உலகம் மாறிவிட்டது என்று சொல்வதற்குப் பின்னால் எவ்வளவு இழப்புகள், எவ்வளவு புதுமைகள், எவ்வளவு வேதனைகள், மகிழ்ச்சிகள், அடங்கியிருக்கின்றன. ஒவ்வொரு தலைமுறையும் இன்னொரு தலைமுறையைப் பார்த்து, ‘உலகம் மாறிவிட்டது’ என்கிறார்கள். சில நேரம் குற்றச்சாட்டாக, பல நேரம் குதூகலமாக, ஏமாற்றமாக, ஏக்கமாக, சந்தோஷமாகச் சொல்கிறார்கள். உலகம் மாறுவதைப் பற்றிய கவலையைவிடவும் உலகோடு சேர்ந்து நாமும் மாற வேண்டுமே என்பதில்தான் பலருக்கும் கவலை.
மாறும் உலகில் மாறாதது எது என்பதையும், மாற்ற வேண்டியது மாறியிருக்கிறதா என்பதையும், யாரால் எப்படி மாற்றம் ஏற்பட்டது, அது மனிதர்களிடம் என்ன விளைவுகளை ஏற்படுத்துகிறது என்பதையும் இலக்கியம் பேசுகிறது; ஆராய்கிறது. காலத்தின் குறுக்குவெட்டுத் தோற்றத்தை நாவல்கள் கொண்டிருக்கின்றன. ஒரு நாவலின் வழியாகவே அக்காலகட்ட மனிதர்களின் சமூகப் பண்பாட்டு வாழ்க்கையை எளிதாக அறிந்துகொண்டுவிட முடியும். சினிமா வருவதற்கு முன்பாகவே நாவல்கள் வாழ்க்கையை மிக நுட்பமாக, காட்சிபூர்வமாக ஆவணப்படுத்தியிருக்கின்றன.
தொழில்நுட்பம் மனிதனுக்கு உலகைக் கைக்குள் அடங்கக் கூடியதாக மாற்றியது என்றால் கைக்குள் அடங்கிய வாழ்க்கையை இலக்கியம் பேருலகமாக விரிவுகொள்ள வைத்திருக்கிறது. நாவல்கள் ஒரே நேரத்தில் தொலைநோக்கியாகவும் நுண்ணோக்கியாகவும் செயல்பட்டிருக்கின்றன. ஒடிசாவின் புகழ்பெற்ற எழுத்தாளரான களிந்திசரண் பாணிக்ரஹியின் ‘மண்பொம்மை’ நாவல் 1959இல் வெளியானது. இதனை ரா.வீழிநாதன் மொழியாக்கம் செய்துள்ளார். சாகித்திய அகாடமி வெளியிட்டுள்ளது. இந்த நாவலில் இரண்டு மறக்க முடியாத கதாபாத்திரங்கள் இடம்பெற்றிருக்கிறார்கள். ஒன்று சாம்பதான், மற்றொன்று அவரது மூத்தமகன் பர்ஜு. இப்படியான மனிதர்கள் வாழ்ந்திருக்கிறார்கள் என்பதை நினைக்கும்போது வியப்பாகவும் இருக்கிறது. இவர்களைப் போல இன்று எவருமில்லையே என்று வேதனையாகவும் இருக்கிறது.
பதான் பாடா கிராமத்தில் வசிக்கும் சாம்பதான் மிகவும் ஏழை. ஊரில் யார் எந்த வேலைக்குக் கூப்பிட்டாலும் முதல் ஆளாகப் போய் நிற்கக் கூடியவர். அதற்கு ஊதியம் கேட்கமாட்டார். தன்னுடைய மனதிற்குப் பட்ட உண்மையைத் தைரியமாகப் பேசக்கூடியவர். ஊரில் நடக்கும் நல்லது கெட்டதுகளில் அவரது பங்கில்லாமல் இருக்காது.
