சிறப்புக் கட்டுரைகள்

எளிமையின் உருவம், உறுதியின் வடிவம்! - கிருஷ்ணம்மாள் ஜகந்நாதன் 100

பாமயன்

முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு ஒரு மாலைப் பொழுது, தஞ்சைப் பகுதிக்கே உரிய நாட்டு ஓடுகளைச் சுமந்த ஒரு சிறு வீடு... அதன் வெளிப்புறத்தில் சிறு கற்களைக் கொண்டு செய்யப்பட்ட அடுப்பு. சாதாரண கிராமத்துப் பெண்மணிபோல ஒருவர் தன்னுடன் சில இளைஞர்களை அழைத்துவந்தார்.

அருகில் சேகரித்த விறகுகளைக் கொண்டு சமைக்கத் தொடங்கினார். நானும் என்னுடைய நண்பர்களும் பெரும் காந்தியப் போராளியான ஜகந்நாதனைப் பார்க்கப் போயிருந்தோம். அவர் அமைப்பில் உள்ள களப்பணியார்களுக்கு வீதி நாடகப் பயிற்சி அளிக்கவே அங்கு சென்றிருந்தோம். அவர் அங்கு இல்லை. எங்களைப் பார்த்த அந்த அம்மையார், “வாங்க நீங்களும் சாப்பிடலாம்” என்று அழைத்தார்.

எங்களுக்கு ஏற்பட்ட வியப்புக்கு அளவே இல்லை. எளிய கிராமத்துப் பெண் போன்ற தோற்றம், பழைய கதர்ச் சேலை, முகம் நிறையப் புன்னகை. “இவர்தான் கிருஷ்ணம்மாள் ஜகந்நாதன்” என்று நண்பர் திருநாவுக்கரசு எங்களுக்கு அறிமுகம் செய்துவைத்தார்.

ஒரு மாபெரும் இயக்கத்தின் தலைவி, காந்தி​யடிகளை மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு அழைக்கச் சென்ற குழுவில் இருந்​தவர், பூதான இயக்கத்தின் தளபதி ஜகந்நாதனின் துணைவி​யார். கீழத் தஞ்சையின் பண்ணை​யார்​களைக் கதிகலங்க வைத்தவர். என்ன ஒரு எளிய தோற்றம். அவர்தான் கிருஷ்ணம்மாள் ஜகந்நாதன்!

வாழ்க்கையே செய்தி! - ஒரு கிராமத்துப் பெண்ணாக நின்று சமைத்​துக்​கொடுத்து ஊழியர்​களுடன் ஒரு தாயாகத் தானும் உணவருந்திய காட்சி இன்றும் என் கண்ணை​விட்டு அகலவில்லை. இப்படியும் நம் நாட்டில் தலைவர்கள் இருக்​கிறார்களா என்கிற வியப்பு தீரவே இல்லை. காலங்கள் ஓடினாலும் இன்றும் அவருடன் பயணிப்​பதில் எனக்கு மிகுந்த மனநிறைவு. எளிமையின் வடிவம், கொண்ட கொள்கையில் விடாப்​பிடித்​தன்மை, அறப்போ​ராட்​டத்தில் சற்றும் பிறழாத உறுதி.

இவைதான் அவரது அடையாளங்கள். நோபல் பரிசுக்கு இணையான ‘சீரிய வாழ்வியல் விருது’ (Right livelihood Award), பத்மஸ்ரீ, பத்மபூஷண் என்று உயரிய விருதுகளைப் பெற்ற​போதும் அவற்றைப் பற்றி சற்றும் பெருமிதம் கொள்ளாமல், ‘அருட்​பெருஞ்​சோதி, தனிப்​பெருங்​கருணை’ என்று முழங்​கியவாறு எந்தவொரு எதிர்​பார்ப்பும் இன்றி தூயதொரு தவக்கொழுந்​தாகத் திகழும் அன்னைக்கு நூறாண்டு அகவை தொடக்கம்.

அவரிடம் பேசிக்​கொண்​டிருந்தால் போதும், இந்தியாவின் விடுதலைப் போராட்ட வரலாற்றை முழுமையாக அறிந்து​கொள்​ளலாம். இந்த வயதிலும் சற்றும் நினைவு தவறாமல் துல்லிய​மாகத் தனது அனுபவங்​களைப் பகிர்ந்து​கொள்​வார். காந்தி​யடிகளைச் சந்தித்த நிமிடங்கள், காந்தி கிராம நிறுவனர் சௌந்திரம் அம்மையார் தன்னை அரவணைத்து உருவாக்கிய காலச்​சுவடுகள் என்று தனது இளமைக்கால நினைவுகளை கிருஷ்ணம்மாள் வெளிப்​படுத்தும் விதம் அலாதி​யானது.

