கோபிகிருஷ்ணனின் சிறுகதைகளைப் பற்றி நினைக்கும் பொழுதெல்லாம் பாட்டி கொடுக்கும் சுண்டைக்காய்ப் பொடி மருந்துதான் என் நினைவுக்கு வரும். வயிற்றுக்கு நல்லதென்று பாட்டி கொடுக்கும் பொடியில் வாயில் வைக்க முடியாத கசப்பு. அதற்காக பாட்டியோட, பாட்டியோட பாட்டி கண்டுபிடித்த உபாயம்தான் பொடியைத் தேனில் குழைப்பது. தேனில் குழைத்த பொடியின் ருசி கசப்பும் இனிப்புமானது. பழகிவிட்டால் கொஞ்சம் வினோதமான மசக்கையாகக்கூட மாறிவிடக்கூடியது. கோபிகிருஷ்ணனின் கதைகளும் அத்தகைய தேனில் குழைத்த சுண்டைக்காய் பொடிதான். வாழ்வின் கசப்புகளையும் சலிப்புகளையும் தன் பகடியின் தேனில் குழைத்து கலையாக்கியவர் கோபிகிருஷ்ணன்.
நகர்ப்புற நடுத்தரவர்க்க வாழ்வின் சலிப்பும், அபத்தமும் அதில் ஒரு நுண்ணுணர்வுள்ள மனம் ஆடும் ஊசலாட்டங்களும் போடும் வேஷங்களுமே கோபிகிருஷ்ணனின் கருப்பொருட்கள். ஆனால், வாழ்வின் அபத்தமும், மனித மனத்தின் ஊசலாட்டங்களும் என்ன புதிய கருப்பொருட்களா? சுமேரிய சுடுமண் பலகைகளில் கில்காமேஷ் எழுதப்பட்ட காலத்திலேயே அவை எழுதப்பட்டுவிட்டன. எனவே கோபிகிருஷ்ணனின் தனித்துவம் அவர் எழுதிய கருப்பொருட்களில் இல்லை.
அதை அவர் கையாண்ட விதத்திலேயே இருக்கிறது. கோபிகிருஷ்ணன், சின்ன விஷயங்களின் எழுத்தாளர். அவரிடம் மகத்தான பிரபஞ்ச தரிசனங்களோ அது சார்ந்த கேள்விகளோ இல்லை. அவரது கதைகள் முழுக்க லௌகீகமானவை. சொல்லித் தீராத வாழ்வின் கசப்புகளைச் சிரித்துத் தீர்க்க முயன்றவை. ‘இடுக்கண் வருங்கால் நகுதல்’ ஞானியர் நெறி; கலைஞனோ தனக்கு இடுக்கன் வருங்கால் அதைக் கொண்டு பிறரை நகைக்கச் செய்வான். கோபிகிருஷ்ணன் கலைஞன். ஆனால், அவரது பகடி ஒற்றைப்படையானதல்ல; அது கலாப்பூர்வமானது. அவரது பகடி வாழ்வை குற்றப்படுத்துவதில்லை. மாறாக அது வாழ்வின் அபத்தத்தை யதார்த்தமாக ஏற்றுக்கொண்டு சிரிப்பது. அதை அவர் பல்வேறு வகையான வடிவச் சோதனைகளின் வழியாகவும், கூறுமுறைகளின் வழியாகவும் செய்கிறார்.
ஒரு முழுச் செய்தித்தாளின் வடிவத்தில் எழுதப்பட்ட ‘மக்கள் தினசரி – ஒரு தேசிய நாளேடு’, ஒரு பத்தி மட்டுமேநீளும் நுண்கதைகளின் தொகுப்பாக அமைந்த ‘கதையின் கதை’, கதையில்லாக் கதைகள் (சகல சம்பத்துகளும்), முழுப்பகடிக் கதைகள் (மிகவும் பச்சையான வாழ்க்கை), நுட்பமான கலையமைதி கொண்ட கதைகள் (உரிமை, புயல்), மனநோய் சார்ந்த கதைகள் (அன்பே சிவம்) என பல்வேறு வடிவச் சோதனைகளில் ஈடுபட்டார் கோபிகிருஷ்ணன். தன்னிடம் இருந்த கொஞ்சூண்டு பொம்மைகளைக் கொண்டே புதுப் புது விளையாட்டுகளை உருவாக்கினார். அதற்கு அவரது மன அமைப்பு உதவியது.
கோபிகிருஷ்ணனின் கதைசொல்லிகள் நொய்மையான மனம் கொண்டவர்கள். சஞ்சலம் பிடித்த அவர்களது மனம் அவர்களது கட்டுப்பாட்டில் இருப்பதில்லை. அதன் வேகத்திற்கு அவர்களால் ஈடுகொடுக்க முடிவதில்லை. ஒரு வகையில் அது கோபிகிருஷ்ணனின் மனம்தான். அதன் காரணமாகவே அவரது கதைகளின் மொழியில் ஒரு அசாத்தியமான வேகம் உருவாகிறது. அது சர்ப்பம்போல் சரசரத்து ஒழுகுகிறது. அந்த மனம் பிறரைக் குற்றப்படுத்துவதில்லை. மாறாக அது முதலில் தன் நொய்மையையே பகடி செய்துகொள்கிறது. பிறரை நோக்கி நகைக்கும் பொழுதெல்லாம் அது தன்னை நோக்கியும் நகைத்துக் கொள்கிறது. இத்தகைய மனத்தைப் புரிந்துகொள்ளவே அவரது கதைகளில் அவரது அறிவு இடைபடுகிறது. அந்த அறிவு பெரும்பாலும் உளவியல் சார்ந்த விசாரங்களாக வெளிப்படுகிறது.
