தனது சொந்த ஊரின் பெருமைகளைப் பிறரிடம் பேசுவது எல்லோருக்கும் பிடித்தமானது. அதே நேரம் ஒரே ஊர்க்காரர்கள் வெளியூரில் சந்தித்து உரையாடும் போது ஊரின் குறைகளை, போதாமைகளைச் சுட்டிக்காட்டிப் பேசிக் கொள்கிறார்கள். நமது ஊரை, யாராலும் மாற்ற முடியாது என்று சலித்துக் கொள்கிறார்கள். ஊர் ஒவ்வொருவர் நினைவிலும் ஒருவிதமான வடிவம் கொண்டிருக்கிறது.
பழமையில் ஊறித்திளைத்த உத்தரபிரதேச கிராமம் ஒன்றின் கதையைச் சொல்கிறது தர்பாரி ராகம் நாவல். 1977-ல் வெளியான இதனை இந்தி எழுத்தாளர் ஸ்ரீலால் சுக்ல எழுதியுள்ளார். சரஸ்வதி ராம்நாத் தமிழில் மொழியாக்கம் செய்திருக்கிறார் நாவலின் தலைப்பை வைத்து இது இசையைப் பற்றிய கதையாக இருக்குமோ என ஒரு வாசகர் நினைத்தால் ஏமாற்றமே அடைவார். தர்பார் எனப்படும் அதிகார மையத்தின் அபஸ்வரம் பற்றியதே நாவல்.
அந்தக் காலக் கிராமங்களில் நிலவிய போட்டி பொறாமைகளை, அநீதிகளை, அதிகார சண்டையை இந்த நாவல் பேசுகிறது. பேராசை, சுயநலம் மற்றும் ஊழல் பற்றி ஸ்ரீலால் சுக்ல மிகவும் வெளிப்படையாக எழுதியிருக்கிறார்.
இந்த நாவலில் ஒரு கிராமவாசி நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டிய ஆவணம் ஒன்றை பெறுவதற்காகத் தாலுகா அலுவலகத்திற்குச் செல்கிறார். விண்ணப்பம் எழுதித் தருகிறார். பல மாதங்களாக அலைந்தும் ஆணையைப் பெற முடியவில்லை. ஆணையின் நகலைத் தருவதற்காகக் குமாஸ்தா, லஞ்சம் கேட்கிறார். விவசாயி தர மறுக்கவே குமாஸ்தா கோபத்துடன் சொல்கிறார் ``விண்ணப்பம் என்பது ஒரு எறும்பு மாதிரி. அதை யார் வேண்டுமானாலும் நசுக்கி தூக்கி எறிந்துவிடலாம்.’’
விவசாயி அந்தப் பதிலைக் கேட்டு அதிர்ந்து போகிறார். லஞ்சம் கொடுத்தால் மட்டுமே வேலை நடக்கும். அப்படி லஞ்சம் கொடுப்பது ஒன்றும் தவறில்லை. அந்தக் குமாஸ்தா தனது மகளின் திருமணத்திற்காகவே லஞ்சம் வாங்குகிறார் என்று அலுவலகத்தில் காரணமும் சொல்கிறார்கள். லஞ்சம் எப்படி அதிகாரப்பூர்வமானதாக மாறுகிறது என்பதை ஸ்ரீலால் சுக்ல தெளிவாக அடையாளம் காட்டுகிறார்.
சிவபால்கஞ்ச் என்ற ஊரில் கதை நடக்கிறது. அங்குள்ள தனது மாமாவின் வீட்டிற்குச் செல்வதற்காக ரங்கநாத் பயணம் செய்கிறான். எம்.ஏ. படித்து முடித்துள்ள அவன், கதர் சட்டை, கதர் வேஷ்டி அணிந்திருக்கிறான். கதர் குல்லா வைத்திருக்கிறான். தோளில் ஒரு ஜோல்னா பை. ரயிலை தவறவிட்ட ரங்கநாத் லாரியில் இடம் கேட்டுப் பயணிக்கிறான்.
