சமீபத்தில் கொடுங்கையூர் பகுதியிலுள்ள குப்பைக் கிடங்குகளில், மட்கிப்போன குப்பைகளை உயிரிச் சுரங்கம் (Biomining) முறையில் எடுத்து, அவற்றிலிருந்து மாற்றுச் சக்தி உற்பத்தி செய்யப் போவதாக வெளியான அரசு வெளியிட்ட அறிவிப்பு, அப்பகுதி மக்களைக் கொதித்தெழச் செய்துள்ளது. சில தினங்களுக்கு முன்னால் அவர்கள் மனிதச் சங்கிலி அமைத்து அதற்குத் தமது எதிர்ப்பைத் தெரிவித்தனர்.
கொடுங்கையூர் பகுதி மக்கள் எதிர்கொண்டுவரும் கொடுமைகள் நமது கண்களில் ரத்தத்தை வரவழைக்கும். மருந்தடித்தும் மாளாது வீடுகளில் குவியும் ஈக்கள் பட்டாளம்; கொசுவத்திகள் ஏற்றி வைத்தாலும் ரத்தத்தை உறிஞ்சிச் செல்லும் ராட்சசக் கொசுக்கள்; குப்பைகளுக்குத் தீ மூட்டுவதால் எழும் புகை மண்டலங்கள் ஏற்படுத்தும் மூச்சடைப்பு, நெஞ்சுக்குழாய் நோய்கள்; காற்றடித்தால் பறந்துவரும் கரித்துகள்கள் வீடுகளில் படியும் அவலம் எனக் கொடுமைகளின் பட்டியல் நீளும். இறுதியாக, மாநகராட்சி செய்த ஒரே செயல் குப்பைக் கிடங்குகளை ஒட்டியுள்ள வீதியில் ஆறடிக்குத் தடுப்புச் சுற்றுச்சுவர் கட்டியது மட்டுமே. கிடங்குகளில் கொட்டப்பட்ட கழிவுகளைத் தரம் பிரிப்பதில் ஈடுபட்டது ஏழைச் சிறுவர்களும் பன்றிகளுமே.
மனமாற்றமும் சட்டமும்: 1920இல் கொண்டுவரப்பட்ட நகராட்சிகள் சட்டம் முதன்முறையாகக் கழிப்பறைகளை அமைத்து, அவற்றின் பராமரிப்புப் பணிகளை நகராட்சிகளிடம் ஒப்படைத்தது. உலர் கழிப்பறைகள் உருவாக்கப்பட்டு, அவற்றைப் பராமரிக்க சுகாதாரப் பணியாளர்கள் நியமிக்கப்பட்டனர். மதராஸ் மாகாணம் என்று அழைக்கப்பட்டாலும், உலர் கழிப்பறைகளைச் சுத்தம் செய்த ஊழியர்கள் சமூகப் புறக்கணிப்பு கருதி, சொந்த ஊருக்கு அருகிலிருந்த நகராட்சிகளில் இப்பணியாற்ற முன்வந்ததில்லை. தெலுங்கு பேசும் ஆந்திரர்கள் தமிழகப் பகுதிகளிலும், தமிழர்கள் கன்னடம், கேரளப் பகுதிகளிலும் பணியாற்றி வந்தனர்.
நகராட்சிகளின் மக்கள்தொகை பெருகப்பெருக அவை மாநகராட்சிகளானதுடன், பொது இடங்களில் சேரும் குப்பைகள், தனியார் வீடுகள், வணிக நிறுவனங்களிலிருந்து சேரக்கூடிய குப்பைகளை அகற்றுவது, கழிவுநீர் பராமரிப்பு ஆகியவற்றையும் சேர்த்து நிர்வகிக்க நேரிட்டது. குப்பைகளை நகராட்சி லாரிகளில் ஏற்றி, நகருக்கு அப்பால் உள்ள தாழ்வான பகுதிகளில் தள்ளிவிட்டு வருவது தலையாய பணியாக இருந்தது. சுகாதாரப் பணியாளர்கள் பணிக்கு ஒருநாள் வரவில்லை என்றாலும் மக்கள் படக்கூடிய அவதிகள் சொல்லி மாளாது.
