்தின் அடுத்த பகுதிக்கு செய்மெய் என்னை அழைத்துச்சென்றது.

“கவின், நீங்கள் பிறந்த நேரத்தில், அதன் பிறகு சில நிமிடங்கள் அல்லது சில நாட்கள், வாரங்கள், மாதங்கள் – அப்போதெல்லாம் என்னதான் உங்களைச் சுற்றி நடந்தது, நீங்கள் என்ன பார்த்தீர்கள், கேட்டீர்கள் என்பதெல்லாம் நினைவில் இருக்கிறதா?”
“அது எப்படி நினைவில் இருக்கும்?” என்றேன் கடுப்புடன். பதில் சொல்லாமல் செய்மெய் என்னை அழைத்துச் சென்ற இடத்தில் ஒரு மெய்நிகர் காட்சி விரிந்தது.

அழகான காட்சி அது. இரண்டு உருவங்கள் – பிறந்து சில மாதங்களே ஆன ஒரு பெண் குழந்தை, அதன் அருகில் ஒரு சிறுவன். காட்சியில் அவர்களைச் சுற்றி சில விளையாட்டுப் பொருள்களும் இருந்தன. மேலே, ‘குழந்தைகள் எவ்வாறு மொழியைக் கற்றுக்கொள்கின்றன’ என்கிற அழகான வாசகம் எழுதப்பட்டிருந்தது. “கவின், இந்த மெய்நிகர் காட்சியைப் பாருங்கள். செய்யறிவு இயந்திரங்கள் எவ்வாறு இயங்குகின்றன என்பதை அறிய மூளையைப் பற்றியும் நரம்பியல் மண்டலங்கள் பற்றியும் நிறைய பேசிவிட்டோம். இப்போது ஒரு விஷயத்தை மூளை எப்படிக் கற்றுக்கொள்கிறது என்பதைப் பார்க்கப்போகிறோம்” என்று செய்மெய் கூறியது.

விளக்கக் காட்சியும் தொடங்கியது, ஒரு பின்னணிக் குரல் ஒலித்தது... “வாங்க நண்பர்களே... இந்தக் குழந்தை எப்படித் தன்னைச் சுற்றியுள்ள உலகத்தைத் தெரிஞ்சுக்குது. அதன் மூலம் மொழியையும் கத்துக்குதுன்னு பார்ப்போம். குழந்தை பிறக்கும்போது அதனோட மூளையில் கோடிக்கணக்கான நியூரான்கள் இருக்கும் – ஆனா, அந்த நியூரான்களுக்கு இடையில இணைப்புகள் – சினாப்ஸ்கள் – அவ்வளவாக இருக்காது.

ஏன்னா, மூளை இன்னும் எதையுமே கத்துக்கல. இப்போது அந்தக் குழந்தையோட அண்ணன் என்ன செய்யறான்னு பாருங்க” என்று குரல் ஒலிக்க, அந்தச் சிறுவன் ஒரு சிவப்புப் பந்தை எடுத்து அந்த மழலையிடம் காட்டி, “பந்து” என்று சொல்கிறான். அவனை ஆர்வத்தோடு பார்த்துக்கொண்டிருக்கும் அந்தப் பச்சைக் குழந்தையின் தலைப்பகுதியில் ஓர் ஒளியோட்டம் தோன்றுகிறது. தலையின் உள்பகுதியில் உள்ள மூளை இப்போது அந்தக் காட்சியில் தெரிகிறது. ஒரு சில நியூரான்களுக்கு இடையில் இணைப்புகள் உருவாவதைப் பார்க்க முடிகிறது.

“அந்தச் சிறுவன் ‘பந்து’ன்னு சொல்லும்போது உருண்டையான ஒரு பொருளைக் காண்பிக்கும்போது, மூளையில் உள்ள குறிப்பிட்ட இணைப்புகள் வலுவாக ஆகும்” என்று பின்னணிக் குரல் தொடர்ந்தது. “பிறகு, அந்தச் சிறுவன் ஒரு பச்சை நிறப் பந்தையும் நீல நிறப் பந்தையும்கூட காட்டி, அவை பந்துகள்தான் என்று சொல்கிறான். இப்போது குழந்தையின் மூளையில் மேலும் பல இணைப்புகள் பலமாக மாறுகின்றன”.

செய்மெய் என்னைப் பார்த்து, “நல்லா இதைக் கவனிச்சுக்கங்க கவின், இப்படித்தான் மெஷின் லேர்னிங்கும் நடக்கும். ஏஐ கணினிகளுக்கு நாம் பயிற்சி கொடுப்பதும் இதே மாதிரிதான்! குழந்தை மூளை மாதிரிதான் அந்த இயந்திரமும். ஆரம்பத்துல ஒண்ணும் தெரியாம இருக்கும். நாம் அதுக்கு ஆயிரக்கணக்கான பந்து படங்களை ‘இது பந்து’ன்னு லேபிள் ஒட்டிக் காட்டுவோம், மெதுவா அந்த வடிவ மாதிரியை – பேட்டர்னை - இயந்திரம் கத்துக்கும்.

