காலுக்கும் மண்ணுக்கும் உள்ள உறவு யுகம் யுகமாக இருக்கிறது. மண்ணும் பாதங்களும் இணைபிரியா நண்பர்கள் என்று ‘சூரியகாந்திப் பூவின் கனவு’ நாவலில் சையத் அப்துல் மாலிக் குறிப்பிடுகிறார் . சாகித்ய அகாதமியின் பரிசு பெற்ற இந்த அஸ்ஸாமி நாவலை நேஷனல் புக் டிரஸ்ட் வெளியிட்டுள்ளது. கரிச்சான்குஞ்சு தமிழாக்கம் செய்திருக்கிறார்.
வடகிழக்குப் பிரதேசத்தில் வாழுகிறவர்கள் தங்களுக்கென ஒரு தொன்மையான வரலாற்றைக் கொண்டுள்ளனர். ஒருபுறம் அவர்களின் வழிபாடு, சடங்குகள், நம்பிக்கைகள் அப்படியே பின்பற்றப்படுகின்றன. இன்னொரு பக்கம் காலனிய ஆட்சியால் உருவான மதமாற்றம், கல்வி வளர்ச்சி, நவீன வாழ்க்கை முறை, அரசியல் மற்றும் பண்பாட்டு மாற்றங்கள் புதிய முகத்தை உருவாக்கியுள்ளது.
பனிமூட்டத்தினுள் மறைந்திருக்கும் மலையினைப் போலவே வடகிழக்கு மாநிலத்தின் வாழ்க்கையும் தெளிவாக அறிய முடியாதது. இலக்கியத்தின் வழியே அந்த மக்களின் சுக துக்கங்கள். சமூகப்பிரச்சனைகள். பண்பாட்டு சூழல் மற்றும் எதிர்வினைகளை ஒரளவு அறிந்து கொள்ள முடிகிறது. சரித்திரத்தில் சாமானியர்களுக்கு இடமில்லை எனும் போது இலக்கியமே சாமானியனின் இருப்பையும் குரலையும் முதன்மையாக்குகிறது.
சையத் அப்துல் மாலிக் நாவலின் தொடக்கத்திலே தன்சிரி நதி மற்றும் டாலிம் கிராமத்தின் ஒட்டுமொத்த படத்தை வரைந்துவிடுகிறார். குல்ச்சின் வாழ்க்கையில் வரும் மூன்று பெண்களின் உறவு மற்றும் நெருக்கத்தைப் பற்றியதே இந்நாவல். தன்சிரி நதியின் மேற்கு கரையில் டாலிம் கிராமம் இருக்கிறது. எழுபது குடும்பங்கள் வாழும் சிறிய கிராமம். இந்துக்களும் இஸ்லாமியர்களும் நேபாளிகளும் இணைந்து வாழும் சிற்றூர். நெல்லும் கரும்பும் சோளமும் சணலும் பயிர் செய்கிறார்கள்.
பழைய டாலிம் புது டாலிம் என ஊர் இரண்டாகப் பிரிந்து உள்ளது. காட்டு யானை வந்து அவர்கள் விளைச்சலை அடிக்கடி பாழ்படுத்துகிறது. ஊருக்குள் புகுந்து புலி, மாடுகளை அடித்துக் கொல்கிறது. டாலிமில் நான்கு பேர்கள் துப்பாக்கி வைத்திருக்கிறார்கள். அந்த ஊருக்குள் அருகிலுள்ள பெரிய நகரம் கோலாகாட். அங்கே தான் நீதிமன்றம் உள்ளது. டாலிம் கிராமத்திற்கு பஸ் போக்குவரத்துக் கிடையாது. மாட்டுவண்டியில் தான் செல்ல வேண்டும். கிராமவாசிகள் எப்போதாவது வானில் செல்லும் விமானங்களைப் பார்த்திருக்கிறார்கள். ஆனால் ரயிலைப் பார்த்தது கிடையாது. நகரத்திற்குப் போய் வந்தவர்கள் ரயிலைப் பற்றிச் சொல்லும் போதெல்லாம் ஆச்சரியப்படுகிறார்கள்.
அந்த ஊரில் ஒரு பள்ளிக்கூடம் இருக்கிறது. ஆனால் கல்வி அதிகாரி எவரும் அதனைப் பார்வையிட்டதில்லை. ஊருக்குள் போலீஸ் வந்தது கிடையாது. தங்கள் பிரச்சனைகளைத் தாங்களே தீர்த்துக் கொள்ள வேண்டும் என மக்கள் நினைக்கிறார்கள். தேர்தல் பற்றியோ, ஓட்டுப் போடுவது பற்றியோ கூட அவர்களுக்கு எதுவும் தெரியாது. ஒளிரும் சூரியனால் கூடக் கிராமத்தில் இருந்த பழமையின் இருட்டைப் போக்க முடியவில்லை என்கிறார் சையத் அப்துல் மாலிக்.
