இளையராஜா - இந்தியத் திரையுலகத்துக்குக் கிடைத்த ஆகச் சிறந்த இசையமைப்பாளர்களில் ஒருவர். மிக வளமான இசைத் திறன் கொண்ட இளையராஜா, அநாயாசமான பன்முகத்தன்மை கொண்டவர்; இசையில் மரபை மீறும் துணிச்சல்காரர். அசாதாரண வரங்கள் கைவரப் பெற்றிருக்கும் இளையராஜா, சினிமா ஊடகத்தில் தனது சமகாலத்தைத் தாண்டி இயங்கும் இசையமைப்பாளர். இளையராஜாவைப் பற்றியும் அவரது இசை குறித்தும் நுட்பமான விஷயங்களை வெளிக்கொணரும் வகையில் பத்திரிகையாளர் ஏ.எஸ்.பன்னீர்செல்வன், ‘ஃபிரண்ட்லைன்’ இதழுக்காக (1987 ஆகஸ்ட் - செப்டம்பர்)
எடுத்த நேர்காணலிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட சில பகுதிகள்...
பத்திரிகையாளர்களையும் விமர்சகர்களையும் நீங்கள் தவிர்ப்பது ஏன்? - எதற்காக நான் அவர்களைச் சந்திக்க வேண்டும்? தங்களுக்கு இசை தெரியும் என்று விமர்சகர்கள் கருதிக்கொண்டால், என் இசையை அவர்களாகவே மதிப்பிட்டுக்கொள்ளலாம்; யாரும் தடுக்கப்போவதில்லை. அவர்களுக்கு இசை தெரியவில்லை என்றால், அவர்களிடம் பேச எனக்கு ஒன்றுமே இல்லை. சர்ச்சைகளுக்குப் பயந்தெல்லாம் நான் அவர்களைத் தவிர்ப்பதில்லை.
இந்த விமர்சகர்கள் எல்லாம் ஏதோ முன்முடிவுடன் என்னை அணுகுகிறார்கள். இசை குறித்த தங்கள் கருத்துகளுக்கு என்னை ஓர் ஊதுகுழலாகப் பயன்படுத்தவே அவர்கள் விரும்புகிறார்கள். அதற்கு நானே ஏன் வாய்ப்பை ஏற்படுத்தித் தர வேண்டும்?
இசை குறித்த உங்கள் பார்வை என்ன? - என்னைப் பொறுத்தவரை இசை என்பது எந்த நோக்கமும் இல்லாதது. அது இயற்கையானதாக, நோக்கம் ஏதும் அற்றதாக, ஒரு நதியின் போக்கைப் போல இருக்க வேண்டும். இசையை உருவாக்குவதில் எனக்கு ஒரு நோக்கம் இருக்கிறது. இங்கு வணிகம்தான் நோக்கம்.
தியாகராஜ சுவாமிகள் கடவுளை அடைவதற்காகப் பாடினார். ஆக, அவருக்கும்கூட தனது இசையில் ஒரு நோக்கம் இருந்தது. குறைந்தபட்சம், தன் இசையை அவர் விற்கவில்லை. ஆனால், ஒரு விவசாயியைப் பாருங்கள். வயலில் உழும்போது, உற்சாகத்துடன் பெருங்குரலெடுத்துப் பாடுகிறார். அதில் எந்த நோக்கமும் இல்லை. அதுதான் உண்மையான இசை!
இசை குறித்த உங்கள் பார்வையை சங்கீத வித்வான்களும் இசை வல்லுநர்களும் ஏற்றுக்கொள்வார்களா? - தயவுசெய்து சொல்லுங்கள்! யார் அவர்கள்? தன் வாழ்நாள் முழுவதையும் ஒரு நாடோடிப் பாடகரைப் போலக் கழித்த தியாகராஜ சுவாமிகள், தனது இதயத்திலிருந்து, ஆன்மாவிலிருந்து பாடினார். ஆனால், அவர் எழுதிய கீர்த்தனைகளில் பதினைந்து கீர்த்தனைகளைக் கற்றுக்கொண்டு, தங்கள் வாழ்நாள் முழுவதும் அதையே சாதகம் செய்பவர்கள் தங்களைச் சங்கீத வித்வான்கள் என்றும், இசை வல்லுநர்கள் என்றும் சொல்லிக்கொள்கிறார்கள்.
