அன்றாடம் என்பதே இயற்கையின் காலப் பரிமாணம் ஆகும். மானுடம் நினைவுசேகரம், அறிவுசேகரம் போன்றவற்றால் கடந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம் என்று பிரித்து, வரலாற்றுத் தொடர்ச்சியை உருவாக்கிக்கொள்கிறது. அதன் விளைவுகளைத் தத்துவார்த்த மானுடவியல் நோக்கில் ஆராயும் கட்டுரைத் தொடர் இது.
அன்றாட வாழ்க்கையின் இருத்தலியல் புதிரின் மையம் என்னவென்றால், அதன் உள்ளடக்கம் அளப்பரிய வித்தியாசங்களின் நடனமாக இருந்தாலும், அதன் வெளிப்பாட்டு வடிவம் ஓயாத மறுநிகழ்வாகத் தோற்றம் தருவதுதான். ஒவ்வொரு தருணமும் தனக்குள் பதுக்கி வைத்துள்ள வித்தியாசம் அதை அபூர்வமாக, முன்னர் நிகழாததாக மாற்றிவிட முடியும் என்றாலும், மானுடத்தின் செயல்தர்க்கம் அதனை மறுநிகழ்வாகவே பற்ற முயலுவதால் அபூர்வத்தில் கவனம் கொள்வதில்லை.
ஒரே நதியில் இருமுறை காலை நனைக்க முடியாது என்று கிரேக்கத் தத்துவதரிசி ஹிராகிளிடஸ் கூறுவதற்கும், ஒருவர் தினமும் அதே நதியில் குளிப்பதாக, பன்னெடுங்காலமாக நதி அங்கே ஓடுவதாகக் கூறுவதற்கும் உள்ள வேறுபாடுதான் அது. காணும் விதமே மெய்ம்மையை உருவாக்குவதாக குவாண்டம் இயற்பியல் கூறுவது வியப்பளிக்கலாம். மனித அனுபவத்தில் அதனை வழமையான விஷயங்களால் புறவயப்படுத்திப் பார்ப்பதால், அன்றாடம் மறுநிகழ்வின் வெளிப்பாடாகிறது.
இன்னும் சரியாகச் சொன்னால் செயல்வெளி என்கிற அளவில் மறுநிகழ்வும், புறமெய்ம்மையும் தோற்ற உறுதிகளாக (ஒரு பொருள் தொடர்ந்து அதன் தன்மைகள் மாறாமல் புலனாதல்/ இயங்குதல்; உ-ம்: தேன் இனிக்கும்) மாறுகின்றன. நினைவாற்றல்தான் தோற்ற உறுதிப் பெருக்கத்தின் களம். நினைவாற்றலை இழந்த ஒருவருக்கு, அல்சைமர் நோயால் பாதிக்கப்பட்டவருக்கு, யாரையும் அடையாளம் காண முடியாமல் போவதைக் கருத்தில் கொண்டால், நினைவாற்றலே இயல்பானவெளியை நமக்குக் கட்டமைத்துத் தருவதைக் காணலாம்.
அப்படிச் செய்யும்போது, அது இருப்பையும் இன்மையையும் பிரிப்பதால் தோற்றவியல் கேள்விகள் சாத்தியமாகின்றன. எதனால் ஒன்று இருக்கிறது அல்லது இல்லாமல் போகிறது, எதிலிருந்து எது தோன்றியது என்பது போன்ற பல கேள்விகள் சாத்தியமாகின்றன.
இந்தக் கேள்விகளுக்கு விடை தெரியாதபோது அன்றாட வாழ்வு சிறையாக, சலிப்பூட்டுவதாக, அபத்தமாக மாறலாம். அப்படி மாறுவதைத் தவிர்க்க மனிதர்கள் கற்பனைகளால், கற்பிதங்களால் இயல்பானவெளியை நிரப்பிக்கொள்ளும் வழியைக் கையாண்டனர். இயல்பானவெளியைக் கவின்மை நிரம்பியதாகக் காண்பது.
நட்சத்திரங்கள் எல்லாம் முன்னோரின் ஆன்மாக்கள், மரம் செடி கொடிகளில் எல்லாம் வனதேவதைகள் குடியிருக்கிறார்கள் என்று பலவிதமான கற்பனைகளால் சூழலை நிரப்பிக்கொள்வது, எல்லாவற்றையும் இயக்கும் ஓர் ஆற்றலை உருவகப்படுத்தி வழிபடுவது ஆகியவற்றின் மூலம், வழமைகளால் நிரம்பிய புலனுலகச் சிறையை அழகுபடுத்திக்கொள்ளலாம். ஆனால், அறிவியல் தர்க்கம் காரணமாக இயற்கையின் கவின்மை நீக்கமடையும்போது (disenchantment), மீண்டும் புலனுலகம் தன் வழமைக் கூட்டில் நம்மை அடைப்பதுபோலத் தோன்றுவதே இருத்தலியல் நெருக்கடி.
மகிழ்ச்சியான சிசிஃபஸ்: இந்த இருத்தலியல் நெருக்கடியை எதிர்கொள்ள ஃபிரெஞ்சு எழுத்தாளர் ஆல்பெர்ட் காமு ஒரு சாத்தியத்தைச் சிந்தித்தார். கிரேக்கப் புராணத்தில் சிசிஃபஸ் கொடூரமாகச் சபிக்கப்பட்டான். ஒரு கல்லை மலை உச்சிக்கு உருட்டிச் செல்ல வேண்டும். அந்தக் கல் மீண்டும் மலையடிக்கு உருண்டு வந்துவிடும். அதனை மீண்டும் உச்சிக்கு உருட்டிச் செல்ல வேண்டும்.