லாரி டிரைவர் அவனது தோற்றத்தைப் பார்த்து நீங்கள் போலீஸ் சிஐடியா என்று கேட்கிறார். ஏன் அப்படிக் கேட்கிறீர்கள் என ரங்கநாத் கேட்டதும், இப்போது எல்லாம் யார் இப்படிக் கதர் அணிகிறார்கள். ரகசிய போலீஸ் தான் இது போல மாறுவேஷத்தில் உலா வருகிறார்கள் என்கிறார் லாரி டிரைவர். இங்கேயே ஸ்ரீலால் சுக்லவின் கிண்டல் துவங்கிவிடுகிறது.
ரங்கநாத்தின் மாமா வைத்யா ஒரு ஆயுர்வேத வைத்தியர். அந்த ஊரின் கூட்டுறவு சங்கம், பஞ்சாயத்து மற்றும் கல்வி நிலையம் என மூன்றையும் தனது கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டிருக்கிறார். தனது உடல்நலத்தை மேம்படுத்திக் கொள்வதற்காகச் சிவபால்கஞ்ச் வந்துள்ள ரங்கநாத் கிராமத்தின் வளர்ச்சியைத் தனது மாமா தடுத்து நிறுத்தி வைத்திருப்பதைக் காணுகிறான்.
அங்குள்ள கல்வி நிலையத்தில் ஆசிரியர்கள் ஒருவரோடு ஒருவர் சண்டையிட்டுக் கொள்கிறார்கள். வகுப்பில் பாடம் நடத்தப்படுவதில்லை. இரண்டு வகுப்பு மாணவர்களை ஒன்றாக இணைத்துவிடுகிறார்கள். இப்படி ஏன் செய்கிறீர்கள் என மாணவர் கேட்டதற்குப் பேருந்து பழுதாகி நின்றுவிட்டால் அதில் உள்ளவர்களை இன்னொரு பேருந்தில் ஏற்றிவிடுவதில்லையா, அது போலத் தான் இதுவும் என்கிறார் ஆசிரியர்.
ஸ்ரீலால் சுக்ல இந்த நாவலில் ஒரு மனிதன் எவ்வளவு சுயநலமாக நடந்து கொள்வான் என்பதை அடையாளப்படுத்துகிறார். சுயநலத்திற்காக ரங்கநாத்தின் மாமா தொடர்ந்து பொய் சொல்கிறார். அதிகாரத்தைக் கைப்பற்றத் துடிக்கிறார். தவறான செயல்களில் ஈடுபடுகிறார். சிவபால்கஞ்ச் வளர்ச்சி அடைந்துவிட்டால் தனது கட்டுபாட்டிலிருந்து விடுபட்டு விடும் என அவர் நம்புகிறார். ஆகவே ஊர் வளரவிடாமல் பார்த்துக் கொள்கிறார். கிராமவாசிகள் முன்னேற்றத்தை விரும்பும் அதே வேளையில் தங்களின் பழைய பழக்கவழக்கங்கள் மற்றும் அதிகார அமைப்புகளைத் தக்க வைத்துக் கொள்வதில் ஆழமாக வேரூன்றியிருக்கிறார்கள்.
நாவலில் பஞ்சாயத்து தலைவருக்கான தேர்தல் நடக்கிறது. மாமா தனக்குச் சாதகமான மங்கள்தாசை போட்டியிட வைக்க முயல்கிறார். நீங்களே அந்தப் பதவிக்கு வரலாமே என ஒருவர் கேட்கும் போது ‘அந்தப் பதவியில் நம்மைக் கேள்விகேட்பார்கள். நீதிமன்றத்திற்கு வரவழைத்து அலையவிடுவார்கள். உயர் அதிகாரிகள் முன்பாகக் கை கட்டி நிற்க வேண்டும். அந்தத் தொல்லை எல்லாம் நமக்கு எதற்கு?’ என்கிறார். எந்தப் பிரச்சனையும் வராமல் அதிகாரம் செய்ய வேண்டும் என ரங்கநாத்தின் மாமா விரும்புகிறார். இவரைப் போன்றவர்கள் இன்றுமிருக்கிறார்கள்.
