சிறப்புக் கட்டுரைகள்

மாதவ் காட்கிலுடன் மலையில் ஒரு நடை

பாமயன்

இந்தியாவின் மாபெரும் இயற்கைப் புதையல் மேற்குத் தொடர்ச்சி மலை. அதைப் பாதுகாப்பதற்காக மத்திய அரசு அமைத்த குழு 2011இல் அளித்த விரிவான அறிக்கை, அக்குழுவின் தலைவராக இருந்த பேராசிரியர் காட்கிலின் பெயரில் மாதவ் காட்கில் அறிக்கை எனப்படுகிறது. காடுகளைக் காப்பதற்கு அறிவியல் முறைப்படி அவர் அளித்திருந்த பரிந்துரைகளைத் தென் மாநில அரசுகள் கண்மூடித்தனமாக எதிர்த்தன.

அதனால், இந்த அறிக்கையை மத்திய அரசு ஏற்கவில்லை. காடுகள் பாதுகாப்பில் நெடிய அனுபவம் வாய்ந்தவர் மாதவ் காட்கில். 1980இல் காடுகள் பாதுகாப்புச் சட்டம், உயிர்ப்பன்மைச் சட்டம் - 2002 ஆகியவற்றின் உருவாக்கத்திலும் முக்கியப் பங்காற்றியவர். இந்தியாவில் காடுகள், இயற்கை வளம் இன்றைக்கு மிச்சமிருப்பதற்கு அவரும் ஒரு முக்கியக் காரணம்.

தன் வாழ்நாள் முழுக்கத் தனக்கு உத்வேகம் அளித்து ​வரும் மேற்குத் தொடர்ச்சி மலைத் தொடரை அடிப்​படை​யாகக் கொண்டே தன் சுயசரிதைக்கு அவர் பெயரிட்​டிருக்​கிறார் - A Walk Up The Hill. ‘மலையில் ஒரு நடை - மக்களோடும் இயற்கையோடும் எனது வாழ்வு’ (ந.மனோகரன் மொழிபெயர்ப்பில் தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வி​யியல் பணிகள் கழகத்தின் வெளியீடு) என்று தமிழில் மொழிபெயர்க்​கப்​பட்​டிருக்கிற அவரது சுயசரிதை ஒரு சூழலியல் சமூக வரலாற்று ஆவணம். இதை அவரது சுருக்கமான தன்வரலாறு என்றும் கூறலாம்.

இளமைக் காலத்தில் இருந்து, தான் வாழ்ந்த அனுபவங்களை ஓவியக் கோடுகளாகத் தீட்டிச் செல்கிறார். குமரியில் தொடங்கி நர்மதையின் தென்கரையில் அமைந்துள்ள சாத்பூ​ராவில் முடியும் மேற்குத் தொடர்ச்சி மலையின் நீண்ட பெருநிலத்தை அழகிய மொழியில் விளக்கிச் செல்கிறார். தன்னுடைய இளமைக்​காலம் தொட்டே இம்மலையைத் தீராக் காதலுடன் காதலிப்​ப​தாகக் கவித்து​வ​மாகப் பதிவுசெய்​கிறார்.

ஆளுமை​களுடன் இளமைக் காலம்: மாதவ் காட்கிலின் தந்தை தனஞ்ஜெய் காட்கில் ஒரு பொருளியல் வல்லுநர். பறவை மனிதர் சாலிம் அலியும் தனஞ்ஜெயும் நண்பர்கள். மாதவ்காட்கிலுக்கு இளம் வயதிலேயே இயற்கையின் மீது காதல் வந்து​விட்டது. சிறுவனாக இருந்த காலத்​திலேயே பறவை நோக்கும் உலாக்​களுக்கு இருகண்​ணோக்கியை (பைனாகுலர்) எடுத்​துக்​கொண்டு, சாலிம் அலியுடன் எண்ணற்ற பறவைகளைக் கண்ட அனுபவங்கள் அவருக்கு வாய்த்தன.

சாலிம் அலி, காட்கிலைவிட 46 வயது மூத்தவர் என்றாலும் நெருக்கமான நட்புடன் காட்கிலுடன் பயணித்​துள்ளார். அலி மீது காட்கிலுக்கு அளவற்ற மதிப்பு இருந்​தா​லும், அவரிடம் வெளிப்பட்ட மேட்டுக்​குடிப் பண்பு குறித்த விமர்​சனமும் அவருக்கு இருந்தது. அடித்​தட்டு மக்களைப் பற்றி சாலிம் அலியின் பார்வையையும் இந்தப் புத்தகத்தில் விமர்​சன பூர்​வ​மாகப் பதிவுசெய்திருக்​கிறார் மாதவ்.

