இந்திய அரசமைப்புச் சட்டத்தின் கூறுகள் 111, 200இல் சட்ட முன்வடிவுகளுக்கான ஒப்புதல் என்கிற தலைப்பின் கீழ் கூறப்பட்டுள்ள ‘முடிந்தவரை விரைவில்’ (as soon as possible) என்ற சொற்றொடர் சேர்க்கப்பட்டதன் பின்னணி என்ன என்பதையும், குடியரசுத் தலைவருக்கும் ஆளுநருக்கும் ‘விருப்ப அதிகாரம்’ (discretion) உள்ளதா என்பதையும் விரிவாகப் பார்ப்பது அவசியம்.
நாடாளுமன்றத்தாலும் சட்டமன்றத்தாலும் நிறைவேற்றி அனுப்பப்படும் சட்ட முன்வடிவுகளுக்கு (மசோதாக்களுக்கு), முறையே குடியரசுத் தலைவரும் ஆளுநரும் அவற்றுக்கு ஒப்புதல் அளிப்பது அல்லது அவற்றை மறுபரிசீலனைக்குத் திருத்தங்களோடு திருப்பி அனுப்புவதற்கான காலவரையறை குறித்த விவகாரம், பேசுபொருளாகவும் விவாதப் பொருளாகவும் இருந்துவந்த நிலையில், தமிழ்நாடு அரசு தொடுத்த வழக்கில் கால நிர்ணயம் செய்து தீர்ப்பு வழங்கியிருக்கிறது உச்ச நீதிமன்றம்.
கால நிர்ணயம் - விவாதம்: 1949 நவம்பர் 26இல் இந்திய அரசமைப்பு இறுதி செய்யப்பட்டு, 1950 ஜனவரி 26இல் முதல் அமலுக்கு வந்தது. ஆங்கிலேயர் ஆட்சியிலிருந்து இந்தியா விடுதலை பெற்ற பிறகு, அரசமைப்புச் சட்டம் ஒன்றை உருவாக்க அமைக்கப்பட்ட அரசியல் நிர்ணய சபையில் மொத்தம் 299 அறிவார்ந்த வல்லுநர்களால் விவாதிக்கப்பட்டு உருவாக்கப்பட்டதுதான், நமது அரசமைப்புச் சட்டம். அரசியல் நிர்ணய சபையின் ஆலோசகர் பி.என்.ராவ் தலைமையில் அரசமைப்புச் சட்ட வரைவு (Draft Constitution) உருவாக்கப்பட்டது. டாக்டர் அம்பேத்கர் தலைமையில் அமைக்கப்பட்ட வரைவுக் குழு (Drafting Committee) வரைவுச் சட்டத்தை இறுதிசெய்யும் பணியை மேற்கொண்டது.
அதன்படி ஏற்கெனவே தயாரிக்கப்பட்ட வரைவு சட்டப் பிரிவுகளை ஆராய்ந்து, விவாதித்து, தேவையான திருத்தங்களைச் செய்து, முழு வடிவிலான இந்திய அரசமைப்புச் சட்டத்தை இக்குழு வடிவமைத்தது. முதலில் தயாரிக்கப்பட்ட வரைவுச் சட்டத்தில் சட்ட முன்வடிவுக்கு ஒப்புதல் வழங்க அல்லது மறுபரிசீலனைக்குத் திருப்பி அனுப்ப ‘not later than six weeks’, அதாவது ‘ஆறு வாரக் காலத்துக்கு மிகாமல்’ என்ற சொற்றொடர் சேர்க்கப் பட்டிருந்தது.
இது குறித்து அரசியல் நிர்ணய சபையில் விவாதம் நடந்தது. உறுப்பினர்களில் சிலர் கால நிர்ணயம் அவசியம் என்றும், சிலர் காலக்கெடு தேவையில்லை என்றும் வாதிட்டனர். அந்த விவாதத்தின்போதுதான் ‘as soon as possible’ என்று ஒரு திருத்தத்தை அம்பேத்கர் முன்மொழிந்தார். இந்தத் திருத்தம் குறித்து அரசியல் நிர்ணய சபையின் உறுப்பினர்கள் விரிவாக விவாதித்தார்கள்.