1940களில் நடைபெற்ற தூய்மைப் பணியாளர்களின் வேலைநிறுத்தம் சில வாரங்களுக்கு சென்னையையே நாறடித்தது. உலகம் முழுதும் பல நகரங்களில் திடக்கழிவு மேலாண்மை குறித்து விழிப்புணர்வு ஏற்பட்டதையொட்டி, இங்கேயும் அது குறித்துப் பேச ஆரம்பித்தனர். பழைய குப்பை லாரிகள் வாரிச்சென்று, கண்ட இடத்தில் கழிவுகளைத் தள்ளிவிட்டு வருவது முறையல்ல என்று உணர முற்பட்டனர். அதையொட்டி, 2000இல் திடக்கழிவு (மேலாண்மை, கையாளுதல்) விதிகள் உருவாக்கப்பட்டன.
விதிமுறைகள் சொல்வது என்ன? - புதிய விதிகளின்படி மாநகராட்சிகளில் உள்ள திடக்கழிவுகளைத் தரம் பிரித்து, அவற்றைத் தனித்தனியாகச் சேமித்து, சேகரிப்பு நிலையங்களில் உள்ள கிடங்குகளுக்குக் கொண்டு சென்ற பிறகு கையாள வேண்டிய நடவடிக்கைகள் வரையறுக்கப்பட்டன. அங்கீகரிக்கப்பட்ட குப்பைக் கிடங்குகளுக்கான பகுதிகள் கண்டறியப்படுவதோடு, அங்குள்ள மக்களின் கருத்துகளைக் கேட்டறிந்து, உரிய உரிமம் பெற்ற பின் திடக்கழிவுகளைக் கையாள வேண்டியிருந்தது. நகரங்களிலிருந்து பெறப்படும் திடக்கழிவுகள் மட்கிய / மட்காத என்று மீண்டும் இனம் பிரிக்கப்பட்டு, அவற்றுக்கான குழிகளில் குறிப்பிட்ட காலத்துக்குப் பாதுகாக்கப்பட வேண்டும்.
கழிவுகளால் குழிகள் நிரப்பப்பட்டவுடன் குறிப்பிட்ட வேதிப் பொருள்களுடன் அவற்றை மூட வேண்டும். கழிவுகளிடப்பட்ட புதைகுழிகள் குறிப்பிட்ட காலத்துக்குப் பிறகு தோண்டியெடுக்கப்பட்டு, இயற்கை உரங்களாக விநியோகிக்கப்படும். ஞெகிழி, மட்காத கழிவுப் பொருள்கள் நிரந்தரமாக அக்குழிகளில் உறங்க வைக்கப்படும். நகரங்களிலிருந்து வரக்கூடிய குப்பைகள் தரம் பிரிக்கப்படும்போது, அதில் கண்டுள்ள உலோகப் பொருள்கள் பிரித்து எடுக்கப்படுவதுடன், திடமான பொருள்கள்; கட்டிடம் சார்ந்த பொருள்களைத் தனியாகப் பிரித்து எடுத்து, மறுசுழற்சிக்கு விடுவதற்கான ஏற்பாடுகளும் உண்டு. கழிவுகள் கொட்டப்படும் புதைகுழிகள் வழியாகக் கழிவுப் பொருள்களோடு கலந்த கழிவுநீர் கசிந்து, நிலத்தடி நீரை மாசுபடுத்தாமல் இருப்பதற்கான கட்டுப்பாடுகளும் உண்டு.
