‘ஏரு மேலே மாடு கட்டி எட்டி நின்னு போகையிலேயே
பருவத்தடி வயலின்னு பக்குவமா காலுவச்சு
பார்த்தவக சிரிச்சாக பரிதவித்து நின்னாக
எருசிருச்சான் மூலையிலே எருது சிரிச்சின்னு
மேல மேகம் கறுக்கவில்ல மழை மேகம் பெய்யவில்ல
நல்ல கொழு பார்த்து சால எடுத்து வையி’
-நாஞ்சில் நாட்டில் வட பகுதியில் ஒரு கிராமத்தில் சேகரித்த பாடல் இது.
நாஞ்சில் நாட்டு விவசாய நிலங்களில் பருவத்தடி என்ற ஒரு வகை நிலம் உண்டு. இது சகதி நிறைந்த நிலம் இந்த வயலை உழுவதற்குக் காளையைப் பயன்படுத்த முடியாது. காளையின் கால்கள் மண்ணில் புதைந்து விடும். அதனால் எருமை மாட்டையே உழுவதற்குப் பயன்படுத்துவர் கழுத்தில் ஏரைப்பூட்டிவிட்டால் போதும். அப்படியே இழுக்க ஆரம்பித்து விடும். எருமை மேற்கு திசைக்கு வரும்போது மழை மேகம் கவிய ஆரம்பிக்கும். அப்போது எருமைக்குச் சிரிப்பாணி ( சிரிப்பு) பொத்துக் கொண்டு வரும். மேற்கு மூலையில் ஏர் வரும்போது வானம் கருத்தால் மழை பெய்யும் அதன் பிறகு உழவு வேலை நடக்காது. அப்படி ஒரு எண்ணம் எருமைக்கு இதனால் தான் எருமை சிரிக்குமாம். உண்மையில் மழை பெய்யாது.
எருமைக்கு ஏமாற்றம். இப்படியான காரணத்தால் வயலின் மேற்கு மூலையை எருசிருச்சான் மூலை என்றார்கள். இந்த வழக்காறு இப்போத இல்லை. இதன் பொருளும் யாருக்கும் தெரியவில்லை. இந்த வழக்காற்று மொழியும் பருவத்தடி வயலின் இயல்பும் நாஞ்சில் நாட்டுக்குப் பொருந்தி வருவது. இது தொடர்பான மரபுவழித் தொழில் நுட்பம் மண்ணுக்கு மண் வேறுபடும். இதை அறிய பொருள்சார் பண்பாடு (material Culture) பற்றிக் கொஞ்சம் அறிய வேண்டும். எழுத்தாளர் கி.ராஜநாராயணனின் ஒரு கதையில் செத்துப்போன பெண்ணை அடையாளம் காண்பதற்கு, “அவளது தாலியைப் பார்” என்று பெரியவர் ஒருவர் சொல்வதாக வரும். தாலி திருமண அடையாளம்; ஜாதியின் அடையாளமும்கூட. ஒரு பண்பாடு என்பது அந்தப் பண்பாட்டுடன் பொருளைச் சார்ந்தும் சாராமலும் இரண்டு நிலைகளில் அடங்கும். பொருள் சார் பண்பாட்டு வகை, புழங்குப் பொருட்கள், உணவு, வீட்டுப் பொருட்கள், பொதுவான தொழில்களுக்குரிய பொருள்கள், மரபு வழியான தொழில் நுட்பங்கள் எனப் பலவாறாக அமையும். பொருள் சாராப் பண்பாட்டில், சமூகத்தின் நம்பிக்கை, இசை, இலக்கியம், வழிபாடு, கலை போன்றன அமையும்.
பொருள்சார் பண்பாட்டில் அடங்கும் புழங்குப் பொருட்கள் வாழ்க்கைக்குத் தேவை. ஆகையால் அவை சேர்க்கையாக உருவாக்கப்பட்டவையாக இருக்கும். ஒரு சமூகத்தின் பண்பாட்டை அறிய அல்லது இனக்குழுவின் இயல்பை அறிய பொருள்சார் பண்பாடு பற்றிய புரிதல் தேவைப்படுகிறது. இந்தப் பண்பாடு பொருள் சாராப் பண்பாட்டைப் போல் மரபு வழி கடத்தப்பட்டு வருகிறது. தொழில் புரட்சிக்கு பிறகு இது சில மாற்றங்களை அடைந்திருக்கிறது இது பற்றிய தேடலுக்குத் தேவை இருக்கிறது.
பொருள்சார் பண்பாடு, மாற்றம் உள்ளடக்கியதாக இருக்கும். இது காலநிலை, சூழல், மண், ஜாதி, இனக்குழு, உட்பிரிவு போன்றவற்றிற்கு ஏற்ப மாற்றம் அடையும். புழங்குப் பொருள் பண்பாட்டிலும் ஒரு ஜாதி அடையாளம் இருக்கும், மரபு வழி தொழில்நுட்பத்தில் மரபு, சூழல், காலநிலை, மண் அடையாளம் முக்கியம். இதில் ஜாதி அடையாளம் வெளிப்படையாகத் தெரியும்.