நாவலில் வரும் காவல்துறை அதிகாரி குற்றவாளிகளுடன் கூட்டணி அமைத்துக் கொள்கிறார். அந்த ஊர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் எழுதுவதற்குப் பேனா கூடக் கிடையாது. கேஸ் கிடைக்காத நேரத்தில் கிடைத்தவன் மீது குற்றம் சுமத்துகிறார். இதற்குப் பொய் சாட்சிகளைத் தயார் செய்கிறார். இப்படிச் சீரழிந்த நிலையில் உள்ள காவல்துறையின் செயல்பாடுகளைக் கண்டிக்கிறார் சுக்ல.
நாவலில் பாபு ராமாதீன் என்ற கதாபாத்திரம் அபின் விற்கிறார். அது சட்டவிரோதமான செயல் என்று நண்பர்கள் புகார் சொல்லும் போது சட்டம் என்னைக் கேட்டுக் கொண்டு இயற்றவில்லையே என்று கேலி செய்கிறார். அபின் விற்றதற்காகக் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்படும் போதும் இதே பல்லவியைப் பாடுகிறார். சிறை தண்டனையை அனுபவித்து வெளியே வரும் போது தன்னை யாரும் தியாகியாக ஏற்கவில்லையே என்று கோபம் கொள்கிறார். இவரைப் போலச் சிவபால்கஞ்ச்சில் வசிக்கும் பல்வேறு கதாபாத்திரங்களின் இயல்பை, ரகசியங்களைப் பேராசையை நாவலில் துல்லியமாக விவரித்துள்ளார்.
மனிதனின் மனதில் எவ்வளவு விகாரமான ஆசைகள் ஒளிந்திருக்கின்றன என்பதை நாவலில் ஒரு கதாபாத்திரத்தின் மூலம் வெளிப்படுத்துகிறார் ஸ்ரீலால் சுக்ல. அந்த வரிகளை வாசிக்கும் போது அதிர்ச்சியாகவுள்ளது. ``கன்னா மாஸ்டரை நாலு போடும் போது என்னிடம் சொல்லுங்கள். யாரையாவது செருப்பால் அடித்து நாட்களாகி விட்டன. நானும் இரண்டொரு சாத்துச் சாத்துகிறேன். அதுவும் பிய்ந்த செருப்பாக இருந்து, மூன்று நாட்கள் தண்ணீரில் ஊறியிருந்தால் அடிக்கும் போது நல்ல சப்தம் வரும். தூரத்திலிருப்பவர்களுக்குச் செருப்படி நடக்கிறது என்று தெரிந்துவிடும்.’’
இப்படி அதிகாரத்திலிருப்பவர்களின் விபரீத ஆசைகளுக்கு எத்தனையோ பேர் பலியாகியிருக்கிறார்கள். கிராமத்தின் நினைவுகளுக்குள் இது போன்ற அவமானச் செயல்களும் அழுகைக்குரலும் புதையுண்டேயிருக்கின்றன. ஸ்ரீலால் சுக்ல கிராமத்தின் பொன்னிற நினைவுகளைப் பேசவில்லை. மாறாகக் கிராமத்தினுள் வேர்விட்டு வளர்ந்துள்ள சாதிய வேற்றுமைகளை, அதிகாரப்போட்டியை, பெண்ணடிமைத்தனத்தை, பொறாமை மற்றும் வெறுப்பினைப் பேசுகிறார். விமர்சிக்கிறார். அதன் காரணமாகவே இன்றும் இந்த நாவல் விரும்பி வாசிக்கப்படுகிறது.