குப்பைகளைக் கரியாக்கும் விதமாக அவற்றைத் தீயிட்டுக் கொளுத்துவதற்குத் தடை விதிக்கப்பட்டது. தீப்பிடித்து எரியும் குப்பைக் கிடங்குகளிலிருந்து கிளம்பும் புகை, காற்று மண்டலத்தை மாசுபடுத்துவதோடு, அருகில் விமான நிலையங்கள் இருந்தால் விமானங்கள் தரையிறங்கிச் செல்வதற்கும் ஆபத்து ஏற்படும் என்பதால், விமான நிலைய அதிகாரிகளிடமிருந்து தடையில்லாச் சான்றுகள் பெற வேண்டும். ஆனாலும் போகிப் பண்டிகையின்போது குப்பைகளைத் தீயிட்டுக் கொளுத்துவது மட்டும் நிறுத்தப்படவில்லை. அன்றைய தினம் மட்டும் விமானங்கள் தாமதித்தே சென்று வருகின்றன.
நிதர்சனம் என்ன? - இது தவிர, மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்திடம் இருந்து நீர், காற்று மாசுபடுத்தாமைக்குத் தடையில்லாச் சான்றிதழ் பெற வேண்டும். இவற்றைச் செய்வதற்கான தொழில்நுட்ப அறிவோ (அ) பயிற்சி பெற்ற ஊழியர்களோ நகராட்சிகளிடம் இருந்ததில்லை. திடக்கழிவு மேலாண்மை விதிகள் நடைமுறைக்கு வந்த பிறகும் பல நகராட்சிகள் திடக்கழிவு மேலாண்மைப் பணிகளை மேற்கொள்ளவில்லை. பல மாநகராட்சிகள் மத்திய அரசின் நகர மேம்பாட்டுத் துறையிடமிருந்து நிதியுதவி, உலக வங்கியிடமிருந்து பெரும் கடன் பெற்ற பிறகும், திடக்கழிவு மேலாண்மையில் முன்னேற்றம் எதுவும் ஏற்படவில்லை.
சென்னையில் பள்ளிக்கரணையை ஒட்டி இயற்கையாக அமைந்த சதுப்பு நிலங்களில் கழிவுகளைக் கொட்டுவதும், யாரும் அறியாவண்ணம் கள்ளத்தனமாக அவற்றைத் தீயிட்டுக் கொளுத்துவதும் நடைபெற்றன. அங்கிருந்த கைவேலி நிலங்கள் இவ்வாறு தூர்க்கப்பட்டுப் பல ஆக்கிரமிப்புக் குடியிருப்புகளும், வணிக நிறுவனங்களும் உருவாகியுள்ளன. இவற்றை எதிர்த்துப் பசுமை ஆர்வலர்களால் போடப்பட்ட வழக்குகளில் பல்வேறு விதமான தீர்ப்புகளை நீதிமன்றம் அளித்தது. 4,000 ஏக்கராக இருந்த கைவேலி இன்று 400 ஏக்கராகச் சுருங்கிவிட்டது. இன்று பல மாநிலங்களின் விருந்தினர் இல்லங்கள் அந்த நிலத்தின் மீது கம்பீரமாக உட்கார்ந்திருக்கின்றன.
குப்பைகளைத் தீ வைத்துக் கொளுத்திச் சாம்பலாக மாற்றும் வேலையை நிறுத்த வேண்டும் என்று சென்னை, ஆலந்தூர் நகராட்சிகளுக்குத் தடை விதிக்கப்பட்டிருந்தபோதும் தீயிட்டுக் கொளுத்துவது தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டிருந்தது. ஒரு மென்பொருள் நிறுவனம் இது குறித்துப் புகார் செய்தபோது இரண்டு நகராட்சி ஆணையர்கள் மீதும் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை ஏன் எடுக்கக் கூடாது என்று அறிவிக்கை அனுப்பப்பட்டது. அவ்விரு ஆணையர்களும் 15.12.2008இல் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி நிபந்தனையற்ற மன்னிப்புக் கோரினர். வேங்கடமங்கலம் குப்பைக் கிடங்கு விரைவில் செயல்படத் தொடங்கும் என்றும் தெரிவித்தனர்.
