புதிய வகை நெல் ரகங்கள் கண்டுபிடிப்பில் இந்தியா சாதனை படைத்துள்ளது. ஆமாம், இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகம் (ICAR) சமீபத்தில் ஏற்பாடு செய்த ஒரு நிகழ்ச்சியில், உலகின் முதல் மரபணு திருத்தப்பட்ட (Genome-edited) இரண்டு நெல் வகைகளை மத்திய வேளாண் அமைச்சர் வெளியிட்டதன் மூலம், இந்தியா விவசாயக் கண்டுபிடிப்புகளில் ஒரு புதிய அத்தியாயத்தைப் படைத்துள்ளது. வேளாண் அமைச்சகத்தின் 2024-25ஆம் ஆண்டுக்கான மதிப்பீட்டின்படி, முதன்முதலாக சீனாவின் நெல் உற்பத்தியை (14.7 கோடி டன்) விஞ்சி, இந்தியா 14.95 கோடி டன் உற்பத்தி செய்து, உலகின் மிகப்பெரிய நெல் உற்பத்தியாளராக உருவெடுத்துள்ளது.
இது கூடுதலாக ஒரு சாதனை! அதேவேளையில், இது தொடர்பான சில முக்கியக் கேள்விகளும் எழுகின்றன. இந்தியா ஏற்கெனவே தேவைக்கு அதிகமாக நெல் பயிரிடும்போது, மரபணு திருத்தப்பட்ட நெல் தேவையா? புதிய நெல் ரகங்கள் பாதுகாப்பானவையா? இந்தியாவின் மொத்த விவசாயிகளின் எண்ணிக்கையில், 86%ஐக் கொண்டுள்ள குறு, சிறு விவசாயிகளுக்கு இப்புதிய ரகங்கள் பயனளிக்குமா?
ஏன் நெல்லைத் தேர்வுசெய்ய வேண்டும்? - நெல் தற்போது இந்தியாவில் சுமார் 4.7 கோடி ஹெக்டேர் பரப்பளவில் பயிரிடப்படுவதோடு மட்டுமல்லாமல், பரப்பளவில் முதன்மைப் பயிராகவும் திகழ்கிறது. அதேவேளையில், ஒரு கிலோ நெல் உற்பத்திக்கு 3,000 - 5,000 லிட்டர் தண்ணீர் தேவைப்படுவதால், பல மாநிலங்களில் அளவுக்கு அதிகமாக நிலத்தடி நீரை உறிஞ்சுவதற்கு நெற்பயிர் காரணமாக உள்ளது.
தண்ணீரை அதிகம் வயலில் நிறுத்தி நெல் சாகுபடி செய்யப்படுவதால், அதிகளவில் மீத்தேன் வெளியேறுவதாகவும், இதனால் இந்தியாவின் மொத்த விவசாயப் பசுங்குடில் வாயு வெளியீடு அதிகரிப்பதாகவும் கூறப்படுகிறது. ஆனால், புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டு உள்ள மரபணு திருத்தப்பட்ட நெல் வகைகள், மூன்று முக்கிய நன்மைகளை வழங்குவதாகக் கூறப்பட்டுள்ளது. ஒன்று, சீக்கிரம் முதிர்ச்சியடைவதால், அறுவடைக் காலம் அதன் தாய் நெல் வகைகளைவிட 15-20 நாள்கள் குறைகிறது.
இரண்டு, அறுவடைக் காலம் குறைவதால், நீர்ப்பாசனத்தில் இரண்டு முதல் மூன்று சுற்றுத் தண்ணீர் தேவையைக் குறைக்கிறது. மூன்று, இவ்வகை நெல் ரகங்கள் விளைச்சலை 15-20% அதிகரிப்பதோடு, வறட்சியைத் தாங்கும் தன்மையையும் கொண்டுள்ளன. நெல் சாகுபடிக்கான இடுபொருள்களின் தேவை குறைந்து, விவசாயிகளின் வருமானத்தை அதிகரிப்பதோடு, நெகிழ்வான பயிர்ச் சுழற்சிகளை (flexible crop cycles) நடைமுறைப்படுத்துவதற்கு இப்புதிய நெல் ரகங்கள் உதவக்கூடும். சில விவசாய அமைப்புகள், மரபணு திருத்தப்பட்ட நெல் ரகங்கள் பற்றிய அச்சத்தை வெளிப்படுத்தியுள்ளன.
