சிகண்டியாக திலகவதி (உள்படம்) அ.மங்கை 
சிறப்புக் கட்டுரைகள்

தொன்மத்தின் நெருப்பு

மண்குதிரை

இதிகாசத்தின் எச்சங்கள் நமது இந்த நவீன வாழ்க்கையிலும் ஒரு கட்புலனாகாத அம்சமாகக் கலந்திருக்கிறது. அதன் தொன்மக் கதைகளை இன்றைய நவீனப் பிரச்சினைகளுடனும் பொருத்திப் பார்க்க முடியும். நாடகவியலாளர் அ.மங்கையின் ‘பனித்தீ’ நாடகத்தை இந்தப் பின்னணியில் அணுகலாம். இது கடந்த ஞாயிறன்று சென்னை அலையன்ஸ் பிரான்சிஸில் ஓராள் நாடகமாக நிகழ்த்தப்பட்டது.

அம்பை, சிகண்டி ஆகிய இரு மகாபாரதக் கதாபாத்திரங்களைக் கொண்டு மங்கை இந்த நாடகத்தை, கூத்தின் பனுவலாகத் துலங்கச் செய்துள்ளார். ‘பீஷ்மர் சொல்கிறார், அவரைத் தாக்கிய அம்புகள் என்னுடையவை அல்லவாம். அவை அருச்சுனன் உடையவையாம்’ எனச் சிகண்டி சொல்வதாகத் தொடங்குவதிலிருந்து மங்கையின் பனுவல் ஒரு அடைமழையைப் போல் துடிப்புடன் பெய்ந்துகொண்டே இருக்கிறது. அம்பை, காசி அரசரின் மூத்த மகள். பிரம்மச்சாரியான பீஷ்மர் தன் தம்பி விஜித்ரவீர்யனுக்காக அம்பை உள்பட காசி அரசரின் மகள்களைக் கவர்ந்து அஸ்தினாபுரத்துக் கொண்டுவந்துவிடுகிறார். இதில் அம்பை, சால்வ அரசரின் காதல் வயப்பட்டவளாக இருப்பதால் அவளை விஜித்ரவீர்யன் நிராகரித்துவிடுகிறான். வேறொருவன் கவர்ந்ததால் சால்வ அரசன், பிரம்மச்சார்யான பீஷ்மர் என எல்லாராலும், ஒரு தவறும் செய்யாத அம்பை நிராகரிக்கப்படுகிறாள்.

இதற்குப் பழிவாங்கத்தான் பெண்ணாகப் பிறந்து ஆணாகி, வெல்லமுடியா வரம் பெற்ற பீஷ்மரைக் கொல்கிறாள் அவள். இந்தக் கதைக்குள் இன்றைய நவீன அரசியல் கேள்விகளுக்கான பதில்களை உருவாக்கும் பொருட்டு மங்கை ஒரு குறுக்கீட்டைச் செய்திருக்கிறார். அம்பை என்கிற பெண்ணின் நிலை, சிகண்டி என்கிற பால்புதுமையினரின் நிலை ஆகிய இருவிதங்களில் இந்த நாடகம் பார்வையாளர்களுடன் உரையாடுகிறது. நாடகத்தை நிகழ்த்திய கூத்துக் கலைஞரான திலகவதி, ஆணுக்கான இலக்கணங்களுடன் - முறுக்கு மீசை, கணீர் குரல், குதிக்கும் நடை - மூர்க்கத்துடன் முன்னேறி, சற்று தணிந்து ஒப்பனை களைந்து ஒயிலான மங்கையாகிறார். நாடகத்தின் இந்த இறக்கங்களுக்குள் ஒரு நதியைப் போல் ஒழுகியோடினார். மரப்பாச்சி குழு, அலையன்ஸ் பிரான்ஸிசுடன் இணைந்து நடத்திய இரு நாள் நாடக நிகழ்வில் நிறைவு நாடகமாக இது நிகழ்த்தப்பட்டது. ஒப்பனை, அரங்க வடிவமைப்பு, எழுத்து, நடிப்பு என முழுமையான அனுபவத்தை இந்த நாடகம் பார்வையாளர்களுக்கு வழங்கியது.-

SCROLL FOR NEXT