பின்னர், திருத்தத் தீர்மானத்தை அம்பேத்கர் முன்மொழிய அந்தத் திருத்தம் அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது. “காலக்கெடு விதிக்கவில்லையென்றால், ஒப்புதல் அல்லது திருப்பி அனுப்பும் அதிகாரம் படைத்தவர்கள் அதாவது, குடியரசுத் தலைவர் மற்றும் ஆளுநர்கள் அலட்சியப்போக்கோடு நடந்துகொள்வார்கள். இது மனித இயல்பு. எனவே, கால நிர்ணயம் அவசியம் வேண்டும்” என்று எச்.வி.காமத் உள்ளிட்ட சில உறுப்பினர்கள் வாதிட்டனர்.
முக்கியக் கருவி: அதேவேளையில், அம்பேத்கர் கொண்டு வந்த திருத்தத்தை ஆதரித்துப் பேசியவர்கள், “மசோதாவை மறுபரிசீலனைக்குத் திருப்பி அனுப்புவதே அவைகள் (Houses) கூடி அதை விவாதித்து மீண்டும் அனுப்புவதற்குத்தான். அப்படி மசோதா திருப்பி அனுப்பப்படுகிற காலக்கட்டத்தில் அதைப் பரிசீலிக்க வேண்டிய அவைகள் - அதாவது நாடாளுமன்றமோ, சட்டமன்றமோ அமர்வில் இல்லாமல் இருந்தால் நிறைவேற்ற முடியாது. அவைகள் கூடும் வரை காத்திருக்க வேண்டும்.
எனவே, கால நிர்ணயம் இன்றி ‘as soon as possible’ என்று இருந்தாலே அதுவும் ஒரு வகையில் காலக்கெடுதான். அதாவது, அவைகள் மறுமுறை கூடுவதற்குள் மசோதா திருப்பி அனுப்பப்பட வேண்டும். அப்போதுதான் அவைகள் மீண்டும் கூடிப் பரிசீலித்து ஒப்புதலுக்கு அனுப்ப ஏதுவாக இருக்கும். இதில் காலதாமதம் எதுவும் இல்லை” என்று வாதிட்டனர்.
அந்த அடிப்படையில்தான் அந்தத் திருத்தம் அரசியல் நிர்ணய சபை உறுப்பினர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டு, ‘not later than six weeks’ என்பதற்குப் பதிலாக ‘as soon as possible’ என்று திருத்தம் செய்யப்பட்டது. ‘As soon as possible’ என்பது ஒரு சாதாரணச் சொற்றொடராகத் தோன்றினாலும், அது அரசமைப்பின் செயல்பாட்டைத் தீர்மானிக்கக்கூடிய ஒரு முக்கியக் கருவி. இது நிர்வாகம் காலதாமதம் செய்வதைத் தடுக்கும் ஒரு சட்டக் கட்டுப்பாடு ஆகும்.
சட்டத்தின் அர்த்தங்களை நீதிமன்றங்கள் தீர்மானிக்கும்போது இந்தக் கால வரைவிலக்கிய வரலாறும் முக்கிய இடம் வகிக்கிறது. உச்ச மசோதாவை மறுபரிசீலனைக்குத் திருப்பி அனுப்பக் குடியரசுத் தலைவருக்கு மூன்று மாதக் காலமும், ஆளுநருக்கு ஒரு மாதக் காலமும் நிர்ணயம் செய்து, உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு, 2016ஆம் ஆண்டு மத்திய உள்துறை அமைச்சகத்திலிருந்து குடியரசுத் தலைவர் அலுவலகத்துக்கு, அனுப்பப்படும் மசோதாக்கள் மீது மூன்று மாதக் காலத்துக்குள் முடிவெடுக்கும்படி அலுவலகக் குறிப்பாக அனுப்பப்பட்ட கடிதமே காரணமாகவும் அமைந்துவிட்டது. இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வு, இந்தக் கடித விவரத்தைத் தீர்ப்பில் சுட்டிக்காட்டியிருப்பதும் குறிப்பிடத்தக்கது.
விருப்ப அதிகாரம்: அதேபோல வரைவுச் சட்டத்தில், ஒரு மசோதாவைச் சட்டமன்றத்துக்கு மறுபரிசீலனைக்குத் திருப்பி அனுப்ப - தனித்த விருப்பத்துடன் செயல்படும் அதிகாரம் (Discretion) மாநில ஆளுநருக்கு இருந்தது. ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் கொண்டுவரப்பட்ட சட்டத்தின்படி (Govt. of India Act 1935) அன்றைய ஆளுநர்களுக்குத் தனித்த விருப்பத்துடன் செயல்படும் அதிகாரம் இருந்ததை, அப்படியே வரைவுச் சட்டத்திலும் இடம்பெறச் செய்தார்கள். ஆனால், அரசியல் நிர்ணய சபை உறுப்பினர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு மதிப்பளிக்கும் வகையில் அரசமைப்புச் சட்டக் கூறுகள் 111, 200 ஆகியவற்றில் குடியரசுத் தலைவருக்கும் ஆளுநருக்கும் வழங்கப்பட்டிருந்த அந்த விருப்ப அதிகாரத்தை நீக்கம் செய்தார்கள்.
