சிறப்புக் கட்டுரைகள்

இளையராஜா அடுத்த நூற்றாண்டுகளுக்குமானவர்!

தாயப்பன் அழகிரிசாமி

‘நூற்றாண்டின் தலைசிறந்த அறிவியல் மேதை’ என்று உலகமே கொண்டாடியபோதும், ஐன்ஸ்டைனை இன்னும் உயரத்தில் வைத்துப் பார்க்க யூதர்கள் விரும்பினர். தாங்கள் உருவாக்கிய இஸ்ரேலின் இரண்டாவது அதிபராக ஐன்ஸ்டைனை ஆக்குவதற்கு அவர்கள் முயன்றனர்; அதை ஏற்க அவர் மறுத்துவிட்டார் என்பது வேறு விஷயம். ஆனால், அவருக்கு அந்தப் பொறுப்பை வழங்க முயன்ற யூதர்களின் முனைப்பு முக்கியமானது. அது ஒரு சமூகத்தின் கடமை; நன்றிக்கடன். தங்களிடையே உருவாகும் ஆகப்பெரும் ஆளுமைகளைப் பாதுகாப்பதும் மதிப்புமிக்க பதவிகளில் வைத்து அழகு பார்ப்பதும் அச்சமூகத்தின் நாகரிகத்துக்கு அணி சேர்க்கும்.

​கொண்​டாடப்பட வேண்டிய மேதை: கோடம்​பாக்கம் பாலத்​துக்குக் கீழே - உற்றுப் பார்த்தால் மட்டுமே தெரியக்​கூடிய இடத்தில் - இசை உலகில் 50ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் இளையராஜாவின் இசைக்​கூடம் இருக்​கிறது. மிக எளிமையான கட்டிடம் அது. உலக இசை வல்லுநர்கள் பலரை வியப்பில் ஆழ்த்தும் பல இசைக் கோவைகள் அங்குதான் பிறக்​கின்றன. உலகின் ஆகச் சிறந்த இசை வல்லுநர்​களுக்கு எல்லாம் கனவாகவே முடிந்துபோன சிம்பொனி என்கிற வகைமையை 30 நாள்களில் எழுதி முடித்த தமிழ்ச் சமூகத்தின் ஓர் ஆளுமையை - அவர் வாழும் காலத்​திலேயே - சிறப்பான ஓரிடத்தில் வைத்து அழகுபடுத்திப் பார்ப்பது ஓர் அரசின் / சமூகத்தின் கடமை இல்லையா?

‘பணம் பெற்றுக்​கொண்டு திரைப்​படங்​களுக்கு இசையமைப்​பவர்​தானே? அவருக்கு நாம் ஏன் சிறப்புச் செய்ய வேண்டும்?’ என்று சிலர் கேட்கலாம். ஆனால் பீத்தோவன், மொஸார்ட் போன்ற மேதைகளின் படைப்புகள் ஏராளமான வசதி வாய்ப்புகளை அவர்களுக்கு வழங்கின என்பதற்காக, மக்கள் அவர்களைக் கொண்டாடத் தவறவில்லை. இங்கே விவாதிக்​கப்பட வேண்டியது, இளையராஜா எவ்வளவு உயரத்தில் வைத்திருக்​கப்பட வேண்டியவர் என்கிற ஆதங்கம் மட்டும் அல்ல; தமிழ்ப் பொதுவெளியில் அவரைச் சுற்றி எழுப்​பப்​படும் உரையாடல்​களும்​தான்.

கட்டமைக்​கப்​படும் பிம்பம்: அரை நூற்றாண்டாக, இளையராஜாவைக் குறைத்து மதிப்​பிட்ட உரையாடல்களை - கிராமிய இசை, தலைக்​கனம், ராயல்டி - எனச் சில சொற்களில் அடக்கி​விடலாம். சில வல்லுநர்கள் அவருடைய இசையை விதந்து பேசினாலும், அதில் ஒரு சிரத்தை இன்மை வெளிப்​படும். தம்முடைய இசையில் ராஜா முயற்சி செய்த மேற்கத்திய இசையின் நுட்பங்​களையோ, கர்னாடக இசையின் லாகவங்​களையோ அவர்கள் வசதியாக மறந்து​விடு​வார்கள். ஆனால், “நாங்கள் யாரும் சாதித்​தவற்றைக் காட்டிலும் நூறு மடங்கு அதிகமாக இளையராஜா சாதித்து​விட்​டார்” என்றார் திரை இசை மேதையான நௌஷாத்.

