சென்னை நகரத்தின் வடக்குப் பக்கத்தில் பிரச்சினைகளை முடித்துக்கொண்டது போல், தெற்குப் பக்கத்தில் இருக்கக்கூடிய ஆலந்தூர், பல்லாவரம், தாம்பரம் நகராட்சிகளும் குப்பைகள் கொட்டுவதற்குத் தேர்ந்தெடுத்த கிராமம்தான் வேங்கடமங்கலம். தேர்ந்தெடுக்கப்பட்ட 50 ஏக்கர் நிலத்தின் (சர்வே எண். 16/2) அருகிலேயே வேங்கடமங்கலம் ஏரியும் இருந்தது. ஏரிப் பாசன விவசாயிகள் சங்கத்தின் சார்பில் வழக்கு ஒன்று தொடரப்பட்டு, குப்பைக் கிடங்கை வேறு இடத்துக்கு மாற்றுவதற்கான ஏற்பாட்டுக்கு உத்தரவிடும்படி நீதிமன்றத்திடம் கேட்டுக்கொள்ளப்பட்டது.
நிபந்தனைகளும் நிதர்சனமும்: நகராட்சிகள் சார்பாக 2000ஆம் ஆண்டு திடக்கழிவு மேலாண்மை விதிகள் கண்டிப்புடன் செயல்படுத்தப்படும் என்று மாவட்ட ஆட்சியர் கூறினர். நகராட்சித் திடக்கழிவுக் கிடங்குக்கு 50 ஏக்கர் நிலத்தை மாற்றம் செய்த அரசு, சில நிபந்தனைகளை விதித்தது. அதன்படி குப்பைகள் தரம் பிரிக்கப்பட்டு, அழுகும் பொருள்கள் மட்க வைப்பதற்கான பகுதிக்கு எடுத்துச்செல்லப்படும். மட்கும் உரம் தயாரிக்கும் இடங்களிலிருந்து 300 மீட்டர் தொலைவுக்கு யாரும் நெருங்காமலிருக்கத் தடுப்புச்சுவர் அமைக்கப்படும்.
சுற்றுச்சூழல் வாரியத்திடமிருந்து தடையின்மைச் சான்றிதழ் பெறப்படும் என்று கூறியதுடன், குப்பைகளுக்கான புதைகுழிகள் எப்படி அமைக்கப்படும், குப்பைகளிலிருந்து பெறப்படும் கழிவுநீர் நிலத்தடியில் இறங்காமல் எப்படி வெளியேற்றப்படும், கிடங்குகளிலிருந்து வெளியேறும் துர்நாற்றம் எப்படித் தவிர்க்கப்படும் என்பதை நகராட்சி தனது எதிர் மனுவில் கூறியிருந்ததைத் தீர்ப்பில் பதிவுசெய்து, வழக்கு முடித்துவைக்கப்பட்டது (வேங்கடமங்கலம் ஏரி பாசனத்தார் விவசாயிகள் சங்கம் - எதிர் - தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம், சம்பந்தப்பட்ட நகராட்சிகள், W.P.No. 23748 of 2006, 10.8.2006 சென்னை உயர் நீதிமன்றம்).
இந்த 18 ஆண்டுக் காலத்தில் கொடுங்கையூர், பெருங்குடியில் குப்பைகள் கொட்டுவதை சென்னை மாநகராட்சி நிறுத்திவிட்டது. கொட்டப்பட்ட குப்பைகள் மலையெனக் குவிந்துவிட்டதே கிடங்குகள் மூடப்பட்டதற்குக் காரணம். மேலும், அப்பகுதிகளில் வசதி படைத்தவர்களின் வீடுகள் பெருகிவிட்டதால் நிலத்தின் விலையும் பன்மடங்கு உயர்ந்துவிட்டது. மாநகராட்சி இவ்விரு இடங்களிலும் உயிரிச் சுரங்க முறையில் குப்பைகள் பிரித்தெடுக்கப்பட்டு அகற்றப்படும் என்று கூறியிருக்கிறது.
இப்புதிய விதிகளுடன் கூறப்பட்ட புதிய வார்த்தைகளுக்கு அர்த்தங்கள் புரிபடுவதில்லை. திடக்கழிவு மேலாண்மை விதிகளைக் கடைப்பிடிக்க முடியாத நகராட்சிகள், இன்று பல தனியார் நிறுவனங்களுடன் ஒப்பந்த அடிப்படையில் இவ்வேலைகளை மேற்கொண்டு வருகின்றன. ‘நீ அவல் கொண்டு வா. நான் உமி கொண்டுவருகிறேன். ஊதி ஊதித் தின்னலாம்’ என்பது பழமொழி. உமியையும் அவலையும் நகராட்சிகள் கொண்டுவரும்.
உமியைக் குப்பைக்குழியில் போட்டுவிட்டு, அவலை அள்ளித் தனியார்கள் தின்றுவிடலாம் என்பதே இன்றைக்குத் திடக்கழிவு மேலாண்மை என்றாகிவிட்டது. இந்தியத் தனியார் நிறுவனங்கள் போதாதென்று சிங்கப்பூர், பிரேசில் போன்ற நாடுகளில் உள்ள நிறுவனங்களுடன் சென்னை மாநகராட்சி ஒப்பந்தம் செய்து, குப்பை வாரும் பணிகளை ஒப்படைத்தது. ‘ஓனிக்ஸ்’, ‘நீல்மெட்டல் பனால்கா’, ‘அர்பாசர்’ போன்ற நிறுவனங்களின் பெயர்கள் சென்னை மக்களின் உறக்கத்திலும் நினைவுக்கு வருபவை.
