மக்களவைத் துணை சபாநாயகர் பதவி கடந்த ஆறு ஆண்டுகளாகக் காலியாக இருப்பது, அரசியல் விவகாரங்களில் தீவிரமாகக் களமாடுபவர்களின் கவனத்துக்கே வராமல் இருக்கிறது. உண்மையில், நாடாளுமன்ற அமைப்பில் மிக முக்கியமான ஒரு பதவி, இத்தனை ஆண்டுகளாக நிரப்பப்படாமல் இருப்பது அரசமைப்புச் சட்டத்தின் விழுமியங்களின் அடிப்படையிலும் ஜனநாயக விழுமியங்களின் அடிப்படையிலும் பல்வேறு கேள்விகளுக்கு வழிவகுக்கிறது.
அரசமைப்பு என்ன சொல்கிறது? - அரசமைப்புச் சட்டத்தின் 93ஆவது கூறின்படி மக்களவைத் தேர்தல் முடிந்த பிறகு கூடும் முதல் நாடாளுமன்றக் கூட்டத்தில் மக்களவை சபாநாயகர் தேர்ந்தெடுக்கப்படுவார். அடுத்த சில நாள்களில் துணை சபாநாயகர் தேர்ந்தெடுக்கப்படுவார். தோழமைக் கட்சியைச் சேர்ந்தவர்களும் துணை சபாநாயகராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்கள். எதிர்க்கட்சி உறுப்பினரைத் துணை சபாநாயகராகத் தேர்ந்தெடுக்கும் நடைமுறையும் இருந்திருக்கிறது. துணை சபாநாயகர் பதவி என்பது ஒரு சம்பிரதாயமான பதவி அல்ல. துணை சபாநாயகர் கட்டாயம் என்று அரசமைப்புச் சட்டம் அறிவுறுத்தியிருக்கிறது.
அவையை நடத்த இரண்டு பேர் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும், அவர்களில் ஒருவர் பேரவைத் தலைவர். இன்னொருவர் பேரவைத் துணைத் தலைவர் என அரசமைப்புச் சட்டம் தெளிவாகக் குறிப்பிட்டிருக்கிறது. நாடாளுமன்றம் சபாநாயகருக்கு மாற்றாக அவையை நடத்த ஒரு துணை சபாநாயகர் இல்லாமல் நாடாளுமன்ற நடைமுறையை அல்லது நாடாளுமன்ற அவையை நடத்துவது சரியானது அல்ல என்றும் அரசமைப்புச் சட்டம் வலியுறுத்துகிறது. மிக முக்கியமாக, சபாநாயகருக்கு உள்ள அனைத்து அதிகாரங்களும் துணை சபாநாயகருக்கும் உண்டு.
நமது அரசமைப்புச் சட்டம், நாடாளுமன்ற நடைமுறை ஆகியவை பிரிட்டிஷ் நடைமுறையைப் பின்பற்றியே அமைந்திருக்கின்றன. பிரிட்டிஷ் அவையில் அவையை நடத்துபவர் தலைவர் என்று அழைக்கப்படுவார். தலைவர் அவையை நடத்த முடியாத சூழ்நிலையில், அவையை நடத்துபவர் துணைத் தலைவர் என்று அழைக்கப்படுவார். அதுதான் சபாநாயகர், துணை சபாநாயகர் என்று இங்கு பெயர் மாறியது.
நாடாளுமன்ற சபாநாயகர் திடீரென்று மரணமடைந்தால் துணை சபாநாயகர் தற்காலிக சபாநாயகராகச் செயல்படுவார். சபாநாயகர் முழு நேரமும் அவையை நடத்த முடியாது என்பதால்தான் துணை சபாநாயகர் என்ற ஒரு பதவி உருவாக்கப்பட்டு, அவர் மூலம் சபை நடவடிக்கைகள் எந்த இடையூறும் இல்லாமல் தொடர்ந்து நடைபெறும் ஏற்பாட்டை நமது அரசமைப்புச் சட்டம் உருவாக்கியிருக்கிறது.
சபாநாயகர் மீது நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டுவரப்படும்போது, அந்தத் தீர்மானம் விவாதத்துக்கு அனுமதிக்கப்படும்போது சபாநாயகர் சபையை நடத்த முடியாது. அப்போது துணை சபாநாயகர்தான் சபையை நடத்தி, விவாதத்துக்குப் பிறகு ஓட்டெடுப்பு நடத்துவார். பெரும்பாலும் சபாநாயகர் மீதான நம்பிக்கையில்லாத் தீர்மானம் தோல்வி அடைந்திருக்கிறது என்பதுதான் வரலாறு. மேலும், துணை சபாநாயகர் எடுக்கும் முடிவு இறுதியானது; அதை யாரும் விமர்சனம் செய்ய முடியாது.
சாதகமும் பாதகமும்: ஆனால், 2019இல் மோடி இரண்டாவது முறை பிரதமர் ஆனது முதல் துணை சபாநாயகர் இல்லாமல்தான் நாடாளுமன்றம் நடைபெற்றுவருகிறது. இது சரியான நடைமுறை இல்லை. ஆனால், சபாநாயகருக்கு மாற்றாக சபையை நடத்த முக்கியக் கட்சி உறுப்பினர்களை மாற்று சபாநாயகர்களாக நாங்கள் நியமித்திருக்கிறோம் என்று பாஜக தரப்பு வாதிடுகிறது. ஒருவகையில் அது உண்மைதான். நாடாளுமன்ற நடவடிக்கைகளை நான் தொடர்ந்து கவனித்துவருவதால், அதை நன்றாகவே உணர முடிகிறது. முக்கியமான விவாதங்களைத் தவிர மற்ற நேரங்களில் சபையை நடத்துவது இந்த மாற்று சபாநாயகர்கள்தான்.