இங்கே பல குணவான்கள், “இளைய​ராஜாவுக்குப் பணிவு வேண்டும்” என்பர். பணிவு ஓர் உயிரியல் குணம் அல்ல. அது, தனிமனிதனின் தேர்வு. அவர்கள் சொல்லும் அதே பணிவையும் தாய் கொடுத்த 400 ரூபாயையும் பெற்றுக்​கொண்டு, மதுரை சென்று அதுவரை யாருக்காக ஊர் ஊராகப் போய்ப் பாடினாரோ, அக்கட்​சியின் தலைவரைச் சந்தித்துத் தங்க இடம் கேட்டபோது - “யாரைக் கேட்டு இங்கு வந்தீர்​கள்?” என்று அந்தத் தலைவர் கேட்டிருக்​கிறார்.

அந்த நொடியில் - பிறரிடம் வலிந்து காட்டும் பணிவை​விடத் தனக்குள் உறையும் அமைதியே தன்மை​யானது என்கிற முடிவுக்கு இளையராஜா வந்திருக்​கக்​கூடும். தவிர, ‘கர்வம்’ என்பதைத் தமிழ்ச் சமூகத்​துக்கு ராஜாதான் அறிமுகப்​படுத்​தி​யது​போலச் சிலர் ஆதங்கப்​படு​வதையும் பார்க்க முடிகிறது. அதே சிலர்தான் அரசியல்​வா​தி​களின் ஆணவத்தை ‘தைரியம்’ என்றும் எழுத்​தாளர்​களின், கவிஞர்​களின் தலைக்​க​னத்தை ‘ஞானச்​செருக்கு’ என்றும் புகழ்​கின்​றனர்.

‘தான் ஏற்றுக்​கொண்ட விழுமி​யங்​களோடு முரண்​படும் ஆளுமைகள் தொடர்பான படங்களுக்கு இசையமைக்கச் சம்மதிக்க​வில்லை’ என்பது இளையராஜா மீது வைக்கப்​படும் மற்றொரு விமர்​சனம். நெப்போலியனுக்காக Eroica என்றொரு சிம்பொனி எழுதினார் பீத்தோவன். பின்னாளில் நெப்போலியனின் செயல்​பாடு​களில் ஆதிக்கம் வெளிப்​படுவதை உணர்ந்து, எதிர்ப்பை வெளிப்​படுத்தத் தன் கையால் எழுதிய இசைக் குறிப்பை அவரே எரித்து​விட்​டார்.

அந்த சிம்பொனி எந்த அளவுக்குப் புகழ்​பெற்றதோ அதற்கு இணையாகப் புகழ்​பெற்றது, பாதி எரிந்த நிலையில் இருந்த அந்த இசைக் குறிப்பு! இளையராஜாவுக்கும் எழுது​வதற்குத் தாள்கள் வைத்துக்​கொள்ள உரிமையும் சுதந்​திரமும் இருப்​பது​போலவே, ஒரு தீப்பெட்டியை வைத்துக்​கொள்​வதற்கும் அவருக்குச் சுதந்​திரமும் உரிமையும் உண்டு என்பதை ஏற்பதற்கு நமக்கு எது தடையாக இருக்​கிறது?

தனி வகைமை: ‘திரைப்பட இசையமைப்​பாளர்’ என்கிற சட்டகத்​துக்குள் மட்டுமே இளையராஜாவை அடைத்து, அதைச் சார்ந்தே உரையாடல்கள் நிகழ்த்​தப்​படு​வதுதான் இளையராஜாவுக்கு இழைக்கப்படும் மிகப்பெரிய அநீதி. இசையின் மீதான அவருடைய மேதைமை தனித்த ஒன்றல்ல; இளையராஜா ஆகச் சிறந்த ஓவியர், புகைப்படக் கலைஞர், கவிஞர். அரிதான அவருடைய Baritone குரல்​வளம், ஆழமானது மட்டுமல்ல; மனிதம் நிரம்​பியது. அவருடைய மற்ற திறமை​களும் அவருடைய இசையும் பின்னிப் பிணைந்தவை; அக்கட்​டமைப்பு​டனேயே இயங்குபவை.

