சிறப்புக் கட்டுரைகள்

மலையேற்றம் விளையாட்டல்ல!

சூ.ம.ஜெயசீலன்

மலையேறுதல் என்பது ஒரு சாகசம். ஆன்மிகப் பயணிகளுக்கும் உற்சாகம் அளிக்கும் விஷயம். அதேவேளையில், மலையேற்றத்தின் மூலம் கிடைக்கும் களிப்பை மட்டும் பார்ப்பவர்கள், அதில் உள்ள ஆபத்துகளைக் கவனிப்பதில்லை. இந்த ஆண்டில் மட்டும், கோவை மாவட்டத்தின் வெள்ளியங்கிரி மலையில் ஏறியவர்களில், 15 வயதுச் சிறுவன் உள்பட ஏழு பேர் உயிரிழந்திருக்கிறார்கள். அரசு நிர்வாகத்தின் கட்டுப்பாடு, மலை ஏறுகிறவர்களின் சுயக் கட்டுப்பாடு ஆகியவை இருந்திருந்தால், இந்த உயிரிழப்புகள் நேர்ந்திருக்காது.

​நான் பிலிப்​பைன்ஸ் நாட்டில் வாழ்ந்த​போது, வருடத்​துக்கு ஒருமுறை வெவ்வேறு மலை உச்சிகளுக்கு ஏறிச் சென்றிருக்​கிறேன். மூன்று பகல் இரண்டு இரவு நடந்து, கடல் மட்டத்​திலிருந்து 2,954 மீட்டர் உயரம் உள்ள, அந்நாட்டின் உயரமான ஆபோ (Mount Apo) சிகரத்​துக்கும் நடந்து சென்று திரும்​பி​யிருக்​கிறேன். ஒரு நாளா, ஒரு வாரமா என்பதல்ல, மலையேற விரும்​பு​கிறவர்​களுக்குப் பொதுவான விதிமுறை உலகெங்கும் உண்டு. அவற்றைக் கடைப்​பிடித்தே ஆக வேண்டும்.

என்னென்ன விதிமுறைகள்? - தனியாகவோ அல்லது குழுவாக இணைந்து தாங்களாகவோ மலையேற யாருக்கும் அனுமதி இல்லை. 18 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் அனுமதிக்​கப்பட மாட்டார்கள். சில மலைப்​பகு​தி​களில் ஏற, ஒருவர் ஆரோக்​கியமாக இருக்​கிறார், மலையேறத் தடையில்லை என்பதை உறுதி​செய்யும் வகையில் தடையில்லாச் சான்றை மருத்​துவரிடம் பெற்றிருக்க வேண்டும்.

மலையேற்​றத்​துக்காக அரசு அனுமதித்​துள்ள இடங்களில் அங்கீ​காரம் பெற்ற வழிகாட்​டிகள் இருக்​கிறார்கள். அவர்களு​டன்தான் பயணிக்க முடியும். இணைய வழியில் முன்பதிவு செய்திருந்​தா​லும், மலையடி​வாரம் சென்று அடையாள அட்டைகளுடன் பெயர்​களைப் பதிவுசெய்ய வேண்டும். மற்ற குழுக்​களுடன் சேர்ந்தும் பயணிக்​கலாம். எண்ணிக்கைக்கு ஏற்றாற்போல நமக்கான வழிகாட்​டிகளை அதிகாரிகள் நியமிப்​பார்கள்.

பயணப் பாதை, ஆபத்தான இடங்கள், அவசர கால முதலுதவி என அனைத்தும் அவர்களுக்குத் தெரியும். மலையேறும் முன்பாக மலையில் எவ்வாறு நடந்து​கொள்ள வேண்டும் என விளக்கு​வார்கள். “மலையில் நடக்கும்​போது, அதிர்ந்து பேசாதீர்கள், பூச்சிகளும் பிற உயிரினங்​களும் அந்நிய ஒலியால் நெருக்​கடிக்கு ஆளாக நேரிடும்” என்று ஒரு வழிகாட்டி குறிப்​பிட்டது இன்னும் நினைவில் உள்ளது.