காட்கிலின் குடும்பப் பின்னணி அவரை நல்ல வாசிப்​பாளராக மாற்றி​யிருந்தது. ஆயிரக்​கணக்கான நூல்கள் அவருடைய வீட்டில் இருந்துள்ளன. அவரது குடும்பம் உயர்சாதிப் பின்னணி கொண்டதாக இருந்த​போதும் அவரது தந்தை, மாமாக்கள் ஆகிய சுற்றத்​தினர் முற்போக்குச் சிந்தனை கொண்ட​வர்களாக இருந்துள்ளனர். இதனால், அடித்​தட்டு மக்களை அவரால் நேசிக்க முடிந்தது. வளர்ச்சித் திட்டங்கள் என்கிற பெயரில் மக்கள் வெளியேற்​றப்​படுவதை எதிர்த்து எழுதியவர் அவரது மாமா. அதேபோல், காட்கிலின் தந்தை பௌத்தத்தில் ஈடுபாடு கொண்டிருந்தது, அறிஞர் அம்பேத்​கருடனான தொடர்பு ஆகியவை சாதி மறுப்பில் காட்கில் ஆர்வம் கொள்ள வாய்ப்பாக அமைந்தன.

பல்வேறு கதைகள்: மகாராஷ்டிரத்தில் பிறந்து வளர்ந்த காட்கில், நாக்பூரில் உள்ள அவரது முன்னோர்​களின் ஆரஞ்சுத் தோட்டம், கரும்புத் தோட்டம் பற்றிய நினைவுகளை இந்நூலில் பகிர்​கிறார். குடகு மலையின் அழகும் சோலைக் காடுகளின் பெருமாண்​பையும் யானைகளின் உலாக்​களையும் வியந்து விவரிக்​கிறார்.

தினைக்​குருவி முதல் சத்ரபதி சிவாஜிக்கு உதவிய உடும்பு, பழங்குடிகளான தங்கர்​காவ்லி மக்கள், அவர்களது பளபளக்கும் கருந்தோல் எருமை​களின் வனப்பு, அவர்கள் தரும் சுவைமிகுந்த மோர் வரையான பல்வேறு கதைகளை விவரித்​துக்​கொண்டே செல்கிறார். காட்டுக்குள் நடந்து செல்லும் ஓர் ஆற்றுப்படை இலக்கிய அனுபவத்தை இதில் உணர முடிகிறது.

பள்ளிக் கல்வி முடித்து புணே நகரின் கல்லூரியில் சேரும்போதே சூழலிய​லாளராக ஆக வேண்டும் என்று மாதவ் காட்கில் முடிவுசெய்திருந்​தார். அப்போ​திருந்தே களப் பயணங்களை விரும்பும் ஒருவராகவும் மாறிவிட்​டிருந்​தார். ரத்தினகிரியின் வளமான காடுகள், அவற்றைப் பற்றி வனத் துறையினருக்கு இருந்த குறைவுபட்ட புரிதல் பற்றியெல்லாம் புத்தகத்தில் சுட்டிக்​காட்டு​கிறார்.

தனது கல்லூரித் தோழி சுலோசனாவை மாதவ் காதலித்து மணமுடித்தது பற்றிய கதை சுவையானதொரு காதல் கதை. தனது துணைவி​யுடன் 1965ஆம் ஆண்டு ஹார்வர்டு பல்கலைக்​கழகத்தில் படிக்கச் சென்றார் காட்கில். அவ்வளவு பெரிய, முற்போக்கான பல்கலைக்​கழகத்தில் ஒரு கறுப்​பினப் பேராசிரியர்கூட இல்லாத முரணும் அவருக்கு வருத்தம் அளித்தது.

காடுகள் பாதுகாப்பு: மனிதனும் சுற்றுச்​சூழலில் ஒரு பகுதியே என்கிற அத்தி​யாயம் இப்புத்​தகத்தில் மிக முக்கிய​மானது. சுற்றுச்​சூழலில் வேதிப் பூச்சிக்​கொல்​லிகள் கொட்டப்​பட்​டதால் ஏற்பட்ட பாதிப்புகள், அதை எதிர்த்து எழுத வந்த ரேச்சல் கார்சன், அவருக்கு ஏற்படுத்​தப்பட்ட அநியா​யங்கள் என்று விரிவான வரலாற்றுச் செய்தி​களைத் தந்திருக்​கிறார். வியட்​நாமின் அரிய வெப்பமண்டலக் காடுகளில் தடை செய்யப்பட்ட தாவரக்​கொல்​லிகள் அமெரிக்​காவால் கொட்டப்​பட்​டதால் ஏற்பட்ட அழிவு போன்றவை இன்றைய ஆய்வாளர்​களுக்குப் போதுமான தகவல்​களுடன் உள்ளன. அணுத் தொழில்​நுட்பம் எவ்வளவு கொடுமை​யானது, அதன் பின்னணியில் உள்ள உலக அரசியல் என்று அணு அரசியலை அக்குவேறு ஆணிவேறாக ஆராய்ந்துள்ளார்.