ஒரு வகையான சுய நோய்க்குறியறிதல் போல் அது தன் மனத்தைப் புரிந்துகொள்ள முயல்கிறது. கோபிகிருஷ்ணனுக்கு முன் தமிழில் உளவியல் மீது பற்றுகொண்ட எழுத்தாளராக இருந்தவர் ஆதவன். ஆனால், ஆதவனின் உளவியல் விசாரங்கள் கோட்பாடுகள் சார்ந்தவை. அவர் அவற்றைப் பிறரிடம் மட்டுமே பயன்படுத்தினார். ஆதவனைப் பொருத்தவரை ஊரில் உள்ள அத்தனை பேரும் அர்ப்பர்கள், போலியானவர்கள், அபத்தங்கள் – ஆதவனைத் தவிர. ஏனென்றால் அவர் அவர்களைப் பகுப்பாய்வு செய்யும் அறிவாளி. அந்தப் பரிவற்ற மேட்டிமை மனோபாவத்தாலேயே ஆதவனின் கதைகள் பெரும்பாலும் கலாப்பூர்வமாக தோல்வியடைந்தன. ஆனால், கோபிகிருஷ்ணனின் அறிவு பரிவாலானது. கோபிகிருஷ்ணனும் ஊரில் உள்ள அத்தனை பேரும் அர்ப்பர்கள், போலியானவர்கள், அபத்தங்கள் என்று ஏற்றுக்கொள்வார்.
ஆனால், அந்த அர்ப்பர்கள் கூட்டத்தில் தானே முதன்மையானவன் எனும் புரிதல் அவரிடமிருந்தது. அந்தப் பரிவே அவரது கதைகளை கலாப்பூர்வமாக்கியது. ஆன்மீகத்தாலோ, உளவியலாலோ, தர்க்கத்தாலோ முற்றிலுமாக வரையறுத்துவிட முடியாத வினோதங்களையும் ஆழங்களையும் கொண்டது மனித மனம் என்று கோபிகிருஷ்ணன் உணர்ந்திருந்தார். அந்த உலகாளும் பேரபத்தத்தை அவர் கொண்டாடினார். அதன் விளைவாகவே அவர் ஆன்மீகத்தையும் அறிவியலையும் சமமாகப் பகடிசெய்தார். ஆனால், அவரது கதைகள் முழுக்க முழுக்க அந்தப் பகடியின் எல்லைக்கு உட்பட்டவை. அதை மீறி எழாதவை. லௌகீக வாழ்வின் அபத்தம் சார்ந்தோ மனமெனும் விந்தையின் செயல்பாடு சார்ந்தோகூட ஆழங்களுக்குச் செல்லாதவை. ஒரு கட்டத்திற்கு மேல் தம் கூறுமுறையின் எல்லைகளுக்குள் தம்மைத் தாமே சுருக்கிக்கொண்டவை. பிற்காலத்தில் தம்மைத் தாமே பிரதிசெய்தவை. அதனாலேயே கோபிகிருஷ்ணனின் கதைகளைத்தமிழின் முதன்மையான கதைகளாகக் கருத முடியாது. ஆனால், அவை முக்கியமானவை. குறிப்பாகப் படைப்பின் சுதந்திரத்தை நாடும் வாசகர்களுக்கு உகந்தவை.
கோபிகிருஷ்ணனின் கதைகளின் பின்புலம் எண்பதுகளுடையது. ஆனால், அவை கையாண்ட வாழ்வின் அபத்தமும், சலிப்பும், சஞ்சலமும் காலாதீதமானது. இன்றைய காலகட்டத்தில் கோபிகிருஷ்ணனின் காலத்தை விடவும் பன்மடங்கு பெருகி பூதாகாரமாக வளர்ந்திருப்பது. அது உருவாக்கும் வெறுமையின் அகழியின் மீதே நாம் எண்ணிலடங்காத யூடியூப் ஷார்ட்ஸ்களையும், இன்ஸ்டா ரீல்ஸ்களையும், நுகர்வுப் பொருட்களையும் கொட்டி நிரப்பிக் கொண்டிருக்கிறோம். இத்தகைய வெறுமையை இட்டு நிரப்பாமல் நேர்கொண்டு நோக்கி நகைக்க நமக்கு கோபிகிருஷ்ணன்கள் தேவை.
- விக்னேஷ் ஹரிஹரன்
இலக்கிய விமர்சகர்
தொடர்புக்கு: vigneshari2205@gmail.com