சிறப்புக் கட்டுரைகள்

சாம்சங் தொழிலாளர் போராட்ட வெற்றி ஏன் மகத்தானது?

எஸ்.வி.வேணுகோபாலன்

சாம்சங் தொழிலாளர்கள் பெரும் வெற்றி பெற்றுள்ளனர். அவர்களுக்குக் கிடைத்திருக்கும் ஊதிய உயர்வை மட்டும் ஒரு வெற்றியாக இங்கு குறிப்பிடவில்லை. தாங்கள் உறுதியாகப் பற்றிக்கொண்ட ஒரு தொழிற்சங்கத்தை மதிக்க மறுத்த நிர்வாகம், தங்களது சங்கத்தோடு ஓர் உடன்பாட்டை எட்டியிருப்பதுதான் சாம்சங் தொழிலாளர்களுக்குக் கிடைத்திருக்கும் பெரிய வெற்றி.

ஒரு பன்னாட்டு நிறுவனம், உள்நாட்டுச் சட்டங்களை மதித்தே தனது உற்பத்தியை இங்கே நடத்த வேண்டும் என்பதை அரசாங்கம் அல்ல, அந்த நிறுவனத்தின் எளிய உழைப்பாளிகள் உறுதிசெய்துள்ளனர் என்பது கவனத்துக்குரியது. தங்களை வருத்திக்கொண்டு, தங்களது வாழ்வாதாரத்தை அறிந்தே களத்தில் இறங்கி, தங்களது எதிர்காலம் பற்றிய கேள்விகள் இருந்தாலும் நம்பிக்கையோடு அவர்கள் மேற்கொண்ட தொடர் போராட்டங்களால்தான் இது சாத்தியமானது. அந்த வகையில் இந்த வெற்றி இன்னும் சிறப்பானது.

தொழிற்​சங்கம் வந்த கதை: கடந்த ஆண்டு செப்டம்​பரில், சாம்சங் தொழிலா​ளர்​களின் போராட்டப் பந்தலுக்குச் செல்லும் வாய்ப்பு கிடைத்தது. நூற்றுக்​கணக்கான தொழிலா​ளர்கள் அன்றாடம் அங்கே திரண்டு, கடும் வெயிலில் நாள் முழுக்க ஆர்ப்​பாட்ட முழக்​கங்கள் எழுப்​பவும் தலைவர்களது விளக்க உரைகள் கேட்க​வுமாக இருந்த நாள்கள் அவை. நாங்கள் அங்கு சென்றது ஒரு மதிய நேரம்.

சீருடை​யிலேயே வந்திருந்த தொழிலா​ளர்கள் வரிசையாக நின்று மதிய உணவைப் பெற்றுக்​கொண்டு, உற்சாகத்தோடு கூட்டம் கூட்டமாக நின்று உண்ணவும், மீண்டும் பந்தலுக்குத் திரும்புவதுமாக இருந்​தனர். அவர்களில் சிலரிடம் பேசினேன். “எப்போது வேலைக்குத் திரும்​புவோம் என்கிற நிச்சயமற்ற தொடர் வேலைநிறுத்​தத்தில் இருக்​கிறீர்கள், குடும்பத்​தினர் என்ன சொல்கின்​றனர்?” என்று கேட்ட​போது, தொழிலா​ளர்கள் தங்களது நியாயத்தை மிகவும் பக்கு​வத்தோடு வீட்டில் இருப்​போருக்கு எடுத்​துச் ​சொல்லி வந்திருக்​கின்றனர் என்பது மலைக்க வைத்தது.

அதற்கு ஒரு வலுவான காரணம் இருந்தது. 17 ஆண்டுகளாக அங்கே தொழிற்​சங்கம் கிடையாது. யார் வேண்டு​மா​னாலும் எதற்காகவும் தண்டிக்​கப்​படலாம் என்பதுபோல் நடைமுறை வழக்கமாகி இருந்தது. ஒருவருக்காக மற்றவர் போய்ப் பேசினால், அது குற்ற​மாகப் பார்க்​கப்​பட்டது. முழுமையாக விவரிக்க முடியாத வகைகளில் தொழிலா​ளர்கள் எதிர்​கொண்ட பிரச்சினை​களில் இருந்தே அவர்கள் தங்களை ஒன்று​படுத்​திக்​கொண்டு, ஒற்றைக் குரலாக ஒலிக்க வேண்டும் என்கிற முடிவுக்கு வந்துள்ளனர். ஆம்! ஓரிரவில் வந்தடைந்த இடமல்ல, தொழிற்​சங்கம்.

