கொல்கத்தாவிலுள்ள சரித்திரச் சிறப்புமிக்க அலிப்பூர் சிறைச்சாலையை அருங்காட்சியகமாக மாற்றியிருக்கிறார்கள். அதைப் பார்ப்பதற்காகச் சென்றிருந்தேன். அந்தச் சிறைச்சாலையில்தான் நேதாஜி, நேரு, பி.சி. ராய், சி.ஆர். தாஸ் சிறைவைக்கப்பட்டிருந்தார்கள். அங்கேதான் பதினெட்டு வயதான குதிராம் போஸ் தூக்கிலிடப்பட்டார். சுதந்திரப் போராட்டத்தின் முக்கியச் சாட்சியமாக விளங்கும் இந்தச் சிறைச்சாலை இன்றைய தலைமுறைக்குத் தேச விடுதலையின் உண்மைகளை அடையாளம் காட்டுகிறது. சுதந்திரப் போராட்டக் கால வரலாற்றை உறைந்த கற்படிவமாக விட்டுவிடாமல் அதனை நினைவுபடுத்திக் கொண்டேயிருக்க வேண்டும். நிகழ்காலத்தின் வேர்கள் கடந்த காலத்தினுள்தான் புதையுண்டிருக்கின்றன.
இரண்டாம் உலகப் போருக்குப் பின்பாக யூதர்கள் தங்களுக்கு நடந்த துயரங்களை உலகின் கவனத்திற்குக் கொண்டுவர வேண்டி எல்லா இலக்கிய வடிவங்களிலும் அந்த அனுபவங்களை எழுதினார்கள்; நினைவூட்டினார்கள். நூற்றுக்கணக்கான நாவல்கள், திரைப்படங்கள், நாடகங்கள் வெளியாகியுள்ளன. யூத அருங்காட்சியங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. அதன் காரணமாக ஹிட்லரின் கொடுமைக்குள்ளான யூத இனம் தனது வரலாற்றை உயிர்ப்புடன்வைத்துக் கொண்டது.
இந்தியச் சுதந்திரப் போராட்டத்தின் முக்கிய நிகழ்வுகள்இலக்கியத்தில் பதிவாகியுள்ளன. ஆவணப்படங்களாகவும் திரைப்படங்களாகவும் எடுக்கப்பட்டுள்ளன. அதில் ‘ஜுவாலாமுகி’ முக்கியமான நாவல். ஆனந்த கோபால் சேவ்டே எழுதிய இந்த நாவல், 1942இல் உருவான வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் நேரடி சாட்சியம் போல எழுதப்பட்டிருக்கிறது. இந்தியச் சுதந்திரப் போராட்டக் கால வாழ்க்கையையும் அன்றைய இளைஞர்களின் தியாகத்தையும் சிறப்பாக எடுத்துச் சொன்ன இந்நாவல் இந்தியாவின் 14 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.
இந்த நாவல் எழுவதற்கான எண்ணம் பிறந்ததே சிறைச்சாலையில்தான். சுதந்திரப் போராட்டத்தில் கலந்து கொண்டு சிறையில் அடைக்கப்பட்ட ஆனந்த கோபால் சேவ்டே அதே சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருந்த வினோபா பாவேவுடன் நெருங்கிப் பழகினார். சுதந்திரப் போராட்டக் கால நிகழ்வுகளையும் எழுச்சியினையும் இலக்கியம் பதிவுசெய்ய வேண்டும் என்று வினோபா எடுத்துச் சொல்லியதை மனதில் கொண்டு தனது வாழ்க்கைக் கதையை ‘ஜுவாலாமுகி’ என்ற நாவலாக எழுதினார். கா... இதனைத் தமிழில் மொழியாக்கம் செய்துள்ளார்.
அனந்த் கோபால் ஷேவ்டே ஆங்கிலத்தில் எம்.ஏ. பட்டம் பெற்றவர். பத்திரிகை ஆசிரியராகப் பணியாற்றியவர். இவரது மனைவி யமுதாய், ஒரு பிரபலமான மராத்தி எழுத்தாளர். செய் அல்லது செத்துமடி என்ற காந்தியின் அறைகூவல் இன்று சுதந்திரப் போராட்டக் காலப் பிரகடனமாக மட்டும் அறியப்படுகிறது. ஆனால், அந்த அறிவிப்பு வெளியான காலத்தில் அது ஒரு மந்திர வாசகம். இளந்தலைமுறையை ஆவேசம் செய்ய வைத்த முழக்கம். பிரிட்டிஷ் ராஜ்ஜியத்தினை அச்சம்கொள்ள வைத்த சங்க நாதம். பாரதியின் ‘பாஞ்சாலி சபத’த்தில் 'இது பொறுப்பதில்லை தம்பி - எரிதழல் கொண்டுவா!' என்று அடிமைத்தனத்தை எதிர்த்துச் சீறுவான் வீமன். அது போன்றதே காந்தியின் அறிவிப்பு.
இந்திய வரலாற்றில் மறக்க முடியாத ஆண்டு 1942. பாம்பேயில் நடந்த கூட்டத்தில் காந்தி, சுதந்திரத்துக்காகப் போராடு அல்லது இறந்து விடு எனும் முழக்கத்தை முன்வைத்தார். அந்தப் போராட்டம் இந்தியா எங்கும் பரவியது. காந்தி, நேரு உள்ளிட்ட தலைவர்கள் கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டார்கள். ‘ஜுவாலாமுகி’ நாவலின் நாயகனாக அபயன் மும்பையில் நடைபெற்ற காந்தியின் கூட்டத்திற்குச் செல்கிறான். நேரடியாகக் காந்தியின் முழக்கத்தைக் கேட்கிறான். உடனே தனது சொந்த வாழ்க்கையைத் துறந்து போராட்டக் களத்தில் இறங்கிவிடுகிறான். அப்போது அவனது மனைவி, கர்ப்பிணியாக இருக்கிறாள். அவளிடம் “நமக்குக் குழந்தை பிறந்தால் கிராந்தி எனப் பெயர் சூட்டு” என்கிறான். கிராந்தி என்றால் புரட்சி என்று அர்த்தம். இன்று படிக்கும்போது இவை மெலோடிராமாவாகத் தோன்றக்கூடும். ஆனால், அன்றைய கால உண்மையது. இப்படிக் காந்தியின் குரல் எண்ணிக்கையற்ற இளைஞர்களைச் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட வைத்தது; சிறை செல்ல வைத்தது.