புழங்குப் பொருள்கள் விழுமியங்களாக மாறும்போது பொதுமையான அடையாளத்தைப் பெறும் ( எ.கா. தாலி ).தமிழ்ச் சமூகத்தில் ஜாதி, இனங்கள் அடிப்படையில் தாலி வேறுபட்டிருந்தாலும் தமிழ்த் திரைப்படங்களில் காட்டப்படும் தாலி பொதுவான வடிவம் உடையதாய் இருக்கும். அந்த வடிவத்தைப் பலரும் தங்களுக்கு உரித்தாக்கிக் கொள்ளும் போக்கு இன்று உள்ளது. உண்மையில் திரைப்படங்களில் காட்டப்படும் தாலி, பிராமணச் சமூகத்துடன் தொடர்புடையது. புழங்குப் பொருட்களைப் பயன்படுத்தும் சாதிகளின் அடிப்படையிலும் மேல், கீழ் என்னும் பாகுபாடு உருவாகிவிட்டது. இந்தப் பகுப்பு, பொருள் சார் பண்பாட்டைப் பாதித்திருக்கிறது. தண்ணீரை, ஜலம் என்பவர்கள் மேலானவர்கள். சோற்றை, சாதம் என்பவர்கள் உயர்வான
வர்கள் என்று கருதப்பட்ட வழக்காறுகள் உடைந்து வருகின்றன. ஜாதிகளின் உயர்வு தாழ்வு அடிப்படையில், புழங்குப் பொருட்களின் பெயர்கள் மாறும். சொற்களை வைத்துக் கொண்டே ஒருவனின் ஜாதி அடையாளத்தைக் காண்பது என்ற நுட்பத்தைப் பலரும் அறிந்திருக்கிறார்கள்.
புழங்குப் பொருட்கள் ஒரு இனக்குழுவின் விருப்பம், தொழில், பொழுதுபோக்கு, சடங்குகள், அழகியல் கூறுகள் காரண மாகவும் தனிப்பெயரைப் பெற்று அடையாளங்களை வெளிப்படுத்தும். திரைப்படம் மூலம் வந்த பொதுமொழி இந்த அடையாளத்தை உடைத்துக் கொண்டு இருக்கிறது.
நாட்டார் வழக்காறுகளின் வகைமை அழிந்து போவதற்குச் சொல்லப்படும் காரணங்கள் பொருள்சார் பண்பாட்டுக்கும் பொருந்தும். தொழில் புரட்சி, நவீனமயமாதல், உலகமயமாதல், தாராளமயமாதல், குடி பெயர்ச்சி போன்றவற்றின் காரணமாக மரபு வழியாக, சாதி ரீதியாக செய்த தொழில்கள் பண்பாட்டின் சில கூறுகள் அழிந்துவிட்டன.
மின் உற்பத்தி, அது தொடர்பான சாதனங்கள் பல புழங்குப் பொருட்களை அழித்து விட்டன. இதற்கு நல்ல எடுத்துக் காட்டு அரிசி ஆலை, இது அறிமுகம் ஆன பின்பு உலக்கை உட்பட நெல் குத்துவதற்குரிய பல பொருள்களை அருங்காட்சியகத்தில் பார்க்க வேண்டிய சூழ்நிலை உருவாகிவிட்டது. அது தொடர்பான வழக்காறுகளும் அழிந்துவிட்டன. விவசாயம் தொடர்பான பழைய தொழில்நுட்பம் அழிந்துவிட்டது. கருவிகளின் உற்பத்தியால் பழைய தொழில் நுட்பக் கருவிகள் இல்லாமல் ஆயின. பழம் புழங்கு பொருட்களைப் பயன்படுத்தும் வலிமை பெண்களுக்கு மட்டும் அல்ல; ஆண்களுக்கும் இல்லாமல் ஆகிவிட்டது,சாதிகளின் கலப்பு ஒரு புது பண்பாட்டை உருவாக்கிக் கொண்டு வருகிறது இதனால் பொருள் சார் பண்பாட்டில் மேல், கீழ் என்ற நிலையும் கடந்து செல்ல வேண்டி வருகிறது. இது நல்ல ஆரோக்கியமான மாற்றமாகப் பார்க்கலாம். தேவைகளின் அதிகரிப்பால் நவீன கருவிகளும் அவசியமாகிவிட்டன. இன்றைய புழங்குப் பொருட்களில் சில சுற்றுச்சூழலுக்குக் கெடுதல் மாசுபடுதல் என்பதால் அவற்றைத் தவிர்க்கும் அறிவுரையும் இப்போது கூறப்படுகிறது.