தொழிற்சங்க வரலாறு: இந்திய விடுதலைப் போரில், தொழிற்​சங்​கங்​களின் தலைமையில் நாடு முழுவதும் லட்சக்​கணக்கில் தொழிலா​ளர்கள் காலனி ஆதிக்​கத்​துக்கு எதிராகப் போராடினர். ஏஐடியுசி சங்கத்தின் முதல் தலைவர் லாலா லஜபதி ராய், தன்னிகரற்ற சுதந்​திரப் போராட்ட வீரர். ஒரு போராட்​டத்தில் அவரது தலையிலேயே அடித்துக் குருதி பெருக வைக்கும் கொடுமையைச் செய்தார் பிரிட்டிஷ் காவல் அதிகாரி சாண்டர்ஸ்.

மாவீரன் பகத் சிங், சந்திரசேகர ஆசாத், அவர்களது தோழர்கள் பெரும் ஆவேசம் கொண்டு எழுந்​தனர். தென்னகத்தில் கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி, 1908இலேயே தூத்துக்குடி கோரல் மில் தொழிலா​ளர்களது வேலைநிறுத்​தத்​துக்குத் தலைமை வகித்​தார். 1946 கடற்படை எழுச்சி பம்பாயை உலுக்​கிய​போது, நாடெங்​கிலும் எழுந்த சகோதரத்துவக் குரல்​களில், லட்சத்​துக்கும் மேற்பட்ட தொழிலாளர் பேரணி சென்னை உள்ளிட்ட நகரங்​களில் நடந்தது குறிப்​பிடப்பட வேண்டியது.

இப்படியான வரலாற்றுப் பின்னணி​யில்தான் விடுதலைக்கு முன்பே தொழிற்​சங்கச் சட்டம் (1926) உருவாக்​கப்​பட்டது. தொழில் தகராறு சட்டம் (1947) சுதந்​திரத்​துக்கு முன்பே நடைமுறைக்கு வந்தது. ஆனாலும், சுதந்​திரம் கிடைத்து 75 ஆண்டு​களுக்குப் பிறகும், 2024இல் சாம்சங் இந்தியா தொழிலாளர் சங்கத்தைப் பதிவுசெய்​யக்கூட அந்தத் தொழிலா​ளர்கள் 38 நாள்கள் வேலைநிறுத்தம் செய்ய நேர்ந்தது.

அது மட்டுமல்ல, அரசுத் தலையீட்டுக்குப் பிறகும் தீர்வு கிடைக்​காமல் நீதிமன்​றத்தில் போராடி, அதில் சாதகமாகக் கிடைத்த நீதிமன்ற உத்தரவைத் தொழிலாளர் துறை நடைமுறைப்​படுத்தக் கெடுநாள்கள் முடிந்து, கடைசி நாள் வரை போராட வேண்டி​யிருந்தது. தொழிலா​ளர்கள் போராடிப் பெற்ற உரிமையை நிர்வாகம் மதிக்​காமல் பிடிவாதம் செய்துவந்த சூழலில், அதையும் எதிர்​கொண்டு பேச்சு​வார்த்தை மேஜைக்கு வரவைத்து ஓர் உடன்பாட்டை எட்டி​யிருப்​பதால் இந்த வெற்றி உரத்துப் பேச வேண்டிய​தாகிறது.

பரப்பப்பட்ட நச்சுக் கருத்துகள்: எட்டு மாதப் போராட்டம் இது. தொழிற்சங்க உரிமையை அடிப்​படை​யிலேயே ஏற்றுக்​கொள்ளாத எதிர்மறை உளவியலில் பக்கம்​பக்கமாக எழுதிக் குவிப்போர் மும்முரமாக இயங்கிய காலமும் இது. குறிப்பாக, இடதுசாரித் தொழிற்​சங்கம் என்றாலே ‘தொழிலுக்கே எதிரானவர்​கள்’, ‘தொழிலாளியை நடுவீ​தியில் கொண்டு​வந்து நிறுத்து​வார்​கள்’, ‘நிறு​வனத்தை மூடாது ஓய மாட்டார்​கள்’, ‘மாநிலத்​துக்கு முதலீடுகளே இனி வராமல் செய்து​விடு​வார்கள்’ என்றெல்லாம் சிலர் சமூக ஊடகங்​களில் நஞ்சு பரப்பிக்​கொண்​டிருந்​தனர். நிறுவனத்​துக்கு அருகில் உள்ள தனியார் ஒருவருக்குச் சொந்தமான காலி மனையில் போடப்​பட்​டிருந்த போராட்டப் பந்தலைக் காவல் துறை பிய்த்து எறிந்தது. தொழிற்சங்க முக்கிய நிர்வாகிகளை நள்ளிரவில் வீடு சென்று கைதுசெய்து சிறையில் அடைத்தது.