ஜகந்நாதன், பொருளியல் மேதை ஜே.சி.குமரப்​பாவின் தளபதி​யாகத்தான் முதலில் இருந்​தார். உழுபவர்​களுக்கு நிலம் இருக்க வேண்டும் என்கிற உறுதியில் குமரப்​பாவுடன் தோள் கொடுத்​தவர். அவர் தலைமை​யில்தான் இவர்களது திருமணம் நடைபெற்றது. இவர்கள் திருமணம் புரட்​சிகரமான சாதி மறுப்புத் திருமணம். அதன் பின்னர் விநோபா அடிகளுடன் இணைந்து பூதான இயக்கத்தில் நடைபோட்ட இவ்விருவரும் அவரிடமே தமது வாழ்நாளையும் கொடுத்து​விட்​டார்கள்.

மிக நீண்ட பயணம், கீழ வெண்மணியில் ஏழை மக்கள் எரித்துக்கொல்லப்பட்ட துயரம் இவரை அங்கு உந்தித் தள்ளியது. நிலமற்ற உழைக்கும் மக்களுக்கு நிலம் பெற்றுத் தருவதே தனது முதல் வேலை என்று தொடர்ந்து மக்களுக்கு நிலங்​களைப் பெற்றுக் கொடுத்​துக்​கொண்டே இருக்​கிறார்.

கீழவெண்மணி மட்டுமல்​லாது, பல ஊர்களில் உள்ள மக்களுக்கும் நிலம் கிடைத்​திருக்​கிறது. தன்னுடைய நூறாம் ஆண்டுப் பிறந்​த​நாளி​லும்கூட 29 பேர்களுக்கு நிலத்தை வழங்கிடப் பதிவு அலுவல​கத்தில் வந்து நின்றார். பதிவுசெய்து கொடுத்து​விட்டுத்தான் கிளம்​பி​னார். அதுவே அவரது வாழ்வியல் செய்தி.

அச்சமில்லை அச்சமில்லை! - இறால் பண்ணைத் தொழிலுக்கு எதிராக இவர்கள் செய்த அளப்பரிய போராட்​டங்கள் வீரஞ்​செறிந்தவை. பெரிய டிராக்​டர்​களுக்கும் லாரிகளுக்கும் முன்பாக படுத்​துக்​கொண்டு ‘அருட்​பெருஞ்​சோ​தி..’ என்று முழக்​கமிடும் மக்களைப் பார்த்துக் காவல் துறை ஒன்றும் செய்ய முடியாமல் திணறியது.

கண்கள் சரியாகத் தெரியாத நிலையிலும், காதுகள் சரியாகக் கேட்காத நிலையிலும் ஜகந்நாதனின் போராட்டம் தொடர்ந்தது. ‘ஓடி வந்து காவலரைத் தாக்கி​னார்’ என்று அவர் மீது வழக்கு போடப்​பட்டது. அந்தக் கடுமையான காலத்தில் கிருஷ்ணம்மாள் மனந்தள​ராமல் போராடி​னார்.

நான் அப்போது தகவல்​களைப் பத்திரி​கைகளுக்கு அனுப்பும் பணிகளைச் செய்து​வந்​தேன். களப்போ​ராட்டம் மட்டுமல்ல, சட்டரீ​தி​யிலும் சளைக்​காமல் போராடி​னார்கள். உச்ச நீதிமன்​றத்​துக்குச் சென்று தடை பெற்று​வந்து, தங்களது செயலை வெற்றிகர​மாகச் செய்து முடித்​தார்கள்.

உச்ச நீதிமன்​றத்​துக்குச் சென்றபோது வழக்கறிஞர் மாரியப்​பனும், சர்வோதயத் தலைவர் க.மு. நடராசனும் இவர்களுடன் சென்று வழக்காடி​னார்கள். எனக்கும் உடன் செல்ல ஒரு வாய்ப்புக் கிட்டியது. வழக்கறிஞர் எம்.சி.மேத்தா நீதிப​தி​யிடம் முரண்​பட்டு நீதிமன்​றத்​துக்கு வராமல் போக, கிருஷ்ணம்மாள் - ஜகந்நாதன் தம்பதி சென்று வழக்காடிய காட்சி கண்முன் நிற்கிறது. எதற்கும், எப்போதும் அவர்களிடம் அச்சம் இருந்​த​தில்லை.