பொய்க் கணக்கு: உண்மையிலேயே திடக்கழிவு மேலாண்மை விதிகள் நகராட்சிகளால் பின்பற்றப்படுகின்றனவா? நம்மிடமிருந்து பெறப்படும் குப்பைகளை அள்ளிச் சென்றுத் தரம்பிரித்துப் புதைகுழிகளில் சமாதி கட்ட ஒப்பந்தம் செய்திருந்த நிறுவனங்களுக்குக் கோடிக்கணக்கான ரூபாய் நிதியாக வழங்கப்படுகின்றது. 2021ஆம் ஆண்டு, நகராட்சித் திடக்கழிவுகளின் மேலாண்மைக்கு மட்டும் ஏறக்குறைய ரூ.1,400 கோடியைத் தமிழ்நாடு அரசு ஒதுக்கீடு செய்திருந்தது.
கோடிக்கணக்கான ரூபாய்களைப் பெறும் தனியார் நிறுவனங்கள் விதிகளின்படி செயல்படுகின்றனவா என்று கேட்டால், கிடைக்கும் பதில் அதிர்ச்சியளிக்கும். நகராட்சிகள் தனியார் நிறுவனங்களிடம் குப்பைகளைக் கழிக்கும் பணிக்குச் செய்துகொண்ட ஒப்பந்தத்தை ஒட்டி ஏற்படும் வணிகத் தகராறுகள் நீதிமன்றங்களை வந்தடைந்துள்ளன. ஒப்பந்தத்தின்படி தகராறுகளைத் தீர்ப்பதற்கு ஓய்வுபெற்ற நீதிபதிகள் ஆர்பிட்ரேட்டர்களாக நியமனம் செய்யப்பட்டுத் தீர்ப்புகள் பெறப்படுகின்றன.
மதுரை மாநகராட்சி அவனியாபுரத்தில் திடக்கழிவு மேலாண்மைப் பணிகளைச் செய்வதற்குத் தனியார் நிறுவனம் ஒன்றிடம் செய்துகொண்ட ஒப்பந்தம் குறித்த வணிகரீதியான தகராறு, மூன்று நீதிபதிகள் அடங்கிய ஆர்பிட்ரேஷன் தீர்ப்பாயத்தின் தீர்வுக்கு அனுப்பப்பட்டது.
வழக்கில் மதுரை மாநகராட்சி, தனியார் நிறுவனத்தின் மீது கூறிய குற்றச்சாட்டுகளில் சில: “குப்பைகளைத் தரம் பிரிப்பதில்லை, குப்பைகளைக் கொட்டுவதற்கான குழிகளுக்குப் பாதுகாப்பில்லை, குப்பைகளை வேதியியல் பொருள்களுடன் புதைப்பதற்குப் பதிலாகப் பல இடங்களில் அவை தீயூட்டப்படுகின்றன. குப்பைகளை நகராட்சி கொண்டுசேர்த்த அளவுக்கும், தரம் பிரித்துப் புதைப்பதற்கு எடுத்துச் சென்ற குப்பைகளின் எடைக்கும் பன்மடங்கு வேறுபாடுகள் உள்ளன.
அதாவது, பொய்க் கணக்கு எழுதிக் குப்பைகளுக்கு அதிகக் காசு பறிக்கிறார்கள்.” மூன்று நீதிபதிகள் குழுவின் இறுதித் தீர்ப்பில், நகராட்சி கூறிய பல குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதாகப் பதிவுசெய்யப்பட்டுள்ளது. நகராட்சி ஊழியர்கள் லஞ்ச நோக்கத்துடன் தனியார் நிறுவனங்களுக்குச் சாதகமாக ஆவணங்களைத் தயார் செய்ததும் அம்பலப்பட்டது. மதுரை மாநகராட்சியில் திடக்கழிவு மேலாண்மை ஒப்பந்தத்தையொட்டி எழுந்தது போன்ற வணிகத் தகராறுகள், கோவை, ஈரோடு மாநகராட்சிகளிலும் நீதிபதிகளின் ஆர்பிட்ரேஷனுக்குச் சென்று நிலுவையில் உள்ளன.
இவற்றையெல்லாம் பார்க்கும்போது திடக்கழிவு மேலாண்மை உண்மையிலேயே செயல்படுகிறதா என்ற கேள்வி எழலாம். ஆனால், மாநகராட்சிகளுக்குப் பக்கத்தில் உள்ள கிராமங்களில் செயல்பட்டுவரும் திடக்கழிவு மேலாண்மைகள் தனியார் நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்துகொண்டு, பொய்க் கணக்குகள் எழுதி வரும்வரை தீர்வுக்கு வழியில்லை. கிராமத்தினரின் அவதிகளுக்கும் முடிவில்லை.
வேங்கடமங்கலம், சடையான்குப்பம் கிராம மக்கள் நீதிமன்றத்தை மன்னிக்க மாட்டார்கள். திடக்கழிவு மேலாண்மை விதிகளைச் சார்ந்த வழக்குகளில் நீதிமன்றங்கள் தோற்றுவிட்டன என்று சொல்வதில் எனக்குப் பிரச்சினை ஏதுமில்லை. அந்தக் கிராம மக்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்டுக்கொள்ளவும் தயாராக உள்ளேன்.