மரபணு திருத்தம், மரபணு மாற்றப்பட்ட பயிர்களிலிருந்து (Genetically Modified Crops) முற்றிலும் வேறுபட்டது என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். மரபணு திருத்தம் என்பது வேறு பயிர்களின் வெளி மரபணுக்களை (foreign genes) அறிமுகப்படுத்தாமல், ஒரு தாவரத்தின் அதன் சொந்த டிஎன்ஏ-இல் இலக்கு மாற்றங்களைச் செய்து உருவாக்கப்படுவதாகும். ஆனால், இதற்கு நேர்மாறாக, மரபணு மாற்றப்பட்ட பயிர்கள், பிற இனங்களில் இருந்து (other species) மரபணுக்களை எடுத்துப் பயிர்களில் செருகுவதால், அவை சுற்றுச்சூழல், சுகாதாரப் பிரச்சினைகளை ஏற்படுத்தக்கூடும்.
இந்த முக்கியமான வேறுபாட்டை அங்கீகரித்து, இந்தியா 2022ஆம் ஆண்டு வெளியிட்டுள்ள ‘மரபணு திருத்தப்பட்ட தாவரங்களின் பாதுகாப்பு மதிப்பீட்டுக்கான வழிகாட்டுதல்கள்’ பற்றிய அறிக்கை, சில மரபணு திருத்தப்பட்ட பயிர்களை, மரபணு மாற்றப்பட்ட பயிர்களுக்கு உள்ள நீண்ட ஒழுங்குமுறை செயல்முறையிலிருந்து விலக்கு அளித்துள்ளது. இது அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் உள்ள உலகளாவிய ஒழுங்குமுறை விதிகளுடன் ஒத்துப்போகிறது.
கடுமையான அறிவியல் நெறிமுறைகளின் கீழ் உருவாக்கப்படுகின்ற, மரபணு திருத்தப்பட்ட பயிர்கள் நச்சுத்தன்மை வாய்ந்தவை என்பதற்கான எந்த உறுதியான ஆதாரமும் இல்லை. உண்மையில், மரபணு திருத்தப்பட்ட முறையில், வழக்கமாகச் செய்யப்படும் பயிர் இனப்பெருக்கத்தைவிட (crop breeding) வேகமாகவும், துல்லியமாகவும் புதிய பயிர்களை உருவாக்கி, பயிர்களின் மீள்தன்மையை (crop resilience) உயர்த்தி, உணவு உற்பத்தியை அதிகரிக்க முடியும் எனக் கூறப்படுகிறது.
விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்குமா? - இந்தியாவில் 86%க்கும் மேற்பட்ட விவசாயிகள் 2 ஹெக்டேருக்கும் குறைவாக நிலம் வைத்திருக்கும் குறு, சிறு விவசாயிகள். அவர்களுக்கு அறிவியல் புதுமையைவிட மலிவு விலை விதைகள், காலநிலை மாற்றத்தைச் சமாளித்தல், நிலையான வருமானம் ஆகியவை மிக முக்கியம். மரபணு திருத்தப்பட்ட நெல் விதைகளும், கலப்பின விதைகள் (Hybrid seeds) அல்லது மரபணு மாற்றப்பட்ட விதைகள் (GM seeds) போல அதிக விலை நிர்ணயம் செய்யப்பட்டால், விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள். இருப்பினும், தற்போது வெளியிடப்பட்டுள்ள இரண்டு புதிய நெல் வகைகளும், இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகத்தின் கீழ்வரும் பொதுத் துறை நிறுவனங்களால் உருவாக்கப்பட்டுள்ளதால், இவற்றின் விலை அதிகமாக இருக்காது என நம்பலாம்.
இருந்தபோதிலும், தேசிய உணவுப் பாதுகாப்புத் திட்டம், பிஎம் கிஸான் விதை, மினி-கிட்கள் போன்ற அரசுத் திட்டங்கள் மூலமாகவும், வேளாண் கூட்டுறவுச் சங்கங்கள் மூலமாகவும் இவ்விதைகளைக் குறைவான விலையில் விநியோகித்தால் சிறு, குறு விவசாயிகளும் பயன்படுத்த முடியும்.
2024–25இல் ஒரு குவிண்டால் நெல்லுக்குக் குறைந்தபட்ச ஆதார விலையாக ரூ.2,320 கொடுக்கப்பட்டு, கொள்முதல் செய்யப்பட்டாலும் உரம், டீசல், கூலிச் செலவுகள் வேகமாக அதிகரித்துவருவதால், பயிர்ச் செலவை மீட்பதற்கு விவசாயிகள் பெரிதும் போராடுகிறார்கள்.
மேலும், சமீப காலமாக ஏற்பட்டுள்ள ஒழுங்கற்ற வானிலை, பயிர் சாகுபடியில் நஷ்டங்களை அதிகரித்துள்ளது. குறுகிய அறுவடைக்காலம், வறட்சியைத் தாங்கும் தன்மை கொண்ட மரபணு திருத்தப்பட்ட நெல் வகைகள், இடுபொருள்களின் பயன்பாட்டையும் நீர்ப்பாசனத் தேவைகளையும் குறைத்து அதிக மகசூல் கொடுப்பதால் விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்க உதவக்கூடும்.