சமகால சங்கீத வித்வான்கள் அனைவரையும் நான் கேட்டிருக்கிறேன். அவர்களின் குரலிலும் பாடும் முறையிலும் எப்போதும் ஒருவிதமான அகங்காரத் தொனி இருந்துகொண்டே இருக்கிறது. இப்படியெல்லாம் தியாகராஜ சுவாமிகள் பாடியிருக்க மாட்டார் என்று உறுதியாகச் சொல்கிறேன்.
அவரது பாணி மிக எளிமையானதாக, மிக துலக்கமானதாக, இயல்பானதாகவே இருந்திருக்க வேண்டும். அது இசைக் கச்சேரிகளில் இருப்பதில்லை (உதாரணமாக, ஒரு கீர்த்தனையைப் பாடிக் காட்டுகிறார்). எனவே, அவர்களிடம் என்னை நிரூபிக்க வேண்டிய அவசியம் எனக்கு இல்லை!
அப்படியென்றால், இசையை நீங்கள் எப்படி வரையறுப்பீர்கள்? - இசை என்பது வெறும் ஒலி, அவ்வளவுதான். நாயின் குரைப்பில்கூட இசை இருக்கிறது. ஒவ்வொரு மனிதரின் அசைவிலும் இசை இருக்கிறது. இசை என்பது விவாதத்துக்குரிய கருப்பொருள் அல்ல; அது அனுபவிக்கப்பட வேண்டியது. இந்தப் பிரபஞ்சம், தனக்கென ஒரு தாளக்கட்டைக் கொண்டிருக்கிறது. அது தனது சமநிலையை இழக்காமல் ஒரு சுழற்சி முறையில் இயங்குகிறது. அதேபோல, ஒலி என்பது ஒரு தனித்த குறிப்பு. அது ஏறுவரிசையில் செல்வதில்லை; இறங்கு வரிசையில் வருவதில்லை. அது செங்குத்தானது அல்ல; சைன் வளைவு போன்றதும் அல்ல.
அது ஆற்றல் வாய்ந்தது. எனினும், இந்த ஆற்றல் தன்மை நமது பொதுவான பார்வைக்குள் அடங்காதது. மனிதர்களாகிய நமக்கு நிறைய வரம்புகள் இருக்கின்றன. கேட்கக்கூடிய அதிர்வெண்ணுக்குள் அடங்கும் ஒலிகளை மட்டும்தான் நம்மால் உணர முடிகிறது. அதற்கு மேலும் கீழும் ஒலிக்குறிப்புகள் உண்டு. அவற்றை நாம் மறந்துவிட்டோம். மனிதன் இந்த ஒற்றை ஒலிக்குறிப்பை ஏழு சுரங்களாகப் பிரித்திருக்கிறான்.
கர்நாடக இசை, இந்துஸ்தானி, மேற்கத்திய இசை, பழங்குடி இசை, கிராமிய இசை என இசையில் பல்வேறு வகைமைகள் இருக்கின்றன. இதில் மிகவும் மேம்பட்ட வடிவம் என எதைக் கருதுகிறீர்கள்?
இப்படியெல்லாம் வகைப்படுத்தித் தீர்மானிக்க நான் விரும்புவதில்லை. இசை வகைமையின் தரத்தைத் தீர்மானிக்கும் இடத்துக்கு வரும் ஒருவர், ஒப்புமைக்காக எடுத்துக்கொள்ளும் அனைத்து இசை வடிவங்களிலும் தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும். மெல்லிசையைவிடக் கர்னாடக இசை உயர்ந்தது என்று ஒப்பிடும் நபர், இரண்டு இசை வடிவங்களிலும் பரிச்சயம் கொண்டிருக்க வேண்டும்.