கிராமத்தில் எங்கே, யாருக்கோ இடையே சண்டை நடந்தாலும் சாம்பதான் குறுக்கே புகுந்து விலக்கிவிடுவார். மறுத்தால் சண்டையிடுபவர்களின் கால்களைப் பிடித்துக் கொண்டு மன்றாடுவார். அவர்கள் ஒன்று சேரும் வரை சோறு தண்ணீர் இல்லாமல் வாடுவார். நான் செத்த பிறகு அவரவர் இஷ்டப்படி சண்டைபோட்டுக் கொள்ளுங்கள் என்று அறிவுரை சொல்லுவார். அதனால் அவர் மீது ஊர்மக்கள் மிகுந்த அன்பு கொண்டிருந்தார்கள். மனைவியை இழந்த சாம்பதான் மரணப்படுக்கையில் இருக்கிறார். அவரது இரண்டு மகன்கள், மருமகள்கள், பேரன்,பேத்திகள் கட்டிலைச் சுற்றி நிற்கிறார்கள். அவரது ஒரு பேத்தி தாத்தாவிடம், “எங்களுக்கு என்ன வைத்திருக்கிறாய்?” என்று கேட்கிறாள். அதுகூட அவளது அம்மா சொல்லிக்கொடுத்ததுதான்.
தாத்தா சேர்த்து வைத்த பணமும் சொத்தும் பேரன் பேத்திகளுக்குக் கிடைக்ககூடும் என்பதால் அந்தக் கேள்வி. “உங்களுக்கென்று தர்மத்தை விட்டுச் செல்கிறேன்” என்று சாம்பதான் பதில் சொல்லிவிட்டுக் கண்களை மூடிக்கொள்கிறார். அப்புறம் கண்களைத் திறக்கவேயில்லை. இறந்துவிடுகிறார்.
இல்லாதவர்கள் இந்த உலகில் எதை விட்டுச் செல்கிறார்கள். நினைவுகளை மட்டும்தான். அது குடும்பத்திற்குப் போதுமா என்ன? வெறும் ஆளாகச் செத்தவர்களைக் குடும்பம் வெறுக்கிறது. இறந்தவரோடு அவரது நினைவுகளையும், அவரது பெயரையும் சேர்த்துப் புதைத்துவிடுகிறது. இறந்தவர்கள் தான் விட்டுச் செல்லும் சொத்தால், பணத்தால், வசதியால் மட்டுமே இன்று நினைக்கப்படுகிறார்கள்; பெருமை பேசப்படுகிறார்கள். சாம்பதான் தனது பேரன் பேத்திகளிடம் அவர்களுக்காகத் தர்மத்தை விட்டுச் செல்வதாகச் சொல்கிறார். அவரிடமிருந்த விலைமதிப்பில்லாத சொத்து, தர்மம்தான். அதுவே அவரை இயக்கியது. ஊரின் பொதுமனிதனாக்கியது. பிறர் துயரைத் தனதாக உணர வைத்தது.
சாம்பதான் தனது சாவிற்கு முன்பாகத் தனது இரண்டு மகன்களையும் அழைத்து நீங்கள் என்றும் பிரியாமல் இணைந்து ஒரே குடும்பமாக வாழுங்கள் என்கிறார். அப்படி அவர்களால் வாழ முடிந்ததா என்பதையே நாவல் விவரிக்கிறது. ஒடிசாவின் முதல்வராக இருந்த நந்தினி சத்பதியின் தந்தைதான், காளிந்தி சரண் பாணிகிராஹி. ஒரியாவிலும் ஆங்கிலத்திலும் எழுதக்கூடியவர். இது அவரது புகழ்பெற்ற நாவல். இதனை இயக்குநர் மிருணாள் சென் திரைப்படமாக எடுத்திருக்கிறார். அண்ணன் தம்பிகளுக்குள் ஏற்படும் பாகப்பிரிவினையை விவரிக்கும் இந்த நாவல், 1950களில் ஒரிய கிராமங்கள் எப்படியிருந்தன என்பதை மிக நுட்பமாக விவரிக்கிறது.