எதிர்காலம் நோக்கி: இந்தியாவில் நெல் உற்பத்தியில் ஏற்பட்டு உள்ள அதீத வளர்ச்சி, பிற அத்தியாவசியப் பயிர்களில் உள்ள பெரும் பற்றாக்குறையை மறைக்கிறது. உள்நாட்டு உற்பத்தி போதாத காரணத்தால், 2023–24இல் மட்டும் நமது நாடு 1.59 கோடி டன்களுக்கு மேல் சமையல் எண்ணெயையும், ஏறத்தாழ 47.4 லட்சம் டன் பருப்பு வகைகளையும் இறக்குமதி செய்த காரணத்தால், ரூ.1.4 லட்சம் கோடிக்கும் அதிகமான இறக்குமதிச் செலவு ஏற்பட்டு உள்ளது.
நெல் பயிர்களுக்குக் கொடுக்கப்படுகின்ற பயிர் இனப்பெருக்க ஆராய்ச்சி முன்னுரிமை, அதனுடன் தொடர்புடைய முதலீடுகள், பருப்பு, எண்ணெய்வித்துப் பயிர்களுக்குக் கொடுக்காத காரணத்தால், இப்பயிர்களின் உள்நாட்டு மகசூல் உலகளவில் ஒப்பிடும்போது மிகக் குறைவாக உள்ளது.
இந்த ஏற்றத்தாழ்வை மரபணு திருத்தம் செய்யப்பட்ட விதைகளை உருவாக்குவதன் மூலம் சரிசெய்ய முடியும். ஊட்டச்சத்து, விவசாயிகளின் உயர் வருமானத்துக்கு முக்கியமான கொண்டைக் கடலை, துவரம் பருப்பு, நிலக்கடலை, கடுகு போன்ற பயிர்களில், வறட்சியைத் தாங்கி, பூச்சி எதிர்ப்புத்தன்மையை அதிகரித்து, மகசூலை உயர்த்த இப்புதிய தொழில்நுட்பம் உதவக்கூடும். மரபணு திருத்தப்பட்ட நெல் ரகங்கள் மூலமாக, நெல் சாகுபடிப் பரப்பளவை விரிவுபடுத்துவதற்கோ அல்லது ஒற்றைப் பயிர் (mono-crop) சாகுபடியை மேலும் தீவிரப்படுத்துவதற்கோ முயற்சி எடுக்கப்பட்டால், அது வேளாண் வளர்ச்சியில் பல பிரச்சினைகளை ஏற்படுத்தக்கூடும்.
மாறாக நீர்ப் பற்றாக்குறை, காலநிலை பாதிப்புக்கு உள்ளான பகுதிகளில், தற்போதுள்ள நெல் சாகுபடிக்குப் பதிலாக நிலையான முறையில் பயிர் செய்வதற்கு ஒரு கருவியாக இந்தப் புதிய நெல் ரகங்களைப் பயன்படுத்த வேண்டும். இதன் நன்மை விவசாயிகளுக்குக் கிடைக்க, பொது விதை அமைப்புகள் எந்தவித நெருக்கடிக்கும் ஆளாகாமல் மலிவு விலையில் விதைகள் கிடைப்பதை உறுதிப்படுத்த வேண்டும்.
அதேநேரத்தில், நெல்லைவிட அதிகப் பரப்பளவில் பயிரிடப்படும் பருப்பு, எண்ணெய்வித்துப் பயிர்களில், உற்பத்தித்திறன் மிகவும் குறைவாக உள்ள காரணத்தால், இப்பயிர்களில் மரபணு திருத்தப்பட்ட விதைகளை உருவாக்க ஆராய்ச்சிகளை முடுக்கிவிட வேண்டும்.
மரபணுத் திருத்தம் மாற்றத்துக்கான ஒரு சக்திவாய்ந்த நெம்புகோலாக இருக்க வேண்டுமென்றால், அது இடுபொருள்களின் சார்புநிலையைக் குறைத்து, மீள்தன்மையை மேம்படுத்தி, நாட்டில் அதிகமாக உள்ள குறு, சிறு விவசாயிகளுக்கு உதவக்கூடிய பரந்த இலக்குகளுடன் இருக்க வேண்டும். அறிவியல் முன்னேற்றம் சமூகத்துக்குப் பெருமளவில் பயனளித்தால் மட்டுமே, அதற்கு உண்மையான மதிப்பு இருக்கும் என்பதைக் கொள்கை வகுப்பாளர்கள் நினைவில் கொள்ள வேண்டும்.
- தொடர்புக்கு: narayana64@gmail.com