ஓர் ஒளிப்​படத்தை எடுக்கும் அதே நேர்த்தியோடு அவர் இசைக் கோவையை உருவாக்கு​கிறார் என்பது, மேற்கத்திய இசையை அறிந்​தவர்​களுக்கு நன்கு விளங்கும். திட்டுக்களாக வண்ணங்​களைத் தீட்டி, காண்பவரைப் படைப்பின் அங்கமாக்கும் ஒரு ‘எக்ஸ்​பிரஷனிஸ’ ஓவியனைப் போல் இசைச் சேர்க்கையை அவர் அமைக்​கிறார்; வெண்பாவின் ஒழுங்​கோடும் ஒழுக்​கத்​தோடும் இசைக் கருவி​களைக் கையாள்​கிறார். பலராலும் புரிந்து​கொள்​ளப்படாத அவருடைய ஆன்மிகமே, அவருடைய இசையின் வழியாக ஊற்றெடுக்​கிறது.

இன்று, திரைப்படம் என்கிற வகைமையில் இருந்தும் தன்னைப் பிரித்​துக்​கொண்டு, இளையராஜாவின் இசை தனி வகைமை (Genre) ஆகிவிட்டது. அது என்ன படம், யார் நடித்தது என்பதெல்லாம் தெரியாமலேயே ராஜாவின் இசையை மட்டுமே உள்வாங்கும் ஒரு தலைமுறை உருவாகி​யிருக்​கிறது. இளையராஜா உள்வாங்கிய ஆப்ரிக்கப் பழங்குடி இசை, பாஸனோவா, மேற்கத்திய, இந்திய நாட்டுப்புற இசை, ஜாஸ், பாப், டிஸ்கோ, சிக்கடெல்லா, ராக் அண்ட் ரோல் போன்ற அனைத்து இசை முறைமை​களையும் - திரைப்படம் என்கிற வெட்ட​வெளி​யில்தான் கொட்டித் தீர்க்க வேண்டும்.

உணர்வு​களில் கலந்து ‘அத்வைதம்’ ஆகிப்போன ஓர் இசை நிலத்தை, ‘சினிமா பாட்டுக்​காரன்’ என்கிற வட்டத்​துக்குள் சிலர் அடைக்க எண்ணுகிற​போது, ஆற்றாமையில் பதற்றம் அதிகரிக்​கிறது. அங்கீ​காரம் கொடுக்காத சமூகத்தால் மட்டுமல்ல; அங்கீகரிக்கத் தெரியாத சமூகத்​தாலும் ‘வான்​காவின் காதுகள்’ வெட்டப்​படலாம்.

இசைஞானியின் பெயரில் இசைக் கல்லூரி​களும் இசையை விளக்கும் காட்சிக்​கூடங்​களும் அமைக்க வேண்டியது, தமிழ்ச் சமூகத்தின் / தமிழ்நாடு அரசின் இன்றியமையாத கடமை. தான் கொண்டாடப்பட வேண்டிய அளவுக்குக் கொண்டாடப்​பட​வில்லை என்பது குறித்த அக்கறையோ சிந்தனையோ இளையராஜாவுக்கு இல்லை என்றாலும், ஒரு திரைப்​படத்தில் அவரே எழுதிய பாடல் ஒன்று மனதை உறுத்​திக்​கொண்டே இருக்​கிறது:‘ஊர்கள் கூடும் திருநாளை / தொடங்கி வைக்கும் என் கூட்டம்/ முடிந்தால் ஊரோரம் ஒதுங்கி வாழ வேண்டும் / இசை தெய்வம் கலைவாணி எனக்கருளும் போதும் / ஊர் தெய்வம் பேசாது சாட்சி போலப் பார்க்​கும்...’‘ஊர் தெய்வங்கள்’ பேசவில்லை என்பதற்காக, அந்தக் கூட்டத்தில் ஒருவராக நிற்கும் நாமும் பேசாமல் இருக்​கலாமோ!

- தொடர்புக்கு: thayappan.neruda@gmail.com

ஜூன் 2: இளையராஜா பிறந்த நாள்

SCROLL FOR NEXT