கடுமையான பிரிவு​களில் வழக்குகள் தொடரப்​பட்டன. சிஐடியு மாநிலத் தலைவர் அ.சவுந்​தர​ராஜன், முத்துக்​குமார் ஆகியோரின் அலைபேசிகளையும் பறித்துத் தனி அறையில் அடைத்து வைத்தது. அது ஒரு பன்னாட்டு நிறுவனம், கம்யூனிஸ்ட் தொழிற்​சங்​கத்தை எப்படி ஏற்றுக்​கொள்​வார்கள் என்று துணை முதல்வரே ஊடகக் கேள்விக்குப் பதில் சொன்னார்.

இல்லாத ஒரு பொம்மைச் சங்கத்தோடு ஏதோ ஒப்பந்தம் போடப்​பட்​ட​தாக​வும், மறுநாள் எல்லாரும் பணிக்குத் திரும்​பி​விடு​வார்கள் என்றும் அரசு சார்பிலேயே செய்தி வழங்கப்​பட்டது. தங்களது வாழ்க்கையில் முதல் அனுபவ​மாகத் தொழிற்​சங்​கத்தில் இணைந்த சாம்சங் தொழிலா​ளர்கள் இவற்றுக்​கெல்லாம் சளைத்து​விட​வில்லை. பொதுத் துறை, நிதித் துறை உள்ளிட்ட சங்கங்கள் இவர்களுக்கு ஆதரவுக்கரம் நீட்டியது அவர்களுக்கு மேலும் நம்பிக்கை ஊட்டியது.

ஒளிமயமான உடன்பாடு: இந்திய அரசமைப்புச் சட்டத்தைத் தொழிலா​ளர்கள் உளமார உறுதி​யாகப் பற்றி நின்றனர். அனுபவம் வாய்ந்த தொழிற்​சங்கத் தலைவர்கள் தங்களுக்காக எதிர்​கொண்ட தாக்குதல்​களைக் கண்டு மேலும் உரமேற்றிக்​கொண்​டனர். இது ஒரு தனிப்பட்ட நிறுவனத்தில் நிர்வாகத்​துக்கும் தொழிலா​ளர்​களுக்கும் இடையேயான போராட்டம் அல்ல, மூலதனத்​துக்கும் உழைப்​புக்கும் இடையேயான முரண்​பாட்டில் இருந்து தெறிக்கும் ஒரு பெரும் போராட்டம் முன்னு​தா​ரணமாக எழுகிறது. அதன் பெருமைக்​குரிய பகுதி​யாகத் தாங்கள் அமைய இருக்​கிறோம் என்கிற கம்பீரத்தோடு அவர்கள் வலுவாகத் திரண்​டனர்.

நெடிய போராட்டக் காலம், சாதாரண காலங்​களில் கிடைக்க வாய்ப்பற்ற தங்களுக்கான தத்துவ தரிசனத்​துக்கும் அவர்களை உட்படுத்​தி​யதுதான் இந்த வெற்றியை மேலும் உன்னத​மாக்கு​கிறது. சங்கம் அமைக்​கப்படாத காலத்​திலும் சாம்சங் தொழிலா​ளர்​களுக்கு ஊதிய நிர்ணயம் இருக்​கத்தான் செய்தது. சலுகைகள் வழங்கப்​பட்டுதான் வந்தன. ஆனால், தாழ்ந்த குரலில்கூட எதையும் எப்போதும் நிமிர்ந்து பார்த்துக் கேட்டுவிட முடியாது. அதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைத்து, கண்ணி​யமிக்க தொழிலா​ளர்​களாகத் தங்களது கடமையை அவர்கள் ஆற்ற முடியும் என்பதை இந்த உடன்பாடு அவர்களுக்கு ஒளிமயமாக உணர்த்திவிட்டது.

- தொடர்புக்கு: sv.venu@gmail.com

SCROLL FOR NEXT