அமெரிக்​காவில் படித்துத் திரும்பி, புணேவுக்கு வந்து பணியில் இணைந்​தார். அதன் பிறகு மேற்குத் தொடர்ச்சி மலைகளை ஆழமாக அலசி ஆராய்ந்​தார். இந்தியாவின் உயிர்ப்​பன்​மையைக் காக்க ஆராய்ச்சிகள் மட்டுமல்​லாமல், அவற்றுக்குச் சட்டப் பாதுகாப்பு விதிகளும் தேவைப்​பட்டன. சட்ட உருவாக்​கத்தில் அவர் ஈடுபட்டது தொடர்பான செய்திகள் இப்புத்​தகத்தில் பதிவுசெய்​யப்​பட்​டிருக்​கின்றன. சரணால​யங்கள், வனக் காப்பகங்கள், காப்புக் காடுகள் என்று அப்போது வரையறை செய்யப்​பட்டன.

அறிவுக் கருவூலம்: காடழிப்பில் தொழிற்​சாலைகள் எந்த மாதிரியான பங்களிப்பை வகிக்​கின்றன என்கிற செய்தியை மூங்கில் காடுகளைப் பற்றிய தலைப்பில் அறிய முடியும். ஆயிரம் கிலோ மூங்கிலை, ஒன்றரை ரூபாய்க்குத் தொழிற்​சாலைகளுக்கு அரசு கொடுத்த அவலத்தை வெளிச்சம் போட்டுக்​காட்​டி​யுள்​ளார். காட்டில் மூங்கில் வளம் அழிந்த வரலாறும், அதன் விளைவாக மக்கள் வாழிடங்களை நோக்கி யானைகள் வருவதையும் நாம் இணைத்துப் புரிந்து​கொள்ள முடிகிறது.

மனிதர்​களுக்கும் காட்டு விலங்கு​களுக்கும் இடையே ஏற்படும் மோதல்கள்; குறிப்பாக யானை, காட்டுப் பன்றி ஆகியவற்றால் ஏற்படும் சிக்கல்​களையும் மாதவ் விளக்கி​யுள்​ளார். காட்டுப் பன்றிகள் வேட்டை​யாடப்பட வேண்டும் என்பது இவரது கருத்து. ஒரு சூழலில் ஓர் உயிரினம் அதிக எண்ணிக்கையில் இருக்​கும்​போது, அதை வேட்டை​யாடலாம் என்கிறார்.

மேய்ச்சல் சமூகமும் வேளாண்மைச் சமூகமும் எப்படி இயங்கிவந்தன, அவை எப்படிச் சிதைக்​கப்​பட்டன என்பதை விளக்கு​கிறார். கால்நடை வளர்ப்பும் வேளாண்​மையும் ஒன்றிணைந்து நீடித்த வாழ்வைக் கொடுத்தன. பழங்குடிகளை முதலில் நாகரி​கமில்லாத காட்டு​வாசிகள் என்றதும், பின் அவர்கள் ஆக்கிரமிப்​பாளர்கள் என்றதும் வரலாற்றில் நுணுக்​க​மாகத் திட்ட​மிட்டு நடந்தேறின.

இப்படி மிகத் துணிச்சலான செய்திகளை அச்சமின்றித் தெரிவிக்​கிறார். வளர்ச்சித் திட்டங்கள் என்கிற பெயரில் அவர்கள் மீது நிகழும் அத்து​மீறல்களை வெளிச்சம் போட்டுக்​காட்டு​கிறார். தேக்கு, சந்தனம் போன்ற காட்டு வளங்களைக் கொள்ளையிட வெள்ளை அரசு உருவாக்கிய சதிகாரச் சட்டங்​களும் திட்டங்​களும் இன்றும் தொடர்​வதைக் கவனப்​படுத்து​கிறார். நீடித்த வளர்ச்சியே மக்களுக்கான அடிப்​படைத் தேவை என்று கூறும் இவரது நூல், ஒரு சூழலியல் வரலாற்றுப் பெட்டகம், அறிவியல் கருவூலம்​.

- தொடர்புக்கு: pamayanmadal@gmail.com

SCROLL FOR NEXT