குல்ச் என்ற இருபது வயது இளைஞன் தான் காதலித்த சேன்மாயி என்ற இளம்பெண்ணுடன் ஊரைவிட்டு ஓடிவிடுகிறான். மறுநாள் பக்கத்து ஊரின் மாட்டுக் கொட்டகையில் ஒளிந்திருந்த அவர்களைப் பிடித்துவிடுகிறார்கள். சேனிமாயியின் தந்தை மற்றும் சித்தப்பா அவளை அடித்து இழுத்துப் போகிறார்கள். குல்ச்சின் தந்தை அவனை வீட்டைவிட்டுத் துரத்திவிடுகிறார். அவனுக்காகப் பரிந்து பேசிய அவனது அம்மாவையும் துரத்தி அடிக்கிறார். அவர்கள் இருவரும் நதிக்கரையோரம் சிறிய வீடு அமைத்துக் கொண்டு தனியே வாழுகிறார்கள். பெற்ற மகனின் ஆசையைப் புரிந்து கொள்ளாத மனிதனோடு தான் சேர்ந்து வாழ மாட்டேன் என்கிறாள் குலச்சின் அன்னை. மகனைப் புரிந்து கொள்ளாத தந்தையைப் பற்றி எத்தனையோ கதைகள் இருக்கின்றன. மகனைப் புரிந்து கொள்ளாத அன்னையைப் பற்றி நான் கேள்விபட்டதில்லை. இந்த நாவலில் வரும் குல்சின் தாய் அவனது ஆசைகளை மட்டுமில்லை. மௌனத்தையும் புரிந்து வைத்திருக்கிறாள். குல்ச்சின் தாய்க்கு உழைக்காமல் சாப்பிட தெரியாது. இது ஒரு தலைமுறைக்கே இருந்த குணம். உழைக்காமல் சாப்பிட்டால் உடம்பில் ஒட்டாது என நினைத்தார்கள். விவரம் தெரிந்த வயதிலிருந்து அவள் வேலை செய்கிறாள். எந்த வேலைக்கும் அஞ்ச மாட்டாள். அது தான் அவளை ஆரோக்கியமாக வைத்திருந்தது.
குல்ச், அதே ஊரில் உள்ள தாரா என்ற பெண்ணுடன் நட்பாகப் பழகுகிறான். அவளைக் காணுவதற்காக அடிக்கடி அவளது வீட்டிற்குப் போகிறான். அங்கே தாராவின் சித்தி கபாஹி தங்கள் குடும்பக் கஷ்டங்களை அவனிடம் பகிர்ந்து கொள்கிறாள். தாராவின் மீது அவனுக்குக் காதல் உருவாகிறது. அவளைத் திருமணம் செய்து கொள்ள ஆசைப்படுகிறான். இந்நிலையில் சேன்மாயிக்குத் திருமணம் ஏற்பாடாகிறது.
கேலாயி என்ற நடுத்தரவயதுக்காரனை மாப்பிள்ளையாக முடிவு செய்கிறார்கள். அவன் ஒரு காசநோயாளி. மரணத்திற்காகக் காத்திருப்பவன், ஒடிப்போனவளை வேறு யாரும் கட்டிக் கொள்ள மாட்டார்கள் எனச் சொல்லி அந்தத் திருமணத்தைச் சேன்மாயி சித்தப்பா ஏற்பாடு செய்கிறார்.
தன்னைக் காதலித்த காரணத்தால் தான் சேன்மாயின் வாழ்க்கை இப்படி ஆகிவிட்டது எனக் குல்ச் வருத்தமடைகிறான். இழந்த காதலின் துயரை விடவும் அது ஏற்படுத்தும் குற்றவுணர்வு வலிமையானது. டாலிம் கிராமத்தில் ஸபீயத் என்றொரு கிழவர் இருக்கிறார். அவர் தனது கல்யாணத்திற்காக முக்கால் ரூபாய்க்கு ஒரு ஜோடி செருப்பு வாங்கினார். அதைக் கல்யாணத்தின் போது அணிந்து கொண்டார். பின்பு கழட்டி துணியில் சுற்றி பரண் மேல் வைத்துக் கொண்டார். யார் வீட்டிலாவது திருமணம் அல்லது பண்டிகை வரும் போது அந்தச் செருப்பைப் போட்டுக் கொள்வதுண்டு.
திரும்பி வந்தவுடன் அதைக் கழுவித் துடைத்துப் பரண் மேல் போட்டுவிடுவார். அவரது மகன் தனது கல்யாணத்திற்குப் புதிதாகச் செருப்பு வாங்க வேண்டும் எனக் கேட்டபோது தனது செருப்புகளை அணிந்து கொள்ளும்படியாகச் சொன்னார். காலிற்குப் பொருந்தாத அந்தச் செருப்பைப் போட்டு தான் அவரது மகன் திருமணம் செய்து கொண்டான்.
ஸபீயத் வீட்டிற்கு வெளியாட்கள் யாராவது வந்தால் தனது தோட்டத்து மாம்பழத்தை சாப்பிடத் தருவார். ஆனால் அதன் கொட்டையை வீட்டுவாசலிலே போட்டுவிட வேண்டும். வெளியே கொண்டு போய்விட்டால் அந்த ஜாதி மாம்பழம் வேறிடத்தில் முளைத்துவந்துவிடும் என்பதே காரணம். அவருக்குத் தாராவின் சித்தி மீது ஒரு கண். அவளை அடைய வேண்டும் எனக் காத்திருக்கிறார். குலச், தான் விரும்பும் தாராவைத் திருமணம் செய்து கொள்ள ஏற்பாடு செய்கிறான்.
ஆனால் அந்தத் திருமணத்தில் மணப்பெண் போலக் கபாஹி நாடகமாடி குல்சை திருமணம் செய்துவிடுகிறாள். பகடையாட்டத்தில் தொடர்ந்து தவறான எண் விழும் சூதாடியைப் போலாகிறான் குல்ச். விரும்பிய வாழ்க்கை அவனுக்குக் கிடைக்கவில்லை. கிடைத்த வாழ்க்கை ஏற்கும்படியாக இல்லை. சமரசங்களால் ஆனதே வாழ்க்கை என உணர்ந்து கொள்கிறான். காலத்தின் திரைகளை விலக்கி மனிதர்களின் கனவுகளையும் ஆசைகளையும் ஏமாற்றத்தையும் ஒளிவுமறைவின்றிச் சொன்ன விதத்தில் இந்த நாவல் முக்கிய இலக்கியப் படைப்பாகிறது.