அபயனின் திருமணத்தில் நாவல் தொடங்குகிறது. ஆசிரியராகப் பணியாற்றுகிறான். நீதிபதியின் வீட்டுப்பிள்ளைகளுக்குத் தனி ஆசிரியராகப் பாடம் நடத்துகிறான். தேச விடுதலைக்கான குரல் பொதுவெளியில் உரத்துக் கேட்பதை உணருகிறான். தான் என்ன செய்ய வேண்டும் என்று கேட்டுக் காந்திக்குக் கடிதம் எழுதுகிறான். அடுத்தச் சில தினங்களில் காந்தியிடமிருந்து பதில் கடிதம் வருகிறது.
போராட்டக் களத்தில் ஈடுபடக் காந்தி அழைக்கிறார். இது வெறும் கற்பனை நிகழ்வில்லை. காந்தி இப்படி ஆயிரக்கணக்கானவர்களுக்குத் தானே கடிதம் எழுதியிருக்கிறார். அவர்களும் காந்தியின் கட்டளையை ஏற்றுப் பொதுவாழ்க்கையில் இணைந்திருக்கிறார்கள். அபயன் தனது வேலையை உதறிச் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபடுகிறான். சௌரி சௌராவில் நடைபெற்றது போலக் குக்ரி என்ற கிராமத்தில் மக்கள், காவல்நிலையத்தைத் தாக்கித் தீவைக்கிறார்கள். எதனால் ஒரு காவல்நிலையத்தை மக்கள் தாக்குகிறார்கள், தீவைக்கிறார்கள், என்பதை நாவல் விரிவாகப் பதிவு செய்திருக்கிறது.
இந்த நிகழ்வின் காரணமாக அபயன் காவல்துறையினரால் தேடப்படுகிறான். தப்பியோடுவதற்காக அவன் ராணுவ வீரர்கள் அணியும் உடையை அணிந்து கொண்டு ரயில் ஏறுகிறான். நண்பன் ஒருவனால் அடையாளம் காணப்பட்டு ஒளிந்து வாழ்கிறான். அவனைத் தீவிரவாதி எனப் பிரிட்டிஷ் அரசு அறிவிக்கிறது. அவனது தலைக்கு விலை வைக்கப்படுகிறது. அவனை எப்படியாவது பிடித்துச் சிறையில் அடைக்க வேண்டும் எனக் காவல்துறை தேடுதலைத் தீவிரப்படுத்துகிறது. சாமியார் வேஷத்தில் மறைந்து வாழும் அபயன் ஒரு காவல்துறை அதிகாரியின் வீட்டிலே தஞ்சம் புகுகிறான். நாவலின் சுவாரஸ்யமான பகுதியது. அபயன் மட்டுமின்றி அவனது மனைவியும் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபடுகிறாள். அபயனைத் தேடிவரும் காவல்துறை அவளது வீட்டைச் சோதனையிடுகிறது.
அவளை மிரட்டி பணியவைக்க முயல்கிறது. அவள் உறுதியாக இருக்கிறாள்; போராடுகிறாள். இந்தியச் சுதந்திரப் போராட்டத்தில் பெண்களின் பங்கு எவ்வளவு முக்கியமானது என்பதை இந்த நாவல் சிறப்பாகப் பதிவு செய்திருக்கிறது. ஒரு ஆவணப்படம் பார்ப்பது போல அந்தக் காலகட்டத்தில் நடைபெற்ற போராட்டங்கள் எப்படித் திட்டமிடப்பட்டன. எப்படி அதனைக் காவல்துறை ஒடுக்கியது என்பதை நாவல் விவரிக்கிறது. சுதந்திரப் போராட்டத்தில் கலந்து கொண்டு சிறைபட்டவர் என்பதால் அனந்தகோபால் சேவ்டே, அபயனின் சிறைவாழ்க்கையைத் துல்லியமாக எழுதியிருக்கிறார். தேசத் தியாகிகளை மட்டுமின்றிச் சுதந்திரப் போராட்டத்தினைத் தங்களது சுயலாபத்திற்குப் பயன்படுத்திக் கொண்டவர்களையும் நாவல் சுட்டிக்காட்டுகிறது.
நாவலின் ஊடாகக் காந்தியின் போராட்ட முறைகள் சரியானதுதானா என்ற விவாதமும் எழுகிறது. தலைமறைவு வாழ்க்கையில் நடந்த சம்பவங்கள், உதவிய மனிதர்கள், அவர்களுக்கு ஏற்பட்ட நெருக்கடிகளை அபயனின் வழியாக நாம் நிஜமாக அறிந்து கொள்கிறோம். சுதந்திரப் போராட்ட நிகழ்வுகளைப் பாடநூல்களில் நாம் செய்தியாக, புகைப்படமாகக் கண்டிருக்கிறோம். ஆனால், இந்த நாவல், அந்தச் செய்திகளை உயிர்துடிப்புடன் நம் கண்முன்னே விவரிக்கிறது. அதன் சாட்சியமாக நம்மை மாற்றுகிறது.