எல்லையற்ற மறுநிகழ்வாக இந்தச் செயல் தொடர்ந்துகொண்டே இருக்கும். இந்த மீட்சியற்ற நிலையைச் சிந்தித்த காமு, கல் உச்சியிலிருந்து உருண்டு கீழே சென்ற பிறகு, சிசிஃபஸ் இறங்கி வருவானல்லவா? அப்போது அவன் கையை வீசியபடி சுதந்திரமாக இறங்கி வருவான்.
அந்தத் தருணம் அவன் கட்டுப்பாட்டில் இருப்பதால் அவன் மகிழ்ச்சியாக இருப்பான் என்று நாம் கற்பனை செய்துகொள்ள வேண்டும் என்று கூறினார்: ‘One must imagine Sisyphus happy.’ சிசிஃபஸ் கல்லை உச்சிக்கு உருட்டிச் செல்வது மறுநிகழ்வு என்றால், அந்தச் செயலுக்குள் அடங்கியுள்ள வித்தியாசத்தின் தருணமாக அவன் மலையிறங்குவது அமைந்துள்ளது எனலாம். பர்ஃபெக்ட் டேஸ் (Perfect Days) என்ற நுட்பமான திரைப் படைப்பை இரண்டு ஆண்டுகளுக்கு முன் ஜெர்மானிய இயக்குநர் விம் வெண்டர்ஸ் உருவாக்கினார்.
அதில் அன்றாட வாழ்வை முழுமையாக ரசித்து ஏற்றுக்கொள்ளும் டோக்கியோ நகரத்துத் தூய்மைப் பணியாளரைப் படைத்திருந்தார். வரலாற்றின் இடிபாடுகளுக்குக் கீழே விரிந்துள்ள அன்றாடத்தின் பெருவெளியில் பயணித்த கலைஞர்களில் முக்கியமானவர் விம் வெண்டர்ஸ். நம் புலனுலகத்துக்கு அப்பால் எதுவுமில்லை என்பதை உணரும்போதுதான் அன்றாடத்தில் பொதிந்துள்ள அபூர்வங்களின் கதவுகள் திறக்கும்; சுயத்தின் விகசிப்பு (மலர்தல்) அது.
அபூர்வ தருணம் தேடி: அற்பத் தருணங்களில் திளைக்கும் தன்னிலை சுயத்தின் விகசிப்பு சாத்தியமாகாமல் போவது அது தன்னிலையில் சிறைபடு வதால்தான். மொழிவயமான தன்னிலை சுயத்தை, அன்றாடத்துக்கு அப்பால் உள்ள மெய்ம்மையைத் தேட வைப்பதில் பதற்றமடையும் சுயம், பல்வேறு அற்ப நிகழ்வுகளில் அபூர்வத் தருணங்களை உருவாக்கிக்கொள்ள நினைக்கிறது.
முதல் பரிசு வாங்க வேண்டும், முதல் மதிப்பெண் வாங்க வேண்டும், விளையாட்டில் வெல்ல வேண்டும், பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை வரும் புனித நாளில், புனித நீரில் நீராட வேண்டும் எனப் பல சிறுபொருள் இலக்குகளைத் தனக்கு உருவாக்கிக்கொண்டு, புலனுலகுக்கு அப்பால் இருப்பதாகக் கற்பித்துக்கொள்ளும் மற்றமையைச் சந்திப்பதாக நினைக்கிறது தன்னிலை.
இயல்வெளி எல்லாம் பரம்பொருள் நிறைந்திருப்பதாக ஆன்மிக நோக்கு கொள்பவர்கள்கூட ஏதோ ஒரு தலத்துக்கு வெகுதூரம் பயணம் செய்து, குறிப்பிட்ட புனித நாளில் அங்கே இருந்தால்தான் ஆன்மா முக்தியடையும் என்று கருதுகிறார்கள். இவ்வகையான சந்தர்ப்பங்கள் பெருந்திரள் கூடும் வேளையாக இருந்தால், கூட்ட நெரிசலில் மூச்சுத்திணறி உயிரிழக்கிறார்கள். வரலாற்று வேட்கையாக ஆன்மிகம் மாறும்போது, வரலாற்றை உருவாக்குகிறேன், விதி சமைக்கிறேன் என்ற அற்ப மாயைகளுக்காக உயிர்ப்பலி கொடுக்கிறோம்.
ஆன்மிகம் பொருள்வேட்கையாக மாறிய நிலையில், ஓர் அங்காடியில் தள்ளுபடி விற்பனையில் பொருள்களை வாங்கச்சென்றுகூட நெரிசலில் சிக்கிச் சாகிறோம். ஆன்மிகம் புலன் திளைப்பாக மாறும்போது, திரைப்பட அரங்குகளில் ஏற்படும் நெரிசலில் மிதிபடுகிறோம். விளையாட்டு அணியின் வெற்றிக் கொண்டாட்டத்தில் பங்கெடுக்கும் களிப்பில் கூட்ட நெரிசலில் உயிரிழக்கிறோம். அன்றாடத்தினுள் பொதிந்துள்ள வித்தியாசங்களின் அபூர்வத்தைக் காண முடியாததால், எதையாவது செய்து வெறுமையை வெல்ல நினைக்கிறோம் என்பதே நெருக்கடி.
- தொடர்புக்கு: rajankurai@gmail.com