பின்னணிக் குரல் தொடர்ந்தது. “குழந்தை சிவப்புப் பந்தைப் பாக்குது, அப்புறம் நீலப் பந்து, அப்புறம் பெரிய பந்து, ஒரு கிரிக்கெட் பந்து, பிறகு ஒரு கால்பந்துன்னு அதனோட அண்ணன் காட்டிக்கிட்டே இருக்கான் பாருங்க... இப்போ அதனுடைய மூளை நினைக்கும், ‘ஓ, இவையெல்லாம் உருண்டையா இருக்கு, கீழே போட்டா குதிக்குது - இதுதான் பந்துன்னு அண்ணன் சொல்றான். ஆக, உருண்டையா இருந்தா, துள்ளிக்குதிச்சா அது பந்துன்னு என் மூளையில் பதிவுசெஞ்சுக்கிறேன்னு, பதிவு செஞ்சுக்கும். ஆரம்பத்தில் பந்தோட நிறமும் அளவும்கூட அதுக்கு முக்கியமில்ல. ஆனால், பிறகு அதையும் அது மெதுவாகக் கத்துக்கும்.”

இப்போது அண்ணன் தன் தங்கையிடம் மூன்று பந்துகளை மாறிமாறிப் போட்டு விளையாடுகிற காட்சி. செய்மெய் தன் ஒப்பீட்டுத் திறனைக் காட்டியது “ஏஐயும் இதே மாதிரிதான்! நாம் ஆயிரக்கணக்கான பந்து படங்களைக் கணினியில் பதிவுசெய்வோம், அதற்கெல்லாம் பந்து எனப் பெயர் வச்சு சேவ் செய்வோம். இப்போ அந்த எல்லாப் படங்களிலும் உள்ள பொதுவான அம்சங்களை ஏஐ தெரிஞ்சிக்கும். இந்தச் செயல்பாட்டுக்குப் பெயர்தான் மெஷின் லேர்னிங்... இயந்திரக் கற்றல்”.

கவினின் கண்கள் இப்போது மீண்டும் மெய்நிகர் காட்சிக்குத் திரும்பியது. “ஆனா, இந்தக் காட்சிகளையும் அதனோடு தொடர்புடைய சொற்களையும் குழந்தை எப்படி ஞாபகத்தில் வச்சுக்குது என்று உங்களுக்குக் கேள்வி இருக்கலாம்” என்று பின்னணிக் குரல் கூற, அந்தச் சிறுவன் ஒரு புதிய பந்தை எடுத்து, இப்போது குட்டிப் பாப்பாவைப் பார்த்து, “செல்லக்குட்டி, இது என்னென்னு சொல்லு” என்று கேட்கிறான்.

அந்தக் குழந்தை குழறிக்குழறி ‘பன்னு’ என்று கூற, சிறுவன் ஹாஹாவென்று சிரித்துவிட்டுத் தன் தங்கைக்கு மறுபடியும் சொல்லிக்கொடுக்கிறான். “பன்னு இல்ல.. பந்து, ப, ந், து... மறுபடியும் சொல்லு” என்கிறான். குழந்தை இந்த முறை சரியாக “பந்து” என்று கூறியது. “ஆஹா, சூப்பர் சூப்பர், சரியா சொல்லிட்டே” என்று ஆமோதிக்கிறான் சிறுவன். இப்போது ஒரு தகவல், ஒரு வடிவம், ஒரு சொல் குழந்தையின் நினைவு என்னும் நுண்ணறிவுத் திறனுக்குள் நுழைகிறது.

பின்னணிக் காட்சி தொடர்ந்து விளக்கியது. “குழந்தையோட மூளையில் ஹிப்போகாம்பஸ் என்று ஒரு பகுதி இருக்கு. அது ஒரு பெட்டி மாதிரி. அதில்தான் அந்த உருண்டையான உருவத்தையும், அதற்குப் பந்து என்கிற பெயர் இருக்கிறது என்கிற அடையாளத்தையும் குழந்தை பதிவுசெஞ்சுக்குது.

அது பந்துதான் என்று அண்ணன் கைதட்டி ஆமோதித்தால், இப்போது அந்த இணைப்புகள் மேலும் வலுவாக ஆகின்றன. அந்தப் பெட்டியில் பந்து பத்திரமாக இருக்குது. அந்த இணைப்புகளின் ஊடாக அந்த வடிவமும் பெயரும் அந்தக் குழந்தையின் மூளையில் நிலையாகப் பதிவாகுது. அந்தப் பெட்டியைத்தான் நாம் நினைவுன்னு சொல்றோம்..” “ஏஐ இயந்திரங்களின் நினைவகமும் இப்படித்தான் செயல்படுகிறது! – புரிகிறதா?” என்று என்னைக் கேட்டது செய்மெய்.

- தொடர்புக்கு: senthil.nathan@ailaysa.com

SCROLL FOR NEXT