ஒரு குழுவுக்கு / ஒரு நாளைக்கு இத்தனை பேர்தான் என்கிற கட்டுப்பாடு உண்டு. கூடுதலாக ஒருவரையும் அனுமதிக்க மாட்டார்கள். சிலரிடம் சொந்தமாக ஊன்றுகோல் இருக்​கும்; இல்லா​விட்​டால், வாடகைக்குப் பெற்றுத் திரும்​பும்போது கொடுத்துவிட வேண்டும். மலையேற்​றத்​தின்போது குப்பைகளை ஆங்காங்கே வீசக் கூடாது. புறப்​படும்​போதே, நம் குப்பைகளைக் கொண்டுவர பை தருவார்கள். குப்பைகளுடன் திருப்பித் தந்தால், கட்டணத்​திலிருந்து சிறு தொகையைத் திரும்பக் கொடுப்​பார்கள். ஒன்றிரண்டு கழிப்​பறைகள் குறிப்​பிட்ட இடங்களில் மட்டுமே இருக்​கும். நினைத்த இடத்தில் யாரும் ஒதுங்க மாட்டார்கள்.

ஆபத்தின் அறிகுறிகள்: மலையேற வருகிறவர்கள், பிடிமான​முள்ள காலணி, கையுறை, எடை குறைவான - எளிதில் காயும் ஆடையை அணிந்​திருப்​பார்கள். முதலுதவிக்கான மாத்திரைகளும், தேவைப்​படுவோர் குளிரைச் சமாளிப்​ப​தற்கான ஆடையும் வைத்திருப்​பார்கள். ஆரம்பத்தில் உற்சாகமாக இருக்​கும். உயரே செல்லச்​செல்ல மூன்று வெவ்வேறு வகையான நிலைகளில் பாதிப்பு ஏற்படும்.

முதலாவது, பொதுவான அறிகுறிகள். முழங்கால் வலிக்​கும், களைப்பு ஏற்படும். குறைவான காற்றழுத்​தத்​தா​லும், காற்றில் ஆக்ஸிஜன் அளவு குறைவ​தாலும் ஒவ்வொரு மூச்சின்​போதும் உடலுக்குக் கிடைக்கும் ஆக்ஸிஜனின் அளவு குறையும். தலைவலி, குமட்டல், தலை சுற்றல், சோர்வு ஏற்படும். இது யதார்த்​த​
மானது. அச்சப்பட வேண்டிய​தில்லை.

இரண்டாவது, நுரையீரல் பாதிப்பு (High Altitude Pulmonary Edema (HAPE)). ஆக்ஸிஜனின் அளவு அதிகம் குறையும்​போது, ரத்த நாளங்​களில் ஏற்படும் மாற்றங்​களால் நுரையீரலில் திரவம் சேரும். வறட்டு இருமலும், மூச்சுத் திணறலும் ஏற்படும். ஏற்கெனவே சுவாசக் கோளாறு உள்ளவர்​களுக்குப் பாதிப்பின் தீவிரம் அதிகரிக்​கும். இவர்களுக்கு உடனடி மருத்​துவச் சிகிச்சை தேவை. மூன்றாவது, பெருமூளை வீக்கம் (High altitude cerebral edema).

அதீதத் தலைவலி ஏற்படும், வலி நிவாரணி​களாலும் பயனில்லை. பேச்சும் செயலும் ஒருங்​கிணைந்து செல்லாது, என்ன நடக்கிறதென்றே யோசிக்க முடியாமல், நினைவு தப்பிப்​போகும். இரண்டாவது, மூன்றாவது பாதிப்​புக்கான அறிகுறிகள் தென்பட்​டால், நடப்பதை நிறுத்திச் சிறிது ஓய்வு எடுக்க வேண்டும். மேலே தொடர்ந்து ஏறாமல், கீழே இறங்கிப் போதுமான ஆக்ஸிஜன் கிடைக்கும் இடத்துக்கு வர வேண்டும். குறைந்த​பட்சம் 300 மீட்டர் கீழிறங்கி வர வேண்டும் என்கிறார்கள் நிபுணர்கள். மருத்துவ உதவிகளை உடனே பெற வேண்டும்.

மலையேறு​வதற்கு முந்தைய சில நாள்கள் இரவில் நன்கு தூங்கி உடலுக்கு ஓய்வு கொடுப்பது அவசியம். மலையேற்​றத்​தின்போது ஒரு சில இடங்களில் மட்டும்தான் குடிதண்ணீர் வசதி இருக்​கும். அதி உயரமான இடங்களில் தண்ணீருக்கான வாய்ப்பு இருக்​காது. நாவும் உடலும் வறண்டு​வி​டாமல் இருக்க, மலையேறிகள் எப்போதும் தண்ணீர் வைத்திருக்க வேண்டும். தாகம் எடுக்​கும்வரை காத்தி​ராமல் குடிக்க வேண்டும்.