நடமாடும் பல்கலைக்​கழகம்: போராட்​டத்தையே தங்களது வாழ்க்கை​யாகக் கொண்ட இவர்களிடம் கற்றுக்​கொள்ள வேண்டிய பாடம் இளைஞர்​களுக்கு ஏராளம் இருக்​கின்றது. பெரும் நிதி திரட்டல் இல்லாமல் எளிய முறையில் பெரும் மாற்றங்​களைச் செய்ய முடியும் என்று கிருஷ்ணம்மாள் நமக்குக் காட்டிவரு​கிறார்.

பணம் படைத்த பண்ணை​யார்​களிடம் சென்று எப்படிப் பேசி நிலத்தைப் பெறுவோம் என்பதை அவர் விளக்​கும்போது சுவாரசியமாக இருக்​கும். வன்முறையால் எதையும் நிரந்​தரமாக வென்றெடுக்க முடியாது என்பதில் மிக உறுதியான கருத்து கொண்டவர். சில காலங்கள் மட்டுமே அந்த வெற்றி கைகூடும். பின்னர் பெரும் பின்னடைவு வரும் என்பார்.

தான் செய்த வேலைக்கு எந்த எதிர்​பார்ப்பும் பாராமல் வாழும் ஒரு தவசியாக இவரைக் காண முடியும். சாதனை​யாளர் என்ற இறுமாப்பைத் துளியும் அவரிடம் காண முடியாது. ஒரு தெளிந்த நீரோடை செல்வதுபோல தன் வாழ்வை அமைத்​துக்​கொண்​டார். இன்றைய அரசியல்​வா​திகள் இவரிடம் இருந்து சிறிதாவது கற்றுக்​கொள்ள வேண்டும். தன் பிள்ளைகள் மருத்​துவர் பூமிக்​கு​மார், மருத்​துவர் சத்யா இருவரையும் பொதுவாழ்வுக்குக் கொடுத்​துள்ளார்.

இன்றும் செய்தித்​தாள்​களையும் நூல்களையும் வாசிக்கும் பழக்கம் இவரிடம் உள்ளது. எவ்வளவு சிறிய கூட்ட​மா​னாலும் சரி, எவ்வளவு எளியவர்கள் நடத்தும் கூட்ட​மா​னாலும் சரி முதல் ஆளாக வந்து நின்று அருட்​பெருஞ்சோதி அகவலைப் பாடிவிட்டுத்தான் அமர்வார்.

ஆங்கிலத்​திலும் சரளமாகப் பேசும் திறன் பெற்றவர். பல வெளிநாட்​ட​வர்கள் இவரது சீடர்கள். இத்தாலி பேராசிரியர்கள், காந்தி​யர்கள் என்ற பலரும் இவருடன் உரையாடிச் செல்வ​தில், இவரைச் சந்திப்​பதில் பேரார்வம் கொண்டிருப்​பார்கள். இவர் ஒரு நடமாடும் போராட்ட வாழ்வியல் பல்கலைக்​கழகம். ஒவ்வொரு முறை சந்திக்​கும்​போதும் புதியதொரு போராட்டச் செய்தியைக் கூறுவார். வினோபாவின் திருவாசகம் பற்றிய பேச்சுகள், கடும் வெயிலில் அவருடன் நடக்கும்போது ஏற்பட்ட அனுபவங்கள் என்று கேட்டுக்​கொண்டே இருக்​கலாம்.

ஒரு பக்கத்து வீட்டுப் பாட்டியின் நீர்மை, இவரைக் காணும்போது அவர்களுக்கு ஏற்படு​வதில் வியப்​பொன்றும் இல்லை. அதனால்தான் அவர்கள் கடல் கடந்து தேடி வருகிறார்கள். நாமும் இவருடன் வாழ்ந்​தோம், இவரிடம் கற்றுக்​கொண்டோம் என்பதைவிட வேறென்ன பேறு வேண்டும். நூறாண்டு காலம் நம்முடன் வாழும் அன்னையின் அறவழியில் நாமும் நடைபோடுவோம்​.

- தொடர்புக்கு: pamayanmadal@gmail.com

SCROLL FOR NEXT