அப்படி நீக்கியதன் நோக்கமே அமைச்சரவையின் ஆலோசனைப்படி அவர்கள் செயல்பட வேண்டும் என்பதுதான். தேர்ந்தெடுக்கப்பட்ட குடியரசுத் தலைவரும், நியமன ஆளுநர்களும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகளின் எண்ணங்களுடன் ஒத்துப்போகும் வகையில், விருப்ப அதிகாரத்தை அரசியல் நிர்ணய சபை உறுப்பினர்கள் நீக்கியது மக்களாட்சியை உறுதிப்படுத்தும் ஒரு முக்கிய நடவடிக்கை (The framing of India’s Constitution Select Documents by B.Shiva Rao Volume 4, Pages 112 to 114 and 126).
மறுபரிசீலனைக்குத் திருப்பி அனுப்பப்பட்ட மசோதாவைத் திருத்தத்துடனோ அல்லது திருத்தம் இல்லாமலோ மீண்டும் மறுமுறை நாடாளுமன்றமோ அல்லது சட்டமன்றமோ நிறைவேற்றி அனுப்பும்போது, குடியரசுத் தலைவரும் அல்லது ஆளுநர்களும் அதை நிறுத்தி வைக்காமல் ஒப்புதலைக் கட்டாயம் வழங்க வேண்டும் என்ற திருத்தம் உறுப்பினர் ஜெயபிரகாஷ் நாராயணால் முன் மொழியப்பட்டு, அந்தத் திருத்தம் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் அரசியல் நிர்ணய சபை உறுப்பினர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டு, அரசமைப்புச் சட்டத்தின் கூறுகள் 111, 200 ஆகியவற்றில் சேர்க்கப்பட்டன.
அரசமைப்புச் சட்டத்தின் மாண்பு: ஏற்கெனவே பஞ்சாப் மாநில அரசு தொடுத்த வழக்கில் ஆளுநருக்குச் சில கட்டுப்பாடுகளை விதித்தும் அதிகார வரம்பு குறித்தும் அளிக்கப்பட்ட தீர்ப்பின் அடிப்படையில், தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கில் சட்ட முன்வடிவுக்கு ஒப்புதல் கொடுக்க அல்லது திருப்பி அனுப்பக் குடியரசுத் தலைவருக்கும், ஆளுநருக்கும் கால நிர்ணயம் செய்து, முழுமையான நீதி வழங்கும் நோக்கோடு, அரசியல் சட்டக்கூறு 142ஐப் பயன்படுத்தி உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இதையடுத்து, சட்டக்கூறு 143இன்படி உச்ச நீதிமன்றத்துக்கு 14 கேள்விகளுக்கான சட்ட விளக்கங்களைக் குடியரசுத் தலைவர் கேட்டுள்ளார்.
அதற்கு உச்ச நீதிமன்றம் பதில் அளிக்கலாம், அளிக்காமலும் இருக்கலாம். அடுத்த கட்ட நடவடிக்கையாக மறுஆய்வு மனு தாக்கல் செய்யலாம். அந்த மனுவும் ஏற்கெனவே தீர்ப்பு அளித்த அமர்வுக்குத்தான் ஆய்வுக்கு அனுப்பப்படும். அது பயனளிக்குமா என்பதும் சந்தேகமே. கடைசி வாய்ப்பாக, உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யலாம். அப்படிச் செய்தால், அதை அரசியல் சாசன அமர்வு விசாரிக்க வேண்டிய நிலை ஏற்படலாம்.
இவற்றில் எது நடக்கப்போகிறது என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். மேல்முறையீட்டு வழக்காக இது விசாரிக்கப்படும் நிலை ஏற்பட்டால், உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு அளிக்கும் இறுதித் தீர்ப்பு சட்டமாகக் கருதப்படும். மொத்தத்தில், அரசமைப்புச் சட்டத்தின் மாண்பு காப்பாற்றப்பட வேண்டும் என்பதே அனைவரின் விருப்பம்.
- தொடர்புக்கு: ssemmalai09@gmail.com