செய்யக் கூடாதவை: போட்டி​போட்டு மலையேறக் கூடாது. 25 வயதினர் நடக்கும் வேகத்தில் 50 வயதினர் நடப்பது இயலாது. ஒத்த வயதினரே ஆனாலும் ஒவ்வொரு​வரும் தனித்து​வ ​மானவர்கள். உங்களால் முடிந்த வேகத்​தில், சீரான இடைவெளியில் நடக்க வேண்டும். அடுத்​தவரை​யும், விரைவாக வரக் கட்டாயப்​படுத்தக் கூடாது. செங்குத்தான அல்லது உயரமான இடங்களில் ஏறும்​போதும், இறங்கும்​போதும் அதுவரையிலான வேகத்தை​யும், இரு அடிகளுக்கான இடைவெளியையும் குறைக்க வேண்டும். மேடு பள்ளங்​களில் வாகனம் ஓட்டும்போது நிதானமாக, ஒரே சீரான வேகத்தில் ஓட்டு​கிறோமே, அப்படி.

சில விநாடிகள் நடந்த பிறகு, நின்று முழங்காலை நேராக வைத்து, நன்றாக அடிவயிறுவரை மூச்சை இழுத்து​விட்டு மறுபடியும் நடக்க வேண்டும். ஒட்டுமொத்த உடல் எடையையும் காலுக்குள் கொண்டு​வந்து உந்தி உந்தி ஏறுவதால் தசைப் பிடிப்பு ஏற்படாமல் தொடைச் சதையை இலகுவாக்​க​வும், தேவைப்​படும் கூடுதல் ஆக்ஸிஜனைப் பெற்றுக்​கொள்ளவும் இது உதவும். போதுமான இடைவெளியில் எடுக்கும் ஓய்வு, நமது ஆர்வத்தைத் தக்கவைக்க உதவும். இதயம், நுரையீரலுக்கு ஓய்வு கிடைக்​கும். இதயத் துடிப்பு சீரான நிலைக்கு வரும்.

கடல் மட்டத்​திலிருந்து 1,846 மீட்டர் உயரமான பிலிப்​பைன்ஸின் உலாப் மலை உச்சிக்கு ஒருமுறை நண்பருடன் சென்றிருந்​தேன். முகட்டுக்குச் சென்று​விட்டு இறங்கிய பாதை, மழைநீரோடிய பாதை. ஏறக்குறைய செங்குத்தாக இருந்தது. வழியில் ஓய்வெடுப்பது குறித்து நான் கேட்ட​போது, “அதெல்லாம் வேண்டாம். போய்விடலாம்” என்றார் நண்பர். சிரித்​துக்​கொண்டே குதித்துக் குதித்து இறங்கினேன்.

விளைவு, சில மாதங்கள் மாடிப்படி ஏறினால்கூட முழங்கால் வலித்தது. மலையில் வெற்றிகரமாக ஏறி இறங்கு​வதுதான் என் நோக்கமே அன்றி, யார் முதலில் ஏறி இறங்குவது என்பதல்ல என்பதைக் கற்றுக்​கொண்​டேன். பிறகு, முழங்கால் கவசம் அணிந்து எனக்கான வேகத்தில் மலையேற ஆரம்பித்​தேன்.

வெள்ளி​யங்கிரி மலையில் பக்தர்கள் சென்று​வரும் படங்களைப் பார்க்​கிற​போது, மலையேற்றம் குறித்த புரிதல் இல்லாமல் பலரும் பயணிப்​ப​தாகவே தெரிகிறது. அரசு நிர்வாகம் தன் திட்ட​மிடலை இன்னும் கூர்மைப்​படுத்த வேண்டும். கூடுதலாக, மலையேற்றம் குறித்த விழிப்பு​ணர்வு, ஒருங்​கிணைவு, திட்ட​மிடல், பொறுமை, வழிகாட்டிகளின் வார்த்தைகளுக்குச் செவிமடுக்கும் சுய ஒழுக்கம், சுயக் கட்டுப்​பாடுகள் ஆகியவை மலையேறுகிறவர்​களுக்கு மிக முக்கியம். ஆபத்தில்லா மலையேற்​றத்​துக்கு இவையெல்லாம் நிச்சயம் வழிவகுக்​கும்.

- தொடர்புக்கு: sumajeyaseelan@gmail.com

SCROLL FOR NEXT