புதிய திடக்கழிவு மேலாண்மை விதிகளின்படி நகராட்சி இரண்டு இடங்களைக் கண்டறிந்தது. மேற்கில் கொடுங்கையூரும் தெற்கில் பெருங்குடியுமே அவர்களுக்குக் கிட்டின. இதனால் கொடுங்கையூருக்கு இழைக்கப்பட்ட அநீதி சொல்லி மாளாது. கழிவுகளைச் சேமிக்கும் கிடங்குகள் உருவாக்கப்படக் கூடாதென்று மக்கள் போராடியும் பயனில்லை. நீதிமன்றத்தில் போடப்பட்ட வழக்குகள் பல முறை விசாரிக்கப்பட்டும் அறிவியல்பூர்வமாக அவர்களது குறை தீர்க்கப்படவில்லை.
வழக்குகள் பலமுறை வந்தபோதும் திடக்கழிவு மேலாண்மை கையாளும் விதிகளின் சிறப்புகள் பற்றி எடுத்துரைத்து வழக்குகளை நீதிமன்றம் முடித்துக்கொண்டது. மக்களின் ஏக்கப் பெருமூச்சுகளுக்குப் பிறகும் குப்பைக் கிடங்குகள் நிரம்பி வழிய ஆரம்பித்த பின்னரே நகராட்சிகள் மாற்றிடங்களைத் தேட ஆரம்பித்தன.
மாதவரம் நகராட்சி அங்கு குவியும் குப்பைகளைக் கிராமத்திலேயே கொட்ட ஆரம்பித்ததை எதிர்த்து, அருகிலிருந்த கில்பர்ன் நகர் மக்கள் நல்வாழ்வுச் சங்கம் வழக்கு தொடுத்தது. மாதவரத்தில் அனைத்து விதமான கழிவுகளையும் சேகரித்துத் தீ மூட்டிய நகராட்சியின் நடவடிக்கைகளைத் தடுக்க வேண்டும் என்று அவர்கள் கேட்டுக்கொண்டனர். வழக்கை விசாரித்த நீதிமன்றம் வழக்கறிஞர் ஆணையர் ஒருவரை நியமித்து மாற்று இடம் குறித்து ஆலோசனை வழங்கக் கூறியது.
இதற்குள் நகராட்சியே பக்கத்திலிருந்த சடையான்குப்பத்தை அடையாளம் காட்டியது. நீதிமன்ற ஆணையர் அளித்த அறிக்கையின்படி, சடையான்குப்பத்தில் திடக்கழிவு மேலாண்மை விதிகளைப் பின்பற்றிக் குப்பைக்கிடங்கை அமைத்துக்கொள்ளச் சொல்லி வழக்கு முடிக்கப்பட்டது.
அதன்பின் கில்பர்ன் நகர் மக்களுக்கு என்ன ஆயிற்று என்று தெரியாது. ‘கில்பர்ன்’ அங்கிருந்த கம்பெனி ஒன்றின் பெயர். அந்த ஆங்கில வார்த்தைக்கு இன்னொரு அர்த்தமும் உண்டு. ‘கொல்லு & கொளுத்து’ என்பதுதான் அவ்வார்த்தையின் உண்மையான அர்த்தம். அதுதான் அங்கு பிரதிபலித்துக்கொண்டிருந்தது. நீதிமன்ற உத்தரவுகள் எவ்விதத் தாக்கத்தையும் உண்டாக்கவில்லை என்று ‘தி இந்து’ நாளிதழ் செய்தி வெளியிட்டது (13.4.2007).
இதன் நிறைவுப் பகுதி நாளை (ஜூன் 6) வெளியாகும்