ஆனால், மெல்லிசையைப் புறந்தள்ளும் பலரும், இரண்டு இசை வடிவங்களையும் அறிந்தவர்கள் அல்ல. கர்நாடக இசையைவிட இந்துஸ்தானி உயர்ந்தது; இந்துஸ்தானியிலும் தும்ரி அல்லது கயாலைவிட துருபத் உயர்ந்தது; சிம்பொனியைவிட ஓபெரா உயர்ந்தது என்றெல்லாம் சொல்வது முற்றிலும் பொருத்தமற்றது. அனைத்து இசை வடிவங்களையும் அறிந்தவர்கள் யாரும் இல்லை; எனவே, இதையெல்லாம் தீர்மானிக்கின்ற நீதிபதியாகும் தகுதி யாருக்கும் இல்லை.
‘ரீரெக்கார்டிங்’ என்னும் வார்த்தை இன்றைக்குக் கிராமத்து மக்கள் வரை பிரபலமாக இருக்கிறது. அதற்கு நீங்கள்தான் காரணம். பின்னணி இசையை முற்றிலும் வேறு மாதிரியாக உருவாக்க நீங்கள் எந்த வகையான சிறப்புக் கவனம் எடுத்துக்கொள்கிறீர்கள்?
எனது ஒலிப்பதிவுக் கூடத்துக்கு வரும் இசைக் கலைஞர்கள் அனைவரும் நான் பணிபுரியும் வேகத்தையும் தரத்தையும் பாராட்டுவார்கள். அதில் பாராட்ட என்ன இருக்கிறது எனத் தெரியவில்லை. படத்தின் உணர்வுநிலைக்கு ஏற்றவாறு எனக்கு யோசனைகள் தன்னியல்பாக வரும்.
பின்னணி இசை ஒலிப்பதிவுக்கு ஒருநாள் முன்னதாகவே படத்தைப் பார்த்துவிடுவேன். மறுநாள் ஒலிப்பதிவுக் கூடத்தில் 60 இசைக் கலைஞர்களுடன் நான் அமரும்போது, காட்சிகள் மீண்டும் திரையிடப்படும். படத்தைப் பார்க்கும்போது, ஒரு குறிப்பிட்ட சூழலுக்கு மற்ற இசையமைப்பாளர்கள் என்ன மாதிரி யோசிப்பார்கள் என்று ஊகித்து, அவற்றையெல்லாம் தவிர்த்துவிடுவேன்.
ஒரு குறிப்பிட்ட காட்சிக்குப் பிறர் வழக்கமாகப் பயன்படுத்தும் இசைக் கருவிகளைக்கூட நான் பயன்படுத்த மாட்டேன். எனவே, நான் புதிதாகச் சிந்திக்க வேண்டியிருக்கும். ஒரு பாதுகாப்பான வேலையுடன் வாழ்க்கையில் ஒரு நல்ல இடத்தை அடைந்துவிட்ட மனிதன், வாழ்க்கையைச் சுலபமாக அணுகுவான்.
ஆனால், வாய்ப்புகள் அடைக்கப்பட்டுவிட்ட ஒரு மனிதன், முழுமையான துணிச்சலுடன், புதிய பார்வைக் கோணத்தில் வாழ்க்கையை அணுகுவான். முதலாமவனைவிட அதிக வெற்றிகளைப் பெற, அவனுக்கு அது வழிவகுக்கும். நான் இரண்டாமவனைப் போன்றவன். என் பின்னணி இசைக் கோவைகள் புதுப் பொலிவுடன் இருக்க அதுதான் காரணம்!
தமிழில் சுருக்கமாக: வெ.சந்திரமோகன்
நன்றி: ‘தி இந்து’ ஆவணக் காப்பகம்