அடுத்தவர் வீட்டில் சண்டை நடந்தாலே குறுக்கிடும் சாம்பதான் வீட்டிற்குள் பிரச்சினை ஏற்படுகிறது. அவரது மருமகள்களுக்குள் சண்டை. வீட்டை, நிலத்தை இரண்டாகப் பிரிக்க வேண்டும் என்கிறார்கள். அண்ணன் தம்பிகளோ இணைந்து வாழ வேண்டும் என ஆசைப்படுகிறார்கள். தந்தையின் நற்குணங்களைத் தனதாக்கிக் கொண்டிருக்கிறான் அவரது மூத்த மகன் பர்ஜு. கடின உழைப்பாளி. நேர்மையானவன். தம்பி சக்டியின் மீது மிகுந்த பாசம் கொண்டவன். தம்பியின் மனைவி குடும்பத்தைப் பிரிக்கப் பார்க்கிறாள். அதற்குத் தன்னுடைய மனைவியும் ஒரு காரணமாக இருக்கிறாள் என்று பர்ஜு உணர்ந்திருக்கிறான். ஆனால், பாகப்பிரிவினையை எப்படித் தடுப்பது எனத் தெரியவில்லை.
கிராமத்தின் பஞ்சாயத்து தலைவரான ஹரிமிச்ரர் பொறாமையின் மொத்த உருவம். அவருக்கு ஊரில் யாரும் சொத்து சுகத்தோடு சந்தோஷமாக வாழ்ந்துவிடக் கூடாது. அவர்களுக்குள் சண்டைமூட்டிக் குடும்பத்தைப் பிரித்துவிடுவார். தந்திரமாக நிலத்தை அபகரித்துக் கொள்ளுவார். பிறரது துயரத்தைக் கண்டு அதிக மகிழ்ச்சி அடையக் கூடியவர் ஹரிமிச்ரர். தர்மம் தான் வெல்லும் என்றால் இவரைப் போன்றவர்கள் இந்த உலகில் சகல சௌகரியங்களுடன் வாழ்கிறார்களே, இது நீதியா என நாவலில் ஒருவர் கேட்கிறார். சாம்பதானைப் போன்றவர்களைக் காணுவது தான் அரிது. ஹரிமிச்ரர் வீதிக்கு வீதி இருக்கிறார்கள். “பொய் எத்தனைதான் மேல் எழும்பிப் பறந்தாலும் மெய்க்கு மேலாக எழும்பிப் பறக்க முடியாது” என்று நாவலின் ஒரு இடத்தில் சக்டி சொல்கிறான். அது அவனது அசையாத நம்பிக்கை. இன்றைக்கும் அந்த நம்பிக்கை எளியோர் மனதில் ஆழமாகப் பதிந்திருக்கிறது.
ஆனால், இந்த நாவலிலே பொய் எளிதாக மெய்யை வெல்லுகிறது. குடும்ப உறவுகளைப் பிரிக்கிறது. ஆயினும் பொய்யின் சிரிப்பு நீடிக்கவில்லை. மெய்யே வெல்கிறது. அடுத்தவரின் வீழ்ச்சியை ரசிக்கும் மனிதர்கள் விஷப்பூச்சிகளைப் போன்றவர்கள் என்பதை நாவல் அடையாளம் காட்டுகிறது. குடும்பச் சண்டையைத் தாங்க முடியாமல் பர்ஜு திடீரென மௌனமாகி விடுகிறான். இந்த மௌனம் அவனது மனைவிக்குக் குற்றவுணர்வை ஏற்படுத்துகிறது. அவள் கணவரின் மௌனத்தைத் தடுப்புச்சுவர் போலக் கருதுகிறாள். அந்த மௌனமே அவளது மனமாற்றத்திற்குக் காரணமாகிறது.எவர் மீதும் வெறுப்பில்லை என நினைக்கும் நாளில் ஒருவருக்கு வரும் தூக்கம் இனிமையானது. முழுமையானது என நாவலின் ஒரு இடத்தில் பாணிக்ராஹி சொல்கிறார். இன்று நாம் தொலைத்திருப்பது அந்தத் தூக்கத்தைத்தான்.