நானும் அவைத் தலைவராக இருந்து சபையை நடத்தும் வாய்ப்பைப் பெற்றிருக்கிறேன். திமுக உறுப்பினர் ஆ.ராசாகூட சபையை நடத்தியுள்ளார். அவர் சபாநாயகர் இருக்கையில் உட்காருவதற்கு அரை மணி நேரத்துக்கு முன்பு இந்த ஆட்சியைக் கடுமையாகச் சாடிப் பேசுகிறார். ஆனாலும் சபாநாயகர் இருக்கையில் அமரும்போது, தான் எதிர்க்கட்சி என்கிற நிலைப்பாட்டை மறந்து சபாநாயகருக்கு உரிய கண்ணியத்துடன் அவையை அவர் நடத்துவதை நான் பார்த்திருக்கிறேன். இது எல்லா மாற்று சபாநாயகர்களுக்கும் பொருந்தும்.
துணை சபாநாயகர் நியமனம் பற்றி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இவ்வளவுக்குப் பிறகும் துணை சபாநாயகர் பதவியை நிரப்ப இந்த அரசு ஏன் தயங்குகிறது என்பது இன்றுவரை புரியாத புதிர். ஒருவேளை, எதிர்க்கட்சிகளுக்குத் துணை சபாநாயகர் பதவியை அளிப்பதற்கு பாஜக தயங்குகிறது என்று விமர்சித்துவிட முடியாது. ஏனெனில், துணை சபாநாயகர் பதவியை எதிர்க்கட்சிகளுக்கு வழங்குவது என்பது ஒரு நடைமுறைதான்; அது கட்டாயம் இல்லை. எதிர்க்கட்சிகளுக்குத் தர விருப்பம் இல்லை என்றால், அந்தப் பதவியைக் குறைந்தபட்சம் தோழமைக் கட்சிகளுக்காவது பாஜக தரலாம். அப்படி இல்லையென்றால், தங்கள் கட்சி உறுப்பினர் ஒருவரையே துணை சபாநாயகராகத் தேர்ந்தெடுக்கலாம்.
அரசியல் முன்னுதாரணம்: தேர்தலின்போது அரசியல் கட்சிகள் ஒருவரை ஒருவர் குறை கூறித் தேர்தல் பிரச்சாரம் செய்யட்டும்... அது அரசியல். ஆனால், தேர்தல் முடிந்து நாடாளுமன்றத்துக்கு அவர்கள் நுழையும்போது ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என்று பார்க்காமல், ‘எல்லோரும் சமம்; எல்லோரும் நாட்டின் வளர்ச்சிக்கு நமக்குத் தெரிந்த ஆலோசனைகளைச் சொல்வோம்’ என்ற பொதுநல அக்கறையுடன் கட்சி வித்தியாசம் இல்லாமல் எல்லா உறுப்பினர்களும் நடந்துகொள்வார்கள் என்றால், துணை சபாநாயகர் பதவி இந்த அளவுக்குச் சர்ச்சையாகி இருக்காது.
இதற்கு அண்ணா, காமராஜர் இருவரையும் உதாரணமாகச் சொல்லலாம். அப்போது காமராஜர் முதல்வர், அண்ணா எதிர்க்கட்சித் தலைவர். ஒருமுறை அண்ணா, தனது காஞ்சிபுரம் தொகுதிக்கு வந்து மக்கள் பிரச்சினைகளைக் கேட்க வேண்டும் என்று முதல்வர் காமராஜரிடம் வேண்டுகோள் விடுத்தார். காமராஜர் அதற்குச் சம்மதித்தார். அந்த நாளும் வந்தது.
இது நமது கட்சி விழா அல்ல என்று கட்சிக் கொடிகள் கட்ட திமுகவினருக்கு அண்ணா தடை விதித்துவிட்டார். கூட்டத்துக்கு காமராஜர் வந்ததும் அண்ணா எழுந்து, “சட்டமன்ற உறுப்பினர் என்கிற முறையில் நீங்கள் கொடுக்கும் எல்லா மனுக்களையும் உங்கள் கோரிக்கைகளையும் நான் முதலமைச்சரிடம்தான் தந்து பரிசீலித்து ‘ஆவன செய்யுங்கள்’ என்று முறையிடுவேன். இப்போது கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டியவரே உங்கள் முன் நிற்கிறார். கோரிக்கைகளை, உங்கள் தேவைகளை அவரிடம் நீங்கள் சொல்லலாம்” என்று காஞ்சிபுரம் மக்களிடம் சொன்னார்.
காமராஜரும் காஞ்சிபுரம் தொகுதி மக்கள் கோரிக்கைகளைக் கேட்டுத் தெரிந்துகொண்டு, அவற்றை நிறைவேற்றினார். இதுதான் அரசியல் நாகரிகம். இப்படியான முன்னுதாரணங்களைப் பின்பற்றும் முனைப்பு, மத்தியில் ஆள்பவர்களுக்கும் இருந்தால் துணை சபாநாயகர் பதவி இவ்வளவு பெரிய பிரச்சினையாக இருந்திருக்காது. இந்த விஷயத்தில் அண்ணா, காமராஜர் வழியில் பாஜகவும